22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெண் எழுத்து: 80 கி.மீ ஸ்பீடு

ஆர்.ஜே நிகழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.ஜே நிகழ்ச்சி

கீதா கைலாசம்

ஃப்.எம் ரேடியோவில் நேயர் ஒருவருடன் ஆர்.ஜே பேசிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி...

ரேடியோ ஜாக்கி (ஆர்.ஜே): என்னங்க ரமணி இப்படி? காத்தால ஆறு மணிக்கே இத்தனை ஸ்பீடா? அதுவும் 80 கி.மீ வேகத்துல? சிட்டிக்குள்ள, சென்னைல?

ரமணி: எனக்குப் பல வருஷமா பழக்கம். நான் மட்டும் இல்ல. என்னை மாதிரி பல பேர்.

ஆர்.ஜே: அப்ப எப்பதான் ஸ்பீடை கொறைப்பீங்க? ஆபீஸ் போனப்பறமா? (சிரிப்பு)

ரமணி: இல்ல சனி, ஞாயிறா இருந்தா 70 கி.மீ ஸ்பீடுல போவேன். அதுகூட சில நேரம்தான்.

ஆர்.ஜே: எப்படிங்க... உங்க உயிரை இன்னும் பத்திரமா வெச்சிருக்கீங்க?

ரமணி: சொன்னேனே... பல வருஷப் பழக்கம். அதுக்கு நான் தனியா எந்த முயற்சியும் எடுக்கல. உயிர், தானா தன் ஸ்பீடுல இயங்குது.

ஆர்.ஜே: பிரேக்காவது போடுவீங்களா எப்பவாச்சும்?

ரமணி: போட்டுதானே ஆகணும். பிரேக்கூட போடாம போய் முட்டிக்க மாட்டேன்.

பெண் எழுத்து: 80 கி.மீ ஸ்பீடு

ஆர்.ஜே: எஃப்.எம் கேட்டுட்டிருக்கிற நீங்க யோசிக்கறீங்க. அப்படி என்ன ரமணிக்கு அவசரம்? காலை வேளைல போய் 80 கி.மீ ஸ்பீடா? இதோ... ரமணி வாயாலயே அதைக் கேட்கலாம்.

ரமணி: காத்தால அஞ்சு மணிக்கு எழுந்துக் குவேன். எழுந்து டிக்காஷன் போட்டு, பால் காய்ச்சி, அவருக்கு காபி போட்டு, குளிச்சு, பூஜை முடிச்சு, டிபனுக்கு இட்லி வெச்சு, சட்னி அரைச்சு, சாம்பார் பண்ணி, ஸ்கூலுக்கு பசங்க லஞ்சுக்குத் தக்காளி சாதம், உருளைப் பொரியல், ஜூஸ், தண்ணி பாட்டில் ரொப்பி, யூனிஃபார்ம் அயர்ன் பண்ணி, ஷூ தொடச்சு, கணக்கு டவுட் சொல்லிக்கொடுத்து, தொலைஞ்சு போன நோட்டைத் தேடி, பொண்ணுக்குப் பின்னிவிட்டு, அவருக்கு வெந்நீர் போட்டு, எனக்கு ஃபர்ஸ்ட் காபி போட்டு, அவருக்கு ரெண்டாவது காபி போட்டு, அவர் லஞ்சுக்கு சாலட் கட் பண்ணி, அதுக்குள்ள `அம்மா அம்மா'ங்கற கத்தலுக்குப் பதில் சொல்லி, உடனே ஸ்கூல் பஸ் ஹாரன், பசங்களை அவசரமா கீழ விட்டுட்டு, அப்பாடா… அவர் டிபனுக்கு உக்கார, ஆறின காபியை நான் ஒரு வாய் குடிக்க, அவர் சொல்லி நான் பண்ணாத மூணு விஷயத்துக்குத் திட்டு வாங்கி, அவர் சொல்லி நான் ஒழுங்கா செஞ்சதை அவர் கண்டுக்காம, நான் காபியைக் குடிச்சு முடிச்சு, அவர் ஆபீஸ் கிளம்ப, மறுபடியும் அப்பாடா… கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்.

ஆர்.ஜே: முடிஞ்சுதா? பேசும்போதே மூச்சு இந்த வாங்கு வாங்குது, அப்ப ஆக்‌ஷன்ல? ஹய்யோ!

ரமணி: இருங்க. இன்னும் இருக்கு. அப்பா சாப்பிட குக்கர் வெச்சு, ரசம் பண்ணி, மாத்திரை குடுத்து, அங்கங்க கெடக்கறதை அள்ளி அது அது எடத்துல வெச்சு, பாத்திரம் தேய்க்க ஒழிச்சுப்போட்டு, அப்பாவுக்கு டிபன், என் டிபனை சாப்பிட்டு, போன் அட்டென்ட் பண்ணி, மளிகை பில் செக் பண்ணி, கோயில்லேருந்து வந்து அம்மா பெல் அடிக்க, கதவைத் திறந்து, அம்மாவுக்குக் கஞ்சி குடுத்து, அவங்க கேள்வியா கேட்டு, அதுக்குப் பதிலும் குடுத்து…

ஆர்.ஜே: எத்தனை மணிக்கு முடிப்பீங்க?

ரமணி: முடிக்கறதா... எதை?

ஆர்.ஜே: இல்ல... பிரேக் உண்டுன்னீங்களே? அதைச் சொன்னேன்.

ரமணி: ஆமாம். எட்டு மணிக்கு பிரேக் போட்டு,

எஃப்.எம் கேட்டுக்கிட்டே, உங்க ரேடியோலதான்... ஆபீஸுக்கு ரெடியாகி, என் லஞ்ச்சை பேக் பண்ணி, அப்பாம்மாகிட்ட சொல்லிட்டு, கெளம்பி, பஸ் ஸ்டாப்புக்கு நடந்து, பஸ்ஸுக்கு நின்னு, பஸ்ல நின்னு, தோழியப் பாத்துச் சிரிச்சு பேசி, ஒக்காந்து பேசி, ஆபீஸ் ஸ்டாப்புல இறங்கி, நடந்து போய் ஆபீஸ் சீட்ல ஒக்காந்து, போன்ல பேசி, போன்ல பேசி, வேலையை ஆரம்பிச்சு, தொடர்ந்து போன்ல பேசி, போன்ல பேசி… கால் சென்டர்!

ஆர்.ஜே: பிரேக் ப்ளீஸ்... அய்யோ! எனக்கு கிர்ர்ர்ர்ருங்குது. நான் கொஞ்சம் மூச்சுவிட்டுக்கறேன். உங்க பேட்டியைக் கேட்டு, இதே மாதிரி எத்தனை பெண்கள் அவங்க வாழ்க்கையில 80 கி.மீ ஸ்பீடுல போறங்கன்னு வாட்ஸ்அப் பண்ணச் சொல்லியிருந்தோம். இதுவரைக்கும் இந்த நாலு நிமிஷத்துக்குள்ள 300-க்கும் மேல மெசேஜ் வந்திருக்கு. இதுல வேலைக்குப் போகாத பெண்களும் நிறைய. எங்க ரேடியோவுல முதன்முறை உங்களால பெரிய அளவுல நேயர்கள்கிட்டேருந்து ரெஸ்பான்ஸ் குமிஞ்சிருக்கு. இம்பாஸிபிள்! சூப்பர்!

ரமணி: ஓ!

ஆர்.ஜே: உங்களுக்கு ஒரு பரிசு. ‘ப்ளா… ப்ளா…' கம்பெனி வழங்கும் ஒரு விலை உயர்ந்த, தங்க முலாம் பூசிய வாட்ச் பரிசு. வாழ்த்துகள் ரமணி. நன்றி நேயர்களே.

ரமணி: தேங்க்ஸ். நான் ஒண்ணு சொல்லலாமா?

ஆர்.ஜே: சொல்லுங்க.

ரமணி: நானே நொடிக்கணக்கா ஓடற ஒரு ஸ்டாப் வாட்ச் மாதிரி. எனக்கு வாட்ச் பரிசா? வேற ஏதாவது ஏ.சி இல்ல மிக்ஸி... ஏன், கிஃப்ட் கூப்பன் கூட பரவால்லயே… குடுக்கக்கூடாதா?

ஆர்.ஜே: ஹஹ்ஹ… ஹா..!

வசவு

தலைப்பை வசவு என்று வைத்து விட்டேன். இருந்தும் சென்சார் காரணமாக என் கதையில் சில குறிப்பிட்ட வசவுகளைப் போட இயலாமைக்கு மன்னிக்கவும். உங்கள் கற்பனைக்கு தடையில்லை!

“முண்டம்... முண்டம்...” - இது அவர். அம்மி மிதித்து, அக்னி சாட்சியா அருந்ததி பார்த்து மூணு முடிச்சு போட்ட அவரேதான்.

ரசத்துக்கு தாளிக்க கடுகை நெய்யில போட்டேன். ம்... கடுகு படபடன்னு வெடிக்கும்னு நல்லா தெரியுமே. ஆபீஸ் கிளம்பும்போது அவர் மூடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சும், அப்பதான் ஒரு சந்தேகம் வந்தது. அதைக் கேக்க அவசரமா அவர் பின்னாலயே போனேன்.

“............. இருக்கா? இல்லையாடி. ஒனக்கு? முண்டம். முண்டம். முண்டம்…........ இதுகூட நீ தெரிஞ்சு வெச்சுக்க மாட்டீயா?” - இதுதான் என் சந்தேகத்துக்குப் பதில்.

இப்படி பொரிஞ்சு தள்ளிட்டு போறாரே? அய்யோ…. கடுகு காந்திப்போச்சு போ.

வசவு... வசவு... அவருக்கு எப்ப பார்த்தாலும் வாயில வசவுதான் வரும். கிரைண்டர்ல அரையற உளுந்து மாதிரி புஸுபுஸுன்னு கோபம் வரும். பல்லைக் கடிச்சுகிட்டு அவர் திட்டினாலும் ஸ்பெஷ்ட மாக புரியும் வசவு. கல்யாணம் ஆன புதுசுல நான்பட்ட அவஸ்தை இருக்கே... அய்யய்யோ... பாவக்காய் கசப்பு கெட்டது போ என் புருஷனுக்கு...

பாவக்காய்: ஹலோ கமலா... எக்ஸ்கியூஸ் மீ... நான் முன்ன ரொம்ப கசந்து வழிவேன். இப்பெல்லாம் மாறிட்டேன்... சிப்ஸ் என்ன? ஊறுகா என்ன? நான் இல்லாம சாப்பாடே இறங்காதுங்கற வரையில ஒரு பிடிப்பே வந்திருக்கு என்கிட்ட. காந்தின கடுகை வேணும்னா சொல்லிக்கோ. அது சுத்த வேஸ்ட்!

பெண் எழுத்து: 80 கி.மீ ஸ்பீடு

என்ன… எப்போதும்போல சமையலறைதான் எனக்கு அடைக்கலம். பாவக்காய், கத்திரிக்காய், வெங்காயம்... இப்படி இவங்கெல்லாம் என்னை நல்லாபுரிஞ்சுகிட்ட ‘தோஸ்த்’.

‘ஏதோ திட்டுவானே ஒழிய மத்தபடி ரொம்ப நல்லவன்’ - இதை நான் சொல்லல. மத்த எல்லாரும் என்னவரைப் பத்தி இப்படித்தான் சொல்லுவாங்க. என்னால இதுக்கு என்ன அர்த்தங்கறதை இன்னி வரைக்கும் புரிஞ்சுக்கத் தெரியல.

கடுக்காய்: ஏன் அவர் கடுக்காய் மாதிரின்னு நெனச்சு பாருங்க. அவரோட முக்கியம் நல்லா புரியும்.

சரிதான்... மலச்சிக்கலுக்கு கடுக்கா மாதிரி வேற எதுவும் உதவாது. எத்தனை வாஸ்தவமான பேச்சு. சிரிச்சுட்டேன். இன்னொரு ‘கிச்சன் தோஸ்த்’.

கல்யாணம் ஆன புதுசுல தவிச்சேன்னு சொன்னேன் இல்லையா... அப்ப என் மாமியார், `இதுக்குப் போய் அழறியே’ன்னு சொல்லிட்டு மாமனார் திட்றதைக் கவனிக்கச் சொன்னாங்க. ம்ம்... கவனிச்சேன் கொஞ்ச நாள். அட சரிதான். அவங்கப்பா அளவுக்கு என்னவர் திட்டல. அவங்கப்பா திட்றதுல ‘கரம் மசாலா’ன்னா, என்னவர் சும்மா `மிளகு’தான். அதுசரி... மாமியாருக்கு எத்தனை வருஷ சர்வீஸ்? அதனால அழல. நான் அப்படியா? அதுவும் ஒத்தைல செல்லமா வளந்த பொண்ணு வேற. எனக்கு அதெல்லாம் அப்ப ரொம்பப் புதுசு. நசுங்கின தக்காளி மாதிரி எப்பப் பார்த்தாலும் அழுதுகிட்டேதான் இருப்பேன்.

வெங்காயம்: விமன் சிம்ப்லி லவ் மி இன் குக்கிங். இருந்தும் அவங்களை நல்லா அழவைப்பேன்.

வா... வா... கணவன்மார்களின் மறு உருவமே! என்னடா நீ இன்னும் ஒண்ணும் சொல்லலையேன்னு நெனச்சேன்.

உருளை: அதை விடு. என்னிக்கும் என்னை மாதிரியே உனக்கும் ரோஸ்டுன்னு சொல்லு. அப்படியும் சமாளிக்கற நீ. சபாஷ்!

ஆமாம்... தினமும் எல்லாரும் வெளியே போனப்பறம் நாள் முழுசும் தனியா ‘காஸ் தீந்து போன’ மாதிரி ஒரு டென்ஷன்ல இருப்பேன். திடீர்னு ஒருநாள் சமையல் ரூம்ல இருக்கற அரிசி, பருப்பு, அப்பறம் உங்க எல்லாரோடயும் அவரையும் என் லைஃபையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பேசினேன். சிரிப்பு