Published:Updated:

‘நல்ல’ ஆண்களைத் தேடுவதைப் பெண்கள் கைவிடவேண்டும்! - ஸர்மிளா ஸெய்யித்

முடிவல்ல... ஆரம்பம்
பிரீமியம் ஸ்டோரி
முடிவல்ல... ஆரம்பம்

முடிவல்ல... ஆரம்பம்

‘நல்ல’ ஆண்களைத் தேடுவதைப் பெண்கள் கைவிடவேண்டும்! - ஸர்மிளா ஸெய்யித்

முடிவல்ல... ஆரம்பம்

Published:Updated:
முடிவல்ல... ஆரம்பம்
பிரீமியம் ஸ்டோரி
முடிவல்ல... ஆரம்பம்

இலங்கையைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஸர்மிளா ஸெய்யித். தன் துணிச்சலான எழுத்து மற்றும் செயல்பாடுகளால் தொடர் விமர்சனங்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகிறவர்.

போருக்குப் பிறகான பெண்களின் வாழ்வைப் பற்றிப் பேசும் இவரது ‘உம்மத்’ நாவல் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இவரது புதிய புத்தகம் ‘உயிர்த்த ஞாயிறு’. இது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் 2019 ஏப்ரல் மாதம் மூன்று கிறிஸ்துவ தேவாலயங் களிலும் மூன்று நட்சத்திர விடுதிகளிலும் ஒரே நாளில் இலங்கையில் நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதல்கள் பற்றி யும், அதன் பிறகு இலங்கை இஸ்லாமிய சமூகம் எதிர்கொண்ட தீவிரமான இனவாத அரச ஒடுக்கு முறையையும் ISIS எனப்படும் இஸ்லாமிய அரசின் தீவிர விளைவுகள் பற்றியும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

‘`நான் சுயபிரக்ஞையுள்ள ஒரு மனுஷி. பால் நிலை சமத்துவம், பெண்கள் வலுவாக்கம், சுய பொருளாதாரம் இந்தத் துறைகளில் பயிற்று நராகவும் ஆலோசகராகவும் பணிசெய்கிறேன். 20 வருட உழைப்பு மற்றும் போராட்டங்களி லிருந்து சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு பனி பொழியும் அழகான இஸ்தான்புல் நகரில் (துருக்கி நாட்டின் தலைநகர்) இருக்கிறேன். வருமானத்துக்காக ஆன்லைன் வேலைகளைச் செய்துகொண்டு புதிய நாவலொன்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...’’ - அழகான அறிமுகத்துடன் பேசுகிறார் ஸர்மிளா.

  அக்காக்கள், தம்பியுடன் பத்ரி...
அக்காக்கள், தம்பியுடன் பத்ரி...

இந்த நிம்மதி அவருக்கு அப்படியே நிலைக்கட்டும் என்பதே ஸர்மிளாவை அறிந்த அனைவரின் ஆசையாகவும் வேண்டுதலாக வும் இருக்கும். காரணம், ஸர்மிளாவின் வலி நிறைந்த வாழ்க்கை. வலியின் உச்சம் பார்த்த பிறகும் ஸர்மிளாவின் கபடமற்ற அந்தச் சிரிப்பும் சக உயிர்களின் மீதான அன்பும் துளியும் மாறாதது ஆச்சர்யம். இனி ஸர்மிளாவுடன்...

‘`23 வயதில் திருமணம். இருவரும் ஊடகப் பணியாளர்கள் என்பதைத் தவிர எங்களுக்குள் எந்த பொதுத்தன்மையும் இல்லை. வெறும் இரண்டாண்டு வாழ்வுதான். என்னை இயல்பி லிருந்து தடம்புரளச் செய்த இரண்டாண்டுகள் அவை. நான் எப்போதும் அதிருப்தியுடன், கோபத்துடன் இருந்தேன். எங்கள் வீட்டுக்குள் வன்முறை தலைவிரித்தாடியது. குடிகாரப் புருஷனைத் திருத்தி, பொல்லாதவனை நல்லவனாக்கி வாழும் குலவிளக்காக நான் என்னை நினைக்கவில்லை. ஒரு மனுஷிக்குரிய கௌரவமே இல்லாத அமைப்பு அது...’’ - வார்த்தைகளில் வலி மறைத்துப் பேசும் ஸர்மிளா, தன் குழந்தைக்கு ஒரு வயதானபோதே சட்டப்படி விவாகரத்து பெற்றிருக்கிறார். அதிலிருந்து 13 வருடங்கள் நீண்டிருக்கிறது சிங்கிள் மதராக அவரது பயணம். இவரின் மகன் பத்ரிக்கு இப்போது 13 வயது.

``சிங்கிள் மதர் அடையாளம் என்பது நிறைய சிக்கல்களும், கேள்விகளும், அவமானங் களும் நிரம்பியது’’ என்பவரை அந்த அனு பவங்கள்தாம் தங்கத்தைப்போல சுட்டுச் சுடர வைத்திருக்கின்றன...

