லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும்?

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

ண்கள் நீச்சல்குளம் போன்ற இடங்களில் உடை மாற்றும்போது பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து தம் உறுப்பு சிறியதாக இருப்பதாகக் கவலைகொள்வதையே மருத்துவர்களாகிய நாங்கள் ‘லாக்கர் ரூம் சிண்ட்ரோம்’ என்கிறோம்.

ஆனால், இன்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் `பாய்ஸ் லாக்கர் ரூம்' என்பதன் அர்த்தமே வேறு. அதைப் பற்றிக் கடந்த இதழில் நிறைய அலசினோம். சரி... அப்போது இதற்கான மாற்று என்ன?

நாம் இன்னமும் பெண் குழந்தைகளையே ஒழுங்காக இருக்க அறிவுறுத்திக் கொண்டிருக் கிறோம். அதையும் மீறி, ஆண்கள், பெண்களைக் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்வது என்பது வன்முறை கலாசாரத்தின் ஆபத்தான போக்காகவே பார்க்கப்பட வேண் டும். இதற்கு எதிராக நான் சொல்லக் கூடியது ஒரே ஒரு விஷயம்தான். பாலியல் கல்வி. அது மட்டும்தான் இதற்கான தீர்வாக இருக்கும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும்?

பாலியல் கல்வி என்பது ஒரு கடல் போன்றது. அதில் பாலியல் நடத்தைகள் பேசுவது ஒருபக்கம் என்றால் பாலியல் உரிமைகளைப் பேசுவது இன்னொரு பக்கம். பாலியல் கல்வி, ஆணும் பெண்ணும் சமம் என்கிறது. பாலியல் உரிமைகளைப் பொறுத்தவரை ஆண், பெண்ணைவிட எந்தவிதத்திலும் உயர்ந்தவன் அல்லன்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எந்த நேரத்துக்கும் வீட்டுக்கு வரலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். ஆனால், பெண் என்பவள் இப்படித்தான் உடையணிய வேண்டும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது மாதிரி பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். அதே மாதிரி அத்துமீறி பெண்களிடம் தவறாக நடந்துகொள்பவர்கள் மீதான சட்டப்படியான நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

சோஷலிச நாடுகளில் ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படுகிறார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. சிங்கப்பூரில் ஒரு பெண்ணை யாரும் கிண்டல், கேலி செய்துவிட முடியாது. ஆண்களின் தவறான நடத்தைக்கு அந்தப் பெண்ணின் உடையைக் காரணம் காட்ட முடியாது. சின்னதாகப் புகார் செய்தாலும் அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்த நபரை பின்பக்கமாக கைவிலங்கிட்டு, கைது செய்து கடுமையான ஜெயில் தண்டனை கொடுக்கப்படும். தவறு செய்தவரின் பின்னணி என்னவாக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்குள்ளவராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. சட்டங்களால் இது சாத்தியமாகிறது அல்லது சோஷலிச நாடுகள்போல சம உரிமைகள் கொடுக்கும் நாடுகளில் பெண் சுதந்திரம் சாத்தியமாகிறது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நிலைமை மிகவும் மோசம். அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும்?

`டேட்டிங் ரேப்' என்கிறார்கள். ஆணும் பெண்ணும் பழகும்போது வெளியிடங் களுக்குச் செல்வது, சேர்ந்து உணவருந்துவது எல்லாம் இயல்பான விஷயங்கள். அந்த டேட்டிங் பெண்ணுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவளுடன் வல்லுறவு கொள்வது நடந்தால்..? அதுதான் டேட்டிங் ரேப். இந்தியாவில் இந்தக் கலாசாரம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. ஏற்கெனவே இந்தியா போன்ற நாடுகளில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி ஆபாசத் திரைப்படங்கள் சோஷியல் மீடியாக்கள், அவற்றில் இளம் ஆண்களும் பெண்களும் தேர்ந்தெடுக்கும் தவறான விஷயங்கள் எல்லாம் ஆபத்தின் அறிகுறிகள்.

ஒரு பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்து பின்னால் மிரட்டுவதெல்லாம் முன்பு இல்லாமலிருந்தது. இன்று யார் வேண்டுமானாலும் அதைச் செய்துவிட முடியும். அதைவைத்து வாழ்நாள் முழுவதும் மிரட்ட முடியும். பொள்ளாச்சி, நாகர்கோவில் போன்ற இடங்களில் நடந்தவையெல்லாம் இப்படித்தான் இதற்கும் தீர்வு பாலியல் கல்விதான். அது ஆண் பெண் இருவருக்கும் அவசியம். பாலியல் கல்வி என்பது பாலியல் உறவு பற்றி போதிக்கிற விஷயமல்ல. ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி சமமாக நடத்த வேண்டும், பெண்ணுக்கான மரியாதையை எப்படிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் போதிப்பதுதான் பாலியல் கல்வி. அதுதான் ஆண்களை முறைப்படுத்தும்; பெண்களைச் சரியான பாதையில் செல்ல வழிகாட்டும்.

செல்போன் போன்ற தொழில்நுட்பங்கள் மனிதர் களிடையே தகவல் பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும், பொழுது போக்கவும், கற்றுக்கொள்ளவும் உதவினாலும் இவற்றில் பெரிய ஆபத்துகளும் இருக்கின்றன.

ஒரு பெண் தனியே பார்ட்டிக்குப் போவது சரியா, துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்வதும், சூழலை கணிப்பதும் எவ்வளவு முக்கியம், அப்படி ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அந்த இடத்தைவிட்டு விரைய வேண்டிய அவசியம், அங்கே கொடுக்கப்படும் குளிர்பானங்களைச் சந்தேகிப்பது (அந்த பானத்தில் சுயநினைவை இழக்கச் செய்கிற மருந்துகளைச் சேர்த்து அவளை வல்லுறவு கொள்ளும் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன). ஏதேனும் ஆபத்தை உணர்ந்தால் தனிமையைத் தவிர்த்து உடனே மக்கள் அதிகமுள்ள இடத்துக்கு வருவது... இவையெல்லாமும் பாலியல் கல்வியில் சேர்ந்தவையே. சிக்கல்கள் வரும்போது சமாளிக்கக் கற்றுத்தருவதும் கல்விதான்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும்?

`ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக் ஹெல்த் கேர்' இதழில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் போர்னோகிராபி ஆர்வ வெளிப்பாடு பற்றிப் பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 1970-களில் பிறந்த குழந்தை டி.வி பார்க்கும் வயது சராசரியாக நான்கு என்றிருந்தது. இன்று டிஜிட்டல் மீடியாக்களுடன் இணைகிற வயது நான்கு மாதங்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு. அந்த வயதிலேயே செல்போனுடன் விளையாட ஆரம்பிக்கிறது குழந்தை. இந்தத் தொழில் நுட்பங்கள் எல்லாம் மனிதர்களிடையே தகவல் பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும் பொழுதுபோக்கவும், கற்றுக்கொள்ளவும் என்றிருந்தாலும் இவற்றில் பெரிய ஆபத்துகளும் இருக்கின்றன. குறிப்பாக ஆபாசப் படங்கள். இவை இன்று எளிமையாக குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன. டி.வி-யில் ரொமான்ட்டிக்கான விஷயங்களைப் பார்க்கிறார்கள் என்றால் போர்னோ கிராபியில் அவர்கள் பார்ப்பவை வன்முறை நிறைந்த ஆபாசமான விஷயங்கள். இது சரியான போக்கல்ல.

15 முதல் 20 வயதுக்குள்ளான இளம் பிள்ளைகள் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கிறார்கள். பெண் குழந்தைகளிடம் ஆபாசமாக வும் வன்முறையாகவும் நடந்து கொள்கிறார்கள். இதை எப்படித் தடுப்பது என்ற குழப்பமும் நீடிக்கிறது. போர்னோகிராபியிலும் பெண்களை உபயோகப் பொருள்களாகப் பார்க்கப்படுவதை ஆய்வாளர்கள் கண்டிக்கிறார்கள்.

விதிகளைத் தகர்த்தெறிந்து ரிஸ்க் எடுக்கும் குழந்தைகளும், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களும் அதிக அளவில் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள். இவர்கள் அதிக வன்முறைகொண்ட ஆபாசப் படங்களை விரும்புகிறார்கள். வாழ்க்கையில் திருப்தியில்லாத வர்களும் இவற்றைப் பார்க்கிறார்கள். இந்தக் குழந்தைகள் சமுதாயக் கட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.

மனம் உடல், பாலியல் சார்ந்த பாதிப்புக்குள்ளான குழந்தைகள்... அதாவது சிறுவயதில் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்த ஆண் பெண் குழந்தைகள், நெகட்டிவ் அனுபவங்களைச் சந்தித்தவர்கள், பெற்றோரின் விவாகரத்தை எதிர்கொண்டவர்கள் போன்றோர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகவும் இது உலகம் முழுவதும் நடப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

இதற்கெல்லாம் மாற்று..?

பாலியல் கல்வியும் பெற்றோரின் வழிகாட்டுதலும் மட்டுமே. இந்தப் புரிந்துணர்வு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அரசாங்கம் என அனைவருக்கும் அவசியம்.

பாலியல் கல்வி என்பது தன்னம்பிக்கையை வளர்க்கும். மற்றவர்கள் உரிமைகளில் தலை யிடுவதைத் தடுக்கும். மது, புகை போன்ற பழக்கங்களை ஒதுக்க வலியுறுத்தும்.