22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

மக்களைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும்!

Pooja Kumar
பிரீமியம் ஸ்டோரி
News
Pooja Kumar

சூழல் போராளி

கடல் பாதுகாப்புக்காகவும் கடல்சார்ந்து வாழும் மீனவ மக்களுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் சூழல் போராளி பூஜா குமார். மீனவ மக்கள் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் போராடும் தைரியத்தையும் வலிமையையும் அறிவுசார் பின்புலத்தையும் அவர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்.

டற்கரைகளைச் சுத்தம் செய்வதில்தான் பூஜா குமாருக்கும் கடலுக்குமான பந்தம் தொடங்கியது. `நம் கடற்கரைகளை மீட்டெடுப்போம் (Reclaim Our Beaches)’ என்ற செயல்பாட்டின்போதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமின் அறிமுகமும், அவர் மூலம் `வெட்டிவேர்' அமைப்பின் தொடர்பும் கிடைக்கிறது. அதுதான் பூஜாவின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது. 2010-ம் ஆண்டு, கலங்கரை விளக்கத்திலிருந்து கொட்டிவாக்கம் வரை, கடற்கரையிலேயே மேம்பால விரைவுச் சாலை அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கின. அப்போது `வெட்டிவேர்' சரவணன், மீனவ மக்களை அதற்கு எதிராக ஒன்றிணைக்கவும், இந்தத் திட்டத்தால் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைக்கவும் ஓடிக்கொண்டிருந்தார். அவருடன் கைகோத்த பூஜா, கடற்கரையைப் பயன்படுத்தும் அனைவரையுமே அந்தத் திட்டத்துக்கு எதிராக ஒன்றிணைத்தார்.

“பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் எதிர்ப்பு அந்தத் திட்டத்தைக் கைவிடும் அளவுக்கு அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. மக்கள் போராட்டம் எந்த ஓர் ஆபத்தான திட்டத்தையும் முறியடித்துவிடும் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன்” என்கிறார் பூஜா.

பூஜா குமார்
பூஜா குமார்

இடையே பத்திரிகைத்துறையில் இளங்கலைப் படிப்பை முடித்தவர், மேற்படிப்புக்காக பெங்களூரு சென்றார். ஆனால், களச் செயற்பாட்டில் ஆர்வம்கொண்ட பூஜாவால் நான்கு சுவர்களுக்கு நடுவே அமர்ந்துகொண்டு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. படிப்பைப் பாதியிலேயே விட்டுவந்து மீண்டும் வெட்டிவேர் கூட்டமைப்பில் இணைந்தார்.

“மக்களின் அறியாமையை அதிகார வர்க்கம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறது. அவர்களுக்காக அவர்களே கேள்வியெழுப்பவும் போராடவும் துணியும் அளவுக்கு மக்களை மாற்ற வேண்டும். மக்களைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும். குறிப்பாக என்ன மாதிரியான கேள்வி களைக் கேட்க வேண்டுமென்ற புரிதலை வழங்க வேண்டும்” என்கிறார் பூஜா குமார்

சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள், அனல் மின் நிலையம், வேதித் தொழிற்சாலைகள், கடலோரத்தில் பிரச்னைக்குரிய வகையில் வருகின்ற மற்ற தொழிற்சாலைகள், எண்ணூர் துறைமுக ஆக்கிரமிப்பு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், பழவேற்காடு சூழல் சிக்கல்கள் என்று அனைத்துக் கடலோரப் பிரச்னைகளிலும் மக்களுடன் நின்று தன் முழு அர்ப்பணிப்போடு உழைத்துக்கொண்டிருக்கிறார் பூஜா குமார். இந்த ஆண்டு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கிய ‘இந்தியாவின் எழுச்சியூட்டும் சூழலியலாளர்கள்' (India’s most inspiring Ecosapiens) விருதையும் பெற்றுள்ளார்.

“இங்குப் போராடுவதைவிட முக்கியமான வேலை, அறிவூட்டல். அதைச் செய்தால் போதும். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” - அழுத்தமாகச் சொல்கிறார் பூஜா.