என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அம்மாவின் திருமணம்... நடத்திவைத்த மகன்கள்!

சித்தார்த்தன் கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
சித்தார்த்தன் கருணாநிதி

அம்மாவுக்கு இப்படியொரு கல்யாணம் நடந்த விஷயம் தெரிஞ்சு பலரும் நிறைய பிரச்னைகள் பண்ணாங்க.

`அம்மாவின் திருமணம்... நடத்தி வைத்த மகன்கள்!' என்ற இதே தலைப்பில் கடந்த இதழ் அவள் விகடனின் ‘வினு, விமல், வித்யா’ பகுதியில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். இளவயதில் கணவரை இழந்த கிராமத்துப் பெண்ணுக்கு அவரின் மகன்கள் மறுமணம் செய்து வைத்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட `Right to Marry' என்ற புத்தகம் பற்றிய செய்தி அது.

புத்தகத்தை எழுதிய சித்தார்த்தன் கருணா நிதியிடம் பேசினோம்.

``இந்த மாசம் அம்மா அப்பாவுக்கு ரெண்டாவது திருமண நாள்...’’ மகிழ்ச்சியைப் பகிர்ந்தபடி பேச ஆரம்பித்தார்.

அம்மாவின் திருமணம்... நடத்திவைத்த மகன்கள்!

``எங்களுக்குச் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வலையாம்பட்டு நான், தம்பி மகிழன், அம்மா, அப்பானு சந்தோஷமா வாழ்ந்திட்டிருந்தோம். அம்மாவும் அப்பாவும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணவங்க. அம்மா டெய்லரிங் வேலை பண்ணிட்டிருந்தாங்க. அப்பா கூலி வேலை பார்த்திட்டிருந்தார். 2009-ம் வருஷம் உடல்நலம் சரியில்லாம அப்பா தவறிட்டார். நான் இன்ஜினீயரிங் முதல் வருஷம், தம்பி ப்ளஸ் ஒன் படிச்சிட்டிருந்தோம். அப்பாவோட இறப்புக்குப் பிறகு யாரும், எதைப் பத்தியும் யோசிக்காம அப்படியே வாழ்க்கை போயிட்டிருந்தது. வேலைக்குப் போன பிறகு நானும் தம்பியும் பெரியாரை படிச்சோம். எங்களுடைய எண்ணங்கள்ல மாற்றங்கள் வந்தது. நானும் தம்பியும் படிப்பு, வேலைனு வெளியூர்கள்ல இருந்தோம். அம்மா தனியா இருந்தாங்க. அவங்களுக்கு ஏன் இன்னொரு கல்யாணம் செய்து வைக்கக்கூடாதுனு தோணவே அம்மாகிட்ட பேசினோம். ‘உங்களுக்கென்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா... ஊர், உலகம் என்ன பேசும்’னு கேட்டாங்க. அந்த யோசனையை நிராகரிக்கிற எல்லா வாதங்களையும் முன்வெச்சாங்க. ஒரு கட்டத்துல இந்தப் பேச்சு அம்மாவோட பெற்றோர், அம்மாகூடப் பிறந்தவங்கன்னு எல்லாருக்கும் தெரியவந்து எல்லாரும் எங்ககூட பேசறதையே நிறுத்திட்டாங்க...’’ வருடங்களைக் கடந்த வலி தெரிகிறது சித்தார்த்தனின் பேச்சில். ஆனாலும், உறவுகளின் உதாசீனம் சகோதரர்களின் உறுதியைக் கொஞ்சமும் அசைக்கவில்லை.

``ஒருவழியா அம்மாவை சம்மதிக்க வெச்சோம். அம்மாவுக்குத் தெரிஞ்சவங்க மூலமா பக்கத்து ஊர்க்காரர் ஏழுமலை பத்தி தெரியவந்தது. அவர் மனைவியை இழந்தவர். ‘நீங்க சந்திச்சுப் பேசுங்க. உங்களுக்கு சம்மதம்னா நாங்க பேசறோம்னு சொன்னோம். அம்மாவும் அவரும் சந்திச்சுப் பேசினாங்க. அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அடுத்து நாங்களும் பார்த்துப் பேசினோம். 2019-ம் வருஷம் எளிமையா கோயில்ல கல்யாணம் நடந்தது. அம்மாவுக்கு இப்படியொரு கல்யாணம் நடந்த விஷயம் தெரிஞ்சு பலரும் நிறைய பிரச்னைகள் பண்ணாங்க. இதோ ரெண்டு வருஷங்கள் முடியப்போகுது. இப்போ எல்லாம் சகஜமாகி, எல்லாரும் வழக்கம்போல பேசுறாங்க, பழகுறாங்க...’’ அம்மாவின் முகத்தில் இழந்த புன்னகையை மீட்டெடுத்த மகிழ்ச்சி அண்ணனுக்கும் தம்பிக்கும்.

அம்மாவின் திருமணம்... நடத்திவைத்த மகன்கள்!

``அப்பாவோட இறப்புக்குப் பிறகு, அம்மா பல வருஷம் தனிமையில வாழ்ந்திருக்காங்க. எந்த வேதனையையும் பிரச்னையையும் எங்ககிட்ட அம்மா பகிர்ந்துகிட்டதில்லை. நானோ, தம்பியோ பக்கத்துல இல்லாத நிலையில அவங்களை யார் கவனிச்சுப்பாங்கன்னு கவலைப்பட்டிருக்கோம். இப்போ அவங்களைப் பார்த்துக்க ஒரு துணை இருக்காருங்கிற நிம்மதி வந்திருக்கு. இந்த அனுபவங்களை அப்பப்போ என் வலைதளத்துல எழுதிட்டிருந்தேன். அமேசான்ல `பென் டு பப்ளிஷ்' போட்டி அறிவிச்சபோது அதுக்காக இதையே புத்தகமா எழுத முடிவெடுத்தேன். மார்ச் 10-ம் தேதி கிண்டில் வெர்ஷனா புத்தகம் வெளிவந்திருக்கு. இதை என் தம்பி தமிழ்ல எழுதப் போறான். புத்தகத்தோட அடுத்த வெர்ஷன்ல இந்த ஒட்டுமொத்த பயணத்துல அம்மாவோட வலி, வேதனைகள்னு மொத்த அனுபவங்களும் இடம்பெறும்’ - சித்தார்த்தன் சொல்லி முடிக்க, நமக்கு ஆர்வம் கூடுகிறது இப்போதே.

மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

வாழ்க்கை சிறப்பா, சந்தோஷமா மாறியிருக்கு!

செல்வியின் கணவர் ஏழுமலை

``ஹார்ட் அட்டாக்ல 10 வருஷங் களுக்கு முன்னாடி என் முதல் மனைவி தவறிட்டாங்க. அவங்க இறக்குறதுக்கு முன்னாடி வெளிநாட்டுல வேலை பார்த் திட்டிருந்தேன். மனைவி இல்லாத வாழ்க்கை எவ்வளவு கொடுமைனு உணர்ந்திருக்கேன். வெளிநாட்டுலேருந்து வந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். பிள்ளைங்களையும் பார்த்துக் கிட்டு, விவசாயத்தையும் பார்க்குறது சிரமமா இருந்தது. எல்லாத்தையும் மீறி வாழ்க்கையில ஒரு வெறுமை. அப்பதான் எங்க ஊர்க்காரங்க மூலமா செல்வியைப் பத்தி தெரிய வந்துச்சு. சந்திச்சுப் பேசினோம். பிள்ளைங்களுக்கு சம்மதம்னா கல்யாணம் பண்ணிக்குவோம்னு சொன்னாங்க. அதேபோல அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என் முதல் தாரத்துப் பிள்ளைங்களையும் தன் பிள்ளைங்க மாதிரி பார்த்துக்குற செல்வியால என் வாழ்க்கை ரொம்ப சிறப்பா, சந்தோஷமா மாறியிருக்கு. அதே சந்தோஷத்தை நானும் அவங்களுக்குக் கொடுப்பேன்...’’ நெகிழ்கிறார் ஏழுமலை.

அழுகை, அவமானம், பொறாமை...அத்தனையும் பார்த்துட்டேன்!

- செல்வி

ன்ற பொழுதின் பெரிதுவந்த தருணம் பற்றி சித்தார்த்தன் கருணாநிதி, மகிழனின் தாய் செல்வி என்ன சொல்கிறார்?

``மனைவி இறந்த அடுத்தநாளே அந்த ஆண் புது மாப்பிள்ளை ஆயிடுறார். ஆனா, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துக்கலாம்னு சட்டமே சொன்னாலும் சமுதாயம் ஏன் அதைத் தப்பா பார்க்குதுனு தெரியல. என் முதல் கணவர் இறந்தபோது எனக்கு சின்ன உதவி தேவைன்னாலும் எந்த ஆண்கிட்டயும் கேட்க முடியாது. மீறி கேட்டாலும் என்னை அவங்களோடு சேர்த்து தப்பா பேசிருக்காங்க. என்னைப் பார்க்குறதையே அபசகுனமா நினைச்சுத் திரும்பிப் போனவங்க எத்தனையோ பேர்.

பிள்ளைங்களைக் காப்பாத்த திருப்பூர்ல பனியன் கம்பெனில வேலை பார்த்திருக்கேன். என் நிலை தெரிஞ்சு நிறைய ஆண்கள் தப்பா அணுகியிருக்காங்க. `மண்ணு திங்கப்போற ஒடம்பு தானே... பத்திரமாவெச்சு என்ன பண்ணப்போறேன்'னு கேட்டிருக்காங்க.

பிள்ளைங்க மூணு வருஷமா என் மறுமணம் பத்தி என்கிட்ட பேசிட்டே இருந்தாங்க. ஊர் என்ன பேசுமோங்கிற தயக்கம் எனக்கு இருந்துச்சு. `இந்த வயசுல நான் இப்படி முடிவெடுத்தா உங்களுக்குப் பெண் கொடுக்க யோசிப்பாங்க'னு சொன்னேன். ‘எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம், புரியவைக்கிறோம்’னு சொன்னாங்க. நீண்ட யோசனைக்குப் பிறகுதான் சம்மதிச்சேன். மனைவியை இழந்த ஒருத்தர் பக்கத்து ஊர்ல இருக்குறது தெரிஞ்சது. ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாரு. 19 வயசுல ஒரு பையன் இருக்கான்.எல்லாரும் கலந்து பேசி, எல்லாம் சரியா வரவே கல்யாணம் பண்ணிகிட்டோம். அப்பவே கல்யாணம் பண்ணாம இப்போ இது தேவையானு கேட்டாங்க.

`பிள்ளைங்க பார்த்துக்க முடியாதுனு கூட்டிக் கொடுத்துட் டாங்க'னு அசிங்கமா பேசினவங்களையும் பார்த்துட்டேன். இப்போ நான் சந்தோஷமா வாழுறதைப் பார்த்துட்டு, ‘இவளுக்கு வந்த வாழ்வைப் பாரு’னு பொறாமையில புலம்புறவங்களையும் பார்க்கறேன். புருஷன் செத்து, பிள்ளைங்களும் வெளியூர்ல இருக்க, சமைக்கப் பிடிக்காம, சாப்பிடப் பிடிக்காம தனிமையில கதறி அழுத நாள்கள் எனக்கு மட்டும்தான் தெரியும். இப்போ வயசான காலத்துல என்னைப் பார்த்துக்க ஒருத்தர் இருக்காருங்கிற அந்த நிம்மதியை எப்படிச் சொல்ல... பிள்ளைங்களுக்கு பாரமாயிடாம எங்க வாழ்க்கையை எங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்ந்திட்டிருக்கோம்’’ - செல்வியின் கண்களில் சந்தோஷக் கண்ணீர்