லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

எங்கள் வீட்டில் கிளியும் பூனையும் நண்பர்கள்! - ஶ்ரீதேவி

ஶ்ரீதேவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீதேவி

செல்லங்களின் செல்லம்

``இவை என் மூத்த குழந்தைகள்போல. இவற்றுக்காகவே என் வாழ்க்கை முறையை மாத்திக்கிட்டேன்.

தெரு நாய்களுக்கு உதவப்போய் பலமுறை கடி வாங்கியிருக்கேன். நிறைய பூனைகள் என்னைப் பிராண்டியிருக்கு. ஒருநாள் ராத்திரி முள்வேலியில் ஒரு நாய் அழுதுகிட்டிருந்துச்சு. அதுக்கு உதவலாம்னு முள்வேலிக்குள் கையைவிட்டேன். நாய் திடீர்னு ஓடிப்போக, முட்கள் என் கையைக் கிழிச்சுடுச்சு. ரெண்டு லேயருக்குத் தோல் கட்டானதில், இடக்கையில 18 தையல்கள் போட வேண்டியதாகிடுச்சு. வளர்ப்புப் பிராணிகளின் குணங்கள் தெரிஞ்சதால, அவைமீது எனக்கு எந்தக் கோபமும் வராது. ஒவ்வொரு வருஷமும் தடுப்பூசிப் போட்டுக்குவேன். அதனால, நாய் உட்பட எந்தப் பிராணி கடிச்சாலும் எனக்கு எதுவும் ஆகாது” - முகம் மலர பேசுகிறார், விலங்குகளின் நேசகி ஶ்ரீதேவி.

எங்கள் வீட்டில் கிளியும் பூனையும் நண்பர்கள்! - ஶ்ரீதேவி

பெங்களூரிலுள்ள இவரின் வீட்டில், நாய், பூனை, பறவைகள், வளர்க்க அனுமதியுள்ள மோமெர்செட் குரங்கு, அணில், முயல், ஆமை, வெள்ளெலி உள்ளிட்ட ஏராளமான செல்லப் பிராணிகள் மகிழ்ச்சியாக வளர்கின்றன. வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக அன்பு கொண்ட ஶ்ரீதேவி, அவற்றுக்கான பராமரிப்பு மையத்தையும் தன் வீட்டில் நடத்திவருகிறார். பெட்ஸ் டிசைனராகவும் பணியாற்றுகிறார். நாய்களிடம் கொஞ்சியபடியே பேசத் தொடங்குகிறார், ஶ்ரீதேவி.

``என் பூர்வீகம் கேரளம். சின்ன வயசுலருந்தே வளர்ப்புப் பிராணிகள்மீது எனக்கு அதிக நேசமுண்டு. ஸ்கூலுக்குப் போயிட்டு வரும்போது சாலைகளில் ஆதரவில்லாம இருக்கும் பூனை, நாய்க்குட்டிகளை வீட்டுக்குக் கொண்டுவந்து வளர்ப்பேன். காலேஜ் படிக்கிறப்போ, குடும்பத்துடன் கோயம்புத்தூரில் குடியேறினோம். பி.காம் படிக்கிறப்போ, வீட்டில் 20-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தேன். கூடவே தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் வேலை செஞ்சேன். அடுத்து இந்துஸ்தான் காலேஜ்ல எம்.பி.ஏ படிச்சப்போ, அதே காலேஜ்ல என் சீனியரான நவனீத் எம்.சி.ஏ படிச்சார். அவரும் பெட்ஸ் பிரியர்தான். தெரு நாய்கள்மீது நான் அன்புகாட்டுறதைப் பார்த்து அடிக்கடி பாராட்டுவார். நண்பர் களாகி, 2014-ம் ஆண்டு நாங்க காதல் திருமணம் செய்துகிட்டோம்.

எங்கள் வீட்டில் கிளியும் பூனையும் நண்பர்கள்! - ஶ்ரீதேவி

பிறகு, கணவர் வேலை செய்துகிட்டிருந்த பெங்களூர்ல புதிய வாழ்க்கை. இதுக்கிடை யில, கோயம்புத்தூர்ல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆரா வேலை செஞ்சேன். அப்போதே, `கல்யாணத்துக்குப் பிறகு உனக்குப் பிடிச்சிருந்தா வேலைக்குப்போ. இல்லைன்னா, உனக்குப் பிடிச்ச பெட்ஸ் நலனுக்கான விஷயங்கள்ல கவனம் செலுத்து’ன்னு கணவர் ஊக்கப்படுத்தினார். அதன்படி பெங்களூரில் விலங்குகளுக்கான என்.ஜி.ஓ ஒன்றில் வாலன்டியரா வேலை செய்தும் எனக்கு மனநிறைவு கிடைக்கலை. பின்னர் என் பெட்ஸ் ஆர்வத்துக்காகவே, கணவரின் ஏற்பாட்டில் இப்போ வசிக்கிற இந்தப் பெரிய வாடகை வீட்டில் குடியேறினோம். விலங்குகளின் உளவியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைத் தெரிஞ்சுக்க, அனிமல் கம்யூனிகேஷன் மற்றும் பிரானிக் ஹிலிங் கோர்ஸ் படிச்சேன். முறையான அனுபவத்துடன், வீட்டில் இருந்தபடியே பெட் கேர் சென்டரை ஆரம்பிச்சேன்” என்கிற ஶ்ரீதேவி, ``என் குழந்தைகள் சாப்பிடுற நேரமாகிடுச்சு. இருங்க வர்றேன்” என்றபடி, வளர்ப்புப் பிராணிகளுக்கு மதிய உணவு பரிமாறத் தொடங்குகிறார்.

``என் வீட்டு வாசலிலுள்ள மரத்தில் கிளிகள் அடிக்கடி கூடுகட்டும். அதிலிருந்து கிளிக் குஞ்சுகள் அவ்வப்போது கீழே விழுந்திடும். பாதுகாப்பு கருதி அதை நான் எடுத்து வளர்ப்பேன். பொதுவா கிளிகளுக்குப் பூனைதான் எதிரின்னு சொல்வாங்க. அதற்கு நேரெதிரா என் வீட்டில் பூனைகளும் கிளிகளும் ஃபிரெண்ட்ஸ். ஆமை வளர்க்கிறது நல்லதில்லைனு பலரும் சொல்வாங்க. அதில் நம்பிக்கையில்லாத நான், ரெண்டு வருஷமா அவற்றை வளர்க்கிறேன். எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. பச்சைக்கிளிகள், முயல்கள், நிறைய லவ் பேர்ட்ஸ் ஆகியவை ஒரே ரூம்ல வளரும். இவற்றுடன் என் ஆறு பூனைகளும் தினமும் பல மணிநேரம் விளையாடும். என் வீட்டில் எல்லாப் பிராணிகளுக்கும் சரிவிகித உணவு, காற்றோட்டம், மகிழ்ச்சியான சூழல்னு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறதால, அவை உணவுக்காகச் சண்டைபோடாது. குறிப்பா, நாய் உட்பட எல்லா வளர்ப்புப் பிராணிகளையும் அதன் இனத்துடன் சகஜமாக விளையாடிப் பழக அனுமதிச்சாலே, அவற்றுக்குக் கோபக்குணம் வராது.

எங்கள் வீட்டில் கிளியும் பூனையும் நண்பர்கள்! - ஶ்ரீதேவி
எங்கள் வீட்டில் கிளியும் பூனையும் நண்பர்கள்! - ஶ்ரீதேவி

ஆபீஸ் போறவங்க தங்களோட வளர்ப்புப் பிராணிகளை காலையில விட்டுட்டு மாலையில கூட்டிப்போவாங்க. சிலபேர் வருடக்கணக்கில்கூட என் கேர் சென்டரில் அவங்க வளர்ப்புப் பிராணிகளை விட்டுட்டுப்போவாங்க. தினமும் தலா 15 - 20 நாய்கள் மற்றும் பூனைகளுக்கு மிகாமல்தான் அட்மிஷன் போடுவேன். ஞாயிற்றுக்கிழமைதோறும் என் வீட்டுக்கு வரும் கால்நடை மருத்துவர், எல்லாப் பிராணிகளையும் பரிசோதனை செய்திடுவார். இதனால, நோய்த் தொற்று எதுவும் வராம பார்த்துக்கிறேன்” என்கிறவர், வளர்ப்புப் பிராணிகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களிலும் பேசிவருகிறார்.

``இதில் எனக்குக் கிடைக்கும் லாபத்தை, தெரு நாய்கள் மற்றும் பூனைகளின் நலனுக்குச் செலவழிச்சுடுவேன். வீட்டுக்கு வெளியே 12 தெரு நாய்களை வளர்ப்பதுடன், அவற்றுக்குத் தங்குமிட வசதியையும் ஏற்படுத்தியிருக்கேன். அவற்றின் உணவு, மருத்துவச் செலவுகளையும் கேர் சென்டர் வருமானத்தில்தான் செய்றேன்.

எங்கள் வீட்டில் கிளியும் பூனையும் நண்பர்கள்! - ஶ்ரீதேவி

இரண்டு வயதாகும் எங்க மகன் துஷ்யந் ஆரியன், எல்லாப் பிராணிகளுடனும் ஜாலியா விளையாடுவான். ஐ.டி நிறுவனத்துல வேலை செய்கிற கணவர், ஓய்வு நேரம் முழுக்க என் கேர் சென்டர் பணிகளுக்குச் செலவிடுவார். தெரு நாய்களுக்கான நிரந்தர காப்பகம் ஒன்றைத் தொடங்குவதுதான் என் கனவு. அது நிச்சயம் நடக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறும் ஶ்ரீதேவி, கையில் தன் ஐந்து நாய்களின் உருவம் பதிந்த டாட்டூவைக் காட்டிப் புன்னகைக்கிறார்!

பண்டிகைகளில் பெட்ஸுக்கும் புது டிரஸ்!

``நான் கர்ப்பமா இருந்தப்போ போட்டோஷூட் பண்ணிக்கிட்டேன். அப்போ என் நாய்கள் மற்றும் பூனைகளுடன் இணைந்து போட்டோ எடுத்துக்க நினைச்சேன். அதற்காக அவங்களுக்கு என் காஸ்ட்யூமுக்குப் பொருத்தமான உடைகளைப் பிரத்யேகமா டிசைன் பண்ணினேன். வீட்டில் எந்த விசேஷமா இருந் தாலும், என்னுடைய எல்லா பெட்ஸுக்கும் புது டிரஸ் தயார் செய்து உடுத்திவிடுவேன். இதைக் கேள்விப் பட்டு பலரும் அவங்க வளர்ப்புப் பிராணிகளுக்கு டிரஸ் டிசைன் பண்ணிக்கொடுக்கச்சொல்லிக் கேட்டாங்க. இப்போ பெட்ஸ் டிசைனர் வேலையும் முக்கிய பணியா மாறிடுச்சு” என்று புன்னகைக்கிறார் ஶ்ரீதேவி.