Published:Updated:

சேவைப் பெண்கள்! - எத்தனை தடைகள் வந்தாலும் என் குரல் ஒலிக்கும்!

சேவைப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
சேவைப் பெண்கள்

#Motivation

சேவைப் பெண்கள்! - எத்தனை தடைகள் வந்தாலும் என் குரல் ஒலிக்கும்!

#Motivation

Published:Updated:
சேவைப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
சேவைப் பெண்கள்

என் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் திருச்சியைச் சேர்ந்த சீதா.

பேச்சு, உடை, பழக்கவழக்கம், வசிப்பிடம் என எல்லா வகையிலும் தனித்தே வாழும் நாடோடி பழங்குடியின சமூக மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் இன்றளவும் எட்டாக்கனிதான். சமூகப் புறக்கணிப்புகள் ஒருபுறமிருக்க, மூடநம்பிக்கைகளும் இவர்களின் முன்னேற்றத்துக்குத் தடை யாகவே இருக்கின்றன. இந்த நிலையை மாற்றி, நாடோடி பழங்குடியினத்தவர் சமூகத்தை முன்னேற்றும் முனைப்புடன் 30 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறார் சீதா. இதே சமூகத்தின் நம்பிக்கை அடையாளமாகத் திகழ்பவர், தோற்றம், பேச்சு, முற்போக்குச் சிந்தனைகளால் நாடோடி பழங்குடியினத்தவர் சமூகத்திலிருந்து தனித்து அடையாளப்படுகிறார்.

சேவைப் பெண்கள்! - எத்தனை தடைகள் வந்தாலும் என் குரல் ஒலிக்கும்!

“பூர்வீகம் சேலம் மாவட்டம். அப்பாவுக்கு வேட்டையாடுற தொழில். அம்மா ஊசி, பாசி விற்பாங்க. எங்க சனத்துல ஸ்கூல் படிக்கிறப்போவே பெண்களுக்குக் கல்யாணம் செய்திடுவாங்க. எட்டாவது படிக்கிறப்போ கல்யாணமாகி, 14 வயசுலேயே தாயாகிட்டேன். திருச்சி தேவராயநேரியிலுள்ள கணவர் வீட்டுல சாப்பாட்டுக்கே வறுமை. இந்தக் குடியிருப்புல அடிப்படை வசதிகள்கூட இல்லாம நிறைய பிரச்னைகள். குளிக்காம, துணி உடுத்தாம, பசியும் அழுகையும்தான் எங்க சமூகக் குழந்தைகளின் பரிதாப அடையாளம். கல்வி, வேலைவாய்ப்பு இல்லாம, இதே நிலை தொடர்கதையாகுது. எங்க மக்கள் நாடோடியா போகும்போது பெண் பிள்ளை களின் பாதுகாப்பும் பலநேரங்கள்ல கேள்விக் குறியாகும். இதையெல்லாம் பார்த்து மனசு வெதும்பியதோடு, படிச்சு எங்க சமூகத்தை முன்னேற்ற முடியாத ஏக்கத்துல தினமும் அழுவேன்.

இந்தக் கஷ்டமெல்லாம் நம்மோடு போகட்டும்னு, கணவரும் நானும் 1990-ல் நாடோடி பழங்குடியினத்தவர்களின் நலனுக்கான சங்கத்துடன் குழந்தைகளுக்கான விடுதியையும் ஆரம்பிச்சோம். எங்க சனங்க மக்கள்கிட்ட கெஞ்சிக் கேட்டுப் பல மாவட்டத்திலிருந்தும் 100 குழந்தைகளைக் கூட்டிட்டு வந்தோம். விடுதியில மூணு வேளையும் சாப்பாடு கொடுத்து, பக்கத்துல இருந்த ஸ்கூல்ல படிக்க வெச்சோம். இதுக்காக, ஊர் ஊரா நடந்து, கடை கடையா ஏறி இறங்கி, பழைய துணி, சமையல் பொருள்களைத் தானமா வாங்கினோம். தவிர, ஊசி, பாசி மணி விற்பனைக்கும் இரவு பகலா அலைவோம். ஒவ்வொரு நாளும் பெரும் சவாலோடுதான் அந்த விடுதியை நடத்தினோம்; வாழ்க்கையையும் ஓட்டினோம்”

- சீதாவின் பெருமூச்சில், அவரது பல ஆண்டுக்கால போராட்டக் கனல் தெறிக்கிறது!

காயத்ரி
காயத்ரி

ஒருகட்டத்தில் தானம் கேட்பதைக் குறைத்துக்கொண்டு, பாசி மணி, மாலை தயாரிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார் சீதா. மேலும், இந்தத் தொழிலை கைவினைத் தொழில்கள் பட்டியலில் சேர்க்க டெல்லி வரை சென்று போராடி வென்றுள்ளார். பிறகு, நாடோடி பழங்குடியினத்தவர் சமூகத்தில் 5,000-க்கும் அதிகமானோருக்குக் கைவினைக் கலைஞர்களுக்கான அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுத்து, அவர்களை அரசின் கைவினைப் பொருள்களுக்கான கண்காட்சிகளில் பங்குபெறச் செய்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ஏராளமானோருக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடு களையும் செய்து கொடுத்திருக்கிறார்.

தன் சமூக மக்கள் 25,000 பேரைத் திரட்டி சென்னையில் மாபெரும் பேரணி நடத்தி, நாடோடி பழங்குடியினத்தவர் மக்களுக்குத் தனி நலவாரியம் உருவாகவும் காரணமாக இருந்திருக்கிறார். அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பது, சாலையில் போராடுவது, நீதிமன்றத்தை நாடுவது, அவமானங்களை எதிர்கொள்வது, சிறைவாசம் என சமரசமின்றி போராடிக் கொண்டிருக்கிறார். இதற்காக 30 ஆண்டுகளாகத் தமிழகம் முழுக்க பயணித்திருக்கிறார். இவரது குடியிருப்புக்கு அருகிலுள்ள அரசு உதவிபெறும் திருவள்ளுவர் குருகுல தொடக்கப்பள்ளியை 15 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார்.

“படிப்பறிவு இல்லாத எங்க மக்கள்தாம், என்னோட ஒவ்வொரு முயற்சிக்கும் முதல்ல முட்டுக்கட்டை போடுவாங்க. எங்க விடுதியில தங்கிப் படிக்கிற பசங்களைக் கட்டாயப்படுத்தி வேலைக்குக் கூட்டிக்கிட்டுப்போயிடுவாங்க. அவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி பசங்களை பத்தாவது வரை படிக்க வைக்கிறது பெரும் போராட்டம்தான். கல்வி தவிர, குழந்தைகளுக்கு சங்கீதம், நடனம்னு நிறைய பயிற்சிகள் கொடுத்தேன். இதுக்கு நடுவே உடல்நிலை சரியில்லாத கணவர் மகேந்திரனைக் காப்பாத்த ரொம்பவே போராடியும் 2017-ல் அவர் இறந்துட்டார்.

சேவைப் பெண்கள்! - எத்தனை தடைகள் வந்தாலும் என் குரல் ஒலிக்கும்!

பின்னர் விடுதியை மூட வேண்டிய சூழல். ஆனா, நிறைய சிரமங்கள் இருந்தாலும்கூட ஸ்கூலை தொடர்ந்து நடத்துறேன். அதில் படிக்கும் 300 குழந்தைகள்ல 80 சதவிகிதத் தினர் எங்க சமூகத்தினர். அஞ்சாவது படிக் கிறப்போவே என் மகளைப் பொண்ணு கேட்டு நிறைய தொந்தரவுகள். இதனாலேயே மகளை ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டேன். எங்க சமூகத்துலேயே முதல் இன்ஜினீயரிங் பட்டதாரியான மக ஸ்வேதாவும் நாடோடி பழங்குடியினத்தவர்களின் முன்னேற்றத் துக்காகத்தான் வேலை செய்றா. பையன் எம்.பி.ஏ படிக்கிறான்” என்று பெருமையுடன் கூறுபவர், நாடோடி பழங்குடியினத்தவர் சமூகக் குழந்தைகள் பல நூறு பேரைப் பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வரை படிக்க வைத்துள்ளார்.

“பாசி மணி தயாரிச்சு எட்டு வருஷங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செஞ்சோம். இப்ப குடிசைத்தொழிலா செய்யுறோம்.

இந்த வேலையோடு என் குடும்பம், வீடுனு நான் இருந்திருந்தா, எங்க மக்களுக்கு யார் வந்து உதவுவாங்க? நிறைய எதிர்ப்புகள் வந்தாலும்கூட, என் சனத்துக்காக வாழ்நாள் முழுக்கப் போராடுவேன். பல்வேறு மூட நம்பிக்கைகள்ல மூழ்கிக்கிடக்கிற எங்க மக்களை அதிலிருந்து மீட்பது சவாலா இருந்தாலும், அதுக்காகவும் குரல் கொடுத்துட்டுத்தான் இருக்கேன். எங்க சமூகத்தை மேன்மைப்படுத்தும் ஒரே ஆயுதமான கல்வி, எங்களின் குழந்தைகளுக்குக் கிடைக்க தொடர்ந்து போராடுவேன்”

- உரத்த குரலில் உறுதியாகக் கூறுகிறார் சீதா.