Published:Updated:

"தற்கொலைக்கு தைரியம் இருக்குன்னா, தன்னம்பிக்கையோட வாழவும் முடியும்தானே?!"- மேடைக் கலைஞர் ராதிகா

ராதிகா
News
ராதிகா

"கடன் வாங்கி வீட்டை இடிச்சுக் கட்டலாம்னு முடிவு பண்ணினோம். என் புள்ளைங்க மேல ஆணையா சொல்றேன்மா... வீட்டை இடிக்கும்போது கல் சந்துல கிட்டத்தட்ட பத்துப் பாம்பு இருந்துச்சு!" - மேடைக் கலைஞர் ராதிகா

”மேடையில் ஆடும்போது என் ஒட்டுமொத்த சோகமும் காணாமப் போயிடும்! மாசத்துல 4, 5 நாடகத்துக்குத்தான் என்னைக் கூப்டுவாங்க... குறிப்பிட்ட தேதிக்கு டான்ஸர்ஸ் யாரும் இல்லைன்னாதான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அதுவரைக்கும் இன்னைக்குக் கூப்பிட மாட்டாங்களா, நாளைக்குக் கூப்பிட மாட்டாங்களா என்கிற எதிர்பார்ப்போடே நாட்களை ஓட்டிடுவேன்!” என்கிறார், நாடகக் கலைஞரான ராதிகா. அவரிடம் பேசினோம்.

ராதிகா
ராதிகா

”என்னோட சொந்த ஊர் மணப்பாறை. நானும், என் வீட்டுக்காரரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவங்க என்பதால் யாரும் எங்களை ஏத்துக்கலை. நானும் என் வீட்டுக்காரரும் கோயம்புத்தூருக்குப் போயிட்டோம். அங்கே என் கணவர் தறி ஓட்டப் போயிட்டிருந்தார். எங்க மூத்த பொண்ணு பொறந்து மூணு மாசத்துல என் வீட்டுக்காரருக்கு ஒரு ஆக்ஸிடென்ட் நடந்து அவரோட காலில் பிளேட் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுருச்சு. தறி ஓட்டிட்டிருந்த குடோனில் கடன் கேட்டு ஒரு லட்சம் வாங்கினேன். அதை வச்சுதான் மருத்துவச் செலவைப் பார்த்துக்கிட்டேன். அவரால் இனிமேல் தறி ஓட்ட முடியாதுன்னு தெரிஞ்சதும் சொந்த ஊருக்கே போயிடலாம்னு முடிவு பண்ணினோம். பாங்க்கில் லோன் போட்டு வாங்கின கடனை அடைச்சிட்டு சொந்த ஊருக்கு வந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என் மாமியாரோட 5 1/2 சென்ட் காட்டுல முல்லைப் பூ, காக்கட்டான் பூப் போட்டோம். அதுபோக பக்கத்துக் காட்டுல தோட்ட வேலை இருந்தா என் வீட்டுக்காரரைக் கூப்டுவாங்க. அவர் அங்கேயும் வேலைக்குப் போவார். மழை, தண்ணீர் இல்லாம பூவும் சரியா பூக்காம பொழப்புக்கே கஷ்டப்பட்டோம். இப்போ எங்களுக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன் இருக்காங்க. மூத்த பொண்ணு ஆறாவது படிக்குது. ரொம்ப நல்லாப் படிப்பா. ரெண்டாவது பொண்ணு மூணாவது படிக்கிறா. பையன் 1வது படிக்கிறான். கொரோனா வந்தப்போ யாரும் பூ வாங்கலை. பூவையெல்லாம் பறிச்சு கல்லறை மேட்டுக்குப் போய் போட்டுட்டு இருந்தோம்.

ராதிகா குடும்பத்தினருடன்...
ராதிகா குடும்பத்தினருடன்...

எங்க வீடு மண் சுவத்துல கூரை பின்னிய பழங்கால வீடு. ஒரு நாள் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் வீட்டுக்குள்ள பாம்பு வந்துடுச்சு. அக்கம் பக்கத்துல உள்ளவங்கதான் பாம்பை அடிச்சாங்க. அப்போ எல்லாரும் வீட்டைப் பிரிச்சு மட்டை இல்லைன்னா ஆஸ்பெட்டாஸ் ஓடாச்சும் போட்டுக் கட்டுங்க. இங்கே நிறைய பாம்பைப் பார்த்திருக்கோம். சின்னப் புள்ளைங்களை வச்சிகிட்டு இப்படி அஜாக்கிரதையா இருக்காதீங்கன்னு சொன்னாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சொந்தக்காரங்க யாரும் உதவி பண்ணலை... கடன் வாங்கி வீட்டை இடிச்சுக் கட்டலாம்னு முடிவு பண்ணினோம். என் புள்ளைங்க மேல ஆணையா சொல்றேன்மா... வீட்டை இடிக்கும்போது கல் சந்துல கிட்டத்தட்ட பத்துப் பாம்பு இருந்துச்சு. செவத்து ஓரத்துல பாம்பு முட்டையெல்லாம் இருந்துச்சு. 11 வருஷமா இந்த வீட்லதான் இருந்திருக்கோம். புள்ளைங்களை பாம்பு கடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும்” என்றவர், தொடர்ந்து பேச முடியாமல் அழத் தொடங்கினார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார்... ”ஒரு கிச்சன், ஒரு ரூம் கட்டுறதுக்கே 5 லட்சம் வரை செலவாகிடுச்சும்மா. வாங்கின கடனுக்கு ஐந்து வட்டி கட்டிட்டிருக்கோம். இப்போ வரை எங்களால வட்டி மட்டும்தான் கட்ட முடியுது. இலவசமா ரேஷன் அரிசி கிடைக்கிறதனால அதைப் பொங்கி குடும்பத்துல இருக்கிற ஏழு பேரும் சாப்பிட்டுட்டிருக்கோம். நாடகத்துக்கு நடனம் ஆடப் போறேன்னு சொன்னப்போ சொந்தக்காரங்க எல்லாரும் ’உன்னைத் தப்பாப் பேசுவாங்க... வேண்டாம்’னு என் வீட்டுக்காரர் சொன்னார்.

ராதிகா
ராதிகா

நம்ம குழந்தைங்களைப் படிக்க வைக்கிறதுக்காக நாடகத்துக்குப் போறேன். பேசுறவங்க பேசிட்டே இருக்கட்டும் மாமான்னு சொல்லி, மேடையில் டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். பிரபலமான டான்ஸர் இல்லாத அன்னைக்கு மட்டும்தான் என்னைக் கூப்டுவாங்க. அப்போ கிடைக்கிற பணத்தை வச்சுதான் என் புள்ளைங்களுக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடுப்பேன். என் வீட்டுக்காரர் தோட்ட வேலைக்குப் போறார். ஒரு நாளைக்கு 350 ரூபாய் அவருக்கு சம்பளம். இவ்வளவு சோகம் எனக்குள்ள இருந்தாலும் மேடையில் ஆடும்போது அத்தனையையும் மறந்திடுவேன்மா. இந்தக் கலை என் குடும்பத்துக்குச் சோறு போடும்னு நம்பி இதுக்குள்ள வந்திருக்கேன்... நிச்சயம் என் நம்பிக்கை தோற்காதும்மா... அப்பப்போ கடன்காரங்க கண்டபடி பேசுறப்ப, ’பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிப்போமா’ன்னு என் வீட்டுக்காரர் கேட்பார். ’தற்கொலையையே தைரியமா நம்மால பண்ணிக்க முடியும்னா நம்மால தன்னம்பிக்கையோட நிச்சயம் வாழ முடியும் மாமா’ன்னு அவர்கிட்ட அடிக்கடி சொல்லுவேன்மா.

நிச்சயம் ஒருநாள் என் வாழ்க்கை மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!” எனத் தன்னம்பிக்கை ததும்பப் பேசி முடித்தார் ராதிகா.