22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

இயற்கை வேளாண்மையே இனி வேண்டும்!

ரங்கநாயகி
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கநாயகி

பசுமைப் பெண்

இயற்கை விவசாயி, விவசாய சங்கத் தலைவர் என நிறைய முகங்கள் உண்டு ரங்கநாயகிக்கு. சோகம் அப்பிய வாழ்வை உடைத்து வெளியே வந்து சேவை செய்வதில் சிறக்கிறார் இவர்!

சிதம்பரத்துக்கு அருகேயுள்ள வடமூர் கிராமத்தில் ரங்கநாயகியை பசுமை தேவதையாகவே பார்க்கிறார்கள் மக்கள்.

சிறு வயதில் திருமணமான ரங்கநாயகிக்கு நான்கு குழந்தைகள் பிறக்கிறார்கள். முதல் குழந்தை குறை பிரசவத்தில் இறந்துவிட, மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. விதி அவர் கண்ணீரை நிறுத்தவில்லை. கணவர் புற்று நோயால் உயிரிழந்தார்.

இழப்புகளைத் தாங்கிவந்தவருக்கு புற்றுநோயால் இறந்த மூத்த மகள், அடுத்ததாக இறந்த மருமகனின் இழப்பு, மனநலம் பாதித்த மகளின் இறப்பு என துக்கங்கள் தொடர்ந்து அவரை நிலைகுலையச் செய்தன. இருப்பினும், மகள் ஸ்தானத்திலிருந்து பேரன், பேத்தியைப் படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிறார்.

ரங்கநாயகி
ரங்கநாயகி

“வீட்டுக்காரர் இறந்தவுடனே குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வடமூருக்கு வந்துட்டேன். அப்பாவுக்கு உதவியா விவசாய வேலைகள்ல ஈடுபட்டேன். அவர் இறந்தபிறகு, தனி ஆளா விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன்.

தண்ணீர் பிரச்னை பெரிசாயிருச்சு. வீராணம் ஏரியிலருந்து வர்ற பாசன வாய்க்கால் முழுக்க புதர் மண்டி கிடந்துச்சு. ஊர்க்காரர்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு 9.6 கி.மீ நீளத்துக்கு வாய்க்காலைச் சுத்தம் பண்ணி தண்ணீர் கொண்டுவந்தோம். அதுக்கப்புறம்தான் விவசாயிகள் என்னை முழுமையா நம்ப ஆரம்பிச்சாங்க.

மகளுக்குப் புற்றுநோய் வந்தபோது, விவசாயத் துக்குப் பயன்படுத்துற ரசாயனங்கள்தான் அதுக்குக் காரணம்னு சொன்னாங்க. உடனே விவசாயத்துக்கு ரசாயன உரங்கள் பயன்படுத்துறதையே விட்டுட்டேன். இயற்கை விவசாயம்தான் செய்றேன்” என்கிறார் ரங்கநாயகி.

மாவட்ட நிர்வாகம் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி விருது, எம்.எஸ். சாமிநாதன் ஃபவுண்டேஷன் விருது என ரங்கநாயகிக்குப் பல அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

65 வயதாகிவிட்டது. இப்போதும் ஊர்மக்களுக்கு உதவுவதில் இவர் குறையொன்றும் வைப்பதில்லை. தாய்மையும் போர்க்குணமும் குறையாமல் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் ரங்க நாயகி!