Published:Updated:

சேவைப் பெண்கள்! - 2: அந்த மக்களின் சிரிப்பே... என் வாழ்க்கைக்கான அர்த்தம்!

சேவைப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
சேவைப் பெண்கள்

#Motivation

சேவைப் பெண்கள்! - 2: அந்த மக்களின் சிரிப்பே... என் வாழ்க்கைக்கான அர்த்தம்!

#Motivation

Published:Updated:
சேவைப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
சேவைப் பெண்கள்

ன் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த பத்மா வெங்கட்ராமன்.

உடலில் கட்டுக் காயங்கள், அழுக்கு அப்பிய ஆடை, யாசகம் கேட்கும் பரிதாப சூழல்... இவைதாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் தொழுநோயாளிகளின் பரிதாப நிலை. இத்தகைய தோற்றத்தில், டெல்லியின் முக்கிய சாலைகளில் 1970-களில் தொழுநோயாளிகள் வலம்வருவது வழக்கம். அந்தச் சூழலைப் பலமுறை எதிர்கொண்ட பத்மாவுக்கு, அவர்களின் கஷ்ட நிலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொழுநோய் கொடிய நோயாகச் சித்திரிக்கப்பட்ட காலம் அது. காலம் தவறிய சிகிச்சையால் அவர்களில் பலர் உயிரிழப்பதும், ஓரிடத்தில் முடங்கிப்போவதும் வாடிக்கையாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தாலே அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவக்கூடும் என்ற தவறான கண்ணோட்டத்தில் தொழுநோயாளிகள் புறக்கணிக்கப்பட்டனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ தேவைகளுடன் தன்னிச்சையாக வாழும் சூழலை உருவாக்குவதும், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான் அந்த மக்களுக்கான சரியான தீர்வு. இதை உணர்ந்த பத்மா, அவர்களுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கும் மேலான இந்தச் சேவைப் பணியால், ஆயிரக்கணக்கான தொழுநோயாளிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்கியிருக்கிறார். முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் மூத்த மகள்தான் பத்மா.

சேவைப் பெண்கள்! - 2: அந்த மக்களின் சிரிப்பே...
என் வாழ்க்கைக்கான அர்த்தம்!

“வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். பி.ஏ முடித்ததும் திருமணம். கணவர் கே.வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அந்தக் காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் மனைவிகள் குழுவாக இணைந்து கருணை இல்லங்களுக்குச் சென்று பங்களிப்பு செய்வோம். தொழுநோயாளிகள் தயாரித்த கைவினைப் பொருள்களை மக்கள் வாங்க அச்சப்பட்டனர். எனவே, அவர்களில் சிலர் என்னிடம் உதவி கேட்டனர். என் மகள்களுக்கு அந்தப் பொருள்களை வாங்கி நம்பிக்கையூட்டி, துணிந்து வாங்குமாறு பலரிடமும் வேண்டுகோள் விடுத்தேன். கணவருக்குப் பணிமாறுதலாகவே, ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் சில ஆண்டுகள் வசித்தோம். அப்போது நான் பிரதிநிதியாக இருந்த ஐக்கிய நாடுகளின் ‘வுமன்’ஸ் கில்டு’ அமைப்பின் மூலம், பல்வேறு நாட்டு மக்களுக்கும் உதவினோம். அந்தப் பணிகளுக்காகவே 1976-ல் இந்தியா வந்தேன்” என்பவர், டெல்லியிலுள்ள தொழுநோயாளிகளின் துயர் அறிந்து, இனி அவர்களின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுவது என முடிவெடுத்திருக்கிறார்.

டெல்லி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் தொழுநோயாளிகள் வசிக்கும் குடியிருப்புக்குச் சென்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறார். சுயதொழில் பயிற்சி, மருத்துவ உதவிகள் செய்துகொடுத்து, அந்த மக்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண்டாக்கியிருக்கிறார்.

"ராமகிருஷ்ணாபுரம் பகுதியின் முன்னேற்றத்தைப் பார்த்து, அதே மாநிலத்திலுள்ள ஷஹ்தாரா பகுதி மக்கள் என்னை அணுகினார்கள். பல ஆயிரம் பேர் வசித்த அந்தக் குடியிருப்புதான், தொழுநோயாளிகள் வசிப்பிடங்களில் உலக அளவில் பெரியது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(FAO), நான் பிரதிநிதியாக இருந்த மற்றோர் அமைப்பான 'ஆல் இந்தியா வுமன்'ஸ் கான்ஃபரென்ஸ்’ உள்ளிட்ட சில அமைப்புகள் நிதியுதவி செய்தன. பயிற்சி கொடுத்து அந்த மக்களை இயற்கை விவசாயிகளாக மாற்றினோம். வற்றாத யமுனா நதியால் தரிசு நிலங்களில் விவசாயம் செழித்தது. அரிசி, தானியங்கள், காய்கறிகள் பயிரிட்டும், மீன் மற்றும் கால்நடைகள் வளர்த்தும் அந்த மக்கள் வருமானம் ஈட்டத் தொடங்கினர். குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உணவுடன், சிறுவர்களுக்குக் கணினிப் பயிற்சி கொடுத்தோம்.

சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் தொழில் தொடங்கினர். வீடு தோறும் கழிப்பறை வசதியுடன், வீடு இல்லாத 800 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தோம். அரசின் உதவியால் சாலை வசதிகளுடன் பள்ளிக்கூடமும் தொடங்கப்பட்டது. மருத்துவ வசதிகளுடன், பிசியோதெரபி சிகிச்சைகளும் நல்ல பலன் கொடுத்தன. நாகரிகமாக உடையணிந்து, அனைத்து தரப்பினரிடமும் அந்த மக்கள் தயக்கமின்றி பழகுவதற்கு ஊக்கம் அளித்தோம். நட்சத்திர உணவகங்களில் நடந்த கருத்தரங்குகளில் அவர்களைப் பேச வைத்தோம். தெருவில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்தவர்கள், எங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, சுயதொழிலில் முன்னேறத் தொடங்கினர்" என்று பெருமிதத்துடன் கூறுகிறார் பத்மா.

அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் கூட்டுமுயற்சியால், சில ஆண்டுகளிலேயே அந்தப் பகுதி முன்மாதிரி குடியிருப்பாக மாறியது. இந்தப் பணிகள் அனைத்துக்கும் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பத்மா.

வட மாநிலங்களில் இருந்த தொழுநோயாளிகளின் நிலைதான், தமிழகத்திலும் இருந்தது. எனவே, ‘டானிடா’ அமைப்பின் நிதியுதவியுடன், இந்திய மாதர் சங்கத்துடன் இணைந்தும் பணியாற்றினார் பத்மா. 1997 முதல் 2002 வரை தமிழகம் முழுக்க களப்பணியாற்றி, ஏராளமான தொழுநோயாளிகளுக்கு உதவியிருக்கிறார். அந்த மக்களின் தேவை அறிந்து மருத்துவம், கல்வி, சுயதொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் வழிவகை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். மேலும், செங்கல்பட்டில் ஓவியப் பள்ளி ஒன்றைத் தொடங்கி, தொழுநோயாளிகளின் ஓவியத்திறனை ஊக்கப்படுத்தி, வெளிநாடுகளுக்கான விற்பனை வாய்ப்புக்கும் உதவியிருக்கிறார். தமிழக அரசின் ஆதரவுடன், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் உட்பட பத்து மாவட்டங்களிலுள்ள தொழுநோயாளிகளுக்கான காப்பகங்களில் தங்கி சிகிச்சை பெறுபவர்களின் முன்னேற்றத்துக்கும் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு பணிகள் போன்ற பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.

தவிர, உத்திரமேரூர் மற்றும் சிங்கபெருமாள்கோவில் பகுதிகளில் சிறப்புப் பள்ளிகளையும் நிர்வகித்து வருகிறார். உள்ளூர் மாணவர்களுடன், தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த தொழுநோயாளிகளின் பிள்ளைகளும் அந்தப் பள்ளிகளில் இலவச கல்வி பெறுகின்றனர். சேவைப் பணிகளுக்காக தமிழக அரசின் 'அவ்வையார்' விருதைப் பெற்றிருக்கிறார். இந்திய மாதர் சங்கத் தலைவராக இருப்பவர், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகியாகவும் செயல்படுகிறார்.

"கடந்த 18 ஆண்டுகளாக, இரண்டு சிறப்புப் பள்ளிகளின் நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறேன். அதேநேரம், தற்போது தமிழகத்தில் 40 குடியிருப்புகளில் வசிக்கும் தொழுநோயாளிகளின் முன்னேற்றத்துக்கான பணிகளையும் தொடர்ந்து செய்கிறோம்.

தொழுநோய் வந்தால் வருத்தப்படவோ அல்லது நோய் பாதித்தோரை விலக்கி வைக்கவோ கூடாது. வரும்முன் காப்பதுடன், இந்த நோய் வந்த பின்னர் சிகிச்சை பெற வேண்டியது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

இந்தியர் மற்றும் வெளிநாட்டினரிடம் நிதியுதவி பெற்றுதான், தொழுநோயாளிகளின் முன்னேற்றத்துக்கான பணிகளைச் செய்கிறோம்.

தொழுநோயாளிகளின் சிரிப்பும், இந்தச் சேவைப் பணிகளும், நிறைவான வாழ்க்கைக்கான அர்த்தம் தருகின்றன. தொழுநோயாளிகள் வசிக்கும் அனைத்துக் குடியிருப்புகளிலும் இலவச டியூஷன் வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்" என்பவரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளால் முகத்தில் பெருமித உணர்வு பிரகாசிக்கிறது.

சேவைப் பெண்கள்! - 2: அந்த மக்களின் சிரிப்பே...
என் வாழ்க்கைக்கான அர்த்தம்!

வாழ்வாதாரம் அளிக்கும்`பிந்து' சென்டர்!

செங்கல்பட்டு பாரதிபுரம் குடியிருப்பில் ஏராளமான தொழுநோயாளிகள் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு உதவும் வகையில், `பிந்து ஆர்ட்ஸ் சென்ட'ரை நிர்வகித்து வருகிறார் பத்மா. அதில் பணியாற்றும் தேசம்மாவிடம் பேசினோம்.

``சின்ன வயசுலயே தொழுநோய் பாதிப்பு உண்டானதால, ஸ்கூல்கூட போக முடியலை. என் கணவருக்கும் இதே பிரச்னைதான். சரியான வேலைவாய்ப்பு இல்லாம சிரமத்துல இருந்தோம். எங்களைத் தேடி வந்து பத்மா மேடம் நிறைய உதவிகள் செய்தாங்க. எட்டு வருஷமா நாங்க வரையிற வாட்டர் கலர் பெயின்டிங், வெளிநாட்டினருக்கு விற்பனையாகுது. எங்களுக்கு மாதமானா 1,800 ரூபாய் ஊக்கத்தொகையா கிடைக்கும். தவிர, எங்க பெயின்டிங் விற்பனையில் கிடைக்கிற லாபத்துல ஒரு பகுதியை எங்களுக்குப் பிரிச்சுக் கொடுப்பாங்க. என்னைத் தவிர, தொழுநோயாளிகள்ல 18 பேர் அந்த சென்டர்ல வேலை செய்றாங்க. என்னோட வருமானத்துலதான் பையனை காலேஜ் படிக்க வைக்கிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.