Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

பிரீமியம் ஸ்டோரி
`நான் என் குழந்தைங்ககிட்ட ரொம்ப ஃப்ரெண்ட்லியா நடந்துபேன். எல்லா விஷயங்களையும் பேசுவேன்’ - இப்படிப் பெருமை பேசும் பெற்றோர்கள் பலரைப் பார்க்கலாம். எல்லா விஷயங்களைப் பற்றியும் வெளிப்படையாக விவாதிக்கும் இவர்களில் எத்தனை பேர், பிள்ளைகளின் பாலியல் உணர்வுகளைப் பற்றிப் பேசுவார்கள்?

‘அதையெல்லாம் பேசணுமா என்ன... அவங்களா அந்தந்த வயசுல தெரிஞ்சுப்பாங்க’ என்ற நம்பிக்கையும் பல பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால், வேறெந்த விஷயத்தைவிடவும் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் பாலியல் பற்றிப் பேசியாக வேண்டியது அவசியம்.

பலமுறை சொன்னதுபோல பெற்றோரை விடவும் இந்த விஷயத்தைப் பிள்ளைகளிடம் நாசுக்காகவும் நாகரிகமாகவும் நல்லவிதத்திலும் பேசக்கூடியவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

பிள்ளைகள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு உரையாடலை நோக்கிய முதல் அடியை நீங்களே எடுத்துவையுங்கள். பிள்ளைகளிடம் எந்த நேரத்தில், எந்த மாதிரியான சூழலில் இத்தகைய உரையாடலைத் தொடங்க வேண்டும் என்பது பற்றி முந்தைய அத்தியாயங்களில் பேசியிருக்கிறோம். அவற்றை கவனத்தில்கொள்ளுங்கள்.

1. உங்கள் குழந்தைகளிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கத் தயாராகுங்கள்.

  • பள்ளி செல்லும் வயதில் பாலியல் உறவில் ஈடுபடுவது மற்றும் கர்ப்பமாவது பற்றி என்ன நினைக்கிறாய்?

  • பாலியல் உறவிலிருந்து விலகியிருக்க உங்கள் பிள்ளை பாதுகாப்பாக நினைக்கிற விஷயம் என்ன?

  • கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவது பற்றி என்ன தெரியும்?

குழந்தைகளுக்குப் பாலியலுக்கும் காதலுக்குமான வித்தியாசத்தைப் புரிய வையுங்கள். இந்த இரண்டையும் பற்றி உங்கள் குழந்தைகள் என்ன புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கவனமாகக் கேளுங்கள்.

குழந்தைகளிடம் பாலியல் பற்றிப் பேசுவதால் அவர்கள் அந்த விஷயங்களில் ஈர்ப்பு கொண்டுவிடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். இது போன்ற விஷயங்களில் மற்றவர்களைவிட பெற்றோர் தரும் அறிவுரைகளும் ஆலோசனைகளுமே பிள்ளைகளுக்கு அவசியம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்...
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்...

உடல் உறுப்புகள் எப்படி வேலை செய்கின்றன எனக் கற்றுக்கொடுங்கள். காதலுக்கும் காமத்துக்குமான வேறுபாட்டைப் புரிய வையுங்கள்.

நீங்கள் மதிக்கும், நம்பும் விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்குப் புரியவைத்து, அவர்களுக்கு முதல் ரோல் மாடலாக இருங்கள்.

தன் மனத்தை உறுத்தும் எந்த விஷயத்தைப் பற்றியும் உங்களிடம் கேள்வி கேட்கலாம், அதற்குத் தெளிவான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் இந்தக் கேள்விகள் இருக்கலாம்...

  • நான் காதலிக்கி றேனா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

  • உடல்ரீதியான நெருக்கம் என் ஆண் நண்பருடனான என் உறவை இன்னும் பலப்படுத்துமா?

  • நான் பாலியல் உறவுக்குத் தயாராகிவிட்டேனா?

