Published:Updated:

எதிர்க்குரல்: சாத்தான்கள்... சூனியக்காரிகள்... ஆண்கள்! - மரியா ஹால்

சாத்தான்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்

`உயிருள்ள வரை நேசிப்பேன், வசதியாக வைத்துக்கொள்வேன், எப்போதும் ஆறுதலாக இருப்பேன்’

எதிர்க்குரல்: சாத்தான்கள்... சூனியக்காரிகள்... ஆண்கள்! - மரியா ஹால்

`உயிருள்ள வரை நேசிப்பேன், வசதியாக வைத்துக்கொள்வேன், எப்போதும் ஆறுதலாக இருப்பேன்’

Published:Updated:
சாத்தான்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்

16-ம் நூற்றாண்டு முடிவடைவதற்கு சில ஆண்டுகள் மிஞ்சியிருந்த நிலையில், ஜெர்மனியில் உள்ள நார்ட்லிங்கன் என்னும் இடத்தில், தன் கணவருடன் இணைந்து ஓர் உணவு விடுதியை நடத்திவந்த மரியா ஹால், நகர கவுன்சில் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். தனி அறையில் அடைக்கப்பட்டதும் மரியாவின் உடைகள் களையப்பட்டு, உடலில் உள்ள ரோமங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. ஓர் அங்குலம்விடாமல் உடல் பரிசோதிக்கப்பட்டது.

பிறகு விசாரணை ஆரம்பமானது. `சாத்தானை நீ நேரில் கண்டிருக்கிறாயா... உன்னிடம் சாத்தான் பேசியதா... என்ன பேசியது... ஆசை வார்த்தைகள் சொல்லி உன்னை அது மயக்கியதா... உன்னைக் காதலிப்பதாகச் சொன்னதா... சாத்தானின் வலையில் நீ விழுந்தது உண்மையா... சாத்தானை நீ முத்தமிட்டாயா... உன் உடலை சாத்தானுக்குக் கொடுத்தாயா... ஆம் எனில், எங்கே வைத்து... பதிலுக்கு சாத்தானிடமிருந்து பணமோ பொருளோ பெற்றுக்கொண்டாயா... எத்தனை முறை சாத்தானோடு உறவுகொண்டாய்... எங்கெல்லாம் இது நடந்தது... சாத்தானோடு சேர்ந்து விருந்து உண்டிருக்கிறாயா... உனக்கு பறக்கத் தெரியுமா... இதுவரை எத்தனை குழந்தைகளை உண்டிருக்கிறாய்...’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`இல்லை... இல்லை’ - ஒவ்வொரு கேள்விக்கும் மிரட்சியோடு தலையசைத்தார் மரியா. `நீங்கள் நினைப்பதைப்போல நான் சூனியக்காரி அல்ல.’

எந்தச் சூனியக்காரிதான் முதல் விசாரணையிலேயே உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறாள்... அவர்களுக்கு இதில் நல்ல அனுபவம் இருந்தது. 1,500 தொடங்கி 1,660 வரை ஐரோப்பாவில் வெவ்வேறு பகுதி களில் நடைபெற்ற விசாரணைகளின் முடிவில், மொத்தம் 80,000 பேர் சூனியக்காரர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பாதிப்பேர் கொல்லப்பட்டார்கள். ஆண்கள், குழந்தைகள் ஆகியோரும் அடக்கம் என்றாலும், கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் பெண்கள்தாம்.

உடல் பரிசோதனை தொடங்கும்போதே, அவமானம் தாளாமல் உண்மையை ஒப்புக் கொண்டுவிடுவார்கள் சில பெண்கள். சிலரோ, சித்ரவதைக் கருவிகளைக் காட்சிப்படுத்தும் வரை வாயைத் திறக்க மாட்டார்கள். பெரும்பாலானோர், பலகட்ட வதைகளுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து பேச ஆரம்பிப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பெண்ணை உடைக்க, என்னென்ன வழிமுறைகள் கையாளப்பட்டன... ஆடை அகற்றப்படும். பிறகு தூணில் கட்டிப்போட்டு சாட்டையால் மாற்றி மாற்றி விளாசுவார்கள், தோல் பிய்ந்துவரும் வரை அல்லது மயங்கிச் சரியும் வரை. கைகளைக் கட்டி அந்தரத்தில் மாட்டிவிடுவார்கள். கால்களில் கனமான கற்கள் கட்டப்படும்... நாள்கணக்கில் தொங்கிக்கொண்டிருக்க வேண்டும். இயந்திரக் காலணி போன்ற ஒன்றை கால்களில் பொருத்தி எலும்பு உடையும் வரை திருகுவார்கள் அல்லது அமரவைத்துக் கட்டிப்போட்டுவிட்டு, திருகாணிகளைக்கொண்டு உடல்முழுக்கக் காயப்படுத்துவார்கள். கழுத்தில் கயிறு கட்டி மூச்சு திணறத் திணற இழுப்பார்கள். `ஆம், நான் சூனியக்காரிதான்’ என்று அலறும் வரை ஒன்று மாற்றி இன்னொன்று தொடரும்.

ஒப்புதல் மட்டும் போதாது. நீங்கள் அளிக்கும் சாட்சியம் விரிவானதாக இருக்க வேண்டும். விசாரணை அதிகாரிகளைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு உங்கள் பதில்கள் அமைந்திருக்க வேண்டும். ஜெர்மன் மொழியில் இப்படிப் பதிவாகியுள்ள பெண்களின் வாக்குமூலங்களை நெருங்கிச் சென்று ஆராய்ந்துள்ளார் லிண்டல் ரோப்பர் என்னும் விருதுபெற்ற ஆய்வாளர். அவருடைய ʻWitch Craze’ என்னும் நூலில் பதிவாகியுள்ள விரிவான வாக்குமூலங்கள் அதிர்ச்சியூட்டக்கூடியவை.

து ஒரு பெண்ணின் வாக்குமூலத்திலிருந்து ஒரு சிறிய பகுதி மட்டும்... ``நான் சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, என் முதுகை யாரோ தொட்டதுபோலிருந்தது. திரும்பினால் சாத்தான். `என்னோடு வந்துவிடு. நான் உனக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன்’ என்றான். அவனுக்கு ஆடுகளின் கால்கள் இருந்தன. வால் இருந்தது. கறுப்பு ஆடையும் இறகுகள்கொண்ட நீண்ட தொப்பியும் அணிந்திருந்தான். அவன் முகம் எனக்குத் தெரிந்ததாக இருந்தது. சில நேரம் அது பாதிரியின் முகம்போல இருந்தது. `இந்தா, இதை வைத்துக்கொள்’ என்று பணம் கொடுத்தான். அதைச் சமையலறையில் உள்ள ஒரு நீல நிறப்பெட்டியில் பாதுகாத்தேன்.

எதிர்க்குரல்: சாத்தான்கள்... சூனியக்காரிகள்...
ஆண்கள்! -  மரியா ஹால்

சாத்தான் என்னை விருந்துக்கு அழைத்துச் சென்றான். நான் என் வீட்டிலிருந்து பறந்து போனேன். அடர்ந்த காட்டுக்குள் ஓரிடம். அங்கே மற்ற சூனியக்காரிகளைக் கண்டேன். இரவு உணவு கொதித்துக்கொண்டிருந்தபோது அனைவரும் சேர்ந்து பாடினோம். இறைச்சி யோடு சேர்த்து குழந்தைகளையும் நாங்கள் உண்டோம். `உன்னைவிட்டுப் பிரிய மாட்டேன். உன்னை உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன்’ என்றான் சாத்தான். அனைவரும் சேர்ந்து மனிதர் களையும் தேவாலயத்தையும் பழித்தோம்.

உண்மையிலேயே இவள் சூனியக்காரி இல்லையோ... நம் வழிமுறைகளில் எங்கேனும் தவறு நிகழ்ந்துவிட்டதோ... பாவம் செய்யாத ஒரு பெண்ணையா நாம் வதைத்திருக்கிறோம்...

சாத்தானோடு உடன்படிக்கை செய்து கொண்டேன். அதன்படி, கேட்கும் போதெல்லாம் என் உடலை அவனுக்குக் கொடுத்தேன். ஆனால், சாத்தான் என்னைக் கைவிட்டுவிட்டான். அவன் கொடுத்த நாணயங்கள் காய்ந்த இலைகளாக மாறின. அவன் ஏற்படுத்திய காயங்களை என் உடலில் நீங்கள் காணலாம். அவனுடன் இருந்த தருணங்கள் மகிழ்ச்சிகரமாக இல்லை. அவன் தீண்டும்போது குளிர்ச்சியாக இருந்தது, இதமாக இல்லை. நான் மூன்று குழந்தைகளைக் கொன்றேன்’’ என்றார் பார்பரா.

சில தினங்கள் கழித்து, அவ்வாறு தான் செய்யவில்லை என்றார். கயிற்றில் சில தினங்கள் தொங்கவிட்ட பிறகு, ``குழந்தைகளைக் கொன்றதோடு சாத்தானுடன் சேர்ந்து உண்ணவும் செய்தேன்’’ என்று ஒப்புக்கொண்டார். ``இது எங்கே நடந்தது, எப்படி என்பது நினைவில்லை’’ என்றார். ஆனால், 15 முறை சித்ரவதை செய்த பிறகு, சாத்தானுடனான சந்திப்பையும் அதன் தொடர்ச்சியாகத் தான் செய்த எண்ணற்ற பாவங்களையும் துல்லியமாக அவரால் நினைவுகூர முடிந்தது. ``என்னைக் கொன்றுவிடுங்கள். நான் சூனியக்காரிதான்’’ என்று அவர் அரற்றவும் ஆரம்பித்தார்.

பல தினங்கள் தொடர்ச்சியாக சாட்டையால் அடித்து, பலகட்ட விசாரணைகளை நடத்திய பிறகு, ஒரு நாள் சிறையில் மக்தலேனாவின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. உண்மையை ஒப்புக்கொள்வதற்கு முன்பே சாத்தான் சிறைக்குள் நுழைந்து, அவள் வாயை மூடிவிட்டதாக அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். சாத்தான் சிறைக்குள் அவ்வப்போது நுழைந்து தன் காதலிகளைச் சந்தித்ததாகவும் அவர்களோடு உறவுகொண்டதாகவும் அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

`முகத்தைக் காணவில்லை. ஆனால், நிழல் உருவத்தைக் கண்டோம்’ என்றார்கள். `ஆம், சாத்தானோடு நேற்று காதலில் ஈடுபட்டேன்’ என்று பெண்களும் ஒப்புக்கொண்டனர்.

லிண்டல் ரோப்பர் விரிவாகவும் நுணுக்க மாகவும் அலசும்போது இந்த வாக்குமூலங்கள், புதிய அர்த்தங்களை அளிக்கின்றன. இல்லாத சாத்தானை இத்தனை பெண்கள் எப்படிக் கண்டார்கள்... ஆடை, நிறம் முதற்கொண்டு எப்படி விவரிக்க முடிந்தது... தனக்குத் தெரிந்த விலங்குகளையும் மனிதர்களையும் இணைத்து ஓர் உருவத்தை அவர்கள் உருவாக்கினார்கள். சாத்தான் இப்படித்தான் இருக்கும் என்று சிறு வயது முதலே சொல்லப்பட்ட கதைகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். இதுபோக, தேவாலயத்தில் காணப்படும் சுவர் ஓவியங்களிலும் சாத்தான் இருந்தது.

சாத்தானுடனான உடன்படிக்கை என்பது, அவர்களுடைய திருமண உடன்படிக்கைதான். வன்முறையோடு தன் உடலைத் தீண்டும் கணவனையும், காதலிப்பதாகச் சொல்லி கைவிட்ட ஆடவனையும் பெண்கள் சாத்தானாகக் கண்டிருக்கிறார்கள். `என்னைத் தீண்டிய சாத்தான், பாதிரியின் முகத்தைக்கொண்டிருந்தது’ என்று ஒரு பெண் சொல்லும்போது, அநீதியான முறையில் பெண்களை சூனியக்காரிகளாக மாற்றிய தேவாலய அமைப்பையே அவள் வசை பாடியிருக்கிறாள். சிறைக்குள் அடைக்கப்பட்ட பிறகும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களை, சாத்தான்கள் என்றல்லவா அழைக்க முடியும்...

`உயிருள்ள வரை நேசிப்பேன், வசதியாக வைத்துக்கொள்வேன், எப்போதும் ஆறுதலாக இருப்பேன்’ போன்ற வாக்குறுதிகள் `காய்ந்த இலை'களாக மாறின. குழந்தைகள் முடிவின்றி பிறந்துகொண்டே இருந்ததும், தொடர்ந்து படுக்கையில் விழுந்துகிடந்ததும், பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை உடனுக்குடன் இறந்துபோனதும் தீராத மன உளைச்சலையும் குற்ற உணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்தியிருந்தன. இவர்களில் சிலர், `ஆம், குழந்தைகளைச் சாப்பிட்டேன் ’ என்று வாக்குமூலம் அளித்தனர்.

பெண்கள் மீதான வெறுப்பே சூனியக் காரிகளை உருவாக்கியது. விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளில், பாதிரிகளும் தேவாலயங்களில் பணியாற்றியவர்களும் ஆழ்ந்த இறை நம்பிக்கைகொண்டவர்களும் அடங்குவர். இளம்பெண்கள், ஏவாளையும் அவருடைய ஆதி பாவத்தையுமே அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண்கள், ஆண்களை மயக்கிக் காதல் வலையில் சிக்கவைப்பவர்கள்; இறைப்பணியைச் செய்யவிடாமல் தடுப்பவர்கள்; பாலியல் இச்சைகளைத் தூண்டிவிடுபவர்கள்; பாவச் செயலில் தள்ளிவிடுபவர்கள். பெண்களின் அழகு, அவர்களை அலைகழித்தது. காதல் உணர்வை வெல்ல முடியாமல்போனபோது அவர்களுடைய தன்மானம் காயமுற்றது. `சூனியக்காரி'களை மூர்க்கத்துடன் வேட்டை யாட ஆரம்பித்தனர். `என் உடலையும் உள்ளத்தையும் வதைக்கும் உன்னை, நானும் வதைப்பேன். எனக்குள் நெருப்பை மூட்டிவிட்ட உன்னை, தீயிலிட்டு எரிப்பேன்!’

வ்வளவு முயன்றும் மரியா ஹாலை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. 10, 20, 30 எனத் தொடங்கி 62 வடிவங்களில் மரியா சித்ரவதைகளை விட்டுவிட்டு அனுபவித்தார். அவளை உடைக்க மேற்கொண்டு கருவிகளோ, வழிமுறைகளோ இல்லாமல்போனபோது, அவர்கள் திகைத்துப்போனார்கள். `நான் சூனியக்காரி அல்ல’ என்று இறுதிவரை திரும்பத் திரும்ப வலியுறுத்திய மரியாவைக் கண்டு அதிகாரிகள் சற்று பயந்துபோனது உண்மை.

`உண்மையிலேயே இவள் சூனியக்காரி இல்லையோ... நம் வழிமுறைகளில் எங்கேனும் தவறு நிகழ்ந்துவிட்டதோ... பாவம் செய்யாத ஒரு பெண்ணையா நாம் வதைத்திருக்கிறோம்... எனில், இதுவரை நம்மால் எரிக்கப்பட்டவர்களில் மரியாபோல பாவமிழைக்காத ஆத்மாக்களும் இருந்திருக்குமோ!’

சூனியக்காரிகளை வேட்டையாடும் வழக்கம் தேய்ந்து தேய்ந்து, ஒருகட்டத்தில் முற்றிலுமாக மறைந்துபோனதற்கு மரியாவும் ஒரு காரணம். அதேவேளை, மரியா மட்டுமல்ல... வாக்குமூலம் அளித்த ஒவ்வொரு பெண்ணின் குரலும் எதிர்க்குரல்தான் என்பதை லிண்டல் ரோப்பரின் நூலைப் படிக்கும்போது உணர முடிகிறது. அவர்களிடமிருந்து வந்து விழுந்த ஒவ்வொரு சொல்லிலும் வலியும் வேதனையும் ரத்தமும் கண்ணீரும் ஒட்டியிருந்தன. அனைத்தையும் ஒன்றுதிரட்டி, நிஜத்தையும் கற்பனையையும் கலந்து அவர்கள் சாத்தானை உருவாக்கினார்கள். அந்தச் சாத்தான் ஓர் ஆணாக இருந்ததில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism