Published:Updated:

புரட்சியின் குரல்

 மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்
பிரீமியம் ஸ்டோரி
மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்

எதிர்க்குரல்

புரட்சியின் குரல்

எதிர்க்குரல்

Published:Updated:
 மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்
பிரீமியம் ஸ்டோரி
மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்

வரை அப்படி அழைப்பதோ கொண்டாடுவதோ, அப்படி யொன்றும் கொடுந்தவறு அல்ல. என்றாலும், மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்டை ஒரு `பெண்ணியவாதி'யாக உயர்த்திப் பிடிக்கும்போது, அவருடைய மற்ற பரிமாணங்கள் கண்டுகொள்ளப்படாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆம், பெண்களுக்காகவும் அவர்களுடைய உரிமைகளுக்காகவும் ஒலித்த அழுத்தமான குரல் அவருடையது. பெண்ணியத்தின் வரலாற்றை இன்று எவர் எழுதினாலும் மேரியின் பெயரை அவர் தவிர்க்கவியலாது என்பதும் உண்மை. ஆனால், மேரி இறந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கழிந்த பிறகே, பெண்ணியம் என்னும் கருத்தாக்கம் உருப்பெற்றது என்பதை யும் கவனிக்க வேண்டும்.

மேரி, அடிப்படையில் ஓர் அரசியல் சிந்தனையாளர். மேலோட்டமாக சில சீர்திருத்தங்களைக் கோரும் அரசியல் அல்ல அவருடையது. பெண்களுக்கு சில சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதல்ல அவர் நோக்கம். `பெண்களை மதியுங்கள், அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று ஆண்களிடம் மன்றாடுவதற்காக அவர் எழுதவில்லை. `ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள்' என்னும் சமூகக் கட்டமைப்பையே மேரி மாற்றியமைக்க விரும்பினார். அதை அப்படியே தலைகீழாக மாற்றி, பெண்ணை உயர்வான நிலைக்குக் கொண்டுசென்று நிறுத்தவில்லை அவர். இருவரையும் ஒரே தளத்தில் அருகருகில் நிற்கவைக்க அவர் விரும்பினார். இதுவே இயற்கையானது என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேரியின் சமூகமோ, `ஆணும் பெண்ணும் சமமல்ல' என்பதை இயற்கையைக்கொண்டும் அறிவியலைக்கொண்டும் நிரூபிக்கும் பணிகளில் மும்முரமாக இருந்தது. ஓர் உதாரணம்... `ஒரு குழந்தையின் தலை அதன் ஒட்டுமொத்த உடலோடு ஒப்பிடும்போது அளவில் பெரியது. அதேபோல ஒரு பெண்ணின் தலை, ஆணின் தலையைவிட பெரியது. இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? பெண்கள் குழந்தைத்தனமானவர்கள், குறைவான அறிவுகொண்டவர்கள். அவர்களால் ஆண்களைப்போல சிந்திக்கவோ, புத்திசாலித்தனமாகச் செயல்படவோ முடியாது. இது, அடிப்படை அறிவியல் உண்மை; இயற்கையின் விதியும்கூட.'

புரட்சியின் குரல்

மேரி எரிச்சலடைந்தார். `குழந்தைகள் ஒன்றுபோலவே பிறக்கிறார்கள். ஆண் பெண் என்று பேதம் பிரித்து, ஆண் இப்படித்தான் இருப்பான், பெண் இப்படித்தான் இருப்பாள் என்று பாகுபடுத்துவது நாம்தான். ஏன் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து பிரச்னைகளைக் களைய வேண்டுமே தவிர, பாகுபாட்டை நியாயப்படுத்தக் கூடாது. இயற்கை, பெண்களை இழிவாகப் பார்ப்பதில்லை. ஓர் ஆணின் தலைக்குள் இருக்கும் அதே அளவிலான மூளைதான் ஒரு பெண்ணின் தலைக்குள்ளும் இருக்கிறது. ஆணின் மூளை வலுவானது, பெண்ணின் மூளை வலுவிழந்தது என்று அறிவியல் சொல்வதில்லை. இருந்தும் ஏன் பெண்களை சமூகம் இழிவாகக் கருதுகிறது? இதற்கான விடை அறிவியலிடமோ, இயற்கையிடமோ இல்லை. உங்கள் மண்டையோடு ஆராய்ச்சிகளை மூட்டை கட்டிவிட்டு, நாம் வாழும் சமூகத்தை ஆராயுங்கள்' என்றார் மேரி.

இப்படிச் சொன்னதற்காக அவருக்குக் கிடைத்த பட்டப்பெயர், `பாவாடை அணிந்த கழுதைப்புலி'. எத்தனையோ விலங்குகள் இருக்க கழுதைப்புலியை இழுப்பானேன்? அதற்கும் அவர்களிடம் ஓர் `அறிவியல்’ காரணம் இருந்தது. கழுதைப்புலி ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இரண்டின் கலவையாக இருக்குமாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடில்லை என்று வாதிடும் இந்த மேரியும் அப்படிப்பட்ட உயிரினமாகத்தானே இருந்தாக வேண்டும்?

அறிவுலகம் என்பது ஆண்களின் உலகம் என்பதை மேரி அறிவார். அந்த உலகுக்குள் அடியெடுத்துவைக்கும் ஒரு பெண்ணுக்கு வசவுகளும் கண்டனங்களும் மட்டுமே கிடைக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி, 1787-ம் ஆண்டு, மேரி எழுதிய நூல் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. பிறகு, புனைவு கலந்த ஒரு சுயசரிதையை வெளியிட்டார். தனித்துவம் மிக்க ஒரு பெண்ணின் கதையாக அது பார்க்கப்பட்டது என்றாலும் வெளிவந்ததே தெரியாமல் அடங்கிப்போனது. மேரியை உலகுக்கு அறிமுகப்படுத்திய `பெண்களின் உரிமைகள்' நூல் (A Vindication of the Rights of Woman), 1792-ம் ஆண்டு வெளிவந்தது. இதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வெளிவந்த `ஆண்களின் உரிமைகள்' நூல் மேரியை முதன்மையான ஓர் அரசியல் சிந்தனையாளராக நமக்கு அறிமுகப்படுத்தியது. புகழ்பெற்ற ஆங்கிலோ-ஐரிஷ் அரசியல்வாதியும் அரசியல் தத்துவவியலாளருமான எட்மண்டு பர்க் என்பவருக்கு எழுதப்பட்ட மறுப்பு அது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1789-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி, உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அறிவுலகமும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. முடியாட்சியைத் தூக்கியெறிந்த பிரெஞ்சுப் புரட்சியை ஆதரிக்க வேண்டுமா, எதிர்க்க வேண்டுமா... முதல் பிரிவினர் எதிர்த்தனர். அதிகாரத்தையும் அரசையும் தூக்கி எறிவது குழப்பத்தையே ஏற்படுத்தும். காலம் காலமாக நிலவிவரும் சமூக ஒழுங்கைக் குலைப்பது தவறு. புரட்சி தவறான பாதை. எட்மண்டு பர்க் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்.

இரண்டாவது பிரிவினர் புரட்சியை வரவேற்றனர். பிரான்ஸில் நீண்டகாலமாக நிலவிவந்த முடியாட்சி முறை மக்களின் வாழ்வைச் சீரழித்திருக்கிறது. சாமான்ய மக்களின் உரிமைகளை நசுக்கி, பண்பாட்டு அழிவையும் சமூக ஏற்றத்தாழ்வையும் அதிகரித்திருக்கிறது. இப்படிப்பட்ட அநீதியான ஆட்சிமுறை அகற்றப்படுவது சரியானதே என்று இவர்கள் வாதிட்டனர். மேரி அவர்களுள் ஒருவர்.

புரட்சி அலை வீசிக்கொண்டிருந்தபோது பிரான்ஸுக்குப் பயணம் செய்து, அங்கு நிலவிய கொந்தளிப்பான அரசியல் சூழலை நேரில் கண்டவர் மேரி. அவருடைய தாய் நாடான பிரிட்டன், பிரான்ஸுக்குப் பகை நாடு. இன்னொரு பக்கம், ஒரு வெளிநாட்டவராக அதிலும் எதிரி நாட்டவராக பிரான்ஸில் தங்கியிருந்தது, தனிப்பட்ட முறையில் அவருக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியது. இருந்தும், பிரெஞ்சுப் புரட்சியின் முக்கியத்துவத்தை மேரி உணர்ந்திருந்தார். புரட்சி அரங்கேறிய முறையில் உங்களுக்கு வருத்தங்கள் இருக்கலாம். ஆனால், இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பம் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. இது ஒரு புதிய தொடக்கத்தை பிரான்ஸுக்கு ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் முழக்கம் பிரான்ஸுக்கு மட்டுமே உரியது என்று நான் நினைக்கவில்லை. கொடுங்கோல் ஆட்சி உலகின் எந்த மூலையில் நிலவினாலும் அங்கு இந்த முழக்கம் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். அணை ஒன்று உடைவதுபோல மக்கள் அழுத்தங்களைக் கடந்து வெடித்துக் கிளம்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

பிரெஞ்சுப் புரட்சியைப் பலரும் எதிர்த்தனர் என்றாலும், குறிப்பாக எட்மண்டு பர்க்கை மேரி எதிர்த்ததற்கு காரணம் இருந்தது. குடிமக்கள் என்பவர்கள் எப்போதும் அடக்கமாகவும் அமைதியாகவும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டும்தான் இருக்க வேண்டும், பெண்களைப்போல. ஆண்மையுள்ள, வலுவான ஓர் அரசால் அவர்கள் ஆளப்படுவதே இயற்கையானது என்பது பர்க் முன்வைத்த வாதங்களுள் ஒன்று. மிகச்சிறந்த சிந்தனையாளராக இருந்தும் பர்க்கிடம் வெளிப்பட்ட ஆணாதிக்க உணர்வை மேரி சரியாக இனம் கண்டுகொண்டார். பெண்கள், வலுவிழந்தவர்கள். அவர்கள் ஆண்மை யுள்ளவர்களால் ஆளப்பட வேண்டும் என்னும் தர்க்கம்தான் உங்களைப் புரட்சிக்கு எதிராகக் கொண்டுசென்று நிறுத்தியுள்ளதா? அமைதியான மக்கள் வலுவான மன்னரைத் தூக்கி எறிந்ததுபோல அமைதியான பெண்கள் ஆண்களின் அதிகாரத்தை நொறுக்கித் தள்ளிவிடுவார்களோ என்று அஞ்சுகிறீர்களா? சமூக ஒழுங்கு குலைந்துவிட்டதே என்று நீங்கள் பதறுவதன் உண்மைக் காரணம் இதுதானா? அடங்கியிருப்பவர்கள் அடங்கியே இருக்க வேண்டும். அவர்களைச் சுரண்டுபவர்கள் சுரண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இதுதானே உங்கள் தத்துவமும் சமூக ஒழுங்கும்? அப்படியானால் பிரெஞ்சுப் புரட்சியை மட்டுமல்ல, உங்களை வதைக்கும் பாலினப் புரட்சியையும் நான் சேர்த்தே வரவேற்கிறேன்!

மேரியின் கூர்மையான எதிர்வினையைக் கண்டு பர்க்கின் ஆதரவாளர்கள் சினம்கொண் டார்கள் என்றாலும், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம், அந்தப் பிரசுரத்தில் மேரியின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. பர்க்கை எதிர்த்து எழுதும் துணிச்சல் ஓர் ஆணுக்குத்தான் இருக்கும் என்று அவர்

களாகவே நினைத்துக்கொண்டும் சிடுசிடுப்பை மறைத்துக்கொண்டும் அமைதியாக இருந்துவிட்டார்கள். உண்மை தெரியவந்த போது அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். என்னது, இதை எழுதியது ஒரு பெண்ணா! என்ன துணிச்சல்... என்ன திமிர்? பர்க் போன்ற செல்வாக்குமிக்கவர்களைத் தாக்கினால் தானும் பிரபலம் ஆகிவிடலாம் என நினைத்து இப்படியொரு குறுக்குவழியை அவள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இந்தக் கேடுகெட்ட பெண்ணின் நடத்தை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாதா, என்ன? 1798-ல் வெளிவந்த ஒரு பத்திரிகையில் அகர வரிசையிலான பொருளடக்கத்தில் மேரியின் பெயர் `பி' என்னும் எழுத்துக்குக் கீழே, `பிராஸ்டிட்யூட்' என்னும் தலைப்பில் அச்சிடப்பட்டிருந்தது.

மேரி தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை எழுத்து என்பது இடைவிடாமல் தொடரவேண்டிய ஒரு விவாதம். அரசியல் அதிகாரம், யதேச்சதிகாரம், சுதந்திரம், வர்க்கம், பாலியல், திருமணம், குழந்தைப் பிறப்பு, சொத்துடைமை (இது முழுமையான பட்டியலல்ல) என்று அவர் தொட்டு விவாதித்த பெரும்பாலான அம்சங்கள் கடும் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மட்டுமே சந்தித்தன. ஆனால், அவர் பின்வாங்கவில்லை. என் தரப்பை எடுத்துச் சொல்வதற்காக நான் வசைபாடப்படுகிறேன் என்றால், என் சமூகம் உடைந்துகிடக்கிறது என்ற பொருள்... என் சமூகம் திருத்தியமைக்கப் பட வேண்டும் என்று பொருள்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் நிலவும் ஏற்றத்தாழ்வையும், அதிகாரவர்க்கத் துக்கும் அடித்தட்டு வர்க்கத்துக்கும் இடையில் நிலவும் ஏற்றத்தாழ்வையும் ஒரே புள்ளியில் இணைத்துப் பார்க்க முடிந்தது மேரியால். ஓர் அரசியல் சிந்தனையாளராகவும் திகழ்ந்ததால் மட்டுமே இது சாத்தியமானது. `உனக்கு எதற்கு அரசியல்?' என்னும் கேள்விக்கு, மேரி அளித்த விடை முக்கியமானது. புரட்சிகரமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த புரட்சிகரமான ஒரு சிந்தனையாளரின் குரல் அதில் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

`எந்த ஒரு பெண்ணுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்பதில்லை; அரசியல் வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. அவள் தனக்காக நடத்தும் போராட்டம் என்பது அடிப்படையில் ஓர் அரசியல் போராட்டமே!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism