Published:Updated:

“பெண்ணடிமைத்தனத்தைத் தகர்க்கிறது பெண்கள் கையில்தான் இருக்கு!” - தகர்த்துக்கட்டும் போராளிப் பெண்

ராஜேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேஸ்வரி

உரிமைக்குரல்

‘`குப்பை பொறுக்கும்போது பசி வயித்தைக் கிள்ளும். குப்பை பொறுக்கிற வேலை முடிஞ்சதும் அம்மா அம்பது காசை கொடுத்து ஹோட்டல் சாம்பார் வாங்கிட்டு வரச் சொல்வாங்க. ஹோட்டல்ல சாப்பிட வர்றவங்க சாப்பிட்டு மிச்சம் வெச்சிட்டுப் போற சாம்பாரை எல்லாம் ஒரு பாத்திரத்துல ஊத்திவைப்பாங்க. எங்க ஏரியாவில் நாயடிச்சான்சேரினு ஒரு பகுதி இருக்கு. வெறிப்பிடிச்ச நாய்களைக் கொளுத்தற பகுதி அது. அங்கே வளர்க்குற பன்றிகளுக்காக, பல ஹோட்டல்கள்ல மீந்துபோன சாம்பாரை மீன்பாடி வண்டியில வெச்சு வாங்கிட்டு வருவாங்க. அந்த சாம்பார் அடியில திக்காவும் மேல நீர்த்தும் இருக்கும். மேலே உள்ளதை பன்றிகளுக்குக் கொடுத்துட்டு, அடியில உள்ள கெட்டி சாம்பாரை சூடாக்கி, அகப்பை பத்து பைசாவுக்கு விப்பாங்க.

இப்போ நேரு ஸ்டேடியம் இருக்கும் இடத்துலதான் பெரும்பாலும் ஹோட்டல் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவாங்க. குப்பை லாரி வருதுன்னா எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாயிடும். வாழையிலையோடு கலந்து மிச்ச மீதி மைசூர்பாகுத் துண்டும் பால்கோவா துண்டும் வந்து விழும். ஓடிப்போய் அவங்கவங்க கைகளுக்கு என்ன கிடைக்குதோ எடுத்து, அதே வாழையிலையைத் துடைச்சு விருந்தா படைச்சு சாப்பிடுவோம். நினைவு தெரிஞ்ச நாள்வரை நல்ல சாப்பாடுதான் முதல் தேடலா இருந்திருக்கு...’’ - ராஜேஸ்வரியின் விவரிப்பில் ஈரக்குலை நடுங்குகிறது நமக்கு.

 பகுதி மக்களுடன்...
பகுதி மக்களுடன்...

சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரியின் கடந்தகால அடையாளம் இது. இன்று அவர் அரசு ஊழியர், சட்டம் படிக்கும் மாணவி. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராளி. வாழ்க்கைத்தரம் உயர்ந்த பிறகும் அது உயர்வதற்குக் காரணமான பூர்வீக புளியந்தோப்பை அவர் இன்னும் மறக்கவில்லை. அங்கேதான் வசிக்கிறார். குப்பைகளுக்கிடையில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைக் கொஞ்சியபடி பேச ஆரம்பிக்கிறார் ராஜேஸ்வரி.

``டாக் லேபர் போர்டுல வேலை பார்த்தவர் என் அப்பா. அரசு ஊழியர்கள் பிரச்னைகளுக்காக உழைச்சவர். அப்பா இறந்தபோது எனக்கு ரெண்டரை வயசு. எனக்கு ரெண்டு அக்காக்கள், ரெண்டு அண்ணன்கள், மூத்த அக்காவுக்கு மட்டும்தான் கல்யாணமாகியிருந்தது. குடிசைமாற்று வாரிய வீட்டுலதான் குடியிருந்தோம்.

