என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சேவைப் பெண்கள்! - 11 - உதவும் மனம் இருந்தாலே இல்லாமையை விரட்டலாம்!

ரெபெக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
ரெபெக்கா

- கிராமத்துச் சேவகி ரெபெக்கா

என் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் சேலத்தைச் சேர்ந்த ரெபெக்கா ஸ்டான்லி.

‘கிராமப் பொருளாதாரமே நாட்டின் முதுகெலும்பு’ என்று கூறப்பட்டாலும், முழுமையான வளர்ச்சியைப் பெறாத நிலையில்தான் இந்தியாவிலுள்ள ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. இதனால் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டு வருந்திய ரெபெக்கா, சேலத்தைச் சுற்றியுள்ள 30 கிராமங்களைத் தத்தெடுத்து, மக்களின் உடல்நலன், பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கிறார். ஊட்டச்சத்துக் குறைபாடு, தாய்-சேய் இறப்பு விகிதம், குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளையும் சரிசெய்து பெண்களின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய ஆக்கபூர்வமாகப் பணியாற்றிவருகிறார்.

சேவைப் பெண்கள்! - 11 - உதவும் மனம் இருந்தாலே இல்லாமையை விரட்டலாம்!

“என் பெற்றோர் சேலம் சுற்றுவட்டார ஏழை மக்களுக்கு சேவைப் பணிகளைச் செய்திட்டிருந்தாங்க. என் சின்ன வயசுல அவங்க கூட மக்களைச் சந்திக்க நானும் போயிருக்கேன். ‘இந்த மக்களின் நிலை மட்டும் ஏன் இப்படி இருக்கு?’ன்னு பெற்றோர்கிட்ட கேட்டிருக்கேன். ‘வறுமையால பல தலை முறைகள் கடந்தும் பொருளாதார ரீதியா தன்னிறைவு பெற முடியாம சிரமப்படுறாங்க. பலரும் இணைஞ்சு உதவி செஞ்சா, இவங் களாலும் முன்னேற முடியும்’னு சொன்னாங்க.

வெளிநாட்டுல செட்டில் ஆகும் கனவை உதறிட்டு, 2000-ல் காலேஜ் முடிச்சதுமே மக்களுக்கான பணிகளை ஆரம்பிச்சேன். ஏற்காடு மலையடிவாரத்துல செட்டிச்சாவடி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட நிறைய குக்கிராமங்கள் இருக்கு. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாம, ரொம்பவே பின்தங்கியிருந்த அந்த மக்களின் முன்னேற்றத்துக்கான தீர்வுகளைச் சொன்னேன். அப்போ எனக்கு 21 வயசுதான். அதனால, மக்கள் மத்தியில நான் பேசிய விஷயத்துக்குப் பலரும் முக்கியத்துவம் கொடுக்கலைன்னாலும், பிறகு படிப்படியா என்மேல நம்பிக்கை வெச்சு ஒத்துழைப்பு கொடுத்தாங்க”

- மக்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த ரெபெக்கா, கிராம மறுமலர்ச்சித் திட்டப் பணிகளைக் கையில் எடுத்திருக்கிறார். 30 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறார். வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்வதும் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியைப் பழைய கத்தி, பிளேடு கொண்டு கத்தரிக்கும் அபாயகரமான முயற்சிகளால் தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகரிப்பதும் நிகழ்ந்திருக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், கர்ப்பிணிகளை பிரசவத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து ஆரோக்கியமான மாற்றங்களைப் புரிய வைத்திருக்கிறார்.

பசிக்காக மண்ணையும் மர வேரையும் மக்கள் சாப்பிடுவதைக் கண்டு அதிர்ந்தவர், சரிவிகித ஊட்டச்சத்து உணவின்றி ரத்தச் சோகை பாதிப்பால் பலரும் சிரமப்படுவதைத் தடுக்க மருத்துவக் குழுவினருடன் வாரம்தோறும் முகாம் நடத்தியிருக்கிறார். உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கியதுடன், வீட்டுத்தோட்டம் அமைக்க வழிவகை செய்து, ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்திசெய்து உணவில் சேர்த்துக்கொள்ளவும் மக்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார். கிராமம்தோறும் அங்கன்வாடி மையங்களைத் தொடங்கி, வளரிளம் குழந்தைகளுக்குச் சத்தான உணவைக் கொடுத்துப் பராமரித்திருக்கிறார்.

சேவைப் பெண்கள்! - 11 - உதவும் மனம் இருந்தாலே இல்லாமையை விரட்டலாம்!

“பொருளாதார கஷ்டங்களால பெண் குழந்தைங்க வாயில நெல் மணிகளைப் போட்டும், கள்ளிப்பால் கொடுத்தும், மூச்சை நிறுத்தியும் கொலை செய்யுறது அதிகம் நடந்துச்சு. மக்களைத் திரட்டி, அவங்க மத்தியில பெண் குழந்தைகள் முன்னேற்றம் பத்தி நிறைய பேசினோம். சுத்தமில்லாத நீரை காய்ச்சிக் குடிக்கணும்னு தெரியாம, வயிற்றுப்போக்காலேயே பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பதும் நடந்துச்சு. சுகாதாரத்துடனும் ஆரோக்கியமாகவும் வாழ மக்களைப் பழக்கப்படுத்தினோம். சரியான வேலைவாய்ப்பு இல்லாததுதான் மக்களின் பிரதான பிரச்னை. மகளிர் மறுமலர்ச்சிக் குழுக்களை ஆரம்பிச்சு, விவசாயம், மதிப்புக்கூட்டல், கைவினைத்தொழில், கால்நடை வளர்ப்புனு பல்வேறு தொழில் வாய்ப்புகளையும் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தோம்.

படிப்பு பத்தின விழிப்புணர்வே இல்லாம, அதுக்கு நிறைய செலவாகும்ங்கிற எண்ணம் மட்டுமே மக்கள்கிட்ட அதிகம் இருந்துச்சு. இதை முற்றிலுமா மாத்தி, கவர்ன்மென்ட் ஸ்கூலுக்குப் பிள்ளைகளை அனுப்ப வலியுறுத்தினோம். இரவு உணவுடன் மாலைநேர டியூஷன் வகுப்புகளை எல்லாக் கிராமங்கள்லயும் தொடங்கினோம். ஆனாலும், இடைநிற்றல் தொடர்கதையாகி நிறைய பிள்ளைகள் கூலி வேலைக்குப் போறது அதிகரிச்சது. ‘சமுதாயக் கல்லூரி’யைத் தொடங்கினோம். திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வாங்கிக்கொடுக்கிறோம்” என்கிற ரெபெக்காவின் முகத்தில் உற்சாகம் கூடுகிறது.

சுற்றுவட்டார நான்கு கிராமங்களில் ‘டெலி மெடிசின் சென்டர்’களை அமைத்து, மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் தருகிறார். இந்த மையத்தின் மூலம் கர்ப்பிணிகளுக்குப் பேறுகால ஆலோசனைகளையும் கொடுத்து, தாய் – சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முனைப்பு காட்டிவருகிறார். குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்துவருகிறார்.

“மக்களுக்கான எல்லாப் பணிகளையும் அரசாங்கத்தால மட்டுமே செய்ய முடியாது. சமூகத்துக்கு ஏதாவதொரு வகையில பங்களிப்பு கொடுக்கும் எண்ணம் உள்ளவங்க ஒன்றிணைஞ்சாதான் மாற்றத்தைக் காண முடியும். சொந்த கால்ல நின்னு, எந்தச் சிக்கல் வந்தாலும் அதைத் தாங்களே சரிசெய்துக்கும் ஆற்றலை மக்களுக்கு ஏற்படுத்துறதுதான்

எங்க அடிப்படை நோக்கம். அதைத் தொடர்ந்து செய்வோம்”

- உறுதியாகச் சொல்கிறார் ரெபெக்கா.

சேவைப் பெண்கள்! - 11 - உதவும் மனம் இருந்தாலே இல்லாமையை விரட்டலாம்!

வீட்டுத்தோட்டம் அமைக்க ஊக்கப்படுத்தினாங்க!

வீட்டுத்தோட்டம் அமைத்துப் பயன்பெற்றவர்களில் ஒருவரான கெளரி, “ரெபெக்கா மேடம் எங்களுடைய தாமரை நகர் கிராமத்துலயும் நிறைய சேவைப் பணிகளைச் செய்திருக்காங்க. ஏழு வருஷங்களுக்கு முன்பு பிரசவத்துக்குப் பிறகு, நானும் என் குழந்தையும் ஊட்டச்சத்துக் குறை பாட்டுடன் இருந்தோம். அப்போ வீட்டுத்தோட்டம் அமைக்க என்னை ஊக்கப்படுத்தினாங்க. அவங்க கிட்டயே விதைகள் வாங்கினேன். இயற்கை உரங்கள் தயாரிக்கவும் பயிற்சி கொடுத்தாங்க. தொடர்ந்து காய்கறிகளைப் பயிரிடுறேன். எங்க தேவைக்குப் போக மீதமாகும் காய்கறிகளை விற்பனை செய்து பயனடையுறேன். குடும்பத்துல எல்லோரும் ஆரோக்கியமா இருக்கோம்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.