Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... இந்தக் கடமை நமக்கு இருக்கிறது!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு வருடத்துக்குத் திட்டமிட்டால் விதைகளை நடு.

பத்து வருடங்களுக்குத் திட்டமிட்டால் மரங்களை நடு.

வாழ்நாள் முழுவதற்கும் திட்டமிடுவதென்றால் ஒரு

மனிதனுக்குக் கற்றுக்கொடு.

மற்ற விஷயங்களுக்கு எப்படியோ, பாலியல் கல்விக்கு மிகப் பொருத்தமான பழமொழி இது.

மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும்போது, சக பேராசிரியர்களோடு பேசும்போது இந்தியாவில் செக்ஸ் பற்றிய தெளிவான கருத்தோட்டம் பலருக்கும் இல்லை என்று விவாதித்திருக்கிறோம். அப்போது சிலர் நகைச்சுவையாக ‘செக்ஸ் பற்றிய தெளிவில்லாமல்தான் மக்கள்தொகை அதிகரித் திருக்கிறதா?’ என்றுகூடக் கேட்டிருக்கிறார்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... இந்தக் கடமை நமக்கு இருக்கிறது!

‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை’ என்பதற்கேற்ப செக்ஸ் என்பது தானாகவே தெரியவரும் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். படித்தவர்கள்கூட அப்படித்தான் நம்புகிறார்கள். அது மிகப்பெரிய தவறு.

சொல்லிக்கொடுக்காமல் போகும்போது, பாலியல் கல்வி என்ற ஒன்றே இல்லாமல் போகும் போது மன வருத்தம், வன்முறை, பயம் என எல்லாமே பாலியல் பிரச்னைகளோடு சேர்ந்து வருவதைப் பார்க்கலாம்.

அதாவது சந்தோஷத்தைத் தர வேண்டிய பாலியல் உறவானது பல்வேறு துன்பங்களுக்குக் காரணமாவதைப் பார்க்கலாம். இதில் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... இந்தக் கடமை நமக்கு இருக்கிறது!

வாத்ஸ்யாயனார் எழுதிய `காமசூத்ரா' என்ற உலகின் முதல் பாலியல் நூலைக் கொடுத்த நாடு இந்தியா. கொனார்க், கஜுராஹோ போன்ற கோயில்களில் உள்ள பாலியல் சிற்பங்கள் படித்தவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. ஒரு சாரார் இதைக் கொண்டாடினாலும், இன்னொரு சாராருக்குப் பாலியல் கல்வி குறித்த அடிப்படை விழிப்புணர்வே இல்லாமலிருப்பதையும் பார்க்கிறோம். பாலியல் விழிப்புணர்வில்லாதவர்களிடம் தன்னம்பிக்கையைக் கொடுப்பதும் சிக்கலாகிறது.

பிரெஞ்ச் எழுத்தாளர் பால்சாக், ‘அறிவியல் துறை பல்வேறு விதங்களில் வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்னமும்கூட மனிதன் பாலியல் மற்றும் மனித உணர்வுகள் குறித்த விஷயங்களில் முன்னேற்றமின்றியே இருக்கிறான்’ என்று சொல்லியிருக்கிறார். `திருமண உறவிலும் பாலியல் உறவிலும் பழைமைச் சிந்தனையோடுதான் இருக்கிறான். முன்னேற்றங்கள் எவையும் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை' என்கிறார்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... இந்தக் கடமை நமக்கு இருக்கிறது!

விஞ்ஞானம், தொழில்துறை, தொழில்நுட்பம் என எல்லாவற்றிலும் பிரமாண்டமான வளர்ச்சியைப் பார்க்கிறோம். ஆனால், நம் உடலுக்குத் தேவையான, அடிப்படையான உணர்வான பாலியலில் எதையும் அறியாமலேயே பெரும்பான்மையோர் இருக்கிறார்கள். ஊடக வளர்ச்சி உச்சம் தொட்ட பிறகும்கூட அவை சொல்லும் விஷயங்கள், பார்க்கக்கூடிய மக்களுக்கு விழிப்புணர்வைத் தருகின்றனவா, அறிவு வளர்ச்சியை அதிகரித்திருக்கின்றனவா என்றால் இல்லை.

குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்வியானது வாழ்வாதாரத்துக்கானது. அவர்களைத் திறமைசாலிகளாக மாற்றுவதற்கானது. பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தகுதியானவர்களாக மாற்றுவதற்கானது. ஆனால், கணவன் மனைவி உறவு, வாழ்க்கையைப் பற்றியது பாலியல் கல்வி. வாழ்க்கைக்குத் தேவையான சம்பாத் தியம் ஈட்டக் கற்றுக் கொள்கிறோம். ஆனால், அந்த வாழ்க்கையை நடத்தவே ஒரு கல்வி தேவைப்படுகிறது. அதுதான் பாலியல் கல்வி. விஞ்ஞானபூர்வமான அந்தக் கல்வி வாழ்வதற்கே ஆதாரமானது.

உடல் எப்படி இயங்குகிறது, இனப் பெருக்கம் என விஞ்ஞானரீதியான பல விஷயங்களை உள்ளடக்கிய இந்தப் பாலியல் கல்வி எல்லோரையும் சென்று சேர்வதில்லை. விபத்து மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்து கொண்டால்தான் பெரும்பாலும் கொஞ்சம் உண்மையும் நிறைய கட்டுக்கதைகளும் உள்ளடக்கிய கலவையைத்தான் பலரும் கற்றுக்கொள்கிறார்கள்.

வளரும் பிள்ளைகள் தம் உடலைப் பற்றி சரியான, விஞ்ஞான உண்மைகளைத் தெரிந்துகொள்ள எல்லா உரிமைகளும் கொண்டவர்கள். ஹெச்.ஐ.வி தொற்று போன்ற ஆபத்துகள் இருக்கும் சூழலில் சந்தோஷமான, நிறைவான வாழ்வை அனுபவிக்க அவர்களுக்கு பாலியல் கல்வி மிக மிக அவசியம். பாலியல் தொடர்பான வகுப்புகள் எடுக்கும்போது பல நேரம் அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்புவதைப் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற விஷயங்கள் பிள்ளைகளைப் பாலியல் உறவுக்குத் தூண்டிவிடுமோ என்ற பயம்தான் காரணம். ஆனால், பொள்ளாச்சி, நாகர்கோவில் சம்பவங் களைப் போன்ற சூழல்களுக்குள் மாட்டிக்கொள்ளாமல், மாணவர்களைப் பண் படுத்தவே இந்தப் பாலியல் கல்வி என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆழமான கலாசாரமும் நம்பிக்கைகளும் பல்வேறு வாழ்க்கை முறைகளும் கொண்ட இந்தியா போன்ற நாட்டில், பாலியல் கல்வி குறித்த விஞ்ஞானபூர்வமான, சரியான கருத்துகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்தக் கடமை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமுதாயத்தின் பொறுப்பான இடங்களில் இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது என்பதை இந்தத் தொடர் உணர்த்தியிருக்கும்.

பாலியல் கல்வி என்பது செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடுவதல்ல. விஞ்ஞானபூர்வமான விழிப்புணர்வைத் தருவது என்பதையும் இந்தத் தொடர் உணர்த்தியிருக்கும்... உணர்ந்திருப்போம்!

- நிறைந்தது