Published:Updated:

சேவைப் பெண்கள்! - 7 - ஒவ்வொரு விதையும் விருட்சமா வளரணும்!

சேவைப் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சேவைப் பெண்கள்!

கல்வி வெளிச்சம் பாய்ச்சும் ஸ்ரீப்ரியா

சேவைப் பெண்கள்! - 7 - ஒவ்வொரு விதையும் விருட்சமா வளரணும்!

கல்வி வெளிச்சம் பாய்ச்சும் ஸ்ரீப்ரியா

Published:Updated:
சேவைப் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சேவைப் பெண்கள்!

என் வீடு என்றில்லாமல் சமூகமும் என் வீடே என்று வாழும் நம்பிக்கைக்குரிய சேவை மனுஷிகளின் தன்னலமற்ற வாழ்வை அடையாளப்படுத்தும் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா.

ஊரெங்கும் அரசுப் பள்ளிகள் நிறைந்திருந்தாலும், அடிப்படைக் கல்விகூட கிடைக்காமல் ஏங்கும் குழந்தைகள் ஏராளம். வறுமை, பெற்றோர் இல்லாத ஏக்கம் எனப் பல்வேறு சிக்கல்களில் சுழன்று தவிப்பவர்களுக்கு, கல்வி வெளிச்சம் பாய்ச்சுகிறார் ஸ்ரீப்ரியா. பணியாற்றும் பள்ளியுடன் நின்றுவிடாமல், ‘சமூகத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் என் மாணவர்களே’ எனத் தாயுள்ளத்துடன் அரவணைக்கும் அர்ப்பணிப்பு ஆசிரியர். இவரது சேவையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குழந்தைத் தொழிலாளர்களாக மாறாமல் சுய முன்னேற்றத்துடன் நடைபோடுகின்றனர். சென்னை, கொருக்குப்பேட்டையிலுள்ள டியூஷன் சென்டரில் ஸ்ரீப்ரியா வைச் சந்தித்தோம்.

சேவைப் பெண்கள்! - 7 - ஒவ்வொரு விதையும் விருட்சமா வளரணும்!

“என் அப்பா அம்மா ரெண்டு பேருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள். அண்ணனையும் என்னையும் நல்லா படிக்க வெச்சாங்க. இப்ப, செளகார்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் வரலாற்று ஆசிரியரா வேலை செய்றேன். ஒருசமயம், கேரளாவைச் சேர்ந்த ‘வீசெட்’ அமைப்பு மூலமா, இதே பகுதியில் கூடுதல் கவனிப்பு தேவைப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றைத் தெரிஞ்சுகிட்டேன். அங்க படிக்கிற ஒவ்வொருத்தர் பத்தியும் கேள்விப்பட்டப்ப, ரொம்ப நெகிழ்ச்சியாவும் அதிர்ச்சியாவும் இருந்துச்சு. அதைத் தொடர்ந்து, ‘அன்பான குடும்பம், நிறைவான வேலை. இதுதான் நம்ம வாழ்க்கையா?’ங்கற கேள்வி எனக்குள்ள அடிக்கடி வர ஆரம்பிச்சுது. அதன் பிறகுதான், அர்த்தமுள்ள புதிய பயணத்துக்கான தேடல் ஆரம்பிச்சது.

தினமும் சாயந்திரம் அந்தப் பள்ளி மாணவர் களைச் சந்திச்சு ஊக்கப்படுத்தினேன். காலேஜ் மாணவர்கள் பலரும் தன்னார்வலரா என்னுடன் வந்தாங்க. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தோம்; அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சோம். நல்ல முன்னேற்றம் கிடைச்சது. இதே பணிகளைச் சுற்றுவட்டாரத்துல இருந்த பல ஸ்கூல்லயும், அரசு காப்பகங் கள்ல படிக்கும் மாணவர்களுக்கும் 2007-ல் விரிவுபடுத்தினோம். வெறும் கல்வியோடு இல்லாம, மாணவர்களின் ஆசை, தேவை, பிரச்னைகளையும் கேட்டு தீர்வுகள் ஏற்படுத்தினோம். ‘எங்க ஸ்கூலுக்கும் குடியிருப்புக்கும் வாங்க’ன்னு நிறைய அழைப்புகள் வந்துச்சு. ‘லவ் யூ கண்ணுங்களா’ன்னு நிறைய குழந்தைங்களின் ஏக்கங்களை இயன்ற வரையில் நிவர்த்தி செஞ்சோம்”

- புன்னகையுடன் கூறும் ஸ்ரீப்ரியா, ‘கோல்டு ஹார்ட்’ என்ற அமைப்பைத் தொடங்கி கல்விச் சேவையை விரிவுபடுத்தியிருக்கிறார்.

கல்வியின் அத்தியாவசியம் புரியாத பெற்றோர், குடிக்கு அடிமையான தந்தை, கணவன் மனைவி சண்டையால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுவது, பெற்றோர் இன்றி வழிகாட்ட ஆளில்லாதவர்கள் என, சமூகத்தில் ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் கலங்கும் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். வடசென்னையில் அத்தகையோர் அதிகமுள்ளனர். அந்த மாணவர்களின் படிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்ரீப்ரியா, அங்குள்ள பல்வேறு குடியிருப்புகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்தங்கிய 25 கிராமங்களிலும் மாலை நேர வகுப்புகளை நடத்தியிருக்கிறார்.

“நிறைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பள்ளிப் படிப்பு மட்டுமே போதுமானதா இருப்பதில்லை. எனவே, எங்க டியூஷன் வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க நிறைய பகுதிகளுக்குப் போனோம். ‘இந்த வயசுல இப்படியெல்லாம்கூட பிரச்னைகள் வருமா?’ன்னு மனசு துடிக்கிற அளவுக்குச் சொல்லி மாளாத சிரமங் களுக்கு நடுவே அரை குறையா படிச்சுகிட்டும் படிக்காமலும் இருந்த நிறைய பிள்ளைகளைச் சந்திச்சோம். ‘உதவி செஞ்சா படிக்கிறோம். நாங்க படிக்கிறதும், கூலி வேலைக்குப் போறதும் உங்க முடிவுலதான் இருக்கு’ன்னு ஆற்றாமையோடு பலரும் சொன்னாங்க. பொறுப்புள்ள ஆசிரியரா என்னால கண்டும் காணாம போக முடியல. வெட்கத்தைவிட்டு பலர் கிட்டயும் உதவி கேட்டேன். இயன்ற உதவிகளைச் செஞ்சதோடு, பலரும் என்னோடு கைகோத்தாங்க. ‘சிறகுகள்’னு ஒரு திட்டத்தைத் தொடங்கினோம்.

சேவைப் பெண்கள்! - 7 - ஒவ்வொரு விதையும் விருட்சமா வளரணும்!

இதன் மூலம் தமிழகம் முழுக்க ஸ்கூல், காலேஜ் படிக்கப் பொருளாதார ரீதியா சிரமப்படும் பிள்ளைகளில், வருஷத்துக்கு நூற்றுக்கணக்கானோரைத் தேர்வு செஞ்சோம். அவங்க காலேஜ் முடிக்கும் வரையிலான செலவுகளை எங்க அமைப்பு ஏத்துக்கும். மற்ற சில அமைப்புகளும் எங்களுக்கு உதவினாங்க. படிக்க வைக்கிற ஒவ்வொரு மாணவருக்கும் துறை சார்ந்த அனுபவமுள்ள ஒரு மென்டாரை நியமிப்போம். அவங்க, சம்பந்தப்பட்ட குழந்தையின் படிப்பு மற்றும் தனித்திறமையை ஊக்கப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்வாங்க. முதல் தலைமுறை பட்டதாரிகள், சிங்கிள் பேரன்ட் குழந்தைகள், பெண் பிள்ளைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நிதிச்சிக்கல்கள் ஏற்படவே கடந்த அஞ்சு வருஷமா, காலேஜ் படிக்கும் குழந்தைகளை மட்டுமே படிக்க வைக்கிறோம். பல்வேறு காப்பகங்கள்ல வசிக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குப் புத்தாடை, ஸ்வீட், பரிசுகள் கொடுத்து, ஆண்டுதோறும் ‘தித்திக்கும் தீபாவளி’ங்கிற பெயர்ல கொண்டாடும் விழாதான் எங்க பணிகளில் ரொம்பவே நிறைவானது” என்கிற ஸ்ரீப்ரியாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்கிறது.

இந்த அமைப்பால் பயன்பெற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றுள்ளனர். கொரோனா பிரச்னையால் தற்போது ஆறு சென்டர்களில் மட்டும் டியூஷன் வகுப்புகள் செயல்படுகின்றன. அதில், தினம்தோறும் 500 குழந்தைகள் படிக்கின்றனர். தவிர, அரசுக் காப்பகங்கள் நான்கில் வளரும் மாணவர்களுக்கும் டியூஷன் எடுக்கின்றனர். இந்த அமைப்பால் பயனடைந்து கல்லூரி படிக்கும் மாணவர்கள் அல்லது படித்து வேலைக்குச் செல்வோரே டியூஷன் சென்டர்களில் பாடம் நடத்துகின்றனர். கும்மிடிப்பூண்டியில் இருளர் குழந்தைகளுக்கான இலவச மழலையர் பள்ளி ஒன்றையும் நடத்தும் ஸ்ரீப்ரியா, ‘நந்தவனம்’ என்ற பெயரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றை, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடத்திவருகிறார்.

“முறையான கல்வி கிடைக்காம ஒரு குழந்தை தீய வழிக்குப் போறப்போ, அவரை நல்வழிப்படுத்தாத பெற்றோர், ஆசிரியர், உறவினர், நண்பர், கல்விச்சூழல், சமூகம்னு எல்லோருக்கும் அந்தத் தவற்றில் பங்குண்டு. ஓரளவுக்குத் தன்னிறைவா வாழுற ஒவ்வொருத்தருக்குமே, இந்தச் சமூகத்துக்கு இயன்ற கைம்மாறு செய்யும் பொறுப்பு இருக்கு. வயது வித்தியாசம் இல்லாம எல்லாக் குழந்தை களும் என்னை அம்மான்னு கூப்பிடுவாங்க. அந்தப் பொறுப்புக்கான வேலைகளைத்தான் செய்றேன். நல்லா படிச்ச பிள்ளையால ஒரு குடும்பமே முன்னேற்றமடையிறதுல கிடைக்கிற மனநிறைவுக்கு ஈடு இணையே கிடையாது. என் நோக்கம் இதுவல்ல. எங்க அமைப்பால பயனடையிற பிள்ளைங்க, எதிர்காலத்துல தங்களால முடிஞ்சவரை சில ஏழைக் குழந்தைங்களோட படிப்புக்காவது உதவணும். ஒவ்வொருத்தருக்கும் இந்த எண்ணத்தை விதையா விதைக்கிறோம். இந்தச் செயல் எதிர்காலத்துல விருட்சமா பயன்தரும்னு நம்புறேன். எங்க அமைப்பின் நோக்கத்துக்கு உறுதுணையா இருக்கிற அனைவருக்கும் நன்றி”

- உறுதியான நம்பிக்கையுடன் முடிக்கிறார் ஸ்ரீப்ரியா!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தாய் ஸ்தானத்துல உதவுறாங்க!”

சேவைப் பெண்கள்! - 7 - ஒவ்வொரு விதையும் விருட்சமா வளரணும்!

ஸ்ரீப்ரியாவால் பயன் பெற்றவர் களில் ஒருவரான ஸ்வாதி, “சிங்கிள் பேரன்டான என் அம்மா உடல்நிலை சரியில்லாதவங்க. குடும்ப கஷ்டத்தால காலேஜ் படிப்பு கேள்விக்குறியாக, தக்க சமயத்துல ஸ்ரீப்ரியா அம்மாதான் உதவினாங்க. அவங்களாலதான் பி.காம் முடிச்சேன். ‘லவ் யூ கண்ணு’ன்னு எப்போதும் வாஞ்சையுடன் பேசுவாங்க. படிப்பு தாண்டி, பர்சனல் விஷயங்களுக்கும் தாய் ஸ்தானத்துல உதவுவாங்க. நல்ல வேலையில் இருக்கேன். சுய அடையாளத்துடன், குடும்பத்துக்கு என்னால முடிஞ்சவரை உதவுறேன்” என்கிறார் நிறைவாக.