Published:Updated:

லாக் டௌன் காலத்தில் எகிறும் குடும்ப வன்முறை... மகளிர் ஆணையம் என்ன செய்ய வேண்டும்?

கொடுமை

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா வைரஸ் பரவலாக்கம் தீவிரமடைந்ததை அடுத்து மத்திய அரசு கடந்த மார்ச் 24 அன்று 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அறிவித்தது. `எவரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது; மீறி வந்தால் லட்சுமண ரேகையைத் தாண்டிய சீதைக்கு ஆபத்து நேர்ந்தது போல கொரோனாவால் ஆபத்து நேரும்' என்று எச்சரித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

உண்மையில் வீட்டுக்குள்ளேயே இருந்தது பெண்களுக்கு இன்னும் ஆபத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு அமலுக்குப் பிறகான ஒரு வாரத்தில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஓர் அறிக்கை வெளியிட்டார். `ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உலகமே ஸ்தம்பித்து நின்றாலும் பெண்கள் மீதான வன்முறைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எங்களுக்குப் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 257 புகார்கள் வந்துள்ளன. அதில் 69 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானது' என்றார்.

லாக் டௌன் காலத்தில் எகிறும் குடும்ப வன்முறை... மகளிர் ஆணையம் என்ன செய்ய வேண்டும்?

தமிழக மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதனும் அதிகரிக்கும் குடும்ப வன்முறை தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், `வீடுகளில் அதிகபட்சமான குடும்பப் பணிகளைச் செய்துவருவது பெண்கள்தாம்.அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இந்தப் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். வன்முறையைச் சந்திக்கும் பெண்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தையோ, 181 என்கிற எண்ணையோ தொடர்புகொள்ளவும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

வரதட்சணைக் கொடுமை செய்பவர்கள் இந்த ஊரடங்கு காலத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகிறார்கள். குடி, போதைப் பழக்கவழக்கங்களுக்கு ஆளானவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளையும் பெண்களையும் அடிப்பது உட்பட பலவித வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என ஈரோடு, திண்டுக்கல், மணலி, மாங்காடு எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாநில மகளிர் ஆணையத் தலைவருக்கே புகார்கள் வந்துள்ளன.

குடும்ப வன்முறை
குடும்ப வன்முறை

ஓர் உதாரணம்... விழுப்புரத்தைச் சேர்ந்த ரேவதியின் கணவர் முழுநேரமும் வீட்டிலேயே இருப்பதால்... மனைவி சமைப்பதற்குச் சிறிது தாமதமானால்கூட அடிப்பது, உதைப்பது என வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். தனக்குச் சம்பளம் கிடைக்காததால் வரதட்சணைப் பணத்தை வாங்கி வரச் சொல்லி அடித்திருக்கிறார். அதனால் அந்தப் பெண் அருகிலிருக்கும் தன் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். ரேவதி போன்ற எண்ணற்ற பெண்கள் இப்போது புகார் அளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து, கண்ணகி பாக்கியநாதனிடம் பேசினோம். ``சமூகநலத்துறையின் கீழ் மாவட்டந்தோறும் சமூகநல அதிகாரிகள் செயல்

படுகிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை ஆற்றுப்படுத்தும் வகையில் அவர்களுக்கான மனநல ஆலோசனை தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே இருக்கும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் சட்டபூர்வ ஆலோசனைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என்றார் கண்ணகி.

ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகந்தியிடம் பேசினோம், “மாதர் சங்க அலுவலகங்களுக்கு மிகச் சாதாரணமான 15 நாள்களிலேயே 30-40 புகார்கள் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாகவே வரும். பெண்கள் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் இந்தச் சூழலில் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை குறித்துக் கேட்கவே வேண்டாம்.இந்த நேரத்திலும் பெண்களுக்கான சட்டபூர்வ ஆலோசனைகள் வழங்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்துவது சரியல்ல. அதே ஊடகங்கள் வழியாக, `பெண்கள்மீது வன்முறையில் ஈடுபடும் ஆண்களுக்குச் சட்டம் கடும் தண்டனை அளிக்கும்' என்பதைத் தொடர்ந்து பரப்ப வேண்டும். 181 என்கிற அவசர எண்ணுக்கு வரும் அழைப்புகள் பெரும்பாலும் ஏற்கப்படுவதில்லை. இதுபோன்ற நேரங்களில் அந்தந்தப் பகுதிகளில் இயங்கும் மகளிர் அமைப்புகளுடன் ஆணையம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தங்கள் பகுதியிலேயே பாதுகாப்பு ஏற்பாடு இருக்கிறது என்கிற மன வலிமையை இது அளிக்கும். இதுபோன்ற பிரச்னைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் இது உதவும்” என்கிறார் சுகந்தி.

மகளிர் ஆணையம் இதைக் கவனிக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு