Published:Updated:

“பேச்சியம்மன் தேரை பெண்கள்தான் இழுப்போம்!” - வீர வரலாறு சொல்லும் கொத்தமங்கலம்

கொத்தமங்கலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கொத்தமங்கலம்

தேர் திருவிழா

திருவிழாவுல பொண்ணுங்க மட்டுமே வடம்பிடிச்சு தேரை இழுத்துப் பார்த்திருக் கீங்களா... எங்க ஊருக்கு வந்து பாருங்க’’ என்று கெத்தாகச் சொல்கிறார்கள் கொத்தமங்கலம் பெண்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புதுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ தொலைவில் தென்னந்தோப்புகளுக்கு நடுவே கம்பீரமாக நிற்கிறது கொத்தமங்கலம் கிராமம். ஊரின் எல்லையில் மக்களைக் காக்கும் தெய்வமாக விளங்கும் மாரியம்மனுக்கு வைகாசியில் திருவிழா. 12 நாள்கள் திருவிழா, வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9-ம் நாள்தான் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம். பெண்கள் வடம்பிடித்து இழுக்கும் பேச்சியம்மன் தேர் முன்னே செல்ல, பிள்ளையார் தேர் பின்னே வருகிறது. அதன் பின்னே பிரமாண்டத் தேரில் மாரியம்மன் பவனி வருகிறாள். மாரியம்மன் தேருக்கு முன்னே செல்லும் பேச்சியம்மன் தேரை ஆண்கள் துணையின்றி முழுவதும் பெண்களே இழுத்துச் செல்கின்றனர். துணிச்சல் கலந்த பக்தியுடன் 2 கி.மீ தொலைவில் உள்ள ஊரின் வீதிகள் முழுவதும் பேச்சியம்மன் தேரை பெண்கள் பக்குவமாக இழுத்துவந்து கோயிலில் சேர்க்கின்றனர். அடுத்ததாக, பிள்ளையார் தேரை இழுப்பதிலும் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் வடம்பிடிக்க, பெண்களால் களைகட்டுகிறது தேர்த்திருவிழா.

“பேச்சியம்மன் தேரை பெண்கள்தான் இழுப்போம்!” - வீர வரலாறு சொல்லும் கொத்தமங்கலம்

‘பேச்சியம்மன் தேரை ஏன் பெண்கள் மட்டுமே இழுக்கின்றனர்?’ என்ற கேள்விக்குப் பின் இருக்கிறது உரிமைப் போராட்ட வரலாறு. கொத்தமங்கலத்தைச் சேர்ந்த 82 வயதுப் பெரியவர் காசி, ‘`அப்போ எனக்கு 21 வயசு. மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குக் காப்புக் கட்டியாச்சு. திருவிழாவுல முதல் மரியாதை கொடுக்கலைன்னு சொல்லி சேந்தன்குடி ஜமீன் பங்காளிங்க, எங்க கிராமத்துக்குள்ள புகுந்து தேர்த்திருவிழாவை நடத்தவிடமா தடுக்கப்போறதா ஒரே பேச்சு. அவுகளைத் தடுக்க  எங்க ஊரு ஆம்பளைங்க எல்லாம் ஊரு எல்லைக்குப் போயிட்டோம். எங்ககிட்ட கம்புகூட கிடையாது. ஆனா, சேந்தன்குடிக்காரவுக ஈட்டி, கம்பு, அருவா, நாட்டுத்துப்பாக்கினு வெச்சிருந்தாக. பேச்சுவார்த்தைக்குக்கூட வராம, போன கொஞ்ச நேரத்துலேயே எங்க ஊர்க்காரவுகளை கடுமையா தாக்க ஆரம்பிச்சுட்டாக.

என்னோட சேர்த்து எட்டு பேருக்குப் பலத்த காயம். ஆனாலும், கடைசிவரைக்கும் சேந்தன்குடிக்காரவுகளை நாங்க ஊருக்குள்ள நுழையவிடலை. ஒருத்தன் ஈட்டியை என் முதுகுல குத்த, அது என் வயித்துப் பக்கம்வரை வந்து, நெலகொலஞ்சு விழுந்துட்டேன். சம்பவம் நடந்து 60 வருஷங்களுக்கு மேல ஆகிருச்சு’’ என்று அந்தத் தழும்பைக் காட்டியவர், ‘`இப்படி அந்த வருஷம் ஆம்பளைங்க எல்லாம் ஊரு எல்லையில இருக்க, ‘ஆம்பளைங்க இல்லைன்னா என்ன... நாமயெல்லாம் சேர்ந்து தேரை இழுப்போம்’னு சட்டுனு முடிவெடுத்து எங்க ஊருப் பொம்பளைங்க எல்லாருமா சேர்ந்து, மூணு தேரையும் இழுத்து வந்து சேர்த்துட்டாக. அதை நெனைக்கும்போது இப்பவும் ஒடம்பு சிலிர்க்கும்” என்றார் பெருமிதமாக.

60 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவங்களின் ஆவணங்களை எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறார், ஊரில் மக்கள் பிரச்னையில் முதல் ஆளாக நிற்கும் துரை. ராமசாமி. பிரச்னையை விளக்கினார் அவர். “எங்க பாட்டன் பூட்டன் காலத்துல இந்த மாரியம்மன் கோயிலைக் கட்டித் திருவிழா நடந்த ஆரம்பிச்சிருக்காங்க. மன்னர் ஆட்சிக்குப் பெயர்பெற்ற புதுக்கோட்டையைப் பொறுத்தவரைக்கும் அந்தக் காலத்துல எல்லாம், ஜமீனோட ஆதிக்கம் அதிகமா இருக்கும். சேந்தன்குடி நகர ஜமீன் கட்டுப்பாட்டுக்குள்ள இருந்த ஆறு கிராமங்கள்ல எங்க கொத்தமங்கலமும் ஒண்ணு. ஆறு கிராம திருவிழாக்கள்லயும், ஜமீனுக்கு முதல் மரியாதை கொடுக்கணும்ங்கிறது அப்போ எழுதப்படாத விதி. மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவுல அவங்களுக்கு முதல் மரியாதையும், ஒரு மண்டகப்படியும் கொடுத்திருக்காங்க. ஜமீன் வந்து வடம் தொட்டுக்கொடுத்தாதான் தேர்த் திருவிழாவையே நடத்த முடியும். கொத்தமங்கலத்துலயிருந்து சேந்தன்குடிக்குப் போய் பல்லக்குல வெச்சு ஜமீனைத் தூக்கி வந்துட்டு, திருவிழா முடிஞ்சதும் பல்லக்குல கொண்டுபோய் விடணும்.

“பேச்சியம்மன் தேரை பெண்கள்தான் இழுப்போம்!” - வீர வரலாறு சொல்லும் கொத்தமங்கலம்

சேந்தன்குடி நகர ஜமீனா 1925 - 1943 வரை கிட்டத்தட்ட 18 வருஷங்கள் ராணி தங்கம்மாள் ஆயியரா இருந்தப்போ, அவங்களுக்கு முதல் மரியாதை கொடுத்துட்டு வந்தோம். அவங்களுக்கு வாரிசு இல்லை. 1948-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்துருச்சு. அதுக்கு அப்புறமும் சேந்தன்குடி ஜமீன் பங்காளிங்க முதல் மரியாதை கேட்டு எங்க கிராமத் திருவிழாவுல ஒவ்வொரு வருஷமும் தொடர்ந்து பிரச்னை கொடுத்தாங்க. அப்போ எங்க ஊர்ப் பெரியவங்க வக்கீலைப் போய் பார்க்க, ‘ஜமீன் இல்லாம தேரை இழுத்து நிலைக்குக் கொண்டு சேர்த்திடுங்க... அது உங்களுக்குச் சாதகமாயிடும்’னு சொல்லியிருக்காரு.

1961-ல ஊருக்கும் ஜமீனுக்கும் இடையே பெரிய கலவரம் வந்து, அவங்க தாக்குனதுல எங்களுக்கும் போலீஸ்காரங்களுக்கும் காயம். ஆம்பளைங்க எல்லாம் ஜமீன் படைகளோட சண்டை போட்டுக்கிட்டிருந்த நேரத்துல, ஆம்பளைங்க துணையில்லாம, பொம்பளைங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து மூணு தேரையும் இழுத்துவந்து நிலைநிறுத்திட்டாங்க. அந்த வக்கீல் சொன்ன மாதிரி, அதுக்கப்புறம்தான் எங்களுக்கு விடிவுகாலம் பொறந்துச்சு. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்னு நடந்த கேஸுல, தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருச்சு. அதிலிருந்து எங்க கோயில்ல யாருக்கும் முதல் மரியாதை இல்ல, எங்க ஊருல யாரும் உயர்ந்தவங்க, தாழ்ந்தவங்கனு இல்ல’’ என்றார்.

அன்று தேரை இழுத்து வந்தவர்களில் ஒருவரான வெள்ளையம்மாள், ‘`ஆம்பளைங்க எல்லாம் ஊரு எல்லையில் நின்னு சேந்தன்குடிக்காரங்கள தடுத்துக்கிட்டிருந்தப்போ, களப்பாயி அக்காதான் ஊருக்குள்ள பொம்பளைங்கள எல்லாம் சேர்த்து தேரை இழுக்க வெச்சாக. வீடு தவறாம எல்லா பொம்பளைகளும் முன்வந்து, மூணு தேரையும் ஒரே மூச்சுல இழுத்துட்டுப் போய் சேர்த்துட்டோம். இப்போ களப்பாயி அக்கா உயிரோட இல்ல. அன்னிக்கு எங்க ஊருப் பெண்ணுங்ககிட்ட இருந்த தைரியம்தான், இன்னிக்குவரை ஊர்த் திருவிழாவை சிறப்பா நடத்த வெச்சிக்கிட்டு இருக்கு. அதனால, அன்னியிலயிருந்து பேச்சியம்மன் தேரை பொண்ணுங்க கையில ஒப்படைச்சுட்டாக எங்க ஊருப் பெரியவுக’’ என்றார்.

 காசி -  துரை.ராமசாமி -  வசந்தா - வெள்ளையம்மாள்
காசி - துரை.ராமசாமி - வசந்தா - வெள்ளையம்மாள்

வசந்தா, ``எங்களுக்கு, எங்க முன் தலைமுறைப் பெண்கள் வாங்கிக்கொடுத்திருக்கிற பெருமை, உரிமை இது. ஊருல இருக்குற பொண்ணுங்க எல்லாரும் காப்புக் கட்டுனதுலயிருந்து விரதமிருந்து பேச்சியம்மன் தேரை இழுக்கிறோம். எங்க ஊருச் சிறப்பும், அதுக்கான காரணமும் எங்க கிராமத்துல இனி வரும் தலைமுறைப் பெண்களுக்கும் ஊக்கம் தர்ற விஷயமா இருக்கும்” என்றார் பெருமையுடன்.  

வளைகரங்கள் எழுதிய வரலாறு!

நடந்ததெல்லாம் உண்மைதான்!

சேந்தன்குடியைச் சேர்ந்த ஆசிரியர் கந்தசாமி, ‘`நாங்க எல்லாம் ஜமீன் உடன்பிறப்புகள். ஆயியார் இருந்தவரைக்கும் 18 வருஷம் எந்தப் பிரச்னையும் இல்ல. ஆயியாருக்குப் பிறகு ஜமீன் பங்காளிங்க முதல் மரியாதை கேட்டு கொத்த மங்கலம்காரங்களோட பிரச்னையில் ஈடுபட்ட தெல்லாம் உண்மைதான். அந்த கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் நாங்க கொத்தமங்கலம் திருவிழாவுக்குப் போறதில்லை’’ என்றார்.

ரவிக்கை அணியப் போராட்டம்!

களப்பாயியை பற்றி பேசும்போது, ‘`அந்தக் காலத்துல ஜமீன் கொடுமைகளை எதிர்த்துப் போராடுனவங்கள்ல முக்கியமானவுக களப்பாயி அக்கா. எங்க ஊரு மட்டுமல்லாம, ஆறு ஊருப் பொம்பளைகளுக்கும் ரவிக்கை போடுற உரிமையை, போராட்டமெல்லாம் நடத்தி வாங்கிக்கொடுத்தாக. எங்க ஊருப் பொம்பளைங்கள அவுகதான் வழி நடத்துனாக. அவுக பாட்டுப் பாடிக்கிட்டு முன்னே போனாபோதும், புது உற்சாகம் பொறந்து, போராட்டத்துக்கு அவுக பின்னாடியே நடக்க ஆரம்பிச்சிடுவோம்’’ என்றார் வெள்ளையம்மாள்.