லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சேவைப் பெண்கள்! - 10 - எனக்குப் பல ஆயிரம் குழந்தைகள்! - ஆதரவற்ற விலங்குகளின் தாய் கீதா சேஷமணி

கீதா சேஷமணி
பிரீமியம் ஸ்டோரி
News
கீதா சேஷமணி

#Motivation

என் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் டெல்லியைச் சேர்ந்த கீதா சேஷமணி.

மன்னராட்சிக் காலம் முதல் தற்போது வரையிலும் விலங்குகள் பலவகையிலும் அவற்றின் இயற்கை வாழ்வியல் முறைகளிலிருந்து சிதைக்கப்பட்டு, வேட்டையாடப் பட்டு, கடத்தப்பட்டு துன்புறுத்தப் படுகின்றன. இதில், கரடிகள்மீது தொடுக்கப்பட்ட மனித வன்முறை மிக மோசமானது. 400 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கரடிகளை ஊருக்குள் கொண்டு வந்து வித்தைகாட்டி பிழைப்பு நடத்தி வந்தது ஒரு கும்பல். இதற்காக தாய்க் கரடியைக் கொன்று, அதன் குட்டியைக் கடத்தி, கொடூரமான முறையில் கருத்தடை செய்து, துளையிட்ட மூக்கில் கயிறுகட்டி, கோரைப் பற்களை உடைத்து, காலில் சூடுவைத்து குடுகுடுப்புச் சத்தத்துக்கு நடனமாடுவதற்குப் பழக்கப்படுத்துவார்கள்.

சேவைப் பெண்கள்! - 10 - எனக்குப் பல ஆயிரம் குழந்தைகள்! - ஆதரவற்ற விலங்குகளின் தாய் கீதா சேஷமணி

இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க, தாயுள்ளத்துடன் களமிறங் கினார் கீதா. மத்திய அரசுடன் இணைந்து, கரடிகளுக்கு எதிரான குற்றச்செயல்களைத் தடுக்கும் முதல் முயற்சியில் வெற்றி கண்டவர், இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பாக கரடிகள் வளர்க்கப்படுவதில்லை என்ற மகத்தான செய்தியை

2009-ல் உறுதி செய்தார். 6,000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளைப் பரா மரிக்கும் கீதா, விலங்குகள் மற்றும் பிராணிகளின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.

சேவைப் பெண்கள்! - 10 - எனக்குப் பல ஆயிரம் குழந்தைகள்! - ஆதரவற்ற விலங்குகளின் தாய் கீதா சேஷமணி

“என்னுடைய பூர்வீகம் தமிழ்நாடு. ஆனால், பிறந்து வளர்ந்ததெல்லாம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில். என்னுடைய இளமைக்காலத்தில் வீட்டில் நிறைய செல்லப் பிராணி களை வளர்த்திருக்கிறோம். ஒருமுறை டெல்லியில் வாகனம் மோதி ஒரு நாய் இறந்ததைக் கண்டேன். அந்த வழியாகச் சென்ற பலரும் நாயின் நிலையைப் பார்த்து வருந்தினார்களே தவிர, உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

‘நானும் அவர்களில் ஒருவராக இருந்துவிடக் கூடாது. இதுபோன்ற ஜீவராசிகளுக்காகவே இனி பணியாற்ற வேண்டும்’ என முடிவெடுத்தேன். 1979-ல் ‘Friendicoes - SECA’ என்ற அமைப்பைத் தொடங்கி, வளர்ப்புப் பிராணிகளின் நலனுக்கான பணிகளைத் தற் போது வரை செய்து வருகிறேன் இதற்கிடையே, கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மீதான வன்முறைகள் குறித்து அறிந்தேன். தமிழகத்தைச் சேர்ந்த என் நண்பர் கார்த்திக் சத்யநாராயணாவும் என்னுடன் இணைந்து பணியாற்ற முன்வந்தார்” என்று கூறும் கீதா, ‘வைல்டு லைஃப் எஸ்.ஓ.எஸ்’ அமைப்பை 1995-ல் தொடங்கியிருக்கிறார்.

சட்டத்துக்குப் புறம்பாக கரடிகளை வளர்ப்பவர்களைக் கண்டறிந்து, இந்தியா முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரடிகளை மீட்டிருக்கிறார் கீதா. அந்தக் கரடிகளையே வாழ்வாதாரத்துக்கு நம்பியிருந்த ஏராளமான பழங்குடியின மக்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளுடன், அவர்களின் குழந்தைகள் கல்வி கற்கவும் உதவியிருக்கிறார். உடல்நிலை, உளவியல் காரணங்களால் மீட்கப்பட்ட கரடிகளால் வனப் பகுதியில் சுதந்திரமாக வாழ முடி யாது என்பதால் அவற்றைப் பல் வேறு மாநிலங்களிலுள்ள மறு வாழ்வு மையங்களில் வைத்துப் பராமரிக்கிறார். ஊருக்குள் நுழைந்து மனிதர்களால் தாக்கப் பட்டும், விபத்தில் சிக்கியும், நோய் வாய்ப்பட்டும் பாதிக்கப்படும் வனவிலங்குகள் குறித்து வனத்துறை மூலம் இந்த அமைப்புக்குத் தகவல் கிடைக்கிறது. அவற்றை மீட்டு குணப்படுத்தி மீண்டும் வனப் பகுதியில் விடுகின்றனர். மேலும், மறுவாழ்வு மையங்களில் யானை, புலி, சிங்கம், நரி, பாம்பு, மான், முதலை, குரங்கு உட்பட ஆயிரக்கணக்கான விலங்குகளைப் பராமரிக்கிறார் கீதா. மகாராஷ்டிரா மாநிலம் ஜூன்னர் மையத்தில் 31 சிறுத்தைகள் பராமரிக்கப்படுகின்றன. ஹரியானா மாநிலம் குர்கானில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராணிகளும் பறவை களும் வளர்க்கப்படுகின்றன.

சேவைப் பெண்கள்! - 10 - எனக்குப் பல ஆயிரம் குழந்தைகள்! - ஆதரவற்ற விலங்குகளின் தாய் கீதா சேஷமணி

இந்தியாவிலுள்ள ஒரே யானை பராமரிப்பு மையம் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் இயங்கி வருகிறது. 2018-ம் ஆண்டு இந்த மையத்தைப் பார்வையிட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, `இங்கு யானைகளின் நலனுக்காகச் செய்யப்படும் பணிகள் வியக்க வைக்கின்றன' என்று பாராட்டிச் சென்றார். இந்த மறுவாழ்வு மையம் குறித்துப் பேசும் கீதா, “கரடிகளின் நிலையைப் போலவே, தாய் யானை யிடமிருந்து குட்டியைப் பிரிப்பார்கள். கொடுமையான சித்ரவதைகளுடன் அந்தக் குட்டி யானையைச் சிலர் யாசகம் கேட்கப் பயன்படுத்தினர். இதற்கு எதிராகக் களமிறங்கி, நாடு முழுக்க 40 யானைகளை மீட்டு வளர்க்கிறோம். இந்த மையத்துக்கு அருகிலேயே யானைகளுக்கான பிரத்யேக மருத்துவமனையையும் நடத்துகிறோம்.

மனிதர்களுக்கு வரும் பெரும் பாலான நோய்கள் விலங்குகளுக்கும் வரும். உரிய சிகிச்சையளித்து அவற்றின் எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியுடன் கழிக்க வழிவகை செய்கிறோம். வட மாநிலங்களில்தான் எங்கள் பணிகளை அதிகளவில் மேற்கொள்கிறோம். வன விலங்குகளின் கடத்தலைத் தடுக்க, வனப்பகுதிகளில், ‘ஃபாரஸ்ட் வாட்ச்’ என்ற தடுப்புக் குழுவை வைத்திருக்கிறோம். வனத்துறை யுடன் இணைந்து சட்டத்தின் ஓட்டையிலிருந்து கடத்தல் காரர்களைத் தப்பிக்க விடாமல் தண்டனை பெற்றுக் கொடுப்போம். மேலும், மனிதர்களுக்கும் விலங்கு களுக்குமான மோதலைத் தடுப்பது, பழங்குடியினர் மறுவாழ்வு, வனத்துறையினருக்குப் பயிற்சி அளிப்பது, விலங்குகளுக்கான நோய் மேலாண்மை ஆராய்ச்சி, நடமாடும் மொபைல் கிளினிக் சர்வீஸ், விலங்கு களுக்கான பராமரிப்பு மற்றும் சிகிச்சை செலவினங்களுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் பெரும் சவால்களை மீறி செய்துவருகிறோம்” என்றவர்,

“கடந்த 40 ஆண்டுக்கால பயணத்தில், விலங்குகளுக்கு எதிரான குற்றச் செயல்களைக் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைத் திருக்கிறோம். எங்கள் உயிருக்கும் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சற்றே சமரசம் ஆகியிருந்தால்கூட, நிச்சயமாக வனவிலங்குகளின் நலனில் பெரிய மாற்றங்களை உருவாக்கியிருக்க முடியாது. இந்தப் பணிகளால், என் குடும்பத்தினரை விடவும், என் குழந்தைகளைப்போல அன்பு செலுத்தும் விலங்குகளின் நலனுக்காகவே அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். எஞ்சிய வாழ்நாள் முழுக்க இதே துடிப்புடன் பணியாற்றவே விரும்புகிறேன்”

- கருணையுடன் கூறும் கீதாவின் முகத்தில் தாய்மை பிரகாசிக்கிறது!