Published:Updated:

சேவைப் பெண்கள்! - 12 - குழந்தைகளின் மகிழ்ச்சியில் கஷ்டங்களை மறக்கிறேன்!

சேவைப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
சேவைப் பெண்கள்

சிறப்புக் குழந்தைகளின் தாய் நாகராணி

சேவைப் பெண்கள்! - 12 - குழந்தைகளின் மகிழ்ச்சியில் கஷ்டங்களை மறக்கிறேன்!

சிறப்புக் குழந்தைகளின் தாய் நாகராணி

Published:Updated:
சேவைப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
சேவைப் பெண்கள்
ன் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப் படுத்தும் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த நாகராணி.

சிறப்புக் குழந்தைகளின் உலகம் எப்படியானது என்பதையும், அவர்களை வளர்க்க பெற்றோர் எதிர் கொள்ளும் சவால்களையும் உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தியது ‘பேரன்பு’ திரைப்படம். இதுவே, பெற்றோர் இல்லாமல் இருந்தால், அந்தக் குழந்தை களின் நிலை என்னவாகும்? இதுபோன்ற மன வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகளை சொந்தப் பிள்ளைகளைப்போல அரவணைத்து, தாயுள்ளத் துடன் பராமரிக்கிறார் நாகராணி. மகிழ்ச்சியான சூழலில் வளர்வதற்கான பணிகளைச் செய்வதுடன், இந்தக் குழந்தைகளைப் பெற்றோர்களிடம் ஒப்படைக்கவும் மெனக்கெடுகிறார்.

“மனவளர்ச்சிக் குறைபாடுள்ள என் தம்பியைத் தாய்போல வளர்த்தேன். அஞ்சு வயசுக்குப் பிறகுதான் அவனுக்கு இருந்த குறைபாட்டை ஓரளவுக்குத் தெரிஞ்சுகிட்டோம். ஸ்கூல், தெரபினு தம்பியைக் கூட்டிட்டுப்போகும் எல்லா இடங்கள்லயும் புறக்கணிப்புகளையே அதிகம் எதிர்கொண்டோம். இதெல்லாம் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. தனியார் ஸ்கூல்ல டீச்சரா வேலை செஞ்சேன். சிறப்புக் குழந்தைகளின் நலனுக்கான வேலைகளைச் செய்யும் வேட்கையில, அந்த வேலையை விட்டுட்டேன்.

சேவைப் பெண்கள்! - 12 - குழந்தைகளின் மகிழ்ச்சியில் கஷ்டங்களை மறக்கிறேன்!

மனவளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள் பத்தின கூடுதல் விஷயங் களையும் தேவைகளையும் தெரிஞ்சுக்க, சில வருஷங்கள் களப்பணிக்குப் போனேன். சமூகத்துல நிறைய வலி மிகுந்த கதைகளை அங்கே தெரிஞ்சு கிட்டேன். மேலும், இவங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தை களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைச்சது. சாமான்ய பெற்றோர்களும் அவங்க ளோட சிறப்புக் குழந்தைகளுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கத்துல ‘ஹோப் டிரஸ்ட்’ அமைப்பை 2007-ல் ஆரம்பிச்சு, அம்பத்தூர்ல சிறப்புப் பள்ளியையும் தொடங்கினேன்” என்கிறவரின், அம்பத்தூர் பள்ளியில் தற்போது 65 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். சிறப்புக் கல்வி, தெரபிகளுடன், தொழிற்பயிற்சியும் இங்கு கட்டணமின்றி தரப்படுகிறது. ஏழ்மை, சமூகப் புறக்கணிப்புகளால் வளர்க்க முடியாமல், பெற்றோரால் கைவிடப்படும் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுபோன்ற குழந்தைகளைப் பராமரிக்க, 2015-ல் காப்பகத்தைத் தொடங்கியிருக்கிறார் நாகராணி.

50-க்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றனர். இங்கு வளர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

“அம்பத்தூர் மற்றும் அமைந்தகரை சென்டர்கள்ல ஆட்டிசம், செரிப்ரல் பால்சி, ஹைப்பர் ஆக்டிவிட்டி, லேர்னிங் டிஸ்எபிலிட்டி, டௌன் சிண்ட்ரோம், மென்டல் ரிடார்டேஷன்னு பலதரப்பட்ட குறை பாடுகளுடன் கூடிய குழந்தைகள் இருக்காங்க. ஓரளவுக்கு விவரம் புரிஞ்சுக்கும் தன்மையுடையோர், ஆக்டிவிட்டி திறன் கொஞ்சம் குறைவா இருப்போர், உணர்வுகளை வெளிப்படுத்தாம பிறர்கிட்ட பேசாம அமைதியாவே இருப்போர், தன்னோட தேவைகளைக்கூட செய்துக்க முடியாம தன்னிலை மறந்தோர்னு நாலு பிரிவுகளா இவங்களை வகைப்படுத்துவோம். இவங்க எல்லோரையும் முதல் பிரிவுக்கு மாத்தவே முக்கியத்துவம் கொடுப்போம். முதல் பிரிவுல இருக்கிற குழந்தைகளுக்கு விருப்பமான தொழிற்பயிற்சி கொடுத்து, அவங்களை இயல்பான மனிதர்களைப் போல செயல்பட ஊக்கப்படுத்துவோம்.

சேவைப் பெண்கள்! - 12 - குழந்தைகளின் மகிழ்ச்சியில் கஷ்டங்களை மறக்கிறேன்!

பார்க், சினிமா, கோயில் உள்ளிட்ட பொது இடங் களுக்குக் கூட்டிட்டுப்போனா இந்தப் பிள்ளைங்களோட மனசுல பாசிட்டிவ்வான மாற்றங்கள் ஏற்படும். அதுக்காக அழைச்சுகிட்டு போகும்போதெல்லாம் ஏளனப் பார்வை, அவமானம், கேலி கிண்டல்னு சமூகத்துல நிறைய புறக்கணிப்புகளே கிடைச்சது. கடந்த பத்து வருஷங்களுக்கு முன்பிருந்த அந்த நிலையெல்லாம் இன்னிக்கு ரொம்பவே பாசிட்டிவ்வா மாறியிருக்கு. அதேசமயம் இந்தக் குழந்தைகளின் உடல்நிலை தினமும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்கள் இருக்கும். ஆனாலும், எல்லோரையும் அன்போடு பராமரிக்கிறோம். பெயின்டிங், குக்கிங், கிராஃப்ட்னு ஆர்வமுள்ள விஷயத் துல அனுபவம் பெற குழந்தைகளுக்குத் தொடர் பயிற்சிகள் கொடுப்போம் இடப் பற்றாக்குறையால என்னோட குழந்தைகளுக்குக் கூடுதலான தொழிற்பயிற்சி, தெரபி கொடுப்பதுல சவால்கள் அதிகம் இருக்கு. இதுக்காகக் கூடுதல் வசதிகளுடன் சிறப்புப் பள்ளியையும் தொழிற்கூடத்தையும் கட்டி கிட்டு இருக்கோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணிகளில் பிஸியானார்.

‘மாலா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்புக் குழந்தைகளின் அம்மாக்களுக்கும் தொழிற் பயிற்சியுடன், பிள்ளையை வளர்ப்பதற்கான பயிற்சிகளையும் வழங்குகிறார். சிறப்புக் குழந்தைகள் மற்றும் அம்மாக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை விற்பனை செய்யவும் உதவுகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி பூந்தமல்லி யில் செயல்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் இயங்கும் இந்தப் பள்ளியையும் நாகராணி நிர்வகித்து வருகிறார். மேலும், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து எழும்பூரில் இயங்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகத்தையும் நிர்வகித்து வருகிறார்.

“எங்க நாலு சென்டர்களின் செயல்பாடு களுக்கும் அரசின் சார்புல ஓரளவுக்கு நிதியுதவி கிடைக்குது. மற்ற எல்லாச் செலவினங்களுக்கும் நிதி திரட்டுவது பெரும் சவால்தான். ஆனா, எங்ககிட்ட வளரும் குழந்தைகளின் முகத்துல மகிழ்ச்சியைப் பார்க்க, சிரமங்கள் எல்லாத்தையும் சந்தோஷமா ஏத்துப்போம். ஏழை, வசதி படைச்சவங்கனு வித்தியாசம் இல்லாம எல்லாத் தரப்பினருக்கும் சிறப்புக் குழந்தைகள் பிறக்குறாங்க. விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் அதிகரிச்சதால சிறப்புக் குழந்தைகள் பத்தின தெளிவு இன்னிக்கு அதிகரிச்சிருக்கு. இந்தக் குழந்தைகள், உண்மையான அன்புக்கு ரொம்பவே ஏங்குவாங்க. கடவுளின் குழந்தைகளைப் போன்ற இவங்களுக்கு, அரவணைப்பும் ஊக்கமும் கொடுத்தா, அவங்களோட வளர்ச்சி யில நிறைய முன்னேற்றம் ஏற்படும். முழுமையா குணப்படுத்த முடியாதுன்னாலும், குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருக்கிறதை சீக்கிரமே கண்டுபிடிச்சு, சிகிச்சை முறைகளையும் பயிற்சிகளையும் தொடர்ந்து கொடுத்தா, ஒரு கட்டத்துல நார்மல் ஸ்கூல்லகூட சேர்க்கலாம்”

- நம்பிக்கையூட்டி முடிக்கும் நாகராணியைக் கட்டியணைக்கும் குழந்தைகளின் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கிறது!

- நிறைவு பெற்றது

ஊக்கமும் உதவியும் கிடைக்குது!

சேவைப் பெண்கள்! - 12 - குழந்தைகளின் மகிழ்ச்சியில் கஷ்டங்களை மறக்கிறேன்!

நாகராணியால் பயன்பெற்றவர் களில் ஒருவரான ரதி தேவி, இரண்டு சிறப்புக் குழந்தைகளின் தாய். “செரிப்ரல் பால்சியின் தன்மை அதிகம்கொண்ட பெரிய பையனுக்கு 20 வயசு. அவனால இப்போ வரை நடக்கவோ, பேசவோ முடியாது. வாரத்துக்கு ரெண்டு முறை வீட்டுக்கே வந்து அவனுக்கான சிகிச்சைகளையும் மருந்து மாத்திரைகளையும் கொடுக்கிறாங்க. சின்னவனுக்கு 12 வயசு. செரிப்ரல் பால்சியின் தன்மை குறைவா இருக்கிற இவனை, அம்பத்தூர் ஸ்பெஷல் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப்போவேன். அங்க கிடைக்கும் சிகிச்சை, பயிற்சியாலதான் இப்போ ஓரளவுக்கு நடக்கவும், பேசுறதைப் புரிஞ்சுக்கவும் செய்யுறான். மேடத்தின் உதவியால, எந்தச் செலவும் இல்லாம ரெண்டு குழந்தைகளையும் நல்லா கவனிச்சுக்க முடியுது. என்னைப்போல நிறைய பெற்றோர் பயனடையுறாங்க” என்று நெகிழ்ச்சியாக முடித்தார்.