  • திருமணத்துக்குத் தயாராகிவிட்டேனா?

  • என் காதலன், காதலியிடம் உடல்ரீதியான நெருக்கத்தில் எனக்கு இப்போது உடன் பாடில்லை என்பதை மனம் நோகாதபடி எப்படிச் சொல்வது?

  • எதிர்த்தரப்பிலிருந்து அதற்கு வற்புறுத்தும் போது நான் என்ன செய்ய வேண்டும்?

  • கருத்தடை முறைகளைப் பற்றி நான் தெரிந்து வைத்திருக்க வேண்டுமா?

  • முதன்முறை செக்ஸ் உறவிலேயே நான் கர்ப்பமாகிவிடுவேனா?

  • இந்தக் கேள்விகளுக்குப் பெற்றோரின் பார்வையிலிருந்து விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும். அவை பின்வரும் பதில்கள் போல இருக்கலாம்.

  • பள்ளிகளில் படிக்கிற வயது பாலியல் உறவுக்குத் தயாரான வயதல்ல. அந்த வயதில் மனம் தடுமாறி ஈடுபடுகிற பாலியல் உறவுகள், ஹெச்.ஐ.வி போன்ற பால்வினை நோய்களுக்குக் காரணமாகலாம்.

  • நம்முடைய குடும்ப மரபுகளின்படி பாலியல் உறவு என்பது திருமணத்துக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிற அன்பின் வெளிப்பாடு. திருமணத்துக்கு முன் அதற்கு அனுமதியில்லை.

  • பதின்ம வயதில் பாலியல் பற்றிய சிந்தனைகள் வருவதும், அதில் ஆர்வம் ஏற்படுவதும் இயற்கையானதுதான். ஆனால், அவற்றை பாலியல் உறவுக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

  • ஒரு குழந்தைக்குத் தாயாவதாலோ, தந்தையாவதாலோ அந்தச் சிறுமியோ, சிறுவனோ முழுமையான பெண்ணாகவோ, ஆணாகவோ மாறிவிடுவதாக நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. பதின்ம வயதென்பது அதற்கான சரியான பருவமும் இல்லை.

  • காதலரிடம் அன்பை நிரூபிக்க செக்ஸ் உறவில் ஈடுபடுவதுதான் சிறந்த வழி என்பது முழுக்க முழுக்கத் தவறான சிந்தனை.

  • திருமணத்துக்கு முன்பு அப்படிப் பாலியல் உறவுக்கு வற்புறுத்தும் காதலை விட்டு விலகுவதில் தவறேதும் இல்லை.

2. உங்கள் பிள்ளைகளின் நடத்தையில் சந்தேகம் வந்தால் அவர்களைக் கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்களா, என்ன செய்கிறார்கள், அவர்கள் உங்கள் பார்வை படும் இடத்தில் இல்லாதபோது பொறுப்பான வேறு நபர்கள் அவர்களைக் கண்காணிக்கிறார்களா என்பனவற்றை உறுதி செய்யுங்கள்.

உங்கள் செய்கைகள் பிள்ளைகளை எரிச்சலடையச் செய்யலாம். பிள்ளைகளின் மீது உண்மையான அக்கறை உள்ள பெற்றோருக்கு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் எனப் புரியவையுங்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள்?

3. குழந்தைகளின் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தெரிந்து வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். உங்களைப் போலவே குடும்ப மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் தரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா அவர்கள் என்று பாருங்கள். பிள்ளைகளின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்துப் பேசுங்கள். அவர்களின் பெற்றோரிடம் பேசி அவர்கள் குடும்பத்துக் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

4. பதின்பருவப் பிள்ளைகள் காதலில் விழுந்துவிட்டது தெரிந்தால் அதையும் கவனியுங்கள். அவர்கள் காதலிக்கும் நபரின் வயது மிக முக்கியம். அவர்களுக்குள் அதிகபட்சமாக இரண்டு வயது வித்தியாசம் இருக்கலாம். அதற்கு மேல் அனுமதிக்காதீர்கள்.

5. குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள லட்சியங்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற உதவுங்கள்.

6. குடும்ப மதிப்பீடுகளுக்கு இணையாக நீங்கள் மிக முக்கியமாக நினைக்கும் விஷயம் அவர்களது கல்வி என்பதைப் புரியவையுங்கள்.

குழந்தைகளின் படிப்பில் மந்தநிலையை உணர்ந்தால் அதை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு சரிபடுத்துங்கள். குழந்தைகளின் மதிப்பெண்களைத் தொடர்ந்து கண்காணிப்பது, தேவைப்பட்டால் அவர்களின் ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசுவது போன்றவற்றைச் செய்யுங்கள்.

பள்ளி நேரத்துக்குப் பிறகு தேவையில்லாமல் பள்ளி வளாகத்தில் நேரம் செலவிடுவதை அனுமதிக்காதீர்கள். அவசியமான நிலையில் அப்படி பள்ளி வேலைகளுக்காக நேரம் செலவிட வேண்டி வந்தாலும் அதற்கும் ஓர் எல்லை போடுங்கள்.

7. உங்கள் குழந்தைகள் என்ன பார்க் கிறார்கள், என்ன படிக்கிறார்கள், எவற்றைப் பின்தொடர்கிறார்கள் என்பதிலும் உங்களுக்கு ஒரு கண் இருக்கட்டும். அவை நண்பர்களிடமிருந்து, ஊடகங்களிலிருந்து, இணையத்திலிருந்து, அறிமுக மில்லாதவர்களிடமிருந்து... இப்படி எங்கிருந்து வந்தாலும் அவற்றைக் கண்காணியுங்கள். இந்த விஷயங்களில் உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள். அவர்கள் படிக்கிற, பார்க்கிற, பின்தொடர்கிற விஷயங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் கேளுங்கள்.

8. குழந்தைகளின் அறைகளில் தனி தொலைக்காட்சி வைப்பதைத் தவிருங்கள். அவர்கள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதை கவனியுங்கள். அவர்கள் வயதுக்கு மீறிய நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தெரிந்தால் அதைக் கட்டுப்படுத்தவும், தேவைப்பட்டால் இணைப்பைத் துண்டிக்கவும் தயங்காதீர்கள்.

9. குழந்தைகளிடம் நீங்கள் காட்டுகிற கண்டிப்பு அவர்களின் மீது உங்களுக்கு அன்போ, அக்கறையோ இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் அன்பைப் பரிமாறுங்கள். அவர்களைக் கட்டியணைத்துக்கொள்ளுங்கள்.

அவர்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அடிக்கடிச் சொல்லுங்கள். குழந்தைகள் சொல்பவற்றைக் காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்கள் செய்கிற விஷயங்களை கவனியுங்கள்.

கண்டிப்பு, கறார் என 24 மணி நேரமும் ஸ்ட்ரிக்ட் பெற்றோராகவே இல்லாமல், குழந்தைகளிடம் விளையாடவும் கொஞ்சி மகிழவும் நேரம் ஒதுக்குங்கள்.

வீட்டுக்குள் ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

தினம் ஒருவேளையாவது குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

10. எந்த வயதிலும் உங்கள் குழந்தையுடனான உறவைப் புதுப்பிக்கலாம். பதின்ம வயதுக்கு வந்துவிட்டதால் குழந்தைகளுக்குப் பெற்றோரின் அருகாமையும் அறிவுரைகளும் அவசியப்படாது என்று நீங்களாக நினைத்துக்கொண்டு அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டாம். எல்லா வயதிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரின் அருகாமை யும் ஆலோசனைகளும் அவசியம். வெளியில் எதிர்ப்பு காட்டுவதுபோலத் தெரிந்தாலும் அவர்களுக்குப் பெற்றோரின் அங்கீகாரமும் அன்பும் எல்லாக் காலத் திலும் தேவைப்படுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு