பிரீமியம் ஸ்டோரி

ஆனந்தி ஜெயராமன்

ஸ்ரீரஞ்சனியின் கால்களில் விரல்கள் எல்லாம் சக்கரங்கள்தான். 24 வயதில் தேசாந்திரி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். கால்போன போக்கில் போவது, போகும் இடத்தில் ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு உணவு, உறைவிடத் தேவையை நிறைவேற்றிக்கொள்வது, சில மாதங்களில் பையைத் தூக்கிக்கொண்டு அடுத்த ஊர் நோக்கிச் செல்ல ஆரம்பிப்பது... இதுதான் ஸ்ரீரஞ்சனியின் வாழ்க்கை வட்டம்.

‘`பிறந்தது, படிச்சது எல்லாம் பெங்களூரு. விவசாயக் குடும்பம். எனக்கு ஒரு தங்கை இருக்கா. நான் படிப்புல சுமார்தான். அதனால வீட்ல என்னை டிப்ளோமா படிக்க வெச்சாங்க. எல்லாரும் வாழுறதையே நானும் வாழ்றது எனக்குப் பிடிக்கல. டாட்டூ போடுறது, ஃப்ரெண்ட்ஸுடன் டூர் போறதுனு புதுசு புதுசா ஏதாச்சும் பண்ணுறது பிடிச்சிருந்தது. குறிப்பா, அந்தப் பயணங்களும், புதுப் புது மக்களை சந்திக்கிறதும் ரொம்பப் பிடிச்சிருந்தது. நாளடைவில், தனியா ஊர்சுத்திப் பார்க்கணும்னு ஆசை வந்துச்சு. ஆனா, அதுக்கு செலவுக்கு என்ன பண்றது..?” - சுவாரஸ்யமான ஒரு விடையைக் கண்டடைந் திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

 ஸ்ரீ ரஞ்சனி
ஸ்ரீ ரஞ்சனி

‘‘சோலோ ட்ரிப்ஸ் போகப்போறேன்னு சொன்னதும், வீட்டுல ஒரே கலவரம். ஆனாலும், என் முடிவுல நான் உறுதியா இருந்து, அவங்க சம்மதத்தை வாங்கினேன். முதன்முதலா, எந்தத் திட்டமும் இல்லாம கேரளாவுக்குப் போனேன். அங்க ஒரு ஹோட்டல்ல போய் மாசம் 5,000 ரூபாய்க்கு வேலையில் சேர்ந்தேன். அங்கேயே தங்கிக்கிட்டேன். சாப்பாடு, தங்குமிடம் பிரச்னை தீர்ந்தது. வேலை நேரம் போக மற்ற நேரம், விடுமுறை நாள்களில் எல்லாம் ஹேப்பி ஜார்னிதான்’’ என்பவருக்கு, அந்த முதல் பயணமே சுவாரஸ்யமாகவும் வெற்றிகரமாகவும் அமைய, அதே ரூட் பிடித்துச் சென்றிருக்கிறார்.

‘`கேரளாவில் நான் வேலைபார்த்த ஹோட்டலின் கிளை பல ஊர்களிலும் இருந்தது. அது இல்லாத ஊர்களில், மற்ற ஹோட்டல்களில் ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டேன். ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சம் ரெண்டு மாதங்கள்வரை தங்கியிருப் பேன். நம்புவீங்களா... கேரளம், இமாசலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், தமிழகம், பஞ்சாப்னு இதுவரை கிட்டத்தட்ட 19 மாநிலங்களுக்கும், கொச்சி, நாகப்பட்டினம், வாரணாசி, கசோல், புதுச்சேரி, ஜெய்சல்மேர்னு 37 ஊர்களுக்கும் சோலோ டூர் போயிட்டு வந்துட்டேன். இந்தக் கொரோனா கால ஊரடங்குத் தளர்வுல மட்டும் ஒன்பது மாநிலங்களுக்குப் பயணப்பட் டிருக்கேன்’’ என்று ஆச்சர்யப்படுத்து பவர், பயணங்களில் தனக்குக் கிடைக்கும் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டார்

 ஸ்ரீ ரஞ்சனி
ஸ்ரீ ரஞ்சனி

‘‘இதில் நான் சம்பாதிச்சதெல்லாம் அனுபவங்கள்தான்! ஒவ்வொரு ஊரிலும் நான் சந்திக்கும் மனிதர்கள், எனக்கு ஒரு புதிய விஷயத்தைக் கற்றுத்தருவாங்க. இது இப்படித்தான் இருக்கும்னு எதையுமே கணிக்க முடியாத புதிய வழிகளில் பயணிக்க பயணிக்க, மூளையின் நரம்பிழை களுக்கு புத்துணர்வு கிடைச்சுட்டே இருக்கும். பயண நேர தனிமை, நம்ம எண்ணங்களை செப்பனிட உதவும். உண்மையில், வாழ்க்கைக் கல்விக்கு பயணங்கள் பெஸ்ட் சிலபஸ்னு சொல்லலாம். போனஸா, இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ்னு பல மொழிகளையும் கத்துக்கிட்டேன்.

இதுவரை பஸ், டிரெயின்ல தான் எல்லா பயணங்களையும் மேற்கொண்டிருக்கேன். ஒவ்வோர் ஊரின் உணவை பத்தியும் நான் சொல்ல ஆரம்பிச்சா, நீங்க நிறுத்தவே முடியாது. என் நாக்கு அவ்ளோ லக்கி. ஒவ்வொரு பயணமும் ஒரு சாகசமாதான் எனக்கு அமையுது. ‘தனியா போறியே, ரிஸ்க் இல்லை யா?’னு பலரும் கேட்பாங்க. தினமும் ஸ்கூல், காலேஜ் போயிட்டு வர்ற பெண்கள் முதல், வீட்டுக்குள்ள இருக்குற குழந்தைகள் வரை எங்கதான், யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கு? அதனால, என் பயணங்களில் பாதுகாப்பு இருக்கானு கேட்டா, நான் பாதுகாப்பா இருந்துக்குவேன்னு பதில் சொல்லுவேன்’’ என்பவர்,

‘`ஒண்ணு தெரியுமா? கேரள ஹோட்டல்ல என்னோட முதல் சம்பளத்துல நான் வாங்கின பொருள், பேக்பாக் (Backpack). இதோ இந்த 2021-க்குப் புது பேக் ரெடி”

- அனுபவங்கள் அள்ளத் தயாராகிறார் ஸ்ரீரஞ்சனி.

பயணங்கள் முடிவதில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு