புதுவகையான உணவுகளைத் தேடித்தேடி சாப்பிடும் உணவுப் பிரியர்கள் அதிகம். அவர்களின் தேடுதலுக்கு ஏற்ப வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து, ஷவர்மா தொடங்கி ஃபயர் பீடா வரை ஆயிரக்கணக்கான உணவு வகைகளும், உணவகங்களும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அப்படி உருவானவைதான், ரெஸ்ட்ரோ பார்கள். உணவகங்களுடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டு இருக்கும் பார்கள் இவை.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் உள்ள ஒரு ரெஸ்ட்டோ பாருக்கு வந்த தம்பதியர், ஃப்ளேம் ஷாட் ஆர்டர் செய்துள்ளனர். மதுபானம் நிரப்பப்பட்ட டம்ளரின் மீது கெமிக்கல்களால் நெருப்பு எரியும்படி கொடுப்பதே ஃப்ளேம் ஷாட். இதைப் பரிமாறியபோது சர்வீஸ் செய்தவரின் கை தவறி, ஃப்ளேம் ஷாட் ஆர்டர் செய்தவரின் மனைவியின் மீது மதுபானம் கொட்டி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் லேசான காயங்களுடன் தப்பினார். நிலைமை கொஞ்சம் மோசமாகியிருந்தாலும் அந்தப் பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
இதுபோன்ற இடங்களுக்கும் பார்ட்டிகளுக்கும் செல்லும்போது எந்தெந்த விஷயங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த ஈவென்ட் பிளானர் செல்வாம்பிகா.

``இப்படிச் செல்லும் இடங்களில், எந்த உணவுகள் ஆரோக்கியமானவை, அவற்றை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று தெரிந்து, அவை ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றனவா என்பதையும் பார்த்துச் சாப்பிடுங்கள்.
வெளியிடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, முதலில் நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். ஒரு நிகழ்ச்சிக்கு உங்களுக்கு அழைப்பு வரும்போது, அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறதா? அந்த இடத்துக்குப் போவதற்கு போக்குவரத்து வசதிகள் இருக்கின்றனவா என்பதை முதலில் உறுதி செய்யுங்கள்.

நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்குத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நிகழ்ச்சி சார்ந்து நீங்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் லிஸ்ட் போட்டுக்கொள்வது நல்லது.
ஈவென்ட் பிளானர்களிடம் ஒப்படைக்கிறீர்கள் என்றால் என்ன மாதிரியான ஈவென்ட், எத்தனை பேர் வருவார்கள் என்ன செட்டப்பில் இருக்கப்போகிறது, இண்டோர் நிகழ்ச்சியா அல்லது அவுட்டோர் நிகழ்ச்சியா என்பதையெல்லாம் தெளிவாகப் பேசி பட்ஜெட் ஃபிக்ஸ் செய்துவிடுங்கள்.
ஒரு நிகழ்ச்சியை ஈவென்ட் பிளானர்களிடம் கொடுக்கும்போது, அவர்களின் முந்தைய வேலைகள் பற்றிய ரெவ்யூக்களை பார்ப்பது அவசியம். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில் மழை போன்ற இயற்கையான தொந்தரவுகள் வந்தால் மாற்று ஏற்பாடுகள் இருக்கின்றனவா என்பதைக் கேளுங்கள்.
நிகழ்ச்சியில் மதுபானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அதற்கென தனி ஏரியா ஒதுக்கிவிடுவது நல்லது. செலிபிரேஷன் ஏரியா, கிச்சன் ஏரியா இரண்டும் தனித்தனியாக இருக்கும்படி திட்டமிடுவது அவசியம்.

நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்போது வெளிச்சத்துக்காக நிறைய அலங்கார விளக்குகள் பயன்படுத்துவார்கள். மின்சார இணைப்பு சரியாக இருக்கிறதா, எங்கேயாவது மின் கசிவு இருக்கிறதா என்பதையெல்லாம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
ஹீலியம் பலூன்கள் எளிதில் நெருப்பு பற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை. எனவே, முடிந்தவரை நிகழ்ச்சிகளில் ஹீலியம் பலூன்களைத் தவிர்ப்பது நல்லது. ரிஸ்க் அதிகமுள்ள ஃப்ளேம் ஷாட் போன்ற விஷயங்களைத் தவிர்த்து பாதுகாப்பான முறையில் பார்ட்டி கொண்டாடுவது சிறந்தது.