22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

கஷ்டங்களைத் தாண்டி முன்னேற வேண்டும்!

சத்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சத்யா

படிக்கற்களான தடைக்கற்கள்

வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களைச் சந்தித்த சத்யா, துவண்டுவிடாமல் இன்று முயல் பண்ணை வைத்து தானும் முன்னேறி பலரையும் முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்.

“சத்யான்னு கேட்டா யாருக்கும் தெரியாது. இப்போ எம்பேரு ‘முயல்’ சத்யா...” என்று சிரித்தபடி பேசத் தொடங்குகிறார். கொட்டாம்பட்டியைச் சேர்ந்த `முயல்’ சத்யா.

“எம்.ஏ, பி.ஹெட் முடிச்சுட்டு அரசுப் பள்ளியில் 2,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செஞ்சேன். டீச்சர் எனப் பொய் சொல்லி என்னை மணமுடித்தார் அவர். உண்மை தெரிந்தபோது உடைந்துவிட்டேன். ஆனாலும், சகித்துக்கொண்டு வாழ்ந்தேன். பிறகு வரதட்சிணைக் கொடுமையும் ஆரம்பித்தது. வயிற்றில் குழந்தையோடு அம்மா வீட்டுக்கே வந்துட்டேன். ஆண் குழந்தை பிறந்தது. அப்போது என் மகனுக்கு இதயக்கோளாறு இருப்பது தெரிந்தவுடன், கணவர் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அம்மாவும் அண்ணனும் எனக்கும் என் குழந்தைக்கும் ஆதரவாக இருந்தனர். மகனுக்கு இதய அறுவை சிகிச்சையும் முடிந்து, இப்போது நல்லபடியாக இருக்கிறான்.

சில ஆண்டுகளுக்கு முன் முதியவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஐந்து பிள்ளைகள் பெற்ற அவருக்கு யாரும் சோறு போடவில்லையாம். அவர் வளர்க்கும் முயல்கள்தாம் சோறு போடுகின்றனவாம். அதைப்பற்றி நிறைய தெரிந்துகொண்டு. ஐந்து முயல்கள் வாங்கி வீட்டில் வளர்த்தேன். அதில் சிறிய அளவு பாடம் கிடைக்க, அண்ணனின் உதவியால் கொட்டாம்பட்டியில் ஊருக்கு வெளியே இடம் கிடைத்தது. 2017-ம் ஆண்டிலிருந்து முயல்கள் வளர்க்கத் தொடங்கினேன்.

கஷ்டங்களைத் தாண்டி முன்னேற வேண்டும்!

ஒரு யூனிட் முயல் மூன்று, நான்கு யூனிட்டுகளாகப் பெருகியது. விற்பனை வாய்ப்புகளும் அதிகரித்தன. அவ்வப்போது தடைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் திறன் இருந்ததால், தொடர்ந்து இயங்க முடிந்தது. இப்போது 350-க்கும் அதிகமான முயல்கள் என்னிடம் உள்ளன. வெளியூர்களுக்கும் அனுப்புகிறேன். முயல் வளர்ப்பில் மாதம் 50,000 முதல் 80,000 ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடிகிறது. வங்கிக்கடன் கிடைத்துவிட்டால் இன்னும் பெரிய பண்ணையாக உருவாக்கும் ஆசையும் இருக்கிறது.

என்னைப்போல பல கஷ்டங்களைச் சந்தித்த பலரும் முன்னேற்றம் அடைய வேண்டும்தானே? அதனால்தான் கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கு முயல் பண்ணை அமைத்துக்கொடுத்தேன். வெளிநாட்டு வேலையில் வெறுத்துப்போன என்னுடைய பள்ளி நண்பர் ராஜாவுக்கும் முயல் பண்ணை அமைத்துக்கொடுத்தேன். இப்படி 21 நபர்களுக்கு முயல் பண்ணை அமைத்துக் கொடுத்துள்ளேன். இன்னும் நிறைய நபர்களுக்கு முயல் பண்ணை வைக்க வழிகாட்ட உள்ளேன். அதற்காக என் பண்ணையிலேயே இலவசப் பயிற்சி வழங்குகிறேன். வளர்த்துக்கொடுக்கும் முயல்களை நானே சந்தைப்படுத்திக் கொடுக்கிறேன்.

இப்போது 20 சென்ட் இடத்தில் முயல்களுடன், கிண்ணிக் கோழி, கிண்ணி பெக், நாட்டுக் கோழி, கருங்கோழி, புறா, நாய் என்று பல பிராணிகளோடு சேர்த்து ஒருங்கிணைந்த பண்ணையாக அமைத்துள்ளேன்'' என்றார் உற்சாகமாக!