காலையில நாலு மணிக்கு வீட்டுப் பக்கத்துல மாட்டுத்தொழுவத்துல சாணி அள்ளி தட்டிட்டு வருவாங்க அம்மா. அடுத்த ஷிஃப்ட்டுக்கு என்னை அனுப்புவாங்க. மாட்டுச்சாணத்தை அள்ளிட்டு வர்ற அலுமினிய பாத்திரம் ஒழுகி, உடம்பெல்லாம் சாணி வாடை அடிக்கும். வந்து குளிச்சிட்டு பள்ளிக் கூடத்துக்கு ஓடுவேன். பள்ளிக்கூடத்துல மதியம் சத்துணவு சாப்பிட்டு, இன்னொருமுறை வாங்கி வீட்டுக்கு எடுத்துட்டு வரும் சோறுதான் எனக்கும் அம்மாவுக்கும் ராத்திரிக்குப் பசியாற.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காலையில கிளம்பும்போதே அன்னிக்கு எந்த ஏரியாவுல குப்பை பொறுக்கப் போறேன்னு அம்மா சொல்லிடுவாங்க. பள்ளிக்கூடம் முடிஞ்சதும் நானும் அங்கே போயிடுவேன். அரைநாள் பள்ளிக்கூடம், அரைநாள் அம்மாகூட போறதுன்னு வாழ்க்கை போயிட்டிருந்தது. சக பிள்ளைங்க ஒருநாள் நான் குப்பை பொறுக்குறதைப் பார்த்துட்டாங்க. அடுத்த நாள்லேருந்து என் பக்கத்துல வந்தாலே, ‘குப்பை நாத்தம் அடிக்குதுல்ல’னு பேசுவாங்க. பல வருஷங்களுக்கு ரணத்தைக் கொடுத்த வார்த்தைகள் அவை...’’மழலைப் பருவத்தை முற்றிலும் தொலைத்த வலி, அவரின் பேச்சில்.

‘`அப்பா இறந்தபோது அம்மாவுக்கு 35 வயசு. எத்தனை ஆண்களோட பார்வைகள் அவங்களை பயமுறுத்தியிருக்கும்... அம்மாவைப் பாதுகாக்க நான் எப்போதும் என்கிட்ட ஒரு கத்தி வெச்சிருப்பேன். எனக்கு டிபி பாதிச்சு டாக்டரை பார்க்கப் போயிருந்தேன். எக்ஸ்ரே எடுத்தபோது அது தெரிஞ்சிருச்சு. ‘கத்தியை ரொம்ப சுலபமா எல்லாரும் எடுத்துடலாம், என்னை மாதிரி ஸ்டெதாஸ்கோப் எடுக்கிறது கஷ்டம். அதை எப்போ எடுக்கப் போறே’ன்னு டாக்டர் கேட்டார். அறிவாயுதம் எவ்வளவு முக்கியம்னு யோசிக்கவெச்ச கேள்வி அது’’ - யோசித்தவர், பி.காம் முடித்து, போட்டித் தேர்வுகள் எழுதி, வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 21 வயதில் கல்யாணம், இரண்டு மகன்கள்.

 ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

``வேலையிடத்துல என் உயரதிகாரி இரட்டை அர்த்தத்துல என்கிட்ட ஆபாசமா பேசினார். சின்ன வயசுலேருந்தே நிறைய பாலியல் வன்முறைகளைச் சந்திச்சிருக்கேன். வேலையிடத்தில் கடைநிலை ஊழியர்களாக இருக்கும் பெண்களை ரொம்ப சுலபமா பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாக்கினதையெல்லாம் பார்த்திருக்கேன். அவங்களுடைய வறுமையை பலவீனமா உணரவெச்சு, தன் வக்கிரங்களை நியாயப்படுத்தின ஆண்களைப் பார்த்திருக்கேன். ஆனாலும் கையறு நிலையில் இருந்தேன். இதுக்கிடையில் ஐஏஎஸ் கனவில் அதுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்குப் போனேன். எழுத்தாளர் சாண்டில்யனின் மகன் சடகோபன்தான் அங்கே ஆசிரியர். பணியிட பாலியல் வன்கொடுமைகளைப் பத்தி அவர்கிட்ட பேசுவேன். ‘உங்க மக்களுக்காகப் போராடுங்க. சட்டப்படி ஒரு சங்கம் ஆரம்பிச்சு, அவங்க உரிமைகளை உணரச் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்துங்க'னு சொன்னார். ஐஏஎஸ் கனவை உதறிட்டு, 2009, செப்டம்பர் 4-ம் தேதி அகில இந்திய அறிவுசார் சொத்துரிமை எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் (All India Intellectual Property Rights SC, ST Association) ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னுடைய துறையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இட ஒதுக்கீடுகள் பல வருடங்களா நிரப்பப்படலை. சங்கம் ஆரம்பிச்சதும் அந்தத் துறையில இந்த மூன்று பிரிவினர்களுக்குமான இட ஒதுக்கீடு எந்தளவுக்குப் பின்பற்றப்பட்டிருக்கு, எத்தனை ரிசர்வ்டு கேண்டிடேட்ஸ் இருக்காங்கனு கேட்டேன். பல வருஷங்களா கெஸட் ரேங்க் ஆபீசர் போஸ்ட்டுக்கு ஒரு எஸ்சி, எஸ்டி கேண்டிடேட்கூட தகுதிபெறலைனு பதில் சொன்னாங்க. பிரச்னையை தேசிய ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு போனேன். உண்ணாவிரதம் இருந்தேன். தொடர் போராட்டத்தின் பலனா, 459 பேரை இட ஒதுக்கீட்டு முறையில என் துறையில முதன்முறையா வேலையில் அமர்த்தினாங்க. எனக்குக் கிடைக்கவேண்டிய, எனக்குத் தகுதியுள்ள ஒன்றைப் பெற உயிரைப் பணயம் வெச்சுப் போராடறது எவ்வளவு கேவலமான செயல் இல்லை...’’ - சீற்றம் குறையாமல் கேட்பவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எங்கே அநீதி நடந்தாலும் முதல் ஆளாக போராட்டக் களத்தில் நிற்பவர். 2012 தர்மபுரி கலவரம், சாக்கடை சுத்தம் செய்வோரின் உரிமைகளுக்காகப் போராடியது என நீளும் அந்தப் பட்டியலில் அனிதாவும் இருக்கிறார்.

‘`குழுமூர்னு ஒரு கிராமத்துல அனிதானு ஒரு மாணவி ப்ளஸ் டூவில் 1176 மதிப்பெண் வாங்கியிருக்கிறது தெரிஞ்சு அங்கே கிளம்பினேன். அனிதா டாக்டராகவே வாழந்ததைப் பார்த்தேன். அவளுடைய கண்களில் ஆர்வமும் பொறுப்பும் கூடவே நீட் எக்ஸாம் பத்தின பயமும் இருந்தது. ‘நீட்ல செலக்ட் ஆகலைன்னா என்ன, உன்னை வெளிநாட்டுல மருத்துவம் படிக்க வைக்கிறது என் பொறுப்பு’னு சொன்னேன். நீட் ரிசல்ட் வந்த அன்னிக்கு எனக்கு ‘82 மார்க்தான்க்கா வாங்கியிருக்கேன்’னு மெசேஜ் அனுப்பினா. நீட்டுக்கு எதிரா அவ ஆங்கிலத்தில் பேசின அந்த வீடியோவையும் நான்தான் எடுத்தேன். கடைசியா அவளை சந்திச்சுட்டுக் கிளம்பினபோது, ‘அக்கா நான் டாக்டராயிடுவேன்ல’னு கேட்டது இப்பவும் ஒலிச்சிட்டே இருக்கு. அவ இறந்துட்டதா வந்த தகவலை இப்பவரை ஏத்துக்க முடியலை. என் போராட்டத்துக்கு கிடைச்ச முதல் தோல்வி அது’’ - கம்பீரக் குரல் உடைகிறது ராஜேஸ்வரிக்கு.

‘`பெண்களுக்கு உரிமைகளைக் கொடுத்துட்டோம், அவங்க முன்னேறிட்டாங்கனு சொல்றாங்க. ஊதாங்கோல்வெச்சு அடுப்பூதிட்டிருந்த பெண்கள் கையில இன்னிக்கு காஸ் லைட்டரை கொடுத்திருக்கீங்க. அதுதான் வித்தியாசம். உரிமைக்கும் விடுதலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

என் உரிமைகளை என் வாழ்க்கையிலுள்ள ஆண்கள்தான் தீர்மானிக்கிறாங்க. ஆனா, நான் விடுதலைக்காக போராடறேன்.

சாதியம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம்னு எல்லாத்துக்கும் அடிப்படை பெண்ணடிமைத்தனம். இதைத் தகர்க்கிறதும் பெண்கள்கிட்டதான் இருக்கு. ஏன்னா, இந்த உலகத்தின் பேராற்றல் பெண்...’’

- ஓங்கி ஒலிக்கிறது ராஜேஸ்வரியின் குரல்.