Published:Updated:

சேவைப் பெண்கள்! - 8 - மக்களுக்கான சேவையில் சுமைகளும்கூட சுகமாகின்றன!

கிரேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கிரேஸ்

அடித்தட்டு மக்களின் தாய் கிரேஸ்

என் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த கிரேஸ் பிரெளனிங்.

அடித்தட்டு மக்கள் பலரின் இருள் சூழ்ந்த வாழ்வில் நம்பிக்கை ஒளியாக இருக்கிறார் கிரேஸ். தொழுநோயாளிகள், நாடோடி பழங்குடியினர், சிறைக்குச் சென்றுவந்தோர் எனச் சமூகத்தில் பின்தங்கிய, ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் பலரையும், தலைநிமிர்ந்து வாழ வைக்கும் நோக்கத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார். இவரது தாயுள்ளம் நூற்றுக் கணக்கான குழந்தைகளின் வாழ்க் கையை வசந்தமாக்கியதுடன், அவர்களின் குடும்பங்களையும் நிலை உயரச் செய்திருக்கிறது.

“என் பூர்வீகம் சேலம். இலவச பள்ளிக்கூடங்களை நிறுவி ஏழைப் பிள்ளைகளுக்குப் படிப்பு, ஆதரவற்றோருக்கான காப்பகம் எனப் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வந்தனர் என் பெற்றோர். அப்போது, எனக்கும் என் சகோதர, சகோதரிகள் ஆறு பேருக்கும் ஏழை மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்தது. கல்லூரி மேற்படிப்பை முடித்ததும், அப்பா நிர்வகித்து வந்த பள்ளியில் முதல்வராகச் சில வருடங்கள் வேலை செய்தேன். திருமணமானதும் சென்னையில் குடியேறினேன். தனியார் பள்ளி ஆசிரியராகச் சில வருடங்கள் ஓடின. இசை அனுபவமும் எனக்கு இருந்ததால், ஆசிரியர் பணியில் இருந்து விலகி, தமிழகம் முழுக்க ஏராளமான தேவாலயங்களுக்குச் சென்று கிறிஸ்துவ பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தேன்.

சேவைப் பெண்கள்! - 8 -  மக்களுக்கான சேவையில் சுமைகளும்கூட சுகமாகின்றன!

இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த அப்பா, தனது கடைசி காலத்தில் என்னுடன் வாழ்ந்தார். ‘ஏழை மக்களின் முகத்தில் மறுமலர்ச்சியைக் காண்பதே கடவுளுக்குச் செய்யும் தொண்டு. அந்தச் சேவையை நீ செய்ய வேண்டும்’ என்று நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். எதேச்சையாக ஒருமுறை தொழுநோயாளிகள் சிலரின்

நிலை தெரியவந்து மிகவும் வருந்தினேன். 1988-ல் சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் தொழுநோயாளிகள் காலனிக்குச் சென்றேன். அவர்களின் உடல்நிலையும் பொருளாதார சூழலும் மிகவும் பரிதாபமாக இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுடன் நெருங்கிப் பழகி, மருத்துவ உதவியுடன் வேலைவாய்ப்புக்கும் உதவினேன். அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி கொடுத்தோம். இதே பணி களுடன், வண்டலூர், செங்கல்பட்டு உட்பட 15 குடியிருப்புகளில் வசித்த தொழு நோயாளிகளுக்கு வசிப்பிடம், கழிவறை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தோம்”

- வெளியுலகமே அறியாத அந்தத் தொழு நோயாளிகளின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்வி கற்கவும் உறுதுணையாக இருந்திருக்கிறார் கிரேஸ். 1991-ல் ஆவடியிலுள்ள நாடோடி பழங்குடி யினரின் குடியிருப்பில் அங்கன்வாடி மையத்தை ஏற்படுத்தியதுடன், அங்கு வளர்ந்த குழந்தைகளுக்கு இரு வேளை உணவையும் வழங்கியிருக்கிறார். மேலும், பூந்தமல்லி, பொன்னேரி, மீஞ்சூர் உட்பட சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலுள்ள எட்டு நாடோடி பழங்குடியினர் குடியிருப்புகளிலுள்ள மக்களின் முன்னேற்றத்துக்காகக் கல்வி, வசிப்பிடம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்கும் உதவியிருக்கிறார். இதற்கிடையே, சென்னையை அடுத்த படப்பையில் ‘க்ருபா சிறுவர் இல்லம்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

சேவைப் பெண்கள்! - 8 -  மக்களுக்கான சேவையில் சுமைகளும்கூட சுகமாகின்றன!

“புறக்கணிப்புகளால் சமூகத்திலிருந்து விலகியிருந்த மக்களுக்கெல்லாம் இயன்ற உதவிகளைச் செய்தோம். மேலும், நாடோடி பழங்குடியினர், கொத்தடிமைகளாக கஷ்டப்பட்டோர், தொழுநோயாளிகளின் பிள்ளைகள் பலரும் எதிர்காலத்துக்கான வழிதெரியாமல் தவித்து வந்தனர். சம்பந்தப்பட்டோர் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அந்தக் குழந்தைகளை என்னுடன் அழைத்துவந்தேன். அவர்களை எங்கள் அமைப்பிலுள்ள விடுதியில் தங்கவைத்து என் குழந்தைகள்போல கவனித்துக்கொள்கிறேன். அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் அந்தக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். இதற்கிடையே, தொழு நோயாளிகளுக்குச் சுகாதாரச் சேவைகள் செய்வதை அறிந்து, சிறைச்சாலை கைதிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. கைதிகளிடம் பழகி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தோம்.

அவர்களுக்குத் தன்னம்பிக்கைப் பயிற்சி, சட்ட உதவிகள் மற்றும் பல்வேறு சுயதொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இந்தப் பணிகளை, சென்னை புழலில் உள்ள இருபாலர் சிறைச்சாலைகள் தவிர, தமிழகத்திலுள்ள மற்ற சில சிறைகளிலும் செய்து வருகிறோம். கைதிகளின் குழந்தைகளைச் சந்தித்து அன்பாகப் பேசி ஏக்கங்களைப் போக்குவோம். பின்னர், அவர்களைப் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்து வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கிறோம். சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவும் கவனம் செலுத்துகிறோம்” என்பவர், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலரின் நல்வாழ்வுக்கான பணிகளையும் செய்துவருகிறார்.

பலதரப்பட்ட மாணவர்களின் திறனை ஊக்கப்படுத்த, சிறப்புப் பயிற்சி வகுப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் கிரேஸ். மனவளர்ச்சிக் குறைபாடுடைய சிறப்புக் குழந்தைகளுக்காக ‘அருணோதயா’ என்ற பெயரில் இலவச பள்ளியை நடத்திவருகிறார். பெண்களுக்குத் தொழில் பயிற்சிகளைக் கொடுத்து, இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை தொழில்முனைவோர்களாக மாற்றியிருக்கிறார். தவிர, தனது அமைப்பின் வளாகத்தில் செயல்படும் நெசவுக்கூடத்தில் பெண்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கிறார்.

“இன்ஜினீயரான என் கணவர் நல்ல வேலையில் இருந்தார். அவருடைய ஊதியம், எங்கள் சேவைப் பணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. தொடர்ந்து பலதரப்பட்ட மக்களுக்கும் பணியாற்றியதால், போதிய நிதி திரட்டுவது பெரிய போராட்டமாக இருந்தது. அப்போதெல்லாம் கடவுளை வேண்டுவதுதான் எனக்கான ஒரே வழியாக இருக்கும். அற்புத நிகழ்வாக எப்படியாவது உதவிகள் கிடைத்துவிடும். பலரது உதவியுடன், பல்வேறு கலெக்டர்கள் உட்பட அரசு அதிகாரிகள் பலரும் எங்களுக்குப் பக்கபலமாக இருந்தனர். கூட்டு முயற்சியால், அடித்தட்டு மக்கள் பலரையும் ஓரளவுக்கு நல்ல நிலைக்கு உயர்த்த முடிந்தது. இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருக்கின்றன. அதற்காக வாழ்நாள் முழுக்க மக்களுக்கான தொண்டு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்”

- கிரேஸின் வார்த்தைகளில் கனிவும் உறுதியும் பிரகாசிக்கின்றன!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஞானமணி
ஞானமணி

“எங்க வாழ்க்கையை உயர்த்தினாங்க!”

கிரேஸால் பயன் பெற் றவர்களில் ஒருவரான ஞானமணி, “என்னுடைய அப்பாவும் அம்மாவும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாங்க. அப்பா யாசகம் கேட்கும் வேலைக்குப் போய்தான் குடும்பத்தைக் காப்பாத்தினார். இதனாலேயே என்னோட கல்யாண வாழ்க்கை சரியா அமையல. சிங்கிள் பேரன்ட்டா வேதனைகளை அனுபவிச்சேன். எங்க காலனிக்கு உதவ வந்த கிரேஸ் மேடம், எங்களுடைய மக்களுக்குப் பல்வேறு தேவைகளுக்கும் உதவினாங்க. என் பையனையும் படிக்க வெச்சாங்க. பியூட்டிஷியன் கோர்ஸ்ல பயிற்சி கொடுத்தவங்க, சுயதொழில் செய்யவும் உதவினாங்க. பையனுக்குக் கல்யாணம் செஞ்சாச்சு. புறக்கணிப்புகளைக் கடந்து சுய அடையாளத்துடன் குடும்பத்தைப் பார்த்துக்கிறேன். இதுக்கெல்லாம் கிரேஸ் மேடம்தான் காரணம்” என்கிறார் நன்றியுடன்.