சிங்கப்பூரில் சட்டத்துக்குப் புறம்பாக கடத்தப்படும், ஆதரவற்ற நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் பிராணிகளுக்கு அடைக்கலமாகத் திகழ்கிறது ‘ஏக்கர்ஸ்' (Acres) காப்பகம். மினி சரணாலயம்போல காட்சியளிக்கும் இந்தக் காப்பகத்துக்கு, ஆண்டுதோறும் 350-க்கும் மேற்பட்ட பிராணிகள் கொண்டுவரப்படுகின்றன. நல்ல ஆரோக்கியத்துடன், உளவியல் ரீதியாக இயல்புநிலைக்குத் திரும்பியதும் அவை வனப் பகுதியில் விடப்படுகின்றன. இந்தக் காப்பகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அன்பரசி. தனது உலகமாகவே மாறிப்போன இந்தக் காப்பகப் பணிகளை வீடியோகாலில் காண்பித்தவாறே பேசுபவரின் முகத்தில் புன்னகை பூத்துக் குலுங்குகிறது.
“பூர்வீகம் செங்கல்பட்டு மாவட்டம். சின்ன வயசுல இருந்தே விலங்குகள், பிராணிகள்மீது அதிக ப்ரியம். அவற்றின் நலன் சார்ந்தே யோசிப்பேன். கூடவே, எந்த உயிரினத்துக்கும் தீங்கு ஏற்படுத்தக்கூடாதுங்கிற எங்க ஜெயின் சமூகத்தின் அடிப்படை நோக்கமும் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. தமிழ்நாட்டுல முதுகலை பயோ டெக்னாலஜி படிக்கும்போது, பெங்களூரு ‘இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்’ மையத்துல இந்திய காட்டெருமை களைப் பாதுகாக்கும் புராஜெக்ட்டுல சில காலம் பயிற்சி பெற்றேன். பிராணிகள் பத்தின கட்டுரை எழுதித்தான், 2002-ம் வருஷம் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா தேர்வானேன். கோயம்புத்தூர் ஆனைக் கட்டியில இருக்கிற ‘சலீம் அலி’ பறவைகள் சரலாணயத்துல சில காலம் வேலை செஞ்சேன். பின்னர், மேற்படிப்புக்காக சிங்கப்பூர் வந்தேன். ‘ஏக்கர்ஸ்’ அமைப்புல தன்னார்வலரா இணைஞ்சேன்.
ஆதரவற்றுக் கிடந்த நட்சத்திர ஆமையை மீட்டு ஒருமுறை வனத்துறைக்குத் தகவல் கொடுத்தேன். ‘அதைப் பாதுகாக்க இடம் இல்லை’ன்னு தகவல் கிடைக்கவே ரொம்பவே அதிருப்தியானேன். இனி விலங்குகள் நலனுக் காகவே வேலை செய்யுறதுனு தீர்க்கமா முடிவெடுத்தேன். ‘ஏக்கர்ஸ்’ அமைப்பின் நிறுவனரும் தற்போதைய சிங்கப்பூர் நாடாளு மன்ற உறுப்பினரானருமான லூயிஸ் அங், தன்னோட அமைப்பை விலங்குகள் நலனுக்கான காப்பகமா மாத்தினார். ‘ரெண்டு வருடங்கள் இந்தக் காப்பகத்தை நல்லபடியா நடத்திக்கொடுக்க உதவுங்க’ன்னு கேட்டார். 2007-ல் இந்தக் காப்பகத்தின் விலங்குகள் நலப் பராமரிப்பாளரா சேர்ந்தேன்” என்று சிரிப்பவர், அர்ப்பணிப்புடன் பணியாற்றி சி.இ.ஓ பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார்.
சிங்கப்பூரில் சட்டத்துக்குப் புறம்பாக விலங்குகள் கடத்தப்படுவது அதிகம். அங்குள்ள சோதனைச் சாவடிகளில் சுங்கத் துறை மற்றும் விலங்குகள் நலத்துறையினரால் கைப்பற்றப்படும் விலங்குகள், ‘சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம்’ உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்படும். கடத்தல் தொடர் பான விசாரணை முடிந்ததும், பூங்காவில் மேற்கொண்டு வளர்க்க இயலாமல் ஆதரவற்று தவிக்கும் விலங்குகள் ‘ஏக்கர்ஸ்’ காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
“சிங்கப்பூர்ல வனப்பகுதி இருந்தாலும், அதுல சிங்கம், புலி போன்ற ஆக்ரோஷமான விலங்குகள் வசிக்கிறதில்லை. பாம்பு, நட்சத்திர ஆமை, உடும்பு, இக்வானா, முள்ளம் பன்றி, சிலந்தி, நீர் நாய், பச்சை பல்லி, வெளவால், காட்டுப் பன்றி, குரங்கு, எறும்புத் தின்னி, புனுகுப் பூனை, பலவிதமான பறவை கள்தாம் வனப் பகுதியில் அதிகளவுல வாழுது. இது போன்ற உயிரினங்கள்தாம் இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், அண்டை நாடுகள்ல இருந்து சிங்கப்பூருக்கும் அதிகளவில் கடத்தப்படுது. இவை எங்ககிட்ட வரும்போது ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கும். முறையான சிகிச்சையுடன், இயற்கை வாழ்விட சூழல் உட்பட அவற்றின் நலனுக்கு ஏற்ற எல்லாத் தேவைகளையும் உருவாக்கியிருக்கோம். சிக்கலான நிலையில் இருக்கிற விலங்குகளை மட்டும் அவற்றின் ஆயுட்காலம் வரை நாங்களே வளர்ப்போம். தற்போது, 160 விலங்குகளைப் பரா மரிக்கிறோம்.
நட்சத்திர ஆமைகளுக்கு செம் பருத்திப்பூ ரொம்பப் பிடிக்கும். அதனால, ஏராளமான பூச்செடி களுடன், பல்வேறு வகையான காய்கறி, பழ வகை பயிர்களையும் இங்குள்ள தோட்டத்துல வளர்க் கிறோம். குறிப்பா, ஒவ்வொரு விலங்கின் குணநலன், உளவியல், பிரச்னைகள், மகிழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சிப் பணிகளையும் செய் வோம். இதன் மூலம் விலங்குகளுக்கு எளிதா சிகிச்சை அளிக்கவும் மகிழ்ச்சியா வளர்க்கவும் முடியும். இதுகுறித்தும், விலங்குகள் குறித்த அடிப்படையான குணநலங்கள் பத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வும் கொடுக்கிறோம்.
கடுமையான தண்டனைகள் இருந்தும்கூட, கடந்த மூணு வருஷத் துல மட்டும் வன விலங்குகளும் பிராணிகளும் சேர்த்து 9,000 உருப்படிகள் சிங்கப்பூர் அரசாங்கத் தால் கைப்பற்றப்பட்டிருக்கு. இந்தியாவுல இருந்து கடத்தி வரப் பட்டு எங்ககிட்ட வரும் பிராணி களைக் குணப்படுத்தி, நம்ம நாட்டுக்கே திருப்பி அனுப்புவோம்”
- உவகையுடன் கூறும் அன்பரசி, வீகன் டயட்டை கடைப்பிடிப்ப துடன், பிற உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் எந்தப் பொருளையும் பயன்படுத்துவது இல்லையாம்.
சிங்கப்பூரின் சுவாசூகாங் நகரத்தில் ஐந்து ஏக்கரில் இந்தக் காப்பகம் அமைந்துள்ளது. இதில், இரண்டு கால்நடை மருத்துவர்கள் உட்பட 21 பேர் பணியாற்றுகின்றனர். தன்னார்வலர்களும் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் 12,000-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பராமரித் துள்ளனர்.
“சேவைப் பணிங்கிறதால இந்த வேலையில மிகக்குறைவான சம்பளம்தான் கிடைக்கும். ஆனா, இதுல கிடைக்கிற சந்தோஷத்துக்கு விலை மதிப்பே கிடையாது. என் மகிழ்ச்சியைப் புரிஞ்சுகிட்டு அம்மாவும் அக்காக்களும் ஊக்கம் கொடுக்கறாங்க. விலங்குகள் நலன், பணிச்சூழல்தான் எனக்கான உலகம். அதனால, கல்யாணம் பத்தின எண்ணம் ஏற்படல. விலங்குகள் மக்கள் வசிப்பிடத்துக்குள்ள நுழைஞ் சுட்டாலும், சாலையில அடிப்பட்டுக் கிடந்தாலும் எங்களுக்கு அழைப்பு வரும். அவற்றை மீட்டு பராமரிப்போம்.
அடிப்படைத் தேவைக்கும் மீறி நீர் நிலைகளையும் வனப் பகுதியையும் ஆக்கிரமிச்சு கட்டடங்கள் எழுப்புறோம். இதனால, இயற்கை வாழ்விடங்களையே நம்பியிருக்கும் பறவைகள், விலங்குகளின் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகுது. உணவு, உடை, பயன்படுத்தும் பொருள்கள்னு நம்மோட தேவை களுக்காகச் சுற்றுச்சூழலையும் வாயில்லா ஜீவன்களின் நலனையும் பாதிக்கிறோம்.
இந்த உலகம் எல்லா ஜீவராசி களுக்குமானதுங்கிற எண்ணம் ஏற்பட்டாலே போதும். மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங் களும் எந்தப் பிரச்னையும் இல்லாம நிம்மதியா வாழலாம்”
- அனைவருக்குமான மெசேஜ் சொல்லி முடிக்கிறார் அன்பரசி!