லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

எங்க மக்களால் நான்... எங்க மக்களுக்காகவே நான்! - ‘வன சேவகி’ மாதேவி

மாதேவி
பிரீமியம் ஸ்டோரி
News
மாதேவி

#Motivation

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் சாலை நெடுக பசுமையுடன் வரவேற்கும் வனப்பகுதியையொட்டி இருக்கிறது ஆசனூர் கிராமம். ஊராளி பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் இங்கு, இதே சமூகத்தைச் சேர்ந்த மாதேவி, மலைவாழ் மக்களின் நம்பிக்கை அடையாளமாகத் திகழ்கிறார். பல்வேறு சேவைப்பணிகளுடன், உரிமைகளுக் காகப் போராடும் துணிச்சலை மலைவாழ் மக்களிடம் ஆழமாக விதைத்து வருகிறார்.

“விவசாயக் கூலி வேலைக்குப் போயும், வனப்பகுதியில விறகு, தேன், நெல்லிக்காய் சேகரிச்சும்தான் நாங்க பிழைப்பு நடத்துவோம். சின்ன வயசுலயே அப்பா தவறிட்டார். அதனால, பொருளாதார ரீதியா ரொம்பவே சிரமப்பட்டோம். சரியா படிப்பு சொல்லிக் கொடுக்காம, டீச்சருங்க அவங்க ஆடு மாடுகளை மேய்க்க மாணவர்களைப் பயன் படுத்திப்பாங்க. எங்களுக்கு மூணு வேளை சாப்பாடு கொடுத்து பரீட்சையில பாஸ் பண்ணி விட்டுடுவாங்க. அஞ்சாவது படிச்சு கிட்டு இருந்தபோது, டீச்சரோட ஆடுகளை மேய்ச்சுகிட்டு இருந்தேன்.

எங்க மக்களால் நான்... எங்க மக்களுக்காகவே நான்! - ‘வன சேவகி’ மாதேவி

அவை வனத்துறை விடுதியில புகுந்துடுச்சு. அதுல விருந்தினர்களா தங்கியிருந்த வனத் துறை அதிகாரி ஒருத்தரோட குடும்பத்தினர் என்னோட நிலையைப் பத்தி அக்கறையா விசாரிச்சாங்க. ‘என்னையும் என்னோட ரெண்டு தங்கச்சிகளையும் வளர்க்க சிங்கிள் பேரன்ட்டான அம்மா ரொம்பவே சிரமப் படுறாங்க. ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்ட ஜீவனம்தான். குடும்ப பாரத்தைக் குறைக்க எங்கயாச்சும் போயிடலாம்னு நினைக் கிறேன்’னு அவங்ககிட்ட சொன்னேன். ‘மக மாதிரி பார்த்துக்கிறோம். எங்க கூட வர்றியா?’ன்னு கேட்டாங்க. சம்மதம் சொல்லி உடனே அவங்ககூட போயிட்டேன். கால்நடை மேய்க்கவும் விறகு சேகரிக்கவும் காட்டுக்குள்ள போன எங்க சனங்க ஓரிரு நாள்ல வீட்டுக்கு வரலைன்னா, முடிஞ்ச வரைக்கும் தேடிப் பார்த்துட்டு, மிருகம் அடிச்சுக் கொன்னுடுச் சுன்னு நினைச்சு அவங்களுக்கு எல்லா காரியமும் பண்ணிடுவாங்க. அப்படித்தான் நானும் செத்துட்டேன்னு என் குடும்பத்தினர் நினைச்சுட்டாங்க”

- பால்யத்திலேயே குடும்பச் சுமைகளைக் குறைக்கத் துணிச்சலான முடிவெடுத்த மாதேவி, அந்த வனத்துறை அதிகாரியுடனே சென்னைக்குச் சென்று அவரது வீட்டுப் பணியாளராக வேலை செய்திருக்கிறார்.

“என்னால அம்மாவுக்குக் கொஞ்சம் பொருளாதார சுமை குறைஞ்சிருக்கும்னு சென்னையில நிம்மதியா இருந்தேன். பத்து வருஷங்களுக்குப் பிறகு எதேச்சையா என் அம்மாவைப் பார்க்க ஆசனூருக்கு வந்தேன். என்னை யாருக்குமே அடையாளம் தெரியல. நடந்ததையெல்லாம் விளக்கமா சொன்னேன். ஆரம்பத்துல நம்ப மறுத்தவங்க ஒருகட்டத்துல புரிஞ்சுகிட்டு என்னை ஏத்துகிட்டாங்க.

எங்க மக்களால் நான்... எங்க மக்களுக்காகவே நான்! - ‘வன சேவகி’ மாதேவி

குடும்பத்துடனேயே இருக்கணும்ங்கிற என்னோட ஆசைக்கு, அந்த அதிகாரி குடும்பத்தினரும் சம்மதம் சொன்னாங்க. அப்புறம் கல்யாணம், குழந்தைகள்னு என்னோட மலைவாழ் சமூகத்துடனே ஒன்றி வாழ்ந்தேன். ஆனா, என்னோட கல்யாண வாழ்க்கை சரியா அமையாம, ரொம்பவே கஷ்டப்பட்டேன். வாழ்வாதார போராட்டத் துக்குக் கூலி வேலை செஞ்சேன். கூடவே, வனப்பகுதியில இருக்கிற மரங்கள், கல்வெட்டுகள், கோயில்கள் பத்தி கணக்கு எடுக்கிற ‘பல்லுயிர் அட்டவணைப் படுத்துதல்’ங்கிற வேலையையும் சில காலம் செஞ்சேன். அப்போ மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

எங்க சனங்களோட முன்னேற்றத் துக்கு வேலை செய்ய முடிவெடுத்தேன். ‘தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்க’த்துல பொருளாளரா சேர்ந் தேன். இந்தச் சங்கத்தின் மூலம், மக்களுக்கு அத்தியாவசிய ஆவணங்கள் மற்றும் வீட்டு மனைப் பட்டா வாங்கிக் கொடுக்கிறது, கைம்பெண்களுக்கு அரசின் உதவித் தொகை, வேலைவாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறது உட்பட மக்களின் அத்தியாவசிய, உரிமைகளுக்கான எல்லா வேலைகளையும் தொடர்ந்து செய்யுறோம். விவசாயிகளுக்கு விதைகள் வாங்கிக் கொடுத்து, விளைபொருள்களை மதிப்புக் கூட்டல் செய்ய உதவுறோம். அவங்க விளைபொருள்களை உரிய விலை கொடுத்து நாங்களே வாங்கி, எங்க சங்கத்தின் மூலமா விற்பனை செய்யுறோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமா வேலைவாய்ப்பு வாங்கிக் கொடுத்துப் பெண்களின் சுயமுன்னேற்றத்தையும் உறுதி செய்யுறதோடு, சுற்றுவட்டாரத்துல ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள் அமையவும் எங்க சங்கம் காரணமா இருந்திருக்கு”

- தன் சமூக மக்களின் நலனையே தன்னுடைய நலனாகப் பாவிக்கும் மாதேவி, சுற்றுவட்டாரத்திலுள்ள 20 மலைக்கிராமங்களில் தலா ஒரு டியூஷன் சென்டர் அமைத்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றத் துக்கு தனிப்பட்ட முறையில் உதவு கிறார்.

“சில வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் வாகனப் போக்குவரத்து அதிகம் இல்ல. அதனால, சங்கத்து வேலைகளுக்காக வனப்பகுதியில நடந்தே மலைக்கிராமங்களுக்குப் போவேன். அப்போ யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் கிட்ட இருந்து பலமுறை தப்பிப் பிழைச்சிருக்கேன். இதைவிடவும், சேவைப் பணிகள்ல நான் எதிர்கொண்ட புறக்கணிப்புகள், அவமானங்கள்தாம் என்னை ரொம்பவே பாதிச்சது.

என்னோட மக்களின் நலனுக்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கிட்டேன். கல்வி, பொருளாதார ரீதியா எங்க மக்களின் வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. எத்தனை தடைகள் வந்தாலும், என்னோட மக்களின் முன்னேற்றத் துக்குத் தொடர்ந்து வேலை செய்வேன்”

- மாதேவியின் சிரிப்பில் அன்பும் நம்பிக்கையும் பூத்துக்குலுங்குகிறது.