Published:Updated:

பஞ்சபூதங்கள்: நிலம்... உழைப்பை விதைக்கிறோம்!

சண்முகப்பிரியா
பிரீமியம் ஸ்டோரி
சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா

பஞ்சபூதங்கள்: நிலம்... உழைப்பை விதைக்கிறோம்!

சண்முகப்பிரியா

Published:Updated:
சண்முகப்பிரியா
பிரீமியம் ஸ்டோரி
சண்முகப்பிரியா

``நிறைவான வாழ்க்கை இல்லைனாலும் மண்ணோடு சேர்ந்து மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்கோம். எல்லோரும் `விவசாயம்', `விவசாயிகள்' என்று குரல் கொடுக்கலாம். ஆனால், கடைசிவரை தனியா போராடுறது விவசாயிகள் மட்டும்தான். ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் `நாங்க விவசாயி'ன்னு நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவோம். சேறு நிறைஞ்ச இந்தக் கைதான் எங்களுடைய அடையாளம்” என வார்த்தைகளில் உணர்ச்சி காட்டுகிறார் 30 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் சண்முகப்பிரியா.

பஞ்சபூதங்கள்: நிலம்... உழைப்பை விதைக்கிறோம்!

“ சொந்த ஊரு ஈரோடு. ரெண்டு தலைமுறையாக விவசாயம்தான் குடும்பத் தொழில். இத்தனை வருஷ விவசாயத்தில் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாச்சு. ஆனாலும், இதை விட்டுட்டு வேற தொழிலுக்குப் போக மனசு வரலை. சோறு போட்ட மண்ணை அப்படியேவிட்டுட்டுப் போக முடியுமா சொல்லுங்க. காசு பணத்தை எப்படி வேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம், மண்ணை மலடாக்கினா சோத்துக்கு என்ன பண்றது?” என்று ஓங்கி ஒலிக்கும் சண்முகப்பிரியாவின் வார்த்தைகள் சிந்திக்க வைக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அம்மா அப்பா தலைமுறையில ஊரில் எல்லாரும் விவசாயம் பண்ணினாங்க. எங்க தலைமுறையில சிலர் படிச்சுட்டு வேற வேலைக்குப் போயிட்டாங்க. நாளைக்கு நம்ம புள்ளைங்க தலைமுறையில யாருமே விவசாயம் பண்ண மாட்டாங்கபோல. எல்லா புள்ளைங்களும் டாக்டராகவும் கலெக்டராகவும் ஆகிட்டா, யாரு விவசாயம் பண்றது? அதனால எங்க புள்ளைங்ககிட்ட இப்போவே உறுதியா சொல்லிட்டேன்... `நீங்க எதிர்காலத்துல விவசாயிகளாகத் தான் இருக்கணும்'னு.

சண்முகப்பிரியா
சண்முகப்பிரியா

கரும்பு, வாழை விவசாயம் பார்த்தாலும் மஞ்சள்தான் இங்கே பிரதானம். எங்க ஊருல விளையுற மஞ்சளுக்குன்னு தனி நிறம் இருக்கு. அது எங்க மண்ணோட அடையாளம். அதனாலதான் எங்க ஊரு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைச்சுது. எங்க ஊரைச் சுத்தி 500 விவசாயிகளாவது மஞ்சள் விவசாயம் பண்ணுவாங்க. லாப நஷ்டம் தாண்டி, மஞ்சளை எங்களுடைய அடையாளமாகவும் பெருமையாகவும் பார்க்கிறோம்.

நிலத்தில் மஞ்சளை விதைச்சால, அறுவடைக்கு பத்து மாசங்கள் ஆகும். அதனால சிலர் சிறுதானியங்களை ஊடு பயிரா விதைப்பாங்க. ஆனால், மயில் தொல்லை அதிகம் இருப்பதால் நாங்க ஊடுபயிர் எதுவும் விதைக்காமல், கரும்பும் நெல்லும் தனியா பயிரிட்டிருக் கோம். குடும்பமாகச் சேர்ந்து ஆளுக்கு ஒரு வேலை பார்ப்ப தால் கஷ்டம் தெரியலை.

ஈர மஞ்சளைவிட காய்ந்த மஞ்சள் நல்ல விலைக்குப் போகும் என்பதால், நாங்களே மஞ்சளைக் காயவைத்து பாலிஷ் செய்து விற்பனைக்கு அனுப்பறோம். நம் மண்ணை நம்பி உழைப்பை விதைத்தால் நிச்சயம் மண்ணு நம்மை ஏமாத்தாது.

நிலத்துக்கு உயிர் இருக்குன்னு ஒரு விவசாயியால்தான் உணர முடியும். எங்க நிலத்துல இருக்கிற ஒவ்வொரு மஞ்சள் செடியும் என் குழந்தை மாதிரிதான். அதனால் எந்தச் செயற்கை உரமும் பயன்படுத்துறது இல்ல. காசுக்கு ஆசைப்பட்டு மண்ணை மலடாக்கக் கூடாதுனு நானும் என் கணவரும் உறுதியா இருக்கோம்.

விவசாயிகள் சார்பாக மக்கள் கிட்ட ஒரு கோரிக்கை இருக்கு... `நான் ஒரு விவசாயி' என்பது என் தலைமுறைக்கான அடையாளம். அந்த அடையாளத்தை உங்கள் குடும்பத்திலும் உருவாக்குங்க. வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம்” என அழைப்பு விடுக்கிறார் மண்ணின் மங்கை சண்முகப்பிரியா.