லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

“நம் இலக்கு ராக்கெட் ஓட்டுறதா இருந்தா... வானமும் ஒருநாள் வசப்படும்!” - சீனியர் பைலட் தீபா

சீனியர் பைலட் தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
சீனியர் பைலட் தீபா

பயிற்சி விமானி முதல் எக்ஸாமினர் வரை யாரா இருந்தாலும், தங்களோட வேலையுடன் விமானத்தையும் ஓட்ட ணும்.

பலருக்கும் கனவுப் பணியாக இருப்பது விமானத்தை இயக்கும் பைலட் வேலை. இத்துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், விமானத்தைப் பார்ப்பது போலவே, பெண் பைலட்டுகளையும் ஆச்சர்யத் துடன் பார்ப்பவர்கள் பலர். இந்தத் துறையில் தமிழகத்துக்கான பெருமைமுகமாகத் திகழ் கிறார் தீபா.

இவர் யார் என தெரிந்துகொள்வதற்கு முன்பு, இவர் விமானப் போக்குவரத்துத்துறையில் நுழைந்த கதையை, அவரே சொல்லக் கேட்போம்... “ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது சைக்கிளிங்ல நேஷனல் லெவல் சாம்பியனா இருந்தேன். ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமா, சீனியர் டிராஃபிக் அசிஸ்டன்ட்டா இந்தத் துறைக்குள் நுழைஞ்சேன். பிறகு, எக்ஸாம் எழுதி ஏர் ஹோஸ்டஸா சில வருஷங்கள் வேலை செஞ்சேன். விமானிகளின் செயல்பாடுகளால ஈர்க்கப்பட்டு, இந்தியன் ஏர்லைன்ஸ்ல பயிற்சி விமானியா சேர்ந்தேன்.

சீனியர் பைலட் தீபா
சீனியர் பைலட் தீபா

2005-ல் நான் கமாண்டரா ஆனப்போ, அந்த நிறுவனத்துல இந்தியாவுலயே பத்து பெண் கள்தான் அந்த போஸ்டிங்ல இருந்தோம்” - இந்தத் துறைக்குள் நுழைந்தபோது சிறகு முளைத்த உணர்வில் இருந்தவர், திறமையினால் கிடுகிடுவென உயர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராக (Instructor) உயர்பொறுப் பில் இருக்கிறார். இந்தியா வின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவன மான ‘ஏர் இந்தியா’வில் பயிற்றுவிப்பாளராக இருப்பவர்களில், தீபா மட்டும்தான் தமிழகத் தைச் சேர்ந்தவர்.

விமானத்தை இயக்குபவர்கள் எல் லோருமே பைலட் என பலரும் நினைப்ப துண்டு. ஆனால், சிவில் விமானப் போக்கு வரத்துத்துறை என்பது, பயிற்சி விமானி, கோ-பைலட், கமாண்டர் (பைலட்), செக் பைலட், இன்ஸ்ட்ரக்டர், எக்ஸாமினர் ஆகிய படிநிலைகளைக் கொண்டது. இந்தத் துறையின் மொத்த செயல்பாடுகளும், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை யின் டி.ஜி.சி.ஏ (Directorate General of Civil Aviation) எனப்படும் ஆணைக்குழுவின் வரம்புக்கு உட்பட்டவை. இந்தக் குழுவின் மூலமாகத் தேர்வு செய்யப்படும் உச்சபட்ச பொறுப்புதான் ‘ஃப்ளைட் ஆபரேஷன் இன்ஸ்பெக்டர்’ எனும் மத்திய அரசுப் பணி.

இந்தியாவிலிருந்து கிளம்பும், இந்தியா வுக்கு வந்திறங்கும் எல்லா விமானங்களின் இயக்கம், விமானிகளின் பணித்திறன், பாதுகாப்பு உட்பட அனைத்து அம்சங்களை யும் ஆய்வு செய்யும் அதிகாரம் படைத்த இந்தப் பணிக்குத் தமிழகத்திலிருந்து தேர் வான முதல் பெண், தீபாதான். அந்தப் பொறுப்பில் ஓராண்டுக்காலம் பணி யாற்றியவர், தனிப்பட்ட காரணங்களுக் காக மீண்டும் ஏர் இந்தியா பணிக்கே திரும்பி விட்டார்.

“2016-ல் இன்ஸ்ட்ரக்டரா புரொ மோஷன் கிடைச்சது. அந்த வேலையில இருந்தபடியே நேர்முகத்தேர்வுல செலக்ட் ஆகி, ஃப்ளைட் ஆபரேஷன் இன்ஸ்பெக்டரா ஒரு வருஷம் (2021 – 2022) வேலை செஞ்சேன். அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங் களோட விமானிகள்லேருந்து ஊழியர்கள் வரை, எல்லாவிதமான விமானங்களோட திறனையும் எப்போ வேணாலும் ஆய்வு செய்யுற அதிகாரம் கொண்டது அந்தப் பொறுப்பு. அதன்படி, சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய விமான நிலையங்கள்ல தொடர்ச்சியா ஆய்வுப் பணிகளைச் செஞ்சேன்.

பயிற்சி விமானி முதல் எக்ஸாமினர் வரை யாரா இருந்தாலும், தங்களோட வேலையுடன் விமானத்தையும் ஓட்ட ணும். ஆனா, இந்த இன்ஸ்பெக்டர் போஸ்டிங்ல இருக்கிறவங்க மட்டும் விமானம் ஓட்டணுங்கிற அவசியம் இல்லை. தமிழகத்துலேருந்து சிவராம்ங்கிற கேப்டன் மட்டும்தான் எனக்கு முன்னாடி இந்த போஸ்டிங்ல வேலை செஞ்சிருக்கார். அவருக்குப் பிறகு, நான் மட்டுமே அந்த போஸ்டிங்ல இருந்திருக்கேன். இப்போ ஏர் இந்தியா நிறுவனத்துல எக்ஸாமினர் போஸ்டிங்க்கு தயாராகிட்டிருக்கேன்” என்று அடக்கத் துடன் கூறும் தீபா, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண் டிருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளாகச் சென்னைவாசி.

இதுவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானங் களை இயக்கியிருக்கும் தீபா, 16,000 மணி நேரத்துக்கு மேல் விமானங்களை இயக்கியிருக்கிறார்.

“எல்லா நாளும் சீதோஷண நிலை ஒரே மாதிரி இருக்காது. ஆனா, பனி, மழை, மேகமூட்டம், புயல், அனல் காத்துனு பருவநிலை எப்படி இருந்தாலும் சரி... மலைப்பகுதி, கடல் பகுதி, வனப் பகுதினு எந்த வழித் தடத்துல விமானத்தை இயக்குறதா இருந்தாலும் சரி... எல்லா விதமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாரா இருக்கணும்ங்கிறதுதான் பைலட்டுக்கான அடிப் படைத் தகுதி. இது மாதிரியான ‘திக் திக்’ நிமிடங்களை ஏராள மான தடவை நானும் சாதுர்யமா எதிர் கொண்டிருக்கேன். இது தவிர, பறவை மோதுறது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணி யைக் காப்பாத்த சமயோஜிதமா முடி வெடுத்து, அவசரமா விமானத்தைத் தரையிறக்குறதுனு அந்த ‘ஹாட் சீட்’ல இருக்கிறவங்களோட வேலை, ரொம்பவே அழுத்தமும் பொறுப்பும் கொண்டது.

அதனால, தனிப்பட்ட முறையில என்ன பிரச்னைகள், கவலைகள் இருந்தாலும், அதையெல்லாம் வேலை நேரத்துல மனசுல அலைபாயவே விடக் கூடாது. விமானத்துல ஏறினதும், பயணிகளின் நலன்தான் பைலட்டின் ஒரே நோக்கமா இருக்கணும். எவ்வளவுதான் விழிப்போடு இருந்தாலும், சில நேரம் சூழல் நம் கையை மீறிப்போயிடும். சாலை விபத்துகளை ஒப்பிடுறப்போ, விமான விபத்துகள் மிக மிகக் குறைவாகத்தான் நடக் குது. ஆனாலும், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயணம்ங்கிறது பலருக்கும் ஆச்சர்யமான விஷயம்தான். அதனாலதான், இந்தத் துறையில நடக்கிற விஷயங்களும் விபத்துகளும் கூடுதல் கவனம் பெறுது. இந்த ஒரு சில விபத்துகளும் கூட முழுக்கவே தவிர்க்கப்படணும்ங்கிறதுதான் எல்லோரின் எண்ணமும்கூட” - பொறுப்பும் பொதுநலனும் நிறைந்த பணிச் சூழலை எளிமையாக விளக்கிச் சொல்கிறார் தீபா.

“நம் இலக்கு ராக்கெட் ஓட்டுறதா இருந்தா... வானமும் ஒருநாள் வசப்படும்!” - சீனியர் பைலட் தீபா

“பொண்ணுங்க டிரைவ் பண்ண ஸ்கூட்டிதான் பொருத்தமானதுங்கிற எண்ணம்தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கும், பெண்கள் பலருக்கும்கூட இருக்குது. கியர் பைக் ஓட்டுற பெண்களையே பலரும் ஆச்சர்யமாதான் பார்க் கிறாங்க. இப்போதைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு, ராக்கெட் ஓட்டுற அளவுக்கு நம் இலக்கும் கற்பனையும் இருந்தால்தானே, வானமும் ஒருநாள் நமக்கு வசப்படும். எனவே விருப்பமும் ஆர்வமும் இருந்தா பைலட் பொறுப்புக்கு ஆண்களுக்குச் சரிநிகரா பெண் களும் வரலாம். ஆனா...” பீடிகை யுடன் இடைநிறுத்தும் தீபா, எல் லோருக்குமான வழிகாட்டுதலைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

“விமானப் போக்குவரத்துத் துறையை கலர்ஃபுல்லான ஃபீல்டுனு பலரும் நினைப்பாங்க. ஆனா, அது உண்மையில்லை. பொறுப்பும் சவா லும் நிறைஞ்ச துறை இது. அடுத் தடுத்த பணி உயர்வுக்காக, கரியர் முடியுற வரைக்குமே தனிப்பட்ட முறையில நம்மை தயார்படுத்தி கிட்டே இருக்கணும். எவ்ளோ நேரம் விமானங்களை இயக்கியிருக் கிறோம்ங்கிறதும் முக்கியமா பார்க்கப்படும். இந்த அடிப்படை விஷயங்களை முழுசா தெரிஞ்சு கிட்டு, ரிட்டயர்மென்ட் வரைக்கும் துடிப்போடு வேலை செய்ற ஆர்வத் தோட இந்தத் துறைக்குள்ள வந்தா, விமானத்தைப் போலவே நாமும் ‘உயரே’ பறக்கலாம்” என்று தம்ப்ஸ் அப் காட்டி புன்னகைக்கிறார்.