‘`இன்னொரு மணவாழ்க்கை பற்றி எந்தக் கனவும் எண்ணமும் எனக்கு இருந்ததே இல்லை. அந்த எண்ணத்தை எனக்குள் கொண்டுவந்தவன் என் மகன் பத்ரிதான். என் தங்கைகளை, நண்பர்களை இணையர்களோடு சந்திக்கும்போது, `நீங்க ஏன் தனியா இருக்கீங்க... உங்களையும் எனக்கு இப்படிப் பார்க்க ஆசை' என்று சொல்லியிருக்கிறான். ஆனால், எனக்கு ஒருவரைப் பிடித்துப்போய் அவருடன் மிச்சமுள்ள வாழ்வைத் தொடர்வதென்று தோன்றிய பிறகு மகனிடம் சொல்வதற்கே நடுக்கமாக இருந்தது. ஆனால், அவன் என் முடிவை அவ்வளவு பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டான். என் வளர்ப்பு குறித்து நெஞ்சை நிமிர்த்திய தருணங்களில் இதுவும் ஒன்று. அவனால்தான், இந்த வாழ்வை வாழ்கிறேன்...’’ - ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ஸர்மிளா, கடந்த வருடம் றிஸ்வி என்பவரை இணையராக ஏற்றிருக்கிறார்.

‘`றிஸ்வி, இலங்கையர். 15 ஆண்டுகளாக இஸ்தான்புல் நகரில் வாழ்கிறார். கிராபிக் ஆர்டிஸ்ட்டான அவர், என் வாசகராகவே அறிமுகமானார். ஆறு ஆண்டுகள் பழகி னோம். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் பெரும்பாலான முஸ்லிம் ஆண்களைப்போல இவரும் மதவாத, பெண் அடக்குமுறைச் சிந்தனைகள் கொண்டவராகத்தான் இருப்பாரென்று நினைத்து ஆரம்பத்தில் இவரை நான் பொருட்படுத்தவில்லை. காலம் அவரை ஒரு மனிதராக மட்டுமல்ல, எனக்கேற்ற துணை யாகவும் காட்டித்தந்தது. எதிர்ப்புகளையும் பெரிய தடைகளையும் எதிர்கொண்டுதான் கைப்பிடித்திருக்கிறோம். யதார்த்த உலகில் இன்றைக்கு இருக்கும் குடும்ப அமைப்பில் நம்பிக்கையில்லாத நாங்கள் இருவர் இணைந்து வாழ்கின்ற தீர்மானத்தை மிக நிதானமாக ஆண்டுக்கணக்காக ஆறப்போட்டு எடுத்தோம். பழைமைவாத சிந்தனைகளும் மத, கலாசார ஆதிக்கங்களும் நிரம்பிய குடும்ப நிறுவனத்தைக் கட்டிக்காப்பதில்லை எங்கள் நோக்கம். நான், இணையர், ரத்த சம்பந்தமுள்ள, இல்லாத பிள்ளைகள் எல்லாரும்கூடி தோழமையாக இணைந்து ஒரு பயணத்தைத் தொடர்வதுதான் எங்கள் கனவு...’’ - பக்குவப்பட்டவராகச் சொல்பவர், இன்னொரு மாற்றத்துக்கும் வித்திட்டிருக்கிறார்.

இலங்கையிலுள்ள இஸ்லாமியத் திருமண முறைமைகளின்படி திருமண உடன்படிக்கையில் பெண் கையெழுத்திட அனுமதியில்லை. முஸ்லிம் திருமணம் பற்றியும் உரிமைகள் பற்றியும் பேசும் `இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டத்துக்கு' அமைய பெண் சார்பாக அவளின் தகப்பன் அல்லது சகோதரன் அல்லது ஓர் ஆண் கையெழுத்திடுவதே வழக்கம். இப்படி மணமகள் சார்பாக பொறுப்புக் கூறுபவர் `வலி' என அழைக்கப்படுகிறார். `நிக்காஹ்' எனப்படும் இந்தத் திருமண ஏற்பாடு பெரும் பாலும் பள்ளிவாசல்களிலேயே நடக்கும். ஆண்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இந்தச் சடங்கைப் பார்ப்பதற்குக்கூட இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு அனுமதியில்லை. பள்ளிவாசலி லிருந்து மண்டபத்துக்கு அழைத்து வரப்படும் மணமகனிடம், மணமேடையில் ஏற்கெனவே அமர்ந்திருக்கும் மணமகளின் தலைமுடியில் சிலவற்றைப் பிடித்து அவள் தகப்பன் ஒப்படைப்பார். இந்த நடைமுறைகள் எவற்றையும் ஸர்மிளா-றிஸ்வி ஜோடி பின்பற்றவில்லை.

‘`இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்காக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், கல்வி யாளர்களும் முயன்று வருகிறார்கள். அந்த சட்டத்திருத்தத்தில் மணப்பெண்ணும் திருமண உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்ற பரிந்துரையும் ஒன்று. ஆனால், இன்றுவரை இந்த சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரமுடியவில்லை.இந்தியாவில்கூட திருத்தப்பட்ட சட்டம் உள்ளது. அங்கு முஸ்லிம் பெண்கள் கையெழுத்திடும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். துருக்கி மாடர்ன் நாடு என்பதால் எங்கள் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை...’’ - சாதித்திருக்கும் ஸர்மிளாவுக்கு திருமண வாழ்த்துகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. வாழ்த்து அனுப்பியவர்களில் அவரின் முதல் கணவரும் ஒருவர்.

‘நல்ல’ ஆண்களைத் தேடுவதைப் பெண்கள் கைவிடவேண்டும்! - ஸர்மிளா ஸெய்யித்

‘`அது வாழ்த்து இல்லை. வாழ்த்து சொல்லுமளவு பெருந்தன்மையும் நாகரிகமும் சக பெண்ணை மதிக்கும் குணமும் கொண்டவர் என்று தன்னை வெளிப்படுத்தும் கயமைத்தனம். எங்கள் மணவாழ்வு முறிந்துபோனதற்குத்தான் பொறுப்பில்லை எனக் காட்டும் முயற்சி. இதுவரை தனி மனுஷியாக எனது அடையாளத்துடன் நான் போராடியதையும், சமூகம் என்னைப் பெண் என்பதாலும், மத கலாசார காரணங்களாலும் புறக்கணித்தும், ஒடுக்கியும் ஏற்படுத்திய துன்பங்கள் எல்லாவற்றையும் நிலை இறக்குகிற ஒரு காரியத்தையே அவர் செய்ய முனைந்தார். அவரது நோக்கம் வாழ்த்துவது இல்லை என்ற நுண் அரசியலை இணையர் தெளிவாகப் புரிந்து கொண்டார்...’’ - வெளிப்படை யாகச் சொல்பவரின் வாழ்க்கையில் மகன் பத்ரியோடு தத்துப்பிள்ளைகளும் இணைந்திருக்கிறார்கள்.

‘`இரண்டாண்டுகளுக்கு முன்பு புற்றுநோயினால் மரணித்த என் தோழியின் ஒரு மகள் எங்களுடன் புதிதாக இணைந்தவள். எனக்குப் பிறந்த மகன் பத்ரி உட்பட நால்வரை என் சொந்தப் பிள்ளைகளாகக் கொண் டிருக்கிறேன். பத்ரிக்கு ஒரு தம்பியும் இரு அக்காக்களும் இயற்கையின் பரிசு. இந்தக் குழந்தைகள் ஒவ்வொருவரும் எங்களை வந்தடைந்த தருணங்கள் மிக அழகானவை. இணையரைப் பிள்ளைகள் என்னைப்போலவே பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அவர்கள் நட்பாக சுதந்திரமாகப் பழகுவது நெகிழ்ச்சியான, விஷயம்...’’ - மகிழ்பவர் குழந்தைகளுக்காக குடும்ப வன்முறைகளை சகித்துக் கொண்டு வாழும் பெண்களுக்கு ஸ்ட்ராங்கான மெசேஜ் சொல்லி முடிக்கிறார்.

‘`பல பெண்களுக்கு தமது உறவில் வன்முறை இருப்பதே தெரிவதில்லை. குடும்ப நிறுவனத்தில் வன்முறை அந்தளவு இயல்பாகக் கலந்திருக்கிறது. முதலில் எது வன்முறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. பெண்ணின் சுய அடையாளத்தையோ கௌரவத்தையோ பாதிக்கும் வன்முறைகளைவிட உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் வன்முறை களையே சமூகம் வன்முறையாகக் கருதுகிறது. தனது உடலின் மீது, கௌரவத்தின் மீது, சுதந்திரத்தின் மீது, உரிமையின் மீது இப்படி வன்முறை எதன் பொருட்டு நிகழ்த்தப்பட்டாலும் குழந்தைகளுக்காகச் சகித்துக்கொண்டு வாழ்வதால் ஒரு பெண் தனக்கு மட்டுமல்ல, தன் குழந்தைகளுக்கும் அநீதி இழைக்கிறாள். குழந்தைகள் வீட்டிலிருந்தும் தங்களைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக்கொண்டே இருப்பவர்கள்.

வன்முறை நிறைந்த ஒரு சூழலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதுதான் அவசியமே தவிர, சமூகத்துக்காகச் சகித்துக் கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. ஆனால், இப்படி உறவிலிருந்து வெளியேறி விட்ட பெண்கள் எல்லாருமே இன்னோர் ஆணைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்றோ, கூடாது என்றோ நாம் யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது. முதலில் `நல்ல' ஆண்களைத் தேடுவதைப் பெண்கள் கைவிட வேண்டும். தனக்குப் பொருத்தமான, தன்னை மதிக்கக்கூடிய, தன்னை சுயமரியாதையுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் ஆணையே துணை யாகக் கண்டடைய வேண்டும்.’’

ஸர்மிளாவுக்கு நம் அன்பும் வாழ்த்து களும்.