Published:Updated:

முதல் பெண்கள்: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.எஸ்.சுப்புலட்சுமி

பாரத ரத்னா விருது வென்ற முதல் பெண் இசைக்கலைஞர்; ஐ.நா.பொதுக்குழுக் கூட்டத்தில் பாடிய முதல் இந்தியக் கலைஞர்; சங்கீத கலாநிதி விருது வென்ற முதல் பெண் கலைஞர்

1947-ம் ஆண்டு இந்தி மொழியில் வெளிவந்த `மீரா' படத்தின் அறிமுகக் காட்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கைகளைப் பிடித்துக்கொண்டு வந்து நிறுத்தினார் சரோஜினி நாயுடு. ``வடஇந்தியர்களான உங்களுக்கு தென்னிந்தியாவின் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அறிமுகம் செய்கிறேன். பெரும் வெற்றிபெற்ற `மீரா' என்ற தமிழ்ப்படத்தின் இந்தி மொழியாக்கம் இந்தப் படம். மீரா வடஇந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகுக்கும் சொந்தமானவர். அவர் குரலின் அழகு, ஆளுமையின் மாயம், கருணை பொங்கும் உள்ளம்... இவை அவரை அனைவருக்கு மானவராக மாற்றியிருக்கின்றன. இந்தியா மிகவும் பெருமைப்பட வேண்டிய, கொண்டாடவேண்டிய ஆளுமை இவர்'' என்று சொன்னார்.

ஆம்... வாழ்க்கை முழுக்க `மீரா' என்ற அடையாளத்துடன்தான் வாழ்ந்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1916 செப்டம்பர் 16 அன்று மதுரையில் சண்முகவடிவின் மகளாகப் பிறந்தார் சுப்பு லட்சுமி. மதுரை சென்ட்ரல் சினிமாவை ஒட்டிய சந்து ஒன்றுதான், மேல அனுமந்தராயன் கோயில் தெரு. அதிலுள்ள வீட்டில் தொடங்கியது இசையரசியின் அரசாட்சி. இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகவடிவு, மகளின் பாடும் திறமையைக்கண்டு அவருக்கு இசைப் பயிற்சியளிக்க ஆரம்பித்தார். எம்.எஸ்ஸுக்கு பத்து வயதானது.

முதல் பெண்கள்: மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

``தளும்பத் தளும்ப எண்ணெய் தேய்த்து ஒருபக்க வகிடெடுத்து தலைசீவி இருப்பேன். முடியை அடக்க வாழைநார் கொண்டு கட்டிவிடுவார் அம்மா. நெற்றி நிறைய பொட்டு, பெரிய புரூச் குத்தி அணிந்த தாவணி, பஃப் கை சட்டை, காதில் நீண்ட தொங்கட்டான், கழுத்தில் மணிகள், மூக்குத்தி, கைகளில் கவரிங் வளையல். இப்படித்தான் மண்ணை அளைந்து சட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பேன். ஒருநாள் அம்மா அருகிலுள்ள சேதுபதி பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்குப் பாடச் சென்றார். திடீரென என்னை விளையாட்டிலிருந்து இழுத்துக்கொண்டு ஒருவர் பள்ளிக்குச் சென்றார். என்னை இரண்டு பாடல்கள் பாடும்படி அம்மா சொன்னார். நானும் விட்டால் போதும் என்று பாடிவிட்டு, ஓடிவந்து மண்பானை செய்யத் தொடங்கிவிட்டேன்'' என்று தன் பேத்தி கௌரி ராம்நாராயணனிடம் கூறியுள்ளார் எம்.எஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசாத்திய திறமைகொண்ட எம்.எஸ்ஸுக்கு, அவரின் 11-வது வயதில் திருச்சி மலைக்கோட்டை நூறு கால் மண்டபத்தில் தனியே பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த முதல் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தவர் காங்கிரஸ் தலைவரும் தென்னிந்திய ரயில்வே கோட்ட டிராஃபிக் சூப்பரின்டென் டெண்ட்டுமான எஃப்.ஜி.நடேச ஐயர். தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை மிருதங்கம், மைசூர் செளடையா வயலின் துணையுடன் எம்.எஸ் பாடியது அவர் வாழ்க்கையின் திசையை மாற்றியமைத்தது.

மதுரை ஸ்ரீனிவாச ஐயரிடம் கர்னாடக இசையும், பண்டிட் நாராயண் ராவ் வியாஸிடம் இந்துஸ்தானி இசையும் கற்றுத் தேர்ந்தார். கும்பகோணம், தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை எனக் கச்சேரிகள் செய்துவந்தனர் தாயும் மகளும். பத்து வயதிலேயே `மரகத வடிவும்' என்ற அவரது பாடல் ட்வின் ரெக்கார்டிங் கம்பெனி மூலம் கிராமபோன் டிஸ்க்கில் வெளியானது.

வறுமை காரணமாக சண்முகவடிவு சினிமாவில் நடிக்க முயன்றார். 1934-ம் ஆண்டு `சங்கீத லவ குசா' என்ற திரைப்படத்தில் சிறு வேடமேற்று நடித்தார். சினிமா பற்றிய சண்முகவடிவின் கோபத்துக்கும் கசப்புணர்வுக் கும் காரணமான அவரது இந்த அனுபவம், பின்னாளில் தாய்க்கும் மகளுக்குமான பிணக்குக்கும் காரணமானது.

தடைகள் பல வந்தாலும், இசை மட்டுமே தன் இலக்கு என்பதில் கவனமாக இருந்தார் எம்.எஸ்.

விருப்பமில்லாத திருமணத்துக்கு மகளைக் கட்டாயப்படுத்தினார் சண்முகவடிவு. ``இந்த தேவையற்ற அழுத்தம் காரணமாக இயல்பாகவே மென்மையான குணம் நிறைந்த எம்.எஸ் யாரும் செய்யத் துணியாததைச் செய்தார். இரவில் வீட்டைவிட்டு வெளியேறி, ரயிலேறி சென்னைக்கு வந்து இறங்கினார்'' என்று `எம்.எஸ்.சுப்புலட்சுமி - தி டெஃபினிட்டிவ் பயாகிரஃபி' நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ்.

1936 ஜூன் 30... சென்னை வந்த எம்.எஸ்ஸுக்குத் தற்காலிக அடைக்கலமும் தங்க இடமும் தந்தவர் பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் டி.சதாசிவம். அவர் ஏற்கெனவே சுப்புலட்சுமி யின் பாடும் திறனை 1932-ம் ஆண்டு கும்பகோணம் மகாமக நிகழ்ச்சியில் எட்ட நின்று பார்த்தவர். அவரின் பின்புலத்தை அறிந்தவர். ஆனால், திருமணமானவர். அவர் மனைவி அபிதகுசலாம்பாள் பேறு காலத்துக்குத் தாய்வீட்டுக்குச் சென்ற இடை வெளியில்தான் சுப்புலட்சுமி அவரிடம் பாதுகாப்பு கேட்டு வந்தார். இயல்பிலேயே இரக்க குணம்கொண்ட சதாசிவம் பின்னால் வரவிருக்கும் பிரச்னைகளின் அழுத்தத்தை அறியாமல்தான் சுப்புலட்சுமியைத் தன்னுடன் தங்கவைத்தார். அவருக்கு சினிமா அல்லது பாட்டுக் கச்சேரியில் ஏதோ ஒரு வாய்ப்பை வாங்கித் தந்துவிட்டால் தான் விலகிவிடலாம் என்றே எண்ணினார்.

விகடனில் வெளிவந்த `சேவா சதனம்' என்ற நாவலை படமாக்க உரிமை கோரியிருந்தார் பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம். 4,000 ரூபாய்க்கு கதை உரிமையை வழங்க விகடனில் இதற்கான பொறுப்பிலிருந்த சதாசிவம் ஒப்புக்கொண்டார். அதில் கதாநாயகி வேடத்தை எம்.எஸ்ஸுக்குத் தரும்படி சிபாரிசு செய்தார். சுப்புலட்சுமியின் குரல் வளத்தில் நம்பிக்கை இருப்பினும், அவரின் நடிப்பில் பெரிதாக நம்பிக்கையில்லாமல் இருந்தார் சுப்பிரமணியம். சதாசிவமே படத் தயாரிப்புக்கென பெரும் பணம் தர ஒப்புக்கொண்டதும் ஒப்பந்தம் தயாரானது.

1938-ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்டது `சேவா சதனம்'. திருமணம் என்ற பெயரில் இளம்பெண்களைப் பணக்காரக் கிழவர்களுக்குக் கட்டிவைக்கும் அன்றைய சமூக அவலத்தைக் கேள்விகேட்டது அந்தப் படம்.

வீட்டைவிட்டுச் சென்ற மகளை மீட்க தன்னாலான முயற்சி அத்தனையையும் செய்தார் சண்முகவடிவு. மகன் சக்திவேலை அனுப்பி, மகளிடம் பேசி மதுரைக்குத் திரும்ப வர அழைப்பு விடுத்தார். மிரட்டியும் கெஞ்சியும் அழுதும் எந்தப் பலனுமில்லை. அந்த மோசமான வாழ்க்கைக்குத் திரும்ப எம்.எஸ் துளியும் விரும்பவில்லை. தாய் இறந்தபோதுகூட அவரின் முகத்தைப் பார்க்க எம்.எஸ் விரும்பவில்லை. இதை பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் தன் `செல்வி' என்ற சிறுகதையில் (1982) பதிவு செய்திருப்பார். புனைவாக இருந்தாலும் அந்தக் கதை எம்.எஸ்ஸின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டதே. அந்தக் கதையின் கைப்பிரதியில் எம்.எஸ்ஸின் படத்தை கோட்டோவியமாக ஆர்.கே.நாராயண் வரைந்திருந்தது குறித்து எழுதியிருக்கிறார் அவரின் உறவினர் கௌரி ராம்நாராயண்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி

`சேவா சதனம்' மிகப்பெரிய ஹிட் படமாக, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சுப்புலட்சுமிக்குக் குவிந்தன. அவர் எதில் நடிக்கலாம், எது தேவையில்லை என்பதை முடிவு செய்தார் சதாசிவம். அடுத்த படம் 1940-ம் ஆண்டு வெளிவந்த `சகுந்தலை.' சதாசிவம் குடியிருந்த அதே தெருவில் வசித்தார் பிரபலப் பாடகரும் நடிகருமான ஜி.என்.பாலசுப்ரமணியம்.சுப்புலட்சுமிக்கும் பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே நட்பு காதலாக மலரத் தொடங்கியது. `சகுந்தலை'யில் இருவரும் நடித்தும் வந்தனர். ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் சச்சரவு ஏற்பட, ஜி.என்.பியுடன் தன் நட்பை முறித்துக் கொண்டார் எம்.எஸ். துரதிர்ஷ்டவசமாக அதே ஆண்டு சதாசிவத்தின் முதல் மனைவி அபிதகுசலாம்பாள் காலமாக, எம்.எஸ் - சதாசிவம் ஜோடி திருநீர்மலையில் 1940 ஜூலை 10 அன்று திருமணம் செய்துகொண்டது.

1941-ம் ஆண்டு, `சாவித்ரி' வெளியானது. இந்தப் படத்தில் ஆண் வேடமேற்று நாரதராக நடித்திருந்தார் எம்.எஸ். இதில் ஏழு பாடல்களைப் பாடினார். சுப்புலட்சுமியின் தேன் குரலுக்காகவே திரையரங்குகளை நாடி வந்தனர் மக்கள். இந்தப் படம் இன்னொரு விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் நடிக்க எம்.எஸ்ஸுக்குக் கிடைத்த சம்பளத்தில் தொடங்கப்பட்டதுதான் `கல்கி' இதழ். அதன் நிர்வாகத்தை சதாசிவம் கவனித்து வந்தார்.

1945-ம் ஆண்டு, சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ஆண்டு. பிரபல இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சுப்புலட்சுமி நடித்த `மீரா' வெளியானது. அவரின் `காற்றினில் வரும் கீதம்' பாடலைக் கேட்டு உருகாத தமிழர் யாரும் இருக்க முடியாது. நடிகை சுப்புலட்சுமி, பக்த மீராவாக உருமாறி சினிமாவைவிட்டு விலகியது இந்தத் திரைப்படத்துக்குப் பின்தான். புகழின் உச்சத்தில் மனைவி இருக்கும்போதே அவரை திரைத்துறையிலிருந்து விலகுமாறு பணித்தார் சதாசிவம். அதன்பின் மேடைக் கச்சேரிகளில் பாட மட்டுமே செய்தார் எம்.எஸ்.

சுப்புலட்சுமியின் கச்சேரிகளை ஒழுங் கமைப்பது முதல் அவர் என்ன பாட வேண்டும் என்பது வரை... அவர் என்ன பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்பதையும் முடிவு செய்தார் சதாசிவம். கணவரின் மேல் மட்டற்ற பாசம்கொண்டிருந்தார் எம்.எஸ் தம்பதிக்குக் குழந்தை இல்லை. ஆனால், அபிதகுசலாம்பாளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாகப் பாசத்தைக் கொட்டி வளர்த்தார் எம்.எஸ். மகள் ராதா இல்லாமல் எந்தக் கச்சேரியும் செய்வதில்லை.

1941-ம் ஆண்டு, காந்தி வந்து தங்கிய வீடு என்ற ஒரே காரணத்துக்காக ஸ்லேடன் கார்டன்ஸ் என்ற பிரமாண்ட வீட்டை வாங்கினார் சதாசிவம். `கல்கி' அலுவலகம் தரைத் தளத்திலும், முதல் மாடியில் எம்.எஸ்ஸின் இசை அரங்கும் (வீடுதான்!) இயங்கிவந்தன. இந்த வீட்டில்தான் காந்தி, நேரு, ராஜாஜி, சரோஜினி நாயுடு என தேசிய அரசியலின் முக்கியத் தலைவர்கள் தம்பதியைச் சந்தித்து அளவளாவினார்கள். வந்தோருக்கு செவிக்கு உணவை வழங்கினார் எம்.எஸ். இன்று இந்த வீட்டை இடித்துவிட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைக் கட்டியுள்ளார்கள்.

`நான் பிரதமர்தான்; அவரோ அரசி, இசையின் அரசி' என்று அவரைப் பாராட்டி மகிழ்ந்தார் நேரு. 1944-ம் ஆண்டு, கஸ்தூரிபா நினைவு நிதிக்கென இசை நிகழ்ச்சிகள் பாடி, நடத்தி நிதி வசூலித்து காந்திக்கு அனுப்பினர் தம்பதி. நெகிழ்ந்துபோன காந்தி `ராஜாஜி உங்கள் அளப்பரிய இசைப் பணியைக் குறித்து

விளக்கினார்; உங்கள் இசைப் பரிசை நல்லதற்குப் பயன்படுத்தியதற்கு நன்றி; கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும்' என்று கைப்பட எழுதிய காந்தி, தமிழில் கையொப்பமும் இட்டுள்ளார்.

1954-ம் ஆண்டு, பத்மபூஷண் விருது பெற்றார் எம்.எஸ். 1955-ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி கட்டட நிதிக்கென சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்தினார். துரதிர்ஷ்டவசமாக சில ஆண்டுகளில் அவர் பாடிப் பெற்றுத்தந்த நிதியில் கட்டப்பட்ட அதே மியூசிக் அகாடமி, `தமிழ்ப் பாடல்களைப் பாடினார்' என்று அவருக்கே அனுமதி மறுத்தது. 1956-ம் ஆண்டு, சங்கீத் நாடக அகாடமி விருது வென்றார் எம்.எஸ்.

தடைகள் பல வந்தாலும், இசை மட்டுமே தன் இலக்கு என்பதில் கவனமாக இருந்தார்.

1963-ம் ஆண்டு, அவரின் வெங்கடேச சுப்ரபாதம் ஒலிநாடா வெளியானது. இன்றுவரை நம் வீடுகளில் சுப்ரபாதம் கேட்கிறோம் என்றால், அது 56 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.எஸ் பாடிய அதே சுப்ரபாதம்தான். 1968-ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி வழங்கிய `சங்கீத கலாநிதி' விருதைப் பெற்ற முதல் பெண் கலைஞர் என்ற பெருமை எம்.எஸ்ஸை வந்து சேர்ந்தது. 1970-ம் ஆண்டு தமிழிசைச் சங்கம் `இசைப் பேரறிஞர்' விருது வழங்கி கௌரவித்தது.

1966-ம் ஆண்டு எடின்பர்க் இசை நிகழ்ச்சியில் பாடியவர், 1966 அக்டோபர் 23 அன்று ஐ.நா பொதுக்குழுவில் பாடினார். அங்கு மேடையேறிய முதல் இந்தியக்கலைஞர் என்ற பெருமையும் பெற்றார். பல மொழிகளில் அங்கு அவர் பாடிய `மைத்ரீம் பஜத' (உலகுக்கு அமைதி) என்ற அமைதிக்கான பாடல் உலகப்புகழை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1977-ம் ஆண்டு கார்னெஜி ஹாலிலும், 1982-ம் ஆண்டு லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலிலும், 1980-ம் ஆண்டு மாஸ்கோவிலும் பாடினார் எம்.எஸ்.

1970-ம் ஆண்டு வெளிவந்த ஆதி சங்கரர் இயற்றிய பஜ கோவிந்தம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற எம்.எஸ்ஸின் துதிகள் இறவாப்புகழ் பெற்றவை. பக்தி மணம் கமழும் அமைதி தவழும் அந்த முகத்தைக் கண்டு, பிருகாக்களை அவர் பாடுவதை ரசிக்கவே கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். 1975-ம் ஆண்டு, பத்மவிபூஷண் விருது எம்.எஸ்ஸுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு திருமலை தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார். சங்கர நேத்ராலயா மருத்துவமனை, பிரதமர் உதவி நிதி, அமெரிக்காவில் கோயில்கள் நிர்மாணிக்க நிதி எனப் பல முன்னெடுப்புகளுக்குத் தன் இசையைப் பயன்படுத்தி நிதி திரட்டித் தந்தார் எம்.எஸ்.

1997 நவம்பர் 21 அன்று கணவர் சதாசிவம் இறந்துபோக, இந்தப் பாடும் குயில் தன் இசையை நிறுத்திக்கொண்டது. அதே ஆண்டு ஜூன் மாதம் மியூசிக் அகாடமியில் பாடியதே தன் இறுதிப் பாடல் நிகழ்ச்சி என்று தெரிவித்துவிட்டார் எம்.எஸ். 1998-ம் ஆண்டு நாட்டின் உயர்ந்த விருதான `பாரத ரத்னா' எம்.எஸ்ஸுக்கு வழங்கப்பட்டது. 2004 டிசம்பர் 11 அன்று தன் மூச்சை நிறுத்திக்கொண்டது இந்த இசைப் பறவை.

நாட்டின் தலைசிறந்த பாடகியான எம்.எஸ்ஸுக்குத் தமிழகத்தில் அரசு சார்பில் எங்கும் சிலைகள் இல்லை. ஆனால், ஆந்திர அரசு அவருக்கு திருமலையின் பூர்ணகும்பம் பகுதியில் வெண்கலச்சிலை நிறுவியுள்ளது. தன் வாழ்நாளில் பல்வேறு அமைப்புகளின் நிதிக்கென கிட்டத்தட்ட 200 மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ளார் எம்.எஸ். அவரின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலையை 2016-ம் ஆண்டு வெளியிட்டது ஐ.நா சபை. எம்.எஸ்ஸின் இசைக்கு பெரும் ரசிகரான காஞ்சி மகா பெரியவா நினைவாக ராஜ கீழ்ப்பாக்கத்திலுள்ள காஞ்சி மெமோரியல் பள்ளியில் தனியார் அருங்காட்சியகம் உள்ளது. அருங்காட்சியக வரவேற்பறையில் கையில் தம்புராவுடன் நீலநிறப் புடவையில் சாந்தமாக இருக்கிறது எம்.எஸ் அம்மாவின் ஆளுயரச் சிலை. தமிழகத்தின் மறக்க முடியாத ஆளுமைகளில் எம்.எஸ் நிச்சயம் முக்கியமானவர்!