Published:Updated:

12 மணிநேர பிரசவ வலி, வாட்டர் பர்த், முதல் மாத கொண்டாட்டம்! - ஸ்ருதி நகுல் ஷேரிங்ஸ்

ஸ்ருதி - நகுல்
ஸ்ருதி - நகுல்

``எங்களோட ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா மாறியிருக்கு. எனக்கும் நகுலுக்கும் பெட்ஸ்னா உயிரு. அகீராவும் பெட்ஸுக்கு பயப்படுறதில்ல. மொத்தத்தில் எங்க வீடு முழுக்க அன்பு நிறைஞ்சிருக்கு." - ஸ்ருதி நகுல்

தங்களுடைய குட்டி தேவதை பிறந்த ஒரு மாத நிறைவைக் கொண்டாடும் விதமாக, நடிகர் நகுலும் அவரின் மனைவி ஸ்ருதியும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன்கூடிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

ஸ்ருதி - நகுல்
ஸ்ருதி - நகுல்

நீர்த்தொட்டிக்குள் ஸ்ருதி பிரசவ வலியுடன் நகுலின் கைகளை இறுகப் பற்றியபடி அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும், தங்களுடைய குழந்தையின் முதல் நிமிடத்தை நகுல் ஆச்சர்யத்துடன் பார்ப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தனர். இது குறித்த ஸ்ருதியின் பதிவில்...

``என் குழந்தையை சுகப்பிரசவத்துலதான் பெற்றெடுக்கணும்னு ரொம்ப உறுதியா இருந்தேன். அதற்காக நிறைய ஆன்லைன் கோர்ஸ் அட்டெண்ட் பண்ணினேன். ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு பர்த் சென்டர் மூலமா விஜயா அம்மா எனக்கு அறிமுகமானாங்க. அவங்கதான் பிரசவம் பற்றி நிறைய புரியவெச்சாங்க. தாய்ப்பால் குறித்தும், போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் பற்றியும் நிறைய கத்துக்கிட்டேன். அதனால் அந்த சென்டரில்தான் என்னுடைய டெலிவரி நடக்கணும்னு முடிவு பண்ணி மகப்பேற்றின் 32-வது வாரம் நானும் நகுலும் எங்களோட சில பூனைக்குட்டிகளோடு காரில் ஹைதராபாத் போனோம். என்னுடைய ஆசைக்கு நகுலும் சப்போர்ட் பண்ணார்.

ஸ்ருதி
ஸ்ருதி

என்னுடைய டெலிவரி வாட்டர் பர்த் மூலமா நடந்துச்சு. 12 மணிநேர பிரசவ வலியோடு இருந்தேன். வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் நகுலின் கைகளை இறுகப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன். அழுகை, பயம், பதற்றம், சந்தோஷம்னு வெவ்வெறு உணர்வுகள் நிரம்பியிருந்துச்சு. நிறைய பாசிட்டிவ் வார்த்தைகள் என்னைச் சுத்தி கேட்டுக்கிட்டே இருந்துச்சு

பிரசவ அறையில் நகுலும் இருந்தார். வலியில் நான் சிந்தின ஒவ்வொரு துளி கண்ணீரும் நகுலுக்கு என் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கு. குழந்தைக்கு அகீரானு பெயர் வெச்சுருக்கோம். கிரேஸ் அண்ட் ஸ்டாராங்னு அர்த்தம். குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிஞ்சுருச்சு. குழந்தையைப் பார்த்துக்கிறது, குளிப்பாட்டுறதுனு எல்லா வேலைகளையும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் பண்றோம்.

அகீரா
அகீரா

எங்களோட ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா மாறியிருக்கு. எனக்கும் நகுலுக்கும் பெட்ஸ்னா உயிரு. அகீராவும் பெட்ஸுக்கு பயப்படுறதில்ல. மொத்தத்தில் எங்க வீடு முழுக்க அன்பு நிறைஞ்சிருக்கு.

இப்படியொரு சந்தோஷமான பிரசவம் எல்லா பெண்களுக்கும் கிடைக்கணும்னு ஆசைப்படுறேன்" என்று பதிவிட்டிருந்தார். ஸ்ருதியிடம் பேசியபோது, ``ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தாய்மை நிறைவானது. ஆனாலும், தான் எப்போ தாய்மை அடையணும் என்பது ஒவ்வொரு பெண்ணோட, தம்பதியோட தனிப்பட்ட முடிவா இருக்கணும்" என்றவர், பெண்களிடம் திணிக்கப்படும் மகப்பேறு முடிவுகளுக்கு எதிரான தன் கருத்தையும் பகிர்ந்துகொண்டார்.

நகுல்
நகுல்

சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள் வந்துருச்சு. ஆனாலும், பெண்கள் மீது இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளில் இப்பவரை எந்த மாற்றமும் வரல. 13 வயசில் பூப்பெய்தணும், 21 வயசில் திருமணம் பண்ணிக்கணும், அடுத்த ஒரு வருஷத்துக்குள் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்கணும். இதுல ஏதாவது ஒன்று தாமதமானாகூட, கேள்விக் கணைகளால் அந்தப் பெண்ணை இந்தச் சமுதாயம் துளைச்சு எடுத்துரும்.

மற்றவர்கள் கேட்கும் கேள்விகள் அந்தப் பெண்ணுக்கு கஷ்டத்தைத் தரலாம் மற்றவர்களோட கருத்துக்காக நாம் வீட்டில் முடங்கியிருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நமக்காக நாம் குரல் கொடுப்போம் பெண்களே" என்றார் ஸ்ருதி.

அடுத்த கட்டுரைக்கு