Published:Updated:

எதிர்க்குரல்: கறுப்பு என்பது நிறமல்ல!

கிளாடெட் கோல்வின்
பிரீமியம் ஸ்டோரி
கிளாடெட் கோல்வின்

கிளாடெட் கோல்வின்

எதிர்க்குரல்: கறுப்பு என்பது நிறமல்ல!

கிளாடெட் கோல்வின்

Published:Updated:
கிளாடெட் கோல்வின்
பிரீமியம் ஸ்டோரி
கிளாடெட் கோல்வின்

னக்கு 4 வயது. கடைக்குச் சென்றிருந்த போது வெள்ளைக்கார சிறுவன் ஒருவன் என்னிடம் வந்து, `உன் கையைக் காட்டு, பார்க்க வேண்டும்’ என்றான். `இந்தா பார்த்துக்கொள்’ என்று உள்ளங்கையை நீட்டினேன். அவன் அதைத் தொட்டுப்பார்த்து சிரித்தான். அடுத்த நொடி, பளாரென்று அம்மா என் கன்னத்தில் அறைந்தார். `கறுப்பு என்பது, நிறமல்ல... அது ஒரு சாபம்' என்பது அன்றே எனக்குப் புரிந்துவிட்டது.

1939 செப்டம்பர் 5 அன்று அலபாமாவில், கறுப்பர்களுக்கான மருத்துவமனையில் பிறந்தவர் கிளாடெட் கோல்வின். பிறப்பதற்கு, படிப்பதற்கு, புழங்குவதற்கு, பணியாற்றுவதற்கு, காதலிப்பதற்கு, நோய்வாய்ப்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு, இறந்தால் புதைப்பதற்கு என்று எல்லாவற்றுக்கும் கறுப்பர்களுக்கு தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதே அலபாமாவில், வெள்ளையர் வேறோர் உலகில் வசித்து வந்தனர்.

வெள்ளையர் உலகையும் கறுப்பர் உலகையும் இனவாதச் சட்டம் (ஜிம் குரோ சட்டம்) தனித்தனியே பிரித்துவைத்திருந்தது. ஒருவரின் உலகுக்குள் இன்னொருவர் நுழையக் கூடாது. ஒரு வெள்ளைக் குழந்தை, கறுப்புக் குழந்தையோடு பழகுவதை, வெள்ளைப் பெற்றோரும் (அவர்கள் அசுத்தமானவர்கள், தொடாதே!) கறுப்புப் பெற்றோரும் (அவர்களைத் தொட்டால் சிறையில் போட்டுவிடுவார்கள்!) சேர்ந்தே கண்டிக்க வேண்டும். `ஓர் ஊரில் ஒரு ராஜா...’ கதை சொல்லும்போதே இதையும் சேர்த்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துவிடுவார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மிக நீண்டகாலம் இருளில் இருந்த பிறகே இந்த வெளிச்சம் கிடைத்திருக்கிறது. டிசம்பரில் வரவேண்டிய கிறிஸ்துமஸ், ஜனவரியில் வந்ததுபோல.

கோல்வினுக்கு 15 வயதானபோது, மற்றொரு பெரும்பாடத்தை அவர் கற்றுக் கொள்ளவேண்டியிருந்தது. அந்தப் பாடம் ஒரு பேருந்தில்தான் கற்றுக்கொடுக்கப்பட்டது.

1955 மார்ச் 2... பெரிய மூக்குக்கண்ணாடி அணிந்த கோல்வின், தன் தோழிகளுடன் மாலை 3.30 மணிக்கு பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்ல பேருந்தில் ஏறினார். கோல்வின் அமர்ந்திருந்தது கறுப்பர்களுக்கான இருக்கையில். ஒவ்வொரு பேருந்திலும் 36 இருக்கைகள் இருக்கும். முதல் நான்கு வரிசைகளில் உள்ள 10 இருக்கைகளில் வெள்ளையர் மட்டுமே அமர வேண்டும். யாரும் இல்லை என்றாலும் காலியாகவே இருக்க வேண்டும். கறுப்பர்களுக்கு, பின் வரிசைகள். காற்று வாங்கும் முன்பக்க இருக்கைகளைப் பார்த்து பெருமூச்சுவிட்டபடி கறுப்பர்கள் நின்றுகொண்டே பயணிப்பதை அடிக்கடி பார்க்கலாம். ஆனால், கறுப்பர்கள் அமர்ந் திருக்கும்போது ஒரு வெள்ளையர் நிற்பது அநீதியாகப் பார்க்கப்பட்டது. கோல்வினை கொதிப்படையவைத்த விஷயங்களில் இதுவும் ஒன்று.

அடுத்த நிறுத்தத்தில் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி பேருந்தில் ஏறினார். இடம் இல்லை. கண்ணாடி வழியாக இதைக் கவனித்த ஓட்டுநர் சட்டென்று கோல்வினிடம் திரும்பி, `அனைவரும் எழுந்து பின்னால் போங்கள்’ என்று கத்தினார். கோல்வினின் தோழிகள் மறுமொழி பேசாமல் எழுந்து சென்றுவிட்டனர். ஆனால், கோல்வினுக்கு எழுந்திருக்க விருப்பமில்லை.

`ஏய், உனக்கு தனியே சொல்லவேண்டுமா... போ பின்னால்!’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோல்வின் தலையசைத்தார்... `என்னிடம் பயணச்சீட்டு இருக்கிறது. நான் எழுந்திருக்க மாட்டேன்!’

சத்தம் கேட்டு, சில வெள்ளைக்கார ஆண்கள் கூடினார்கள். `இது ஏன் எழுந்திருக்க மறுக்கிறது?’ என்றார் ஒருவர். `தெரியவில்லை, அடித்துத் துரத்தினால் போகிறது’ என்றார் இன்னொருவர். `இப்போது நீ எழுந்திருக்கப் போகிறாயா அல்லது காவலரை அழைக்கவா?’ - இப்படி அது, இது என்று தன்னைக் கைகாட்டி பேசியது, கோல்வினை அழுத்தியது. கண்கள் கலங்கின. ஆனாலும் அவர் அசையவில்லை.

சீருடை அணிந்த காவலர்கள் அடுத்த சில நிமிடங்களில் வண்டியில் ஏறினார்கள். `உடனடியாகக் கீழே இறங்கு!’ என்றார் ஒருவர்.

எதிர்க்குரல்: கறுப்பு என்பது நிறமல்ல!

குரலில் நடுக்கம் இருந்தாலும் கண்களிலிருந்து நீர் பெருகினாலும், சொற்கள் தெளிவாக வந்தன. `நான் எழுந்திருக்க மாட்டேன்.’

ரு காவலர் என் கையைப் பிடித்தார். மற்றொரு கையை இரண்டாவது காவலர் பிடித்தார். இருவரும் ஒன்றாக என்னைப் பிடித்து இழுத்தார்கள். நான் நிலைகுலைந்து எழுந்துகொண்டபோது, மடியில் இருந்த புத்தகங்கள் கீழே சிதறின. என்னைத் தரதரவென இழுத்து வெளியே கொண்டுவந்தார்கள். ஒருவர் எட்டி உதைத்தார்.

மிகச் சரியாக, அன்றுதான் இனப்பாகுபாடு குறித்து பள்ளியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். துணிக்கடையில் அளவு சரிபார்ப்பதற்கென்று ஓர் அறை இருக்கமல்லவா? அந்த அறையில் கறுப்பர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒரு வெள்ளைக்காரர் தான் வாங்கும் உடையை அணிந்துபார்த்து, சரியாக இருந்தால் வாங்கிச் செல்லலாம். என்னைப் போன்றோருக்கு இந்த வாய்ப்பு இல்லை. செருப்பு வாங்க வேண்டு மானால்கூட அணிந்துபார்த்து வாங்க முடியாது. ஒரு காகிதத்தில் எங்கள் கால் அளவு வரைந்து எடுத்துச்சென்று செருப்பை அதில் பொருத்திப்பார்த்துதான் வாங்கிச் செல்வோம். இந்த அளவுக்கு, மோசமான மனிதத்தன்மையற்ற பாகுபாடு ஏன் இன்னும் நிலவ வேண்டும்?

என்னைக் காவலர் தாக்கியபோது, இந்தக் கட்டுரை வாசகம் என் நினைவுக்கு வந்தது. சத்தம் போட்டுக் கத்தினேன், `நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கும் உரிமைகள் இருக்கின்றன’ என்று. ஆனால், அவர் தாக்குவதை நிறுத்தவில்லை.

உடலைவிட மனமே வலித்தது. பலருக்கு முன்னால் ஒரு நாயைப்போல என்னை அவர்கள் கீழே இறக்கியது என்னை வாட்டியது. எதுவுமே நடக்காததுபோல என் இருக்கையில் அமர்ந்துகொண்ட அந்த வெள்ளைக்காரப் பெண்ணைப் பார்த்து ஆத்திரம் மூண்டது. கையை நீட்டு என்று சொல்லி காவலர்கள் விலங்கு பூட்டினார்கள். வலியும் அவமானமும் அழுகையும் பொத்துக்கொண்டு கிளம்பின. என் அருகில் அமர்ந்திருந்த காவலர், வழிநெடுக என்னைக் கிண்டலடித்துக்கொண்டே வந்தார். என் உடலின் பாகங்கள் ஒவ்வொன் றாகக் குறிப்பிட்டுச் சொல்லி, சிரித்துக் கொண்டிருந்தார்.

காவல் நிலையம் அழைத்துச்சென்று என் கைவிரல் ரேகையைப் பதிவுசெய்து கொண்டார்கள். சிறார் குற்றவாளிகளுக்கான இல்லத்துக்கு அழைத்துச்செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பெரியோர்களுக்கான சிறைச்சாலைக்குக் கொண்டுபோனார்கள். உள்ளே தள்ளி கதவைப் பூட்டினார்கள். நான் தரையில் அமர்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தேன். வாய் விட்டுக் கதறியபடி பிரார்த்தனை செய்தேன்.

என்னைக் கைதுசெய்ததைப் பார்த்த தோழிகள், வீட்டுக்கு ஓடிச்சென்று அம்மாவுக்குத் தகவல் அளித்திருந்தார்கள். பாதிரியாரை அழைத்துக்கொண்டு அம்மா சிறைச்சாலைக்கு வந்தார். கையெழுத்து போட்டு, பணம் கட்டி என்னை வீட்டுக்கு அழைத்துச்சென்றார்கள். காரிலிருந்து இறங்கும்போது, என் முகம் வீங்கி இருந்தது. ஆனால், என்னைக் காண திரண்டிருந்த வீதி மக்களைக் கண்டதும் உயிர் வந்ததுபோலிருந்தது. பாதிரியார் ஜான்சன் விடைபெறுவதற்கு முன்பு என்னை நெருங்கிவந்து சொன்னார், `உன்னைக் காண பெருமையாக இருக்கிறது, குழந்தை. நாங்கள் யாரும் செய்யாததை நீ செய்திருக்கிறாய். மான்ட்கோமெரிக்கு புரட்சியை அறிமுகம் செய்துவைத்திருக்கிறாய் நீ!’

து நடந்து ஒன்பது மாதங்கள் கழித்து ரோஸா பார்க்ஸ் தனது பேருந்து இருக்கையை ஒரு வெள்ளையருக்கு விட்டுக்கொடுக்க மறுத்து இனப்பாகுபாடுக்கு எதிரான பேரலையை நாடு முழுவதும் உண்டாக்கினார். மான்ட்கோமெரி போராட்டத்தின் அடையாளமாகவும் அவர் மாறினார். ரோஸா, நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு பெயர். ஆனால், கோல்வின்... அவரை ஏன் நாம் தெரிந்துவைத்துக்கொள்ளவில்லை?

கோல்வின் அளிக்கும் பதில் இது... `விடுவிக்கப்பட்ட சிறிது காலத்தில் நான் மான்ட்கோமெரியிலிருந்து நியூயார்க்குக்கு குடிபெயர்ந்துவிட்டேன். எனக்கு நேர்ந்ததை நான் யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. எங்கள் போராட்டம் முற்றிலும் புதிய திசையில் சென்றுகொண்டிருந்தது. கறுப்பின மக்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும், கொடூரமான பாகுபாடுகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்னும் முழக்கங்களைக் கடந்து, கறுப்பின மக்கள் தங்கள் அதிகாரத்தையும் பலத்தையும் வெளிப்படுத்த வேண்டும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்னும் முழக்கங்களை உயர்த்த ஆரம்பித்தார்கள். மால்கம் எக்ஸ் போன்றோரை மையப்படுத்தி எங்கள் மக்கள் போராட ஆரம்பித்திருந்தனர்.’

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டிருந்த கலப்பினத்தவர் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கத்தில் (என்.ஏ.ஏ.சி.பி), இளம் உறுப்பினராக இணைந்திருந்தார் கோல்வின். அதன் செயலாளர், ரோஸா பார்க்ஸ். மான்ட்கோமெரி பேருந்து போராட்டம் என்பது, இயக்கத்துக்கு மட்டுமல்ல... அந்தப் பகுதி மக்களுக்கும் முக்கியமான ஒரு திருப்புமுனை. இந்த நிகழ்ச்சியை முன்வைத்து நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஆதரவு திரட்டுவது சாத்தியம். அதற்கு ஒரு முகம் தேவை. மான்ட்கோமெரியின் அடையாளமாக வலிமைமிக்க ஒரு பெண்ணை முன்னிறுத்துவது நிச்சயம் பலனளிக்கும். ஆனால், அந்த முகம் யாருடையதாக இருக்க வேண்டும்? கோல்வின் ஒரு பள்ளிச் சிறுமி. இயக்கத்தின் இளம் உறுப்பினர். எனவே, அனுபவமும் ஆளுமையும் மிக்க ரோஸா இயக்கத்தின் முகமாகவும் போராட்டத்தின் அடையாளமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

`இன்னொரு காரணமும் இருந்தது’ என்கிறார் கோல்வின். `நான் அப்போது கர்ப்பமாக இருந்தேன். திருமணமாகாத ஒரு சிறுமியாகவும் இருந்தேன். மான்ட்கோமெரியில் புரட்சிக் கனலை உண்டாக்கிய ஒரு பெண் என்று என்னை முன்னிறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இருக்கையைவிட்டு எழுந்திருக்க மறுத்த என் துணிச்சலை விட்டு விடுவார்கள். என் உரிமைக்குரலையும் கைதையும் விட்டுவிடுவார்கள். என்னுடைய நடத்தையே அன்று விவாதப்பொருளாக மாறியிருக்கும். என் போராட்டத்தை விட்டு விட்டு என் தனிப்பட்ட வாழ்வை ஆராய ஆரம்பித்திருப்பார்கள். ரோஸா அனைவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒருமுகமாக இருந்தார்.’

20 டிசம்பர் 1956 அன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், பேருந்தில் நிலவிய நிறப் பாகுபாட்டை சட்டப்படி முடிவுக்குக் கொண்டுவந்தது. நான்கு பேர் தொடுத்த ஒரு வழக்கின் முடிவில் இந்தத் தீர்ப்பு வெளிவந்தது. அந்த நால்வரில் ஒருவர் கோல்வின். இயக்கத்தினர், கோல்வினின் கரங்களைப் பிடித்து வாழ்த்தினார்கள். `உன் உதவி முக்கியமானது கோல்வின், நன்றி.’

மான்ஹாட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உதவி செவிலியராக 35 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, ஓய்வுபெற்றார் கோல்வின். அமெரிக்க சிவில் உரிமைப் போராட்டத்தின் வரலாற்றை இன்று எழுதுகிறவர்கள், ரோஸா பார்க்ஸ், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் ஆகியோரோடு முடித்துக்கொள்ளாமல், கோல்வினையும் இணைத்துக்கொள்கிறார்கள். அவரை ஒரு முன்னோடியாகவும் அங்கீகரித் திருக்கிறார்கள். அவரைப் பற்றிய புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன.

`நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறீர் களா?’ என்றுதான் இன்றும் கேட்கிறார்கள். இல்லை என்பது பதில். ஆனால், கொஞ்சம் வருத்தமாக இருப்பது உண்மை. மிக நீண்ட காலம் இருளில் இருந்த பிறகே இந்த வெளிச்சம் கிடைத்திருக்கிறது. டிசம்பரில் வரவேண்டிய கிறிஸ்துமஸ், ஜனவரியில் வந்ததுபோல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism