Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: கண்கள், காதுகள் மற்றும் இதயத்தைத் திறந்திடுங்கள்!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

`நல்ல பேச்சாளரின் தகுதி என்ன தெரியுமா? கவனிக்கக் கற்றுக்கொள்வது'. இப்படியொரு பொன்மொழி உண்டு. இது நல்ல பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல, நல்ல பெற்றோர்களுக்கும் பொருந்தும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: கண்கள், காதுகள் மற்றும் இதயத்தைத் திறந்திடுங்கள்!

பிள்ளைகள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டியதன் அவசியத்தைக் கடந்த இதழில் வலியுறுத்தியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் சில விஷயங்களையும் பகிர்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேட்பது

`கேட்பது' என்றால் `சினிமா பாடலைக் கேட்பது' போன்ற விஷயமல்ல. புத்தகம் படிக்கிறோம்... அதில் ஒருசில வாக்கியங்களைத் தவறவிட்டு விடுகிறோம் அல்லது ஒரு பத்தியை கவனிக்கத் தவறிவிடுகிறோம் என்று தெரியவரும்போது மீண்டும் அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். அதில் சிக்கலோ, ஆபத்தோ இல்லை. ஆனால், பதின்ம வயதுப் பிள்ளைகளுடன் பேசும்போது திரும்பச் சொல்லச்சொல்லிக் கேட்பதோ, `இதைத்தான் சொல்லியிருப்பார்கள்' என்ற கணிப்பில் கடந்துபோவதோ பிள்ளைகளை மனதளவில் பெரிதும் பாதிக்கும். இதனால் அவர்கள் பின்னாளில் பெற்றோர்களிடம் பேசுவதையே தவிர்க்க நினைப்பார்கள். பேசுவதற்குப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எவ்வளவு முக்கியமான விஷயமோ, அதைவிட முக்கியமானது அவர்கள் பேசுவதைக் கேட்பதற்குப் பெற்றோர் தம்மைத் தயார்படுத்திக்கொள்வதும். ஆழ்மனதுக்குள் போய் சிக்கலான விஷயங்களைப் பேசுவதைக் கேட்பதற்குப் பழக வருடங்கள்கூட ஆகலாம். சரியான முறையில் கேட்கும் கலை அவ்வளவு எளிதாகக் கைவந்துவிடுவதில்லை. ஆனால், இதற்கென நேரம் ஒதுக்குவது மிகமிக அவசியமான விஷயம். பிற்காலத்தில் பிள்ளைகளின் வாழ்க்கையில் பல விஷயங்களையும் அதே ஆழத்துடன் பேச இந்த அணுகு முறை உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை இன்னும் எளிதாக எப்படிப் புரிந்துகொள்வது?

நம் நெருங்கிய நண்பர் நம்மிடம் ஆழமாகத் தன் ரகசியங்களைச் சொல்லும்போது கவனித்துக் கேட்போமில்லையா... அப்படித்தான். இது சில நேரங்களில் சிக்கலானதும் கூட. குழந்தைகளிடம் அந்த ஆழத்துக்குச் செல்வது கொஞ்சம் சிரமம்தான். தியானம் செய்கிறவர்கள் ஓர் ஆழத்துக்குச் செல்வார்கள்... தமக்கான வெளியை அடைவதாக உணர்வார்கள். அந்த மாதிரியான ஆழம்தான் இங்கும் தேவை.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: கண்கள், காதுகள் மற்றும் இதயத்தைத் திறந்திடுங்கள்!

நெருங்கிய நண்பர்களோ, காதலன் அல்லது காதலியோ ஒரு காயத்தைப் பற்றியோ, சிக்கலைப் பற்றியோ பேசும்போது எந்தத் தடையுமின்றி, குறுக்கீடுமின்றி கேட்போம். அப்படியோர் ஆழமான கவனிப்பு பிள்ளைகள் பேசுவதைக் கேட்பதிலும் வேண்டும்.

‘நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்’ என்று ஆரம்பித்தால் பிள்ளைகளுக்கு பய உணர்வு ஏற்படலாம்.

சாதாரண உரையாடல்கள் பிள்ளைகளின் பாலியல் உணர்வுகள் குறித்த எந்தத் தகவலையும் பெற்றோருக்கு உணர்த்தாது. முதலில் பெற்றோர்கள் தம் நட்பு வட்டத்தில் இப்படிப் பேசிப் பழக வேண்டும். அவர்களிடம் தனிமையில் பேசி அவர்களது எமோஷனல் ஸ்பேஸுக்குப்போகப் பழக வேண்டும். இந்த ஸ்பேஸுக்குப் போனால் குறுக்கீடுகளோ, கமென்ட்டுகளோ, தடைகளோ இருக்காது. ஆனால், குழந்தைகளுடன் அப்படிப் பேசும்போது எடுத்த எடுப்பில் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆரம்பித்தால் அவர்கள் பேச மாட்டார்கள். முதலில் ஆழமான ஓர் உரையாடலுக்குள் போக வேண்டும். உதாரணத்துக்கு, படிக்கும் பள்ளிக்கூடம், பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பற்றிப் பேசலாம். சில முடிவுகள் பற்றிப் பேசலாம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பதின்ம வயதினர் பேசுவதைக் கேட்பதில் பெற்றோருக்குச் சில சிக்கல்கள் வருவதுண்டு. பேசிக்கொண்டிருக்கும்போது பெற்றோர் தம் சிந்தனைகளுக்குள் மூழ்கிவிட வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டும் இருப்பார்கள். ஆனாலும் தம் விருப்பப்படி, தம் சிந்தனைகளுக்குள் போய்விடவும் வாய்ப்பு உண்டு.

வழக்கமாக நாம் யாரிடமாவது பேசும்போது, பேச ஆரம்பித்த 18 முதல் 20 நொடிகளில் நம் மனது ஒரு பதிலைத் தயார் செய்துவிடும். சின்னதாக ஓர் இடைவெளி விழுந்தால் போதும், நாம் பேச ஆரம்பித்து விடுவோம். அதுபோல டீன்ஏஜ் பிள்ளைகள் பேசிக்கொண்டிருக்கும்போது சின்ன இடைவெளி கிடைக்கும்போது பெற்றோர் தம் சிந்தனைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். இது எல்லோருக்கும் உள்ள சிக்கல்தான். ஆரம்ப காலத்தில் இதைத் தடுக்க முடிவதில்லை. பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிடுவது நம் இயல்பாகவே இருக்கிறது.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பெற்றோர் தம் அனுபவங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பதை எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் பல பெற்றோரும் தம் அனுபவங்களைச் சொல்லத் தொடங்கிவிடு வார்கள். ஆனால், இப்படி நமக்கு போதிக்கப் பட்டிருந்தாலும் இது நாம் செய்யக்கூடாத தவறான விஷயம்.

பெற்றோர் அனுபவங்களைப் பேசத் தொடங்கியதும் டீன்ஏஜ் பிள்ளைகள் பேசுவதை நிறுத்திவிடுவார்கள். நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தை கீழே விழுந்து, அடிபட்டுக்கொண்டுதான் நடை பழகும். அதுபோலத்தான் வாழ்க்கை அனுபவங்களும். பெற்றோர் சொல்வதில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்குச் சில வருடங்கள் தேவைப்படும். டீன்ஏஜில் பெற்றோர் தரப்பு நியாயம் அவர்கள் கண்களுக்குத் தெரியாது. எனவே, பெற்றோர் தம் கலாசார விதிமுறைகளைப் பிள்ளைகளின் மேல் திணிப்பது சிக்கலையே ஏற்படுத்தும்.

பிள்ளைகள் சொல்வதை அமைதியாகவும் எந்த முன்தீர்மானமோ, முன்முடிவுகளோ, குறுக்கீடுகளோ இல்லாமலும் கேட்பதென்பது சவாலானது என்றாலும் மெள்ள மெள்ள அதைக் கற்றுக்கொள்ள முடியும். பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் பேசும்போது அவர்கள் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் பல பெற்றோர்களுக்கும் இருக்கும்.

வாழ்க்கையில் பல தருணங்களில் இந்த பயம் ஏற்படுவதுண்டு. பெற்றோர் பயப்படும் படியோ, அவர்களுக்கு விருப்பமில்லாத வகையிலோ, சவாலான புதிய விஷயங்களையோ பற்றி பிள்ளைகள் பேசலாம். இதுவும் பெற்றோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஆனாலும், பெற்றோர் பேசித்தான் ஆக வேண்டும்.

டீன்ஏஜ் பிள்ளைகள் சிலர் அதிகம் பேசுபவர்களாக இருப்பார்கள். அவற்றைக் கேட்கும் காதுகள் வலியெடுக்கும் அளவுக்குப் பேசுவார்கள். நல்ல பேச்சுத்திறமையும், சமூக ஊடகங்களின் மூலம் நிறைய தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கும் திறமையும் இருப்பவர்கள் நிறைய நிறைய பேசுவார்கள். ஆனால், இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. பெரும்பாலான பதின்ம வயதினர் பெற்றோரிடம் குறைவாகவே பேசுகிறார்கள்.

டீன்ஏஜ் பிள்ளைகளிடம் பேசும்போது சில விஷயங்கள் பெற்றோருக்குக் கிடைக்கும்.

தேவையான தகவல்கள், நெருங்கிய நண்பருடன் இணக்கமான உறவு ஏற்பட்டது போன்ற உணர்வு மற்றும் நெருக்கம் ஆகியவற்றை அறிய முடியும்.

டீன்ஏஜ் பிள்ளைகளின் விருப்பங்கள், அவர்களின் நோக்கங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

உங்கள் டீன்ஏஜ் பிள்ளைகளிடம் பாலியல் பற்றி பேசும்போது அதை ஒரு வேலையாகச் செய்வதைவிட, வேறு ஏதேனும் வேலைக்கிடையில் பேசுவது சௌகர்யமாக இருக்கும். சில நேரங்களில் பர்சனலான விஷயங்களை, சில வார்த்தைகளை அவர்களின் முகம் பார்த்துப் பேசுவதில் பெற்றோருக்குத் தயக்கம் இருக்கும். வேலையினூடே அல்லது உடற்பயிற்சிகள் செய்யும்போது பேசுவதன் மூலம் அந்தக் கூச்சத்தைத் தவிர்க்கலாம்.

‘நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்’ என்று ஆரம்பித்தால் பிள்ளைகளுக்கு பய உணர்வு ஏற்படலாம். அப்படி ஆரம்பிக்காமல் பிள்ளைகளின் நட்பு, ஏதேனும் ஒரு புத்தகம் அல்லது அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என எதையாவது லீடாக வைத்துப் பேச்சைத் தொடங்கலாம்.

ஒரே நாளில் எல்லா விஷயங்களையும் பேசி முடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வாரம் ஒன்றிரண்டு நாள்கள் பேசலாம். இது பிள்ளைகளுடன் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தும், பாலியல் விவாதத்தை ஆரோக்கிய மானதாகவும் மாற்றும்.

அதேபோல பாலியல் குறித்த விஷயங்களைப் பேச வேண்டும் என நீங்கள் ஆரம்பிக்கும்போது அதில் ஈடுபட உங்கள் டீன்ஏஜ் பிள்ளைக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். உடனே அந்த உரையாடலை முடிக்க வேண்டியதில்லை. வேறு விஷயங்களைப் பேசி, அதை வேடிக்கையாக மாற்றி முடிக்கலாம்.

பாலியல், போதை மருந்துகள், சிகரெட், மது எனப் பல விஷயங்களைப் பற்றி பிள்ளைகளிடம் பெற்றோர் பேச முயலும்போது பிள்ளைகள் கேட்காமலோ, கவனிக்காமலோ இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பேசுவதை நிறுத்திவிட வேண்டும். அவர்கள் கேட்காத ஒரு விஷயத்துக்குப் பாடம் எடுப்பதில் பெற்றோரின் இலக்கு நிறைவேறப் போவதில்லை.

முகம் பார்த்துப் பேசத் தயங்கும் பெற்றோர், டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது வாட்ஸ்அப் மூலம்கூட பிள்ளைகளுடன் உரையாடலாம். இது அவ்வளவு முக்கியமான விஷயமா என்றால், `ஆமாம்' என்பதே பதில். டீன்ஏஜ் கர்ப்பங்களும் அந்த வயதில் பாலியல் நோய் களுக்கு உள்ளாவதும் இன்று உலக அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இவற்றைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோருடையது.

டீன்ஏஜ் பிள்ளைகளிடம் பேசும்போது பெற்றோரின் கண்கள், காதுகள் மற்றும் இதயம் எல்லாம் திறந்திருக்கட்டும். அன்றைய தினம் செய்திகளில் நீங்கள் பார்க்கிற, கேள்விப்படுகிற விஷயங்களை வைத்து உரையாடலை ஆரம்பிக்கலாம். சில நேரங்களில் உரையாடலுக்கான விஷயத்தைச் சேமித்துவைக்கலாம். புதிய படம், புதிய பாடல், புதிய புத்தகம் என எதிலாவது உரையாடலுக்கான விஷயம் இருப்பது தெரிந்தால் அதைச் சேமித்து வைக்கலாம். டீன்ஏஜ் பிள்ளைகளிடம் அதை வைத்தே உரையாடலைத் தொடங்கலாம்.

அவர்களுக்கு உறவுகளில் நட்பில் பிரச்னைகள் வரலாம். நண்பர்கள் மூலம் அவர்களுக்கு மது மற்றும் புகைப்பழக்கம் அறிமுகமாகலாம். இந்த விஷயங்களை அவர்களுடன் பேசலாம். ஒருமுறை பேசி அது பலன் தராமல் போனால் கவலைப்பட வேண்டாம். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். அது பெற்றோரின் கடமை; பொறுப்பு.