Published:Updated:

முதல் பெண்கள்: காலிஷா பீ மெகபூப் - ஷேக் மெகபூப் சுபானி

நிவேதிதாலூயிஸ்
கார்த்திகேயன் மேடி

கலைக்கான பத்மவிருது பெற்ற முதல் தென்னிந்திய இஸ்லாமியப் பெண்;கலைமாமணி விருது பெற்ற முதல் இஸ்லாமியத் தம்பதி; பத்ம விருது பெற்ற முதல் இஸ்லாமியத் தம்பதி; நாகசுரக் கலைஞர் காலிஷா பீ மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி

பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியிலுள்ள தங்கையன் தெருவில் வெளிச்சம் பிரியாத அதிகாலைகளிலும், மாலை மங்கும் அந்தியிலும் நடந்துசெல்வது அலாதியான அனுபவம்.

சாணம் மெழுகப்பட்ட வாயில்கள், பூசணிப்பூ பூத்திருக்கும் கோலங்கள், கால் பதியும் இடமெல்லாம் உதிர்ந்திருக்கும் நட்சத்திரங்களாக மகிழம் பூக்கள், யாரோ இறக்கி யிருக்கும் ஃபில்டர் காபியின் டிகாஷன் நறுமணம், அதனுடன் இணைந்து காதையும் மனதையும் வருடும் நாகசுர இசை. இசை என்றால் நீங்கள் நினைப்பது போல ரிக்கார்டரோ, டிவியோ அல்ல; உயிரை உருக்கும் நேரிசை!

`ஆலாபனா' என்ற அந்த நேர்த்தியான, பழைய வீட்டின் முன் சில நொடிகள் தயங்கித்தான் நம் கால்கள் பயணிக்கும். அங்கிருந்து கசிந்து வரும் நாகசுர இசைக்கு மயங்காதார் யார்... ஆலாபனாவின் ஆலம்பனா ஷேக் சின்ன மௌலானா என்ற மாபெரும் கலைஞர்.

90-களின் இறுதியில், மாலை வேளைகளில் நான் கேட்ட நாகசுர இசை, ஒருவேளை அவரின் மாணவி யான காலிஷா பீயின் நாகசுர இசையாகக்கூட இருந்திருக்கலாம். அந்த ஆலம்பனாவில் இருந்தே காலிஷாவின் இசைப்பயணம் புதிய உயரங்களை எட்டத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று நாகசுர இசைக் கலைஞர்களான காலிஷா பீ, அவரின் கணவரான ஷேக் மெகபூப் சுபானி ஆகிய இருவருக்கும் கலைத்துறைக்கான பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைக்கான பத்ம விருது பெறும் முதல் தென்னிந்திய இஸ்லாமியப் பெண்மணி என்ற பெருமையும் காலிஷா பெற்றிருக்கிறார். மார்ச் 26 அன்று டெல்லியில் நடைபெறவிருந்த விழாவில் பரிசுகள் தரப்படவிருந்த நிலையில், நாடடங்கு அமலுக்கு வந்ததால் விருது நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காலிஷாவுடன் ஓர் உரையாடல்...

இளமைக் காலம்...

``ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த சிருக்குருபாடு என்ற சிற்றூரில் 1961 நவம்பர் 21 அன்று ஷேக் மீரா சாகிபு, ஷேக் மீராபீ தம்பதியின் ஒரே மகளாகப் பிறந்து வளர்ந்தேன். பாரம்பர்யமான இசைக்குடும்பம். அப்பா மற்றும் சித்தப்பா ஷேக் ஜான் சாகிபு ஆகிய இருவரும் நாகசுரக் கலைஞர்கள். அம்மா வாய்ப்பாட்டு பாடக்கூடியவர். எட்டாவது தலைமுறையாக நானும் நாகசுரம் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். ஐந்து வயது முதலே தந்தையிடம் கற்றுக்கொண்டேன். தினமும் காலை மூன்றரை நான்கு மணிக்கு எழுந்து பயிற்சி தொடங்கிவிடுவோம்.

ஷேக் மெகபூப் சுபானி
ஷேக் மெகபூப் சுபானி

நாகசுரத்தில் இருந்த ஆர்வத்தால், ஐந்தாம் வகுப்புக்குப் பின் படிப்பை சரிவர தொடர முடியவில்லை. ஏழு வயதில் என் அப்பா இறந்த பின், என் சித்தப்பா ஷேக் ஜான் சாகிபு குருவாக எனக்கு நாகசுரம் வாசிக்கக் கற்றுத்தந்தார். ஒன்பது வயது முதல் சித்தப்பாவுடன் இணைந்து மேடைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கிவிட்டேன். என் கணவரும் எட்டாவது தலைமுறையாக நாகசுரக் கலைஞர்தான்” என்று சொல்ல...

அவர் கணவர் ஷேக் மெகபூப் சுபானி, “குண்டூர் மாவட்டம் சிலகலூரிப்பேட்டை ஜனாப் ஷேக் பீர் சாகிபு என்ற இசைக்கலைஞரின் பேரன் நான். எங்கள் குடும்பத்தில் யாரும் அதிகம் படிப்பதில்லை. சிறுவயது முதல் நாகசுரம் வாசிக்கக் கற்றுக்கொண்டு கச்சேரிகள் செய்யத் தொடங்கிவிடுவார்கள். எட்டாவது தலைமுறையாக அந்தக் குடும்பத்தில் நானும் நாகசுரம் வாசிக்கக் கற்றுக்கொண்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் அத்தை மகள்தான் காலிஷா பீ. 16 வயது வரை சித்தப்பாவோடு இணைந்து கச்சேரிகள் செய்துகொண்டிருந்த காலிஷாவுக்குத் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். அப்போது அப்பாவோடு நானும் கச்சேரிகள் செய்துகொண்டிருந்தேன். எனக்கு 24 வயது. எங்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தால் ஒன்றாகச் சேர்ந்து கச்சேரிகள் செய்துகொள்ளலாம் என்று பெரியவர்களுக்கு ஓர் எண்ணம் இருந்தது. குடும்பத்துப் பெரியவர்கள் பேசி நிச்சயம் செய்து 1977 டிசம்பர் 1 அன்று மனைவியின் கிராமத்தில் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்” என்கிறார் ஷேக் மெகபூப்.

தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தீர்கள்?

“ஒரு மேடைக் கச்சேரியில் நாங்கள் இருவரும் நாகசுரம் வாசிப்பதைக் கண்ட கே.சந்திரமௌலி, அவர் முதல்வராக இருந்த இசைக் கல்லூரியில் சேர்ந்து வாய்ப் பாட்டு கற்றுக்கொண்டு, நாகசுர இசையையும் மேம்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அறிவுரைப்படி, 1979-ம் ஆண்டு, கர்னூல் நகரிலுள்ள சாரதா சங்கீத கலாசாலை என்ற இசைக் கல்லூரியில் முதலில் கணவர் சேர்ந்தார். அப்போதுதான் எங்களுக்கு முதல் மகன் ஃபிரோஸ் பாபு பிறந்திருந்தான். மூன்று மாத ஓய்வுக்குப்பின் நானும் அவருடன் இணைந்துகொண்டேன்.

1980-ம் ஆண்டு, முதன்முறையாக சந்திரமௌலி சார் அறிவுறுத்தலின்பேரில் இருவரும் அவருடன் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு வந்து சேர்ந்தோம். தமிழ்நாடு பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. அதுதான் எங்கள் முதல் தமிழகப் பயணம். ஆராதனை நடந்த ஐந்து நாள்களும் அங்கேயே தங்கியிருந்தோம். கிளாரினெட் சக்கரவர்த்தி ஏ.கே.சி. நடராஜன் ஐயா, சீர்காழி கோவிந்தராஜன் ஐயா இருவரும் அந்த விழாவின் செயலாளர்கள். அவர்களிடம் எங்கள் இருவருக்கும் ஒரே ஒரு கீர்த்தனையாவது அங்கு வாசிக்க வாய்ப்பு வழங்கும்படி எங்கள் குருநாதர் சந்திரமௌலி வேண்டுகோள் வைத்தபடி இருந்தார்.

அவர்களோ, நேரம் இல்லை; வரிசையாக நிகழ்ச்சிகள் இருக்கின்றன, என்ன செய்ய என்று மறுத்துவிட்டார்கள். நாங்கள் அங்கேயே ஐந்து நாள்களும் காவிரியில் குளித்து, கோயிலில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு, காலை முதல் மாலை வரும் பெரும் சங்கீத ஜாம்பவான்களின் இசையை ரசித்துக்கொண்டு, அங்கேயே பந்தலில் படுத்துக்கொண்டோம்.

ஐந்தாவது நாள் எங்களுக்கு மோட்சம் கிடைத்தது. அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில் எங்களுக்கு வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம் எம்.எஸ். அம்மா பாடினார்கள். ஷேக் சின்ன மௌலானா ஐயாவின் நாகசுரக் கச்சேரியும் அன்று நடந்தது. பல நாகசுர, தவில் வித்வான்களும் குழுமி இருந்தார்கள். எம்.எஸ். அம்மா நிகழ்ச்சி முடிந்ததும், ஏ.கே.சி. ஐயா எங்களை அழைத்து, ‘ஒரு கீர்த்தனை வாசிக்கிறீர்களா?’ என்று கேட்டார். எங்களுக்கு மகிழ்ச்சியில் கைகால் ஓடவில்லை. ஆனால், எங்களிடம் வாசிக்க கையில் நாகசுரம் இல்லை. அதை தஞ்சையில் எங்கள் அறையில் விட்டுச் சென்றிருந்தோம். என்ன செய்வதென்றே புரியவில்லை.

எம்.எஸ். அம்மாவுக்கு முன்பாக ஷேக் சின்ன மௌலானா அவர்கள் நாகசுரம் வாசித்துவிட்டு அமர்ந்திருந்தார். நாங்கள் திகைத்து நின்றதைப் பார்த்து எங்களை அழைத்தார். என் கையில் அவர் வாசித்த நாகசுரத்தைக் கொடுத்து, வாசிக்கச் சொன்னார். பொதுவாக எந்தக் கலைஞரும் தான் வாசிக்கும் கருவியை அடுத்தவரிடம் தர விரும்புவதில்லை. அவரோ, எங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு அந்த நேரத்தில் உதவினார். அவர் பேரனின் நாகசுரம் என் கணவருக்குக் கிடைத்தது. பட்டாச்சாரியா என்ற தவில் கலைஞர் எங்களுக்கு வாசிக்க முன்வந்தார்.

ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த ‘ரகுநாயக நீ பாதயுக’ என்ற கீர்த்தனையை இருவரும் வாசித்தோம். ‘இன்னொரு கீர்த்தனை வாசியுங்கள்’ என்று எங்கள் வாசிப்பை வெகுவாக ரசித்த அங்கிருந்த மற்ற கலைஞர்கள் கேட்டார்கள். ஒரு கீர்த்தனைதானே வாசிக்க நேரம் தந்தார்கள் என்று நாங்கள் எழ முயல, ‘அங்கேயே இருங்கள்’ என்று எங்களைத் தடுத்தபடி மேடைக்கு அன்றைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் வந்தார். `நேரமிருக்கிறது, அடுத்த கீர்த்தனையை வாசியுங்கள்' என்று ஆட்சியரும் வேண்டுகோள் வைக்க, இந்தோள ராகத்தில் அமைந்த இன்னொரு கீர்த்தனையை வாசித்தோம். நாங்கள் வாசித்ததைக் கண்டு அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி. அடுத்து ‘சாமஜ வரகமணா’ வாசித்தோம். நிகழ்ச்சியை முடித்து கர்னூல் திரும்பினோம்.

வரிசையாக சேலம், கரூர், திருச்சி, தஞ்சை போன்ற இடங்களில் இருந்து ரசிகர்கள் எங்களைக் கச்சேரிகளுக்கு அழைக்க ஆரம்பித்தார்கள். இப்படி தமிழகம் நாங்கள் அடிக்கடி வந்து செல்லும் இடமானது.

1983-ம் ஆண்டு, திருச்சியில் வசித்தபடி இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவந்தால்தான் எளிதாக இருக்கும் என்று எங்கள் குடும்பத்தினருக்குத் தோன்றியது. அந்த ஆண்டு ஜனவரி மாதம் உறையூரில் ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். மீராபாய், பர்வீன் சுல்தானா என்று அடுத்த இரு குழந்தைகளும் பிறந்தார்கள். அதே ஆண்டு எங்கள் குருவான ஷேக் சின்ன மௌலானாவின் பாதம் அடைந்தோம்.

ஸ்ரீரங்கத்தில் அவரது வீட்டில் தினமும் பயிற்சி நடக்கும். 15 ஆண்டுகள் அவரிடம் கற்றுக்கொண்டோம். இன்று எங்களிடம் இருக்கும் எல்லாமே அவர் போட்ட பிச்சை தான். அவரது தனி சிறப்பான தஞ்சை பாணியை எங்களுக்குக் கற்றுத்தந்தார். இந்த பாணியை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் ரிக்கார்டிங்குகள், திருவீழிமலை சகோதரர்கள், குளிக்கரை பிச்சையப்பா என்று பலரிடம் கற்றுத் தேர்ந்தவர் எங்கள் குரு ஷேக் சின்ன மௌலானா.

திருச்சி ஆல் இந்தியா ரேடியோவில் ஆடிஷன் செய்தோம். பி-ஹை கிரேடு கொடுத்தார்கள், அதன்பின் ஏ கிரேடு, டாப் கிரேடு என்று இருவருமே கிரேடுகள் வாங்கினோம். 1994 ஜூலை 29 அன்று ஜெயலலிதா அம்மா முதல்வராக இருந்தபோது, எங்கள் இருவருக்கும் ‘கலைமாமணி விருது’ தந்து கௌரவித்தார்கள். மேடையில் எங்களைப் பாராட்டியவர், ‘ஆந்திராவிலிருந்து வந்தவர்களா?’ என்று விசாரித்தவர், ‘ஒரு பெண்மணியாக நீங்கள் நாகசுரம் வாசிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என்று வாழ்த்தினார்.

டெல்லி அனுபவங்கள்...

2004-ம் ஆண்டு, டெல்லியின் மலை மந்திர் என்ற கோயிலில் ஒரு கச்சேரிக்கு எங்களை அழைத்திருந்தார்கள். அங்கு அப்போது தலைவராக முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இருந்தார். பட்டுக்கோட்டையில் அவர் படித்த பள்ளியில்... அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது நடைபெற்ற விழா ஒன்றுக்கு நாங்கள் வாசிக்க சென்றிருந்தோம். அப்போது எங்கள் வாசிப்பைக் கேட்டு, பாராட்டி பொன்னாடையும் அணிவித்திருந்தார். அதை நினைவில் வைத்திருந்து மலை மந்திர் விழாவுக்கும், அவரது வீட்டுக்கு வாசிக்கவும் அழைத்தார். ஒரு மணி நேரம் வாசித்தோம். மிகவும் ரசித்து மகிழ்ந்தார். அவரிடம் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயாவைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டோம்.

வெங்கட்ராமன் ஐயா வேண்டுகோள் விடுத்ததும் மறுநாளே எங்களை ராஷ்டிரபதி பவனுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் கலாம் ஐயா. அங்கும் சென்று அரைமணி நேரம் அவர் முன் வாசித்தோம்; பாராட்டி மகிழ்ந்தார். `நானும் வீணை வாசிப்பேன்; ஆனால், இப்போது பயிற்சி இல்லை. ‘எந்தரோ மகானுபாவுலு’, ‘வாதாபி கணபதிம்’ தெரியுமா...' என்று ஆர்வமாக வினவினார். எங்கள் மகன் எம்.சி.ஏ இறுதியாண்டு படித்துவிட்டு பணிக்குச் செல்லவிருக்கிறான் என்று கேள்விப்பட்டதும், `இந்தக் கலையை உங்கள் பெற்றோருக்குப் பின் யார் முன்னெடுத்து செல்வது, இந்த அற்புதக் கலையை நீங்கள்தானே படித்து பிறருக்குக் கற்றுத்தர வேண்டும்' என்று அறிவுறுத்தினார். மகன் பாபுவும் அதன்பின் எங்களிடம் கற்கத் தொடங்கி, இப்போது எங்களுடன் கச்சேரிகளில் வாசித்து வருகிறான்.

2005-ம் ஆண்டு, எங்களை நினைவில் வைத்து ராஷ்டிரபதி பவனில் 100 ரசிகர்கள் வந்த சிறப்புக் கச்சேரிக்கு கலாம் ஐயா ஏற்பாடு செய்தார். மறக்கமுடியாத அனுபவம் அது.

அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு எமிரேட், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, இலங்கை என்று பல நாடுகளில் இசைக் கச்சேரிகள் நடத்தி இருக்கிறோம்.

மூச்சு அடக்கிப் பயிற்சி செய்வது, வாசிப்பது என்று பெண்களுக்கு ஒவ்வாது என்று நாகசுரத்தைச் சொல்வதுண்டே...

பயிற்சிதான் எல்லாம். சின்ன வயதிலிருந்து பயிற்சி எடுத்ததால் எனக்குப் பெரிய சிரமம் எதுவும் தெரியவில்லை. எந்தச் சூழலிலும் பயிற்சியைக் கைவிடவே இல்லை. குழந்தைகள் பிறக்கும்போதுகூட, ஒரு வாரம் மட்டுமே வாசிப்பிலிருந்து ஓய்வு எடுத்தேன். அதுவரை மேடைக் கச்சேரிகள் வாசித்துக்கொண்டு தானிருந்தேன். குழந்தை பிறந்தபின் மீண்டும் கடும் பயிற்சிதான். சில நேரங்களில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம்கூட பயிற்சி செய்வேன்.

அப்பா இருக்கும்போது காலை 4 மணிக்கு பயிற்சி தொடங்கினால், சரளி, ஜெண்டை, வர்ணம், அலங்காரம் என்று வாசித்து முடிப்பதற்குள் 6 மணியாகி விடிந்துவிடும். அதன் பிறகு ராகம் கற்றுத் தருவார். அவசரமாகக் கிளம்பி பள்ளிக்குச் சென்றுவிட்டு, மதியம் வீட்டுக்குத் திரும்பியதும் வாய்ப்பாட்டு பயிற்சி தருவார். மீண்டும் பள்ளி... மாலை 4 மணி முதல் 7 மணிவரை நாகசுரப் பயிற்சி என்று பரபரப்பாக இருக்கும். இப்போதும் காலை 6 - 9, 11.30 - 1, மீண்டும் மாலை 6 - 9 என்று கட்டாயம் குறைந்தது எட்டு மணிநேரமாவது தினமும் பயிற்சி செய்துவிடுவோம். குடும்பமாக அனைவரும் அமர்ந்து பயிற்சி செய்வதுண்டு.

பிறருக்கு உங்கள் கலையைக் கற்றுத் தருவதுண்டா?

தொடர்ந்து கற்றுத்தர நேரம் இருப்பதில்லை. ஆனால், இரண்டு மூன்று மாதங்கள் வந்து எங்கள் வீட்டிலேயே தங்கி பயின்று செல்லும் மாணவர்கள் உண்டு. இப்படிப் பலர் படித்துச் சென்றிருக்கிறார்கள். இலவசமாகவே கற்றுத் தருகிறோம். ஆண்களுக்கு இது வசதியாக இருக்கும். பெண்களுக்குச் சற்று சிரமம்தான். பெண்கள் அதிகம் நாகசுரம் கற்றுக்கொள்ள முன்வருவதில்லை. ஆந்திரம், பெங்களூருக்குக் கச்சேரிகள் செல்கையில் சில பெண்கள் என்னை அணுகி சொல்லித்தர முடியுமா என்று கேட்பதுண்டு. நானும் சரி வாருங்கள் என்று சொல்வேன். ஆனால், அவர்கள் மீண்டும் வருவதேயில்லை. கற்றுக்கொள்ளும் ஆசையுடன் யார் வந்தாலும், எங்கள் வீட்டு வாசல் அவர்களுக்குத் திறந்தே இருக்கும்.

நீங்கள் இஸ்லாமியர் என்பதால் இந்துக் கோயில் களில் வாசிப்பதில் ஏதாவது சிக்கல் இருந்ததுண்டா?

அப்படி எதுவும் இல்லை. எங்களிடம் இருக்கும் கலையை எல்லோரும் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும், இங்குள்ள கலைஞர்களும் எங்களுக்கு இன்று வரை பேராதரவு தந்திருக்கிறார்கள். அது எங்களுக்குக் கிடைத்த பெரிய வரம். நாம் யாராக இருந்தால் என்ன, நம் கலையைத் தானே பார்க்கிறார்கள்... பெரிய கோயில்களில் கூட சாமியிடம் எங்கள் இருவரையும் அழைத்துச் சென்று எங்கள் பெயர்கள் சொல்லி அர்ச்சனை செய்கிறார்களே... மத வேறுபாடு பார்ப்பவர்கள் அப்படி செய்வார்களா...

காலிஷா பீ மகபூப் - கணவர் ஷேக் மகபூப் சுபானி...
காலிஷா பீ மகபூப் - கணவர் ஷேக் மகபூப் சுபானி...

எங்கள் பெயரை எதுவும் மாற்றவில்லை. இஸ்லாமியப் பெயர்தான். இன்றும் ஆந்திராவில் நாகசுரம் வாசிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பல பாரம்பர்யமான குடும்பங்கள் இருக்கிறார்கள். ஆனால், பொட்டு வைத்துக்கொள்ளாமல் வாசிப்பது சிலருக்கு சிக்கலாக இருந்திருக்கிறது. 1981-ம் ஆண்டு, செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயில் கச்சேரியில் வாசித்துக் கொண்டிருந்தோம்.

நிகழ்ச்சியின் இடையே ஒரு மூத்த பெண்மணி கையில் குங்குமத்துடன் மேடையேறி வந்தார். ‘அம்மா, நீ சரசுவதியேதான். அத்தனை அழகாக நாகசுரம் வாசிக்கிறாய். ஆனால், பொட்டில்லாமல் வாசிப்பது என்னவோ போல இருக்கிறது’ என்று சொல்லி நெற்றியில் பொட்டு வைத்துவிட்டுச் சென்றார். அந்த அம்பாளே வந்து எனக்குக் குங்குமம் தந்து சென்றதைப் போல உணர்ந்தேன்.

அன்று முதல் கச்சேரிகள் செய்யும்போது பொட்டு வைத்துக்கொள்கிறேன். அது என் கலைக்கு நான் தரும் மரியாதை, செய்யும் தொழிலுக்கு மரியாதை. இஸ்லாமியர் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கச்சேரிகள் தொடர்ந்து செய்வதால் நோன்பு இருக்க முடிவதில்லை. ஆனால், குடும்பத்தில் பெரியவர்கள் நோன்பு இருப்பதுண்டு. கணவர் வழக்கமாகச் செல்லும் திருவானைக்காவல் மசூதியில் நோன்பு துறக்க ஒருநாள் கஞ்சிக்கு நாங்கள் ஏற்பாடு செய்துவிடுகிறோம்.

கோயில் கச்சேரிகள் தவிர வேறு எங்காவது வாசிப்பதுண்டா?

பெரும்பாலும் மசூதிகள், தர்காக்களில் இப்போதெல்லாம் நாகசுர இசை யாரும் கேட்பதில்லை. மதுரை கோரிப்பாளையம் தர்காவின் சந்தனக்கூடு விழாவின்போது இரண்டு முறை எங்களை அழைத்தார்கள். மகிழ்ச்சியாக வாசித்துவிட்டு வந்தோம். நாகூர், நாகப்பட்டினம் பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் திருமண மற்றும் விசேஷ வீடுகளில் வாசிக்க அழைக்கிறார்கள். எங்கள் கச்சேரிகளுக்கு அதிகமாக இஸ்லாமியர் வந்து ரசித்துக் கேட்பதுண்டு. திருநெல்வேலி பக்கம் கிறிஸ்துவ மக்கள் திருமணங்கள் முடிந்த பின் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு எங்களை வாசிக்க அழைக்கிறார்கள். கலை என்று வந்துவிட்டால் மக்கள் மதம் என்னவென்று பார்ப்பதில்லை. திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி கோயிலில்கூட பலமுறை வாசிக்க அழைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் கோயிலில் வாசிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், எங்களை வாசிக்க அவர்களும் அழைக்கவில்லை. நாங்களும் கேட்கவில்லை. இங்கேயேதான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகக் குடியிருக் கிறோம். எங்களுக்கு எம்மதமும் சம்மதம்தான். இறந்த பிறகு யார் எந்த மதம், யார் எங்கு போகப்போகிறார்கள்... எல்லோரும் இங்கிருந்து செல்லவேண்டியதுதானே... எங்கே போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா... எல்லா இடமும் எனக்கு வாசிக்கப் பிடித்த இடம்தான்.

திருவையாறு தியாகபிரம்மம் விழாவில் வருடாவருடம் வாசிப்பதை விட வேறென்ன வேண்டும்... அப்துல் கலாம் ஐயா முன்பு வாசித்ததைவிட வேறென்ன வேண்டும்...

இன்றைய பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...

இந்தத் துறைக்கு இன்னும் அதிகமாகப் பெண்கள் வர வேண்டும். எல்லோரும் நாகசுரம் வாசிக்கலாம். ஆனால், நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். கணவரும் மனைவியுமாக இணைந்து பலர் வாசிக்க வந்தால் நன்றாக இருக்கும். அவர்களுக்குத் தெளிவான மனதுள்ள நல்ல குருக்கள் கிடைக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் கற்றுத்தர நாங்கள் தயாராக இருக்கிறோம்; எங்களை யார் வேண்டுமானாலும் அணுகலாம், உதவுகிறோம்.''

தமிழ்ப் பாரம்பர்ய இசைத்துறையில் ஒரு காலத்தில் இஸ்லாமியர் கோலோச்சியவர்கள் என்கிறார் இசைப் பேரறிஞர் மம்மது. மதுரையில் ‘மேள ஜமாத்’ 1980கள் வரை பரபரப்பாக இயங்கிவந்ததையும், இப்போது அந்த மக்கள் பல்வேறு பணிகள் செய்துகொண்டு, கலைத்துறையிலிருந்து விலகிவிட்டதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார். தர்காக்களில் நடைபெறும் கந்தூரி போன்ற மத அடையாளமற்ற விழாக்களில் கூட இப்போது மங்கல இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது அருகிவிட்டது என்று வருந்துகிறார். பெண்கள் இந்தத் துறைக்கு வருவதற்குத் தடைக்கற்களாக பாதுகாப்பின்மை, மாதவிலக்கு மற்றும் கணவரது இறப்பு ஆகிய மூன்று காரணங்களைச் சுட்டுகிறார். மதுரை பொன்னுத்தாயி என்ற அற்புத நாகசுரக் கலைஞரை அவர் கணவர் இறப்புக்குப் பின் சமூகம் எப்படி மங்கல இசையை அவர் வாசிப்பதா என்று கேட்டு, ஓரங்கட்டியது என்பதை நினைவூட்டுகிறார்.

ஆனால், இப்போது `மீட்பு' கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார். ``இப்போது பெண்களுக்கு அதிக பாதுகாப்பு இருக்கிறது; இன்றைய காலகட்டத்தில் மாதவிலக்கை யாரும் பொருட் படுத்துவதில்லை; கணவர் இறந்த பின்பும் சமூகத்தில் பெண்கள் தங்கள் பணிகளை துணிவுடன் முன்னெடுத்துச் செய்கிறார்கள்” என்று சொல்கிறவர், “காலிஷா பீயைப் போன்ற துணிவானப் பெண்ணை நான் சந்தித்ததில்லை. தமிழர் இசைக்கருவியான நாகசுரத்தை வாசிக்க நம்மில் 50% உள்ள பெண்களில் எத்தனை பேர் இன்று தயாராக இருக்கிறார்கள்?” என்கிற வினாவை எழுப்புகிறார்.

இந்த நிலை மாறி இன்னும் அதிக பெண்கள் தங்கள் மண்ணின் இசையைக் கையில் எடுக்க வேண்டும், காலிஷா பீயைப் போல புகழ்பெற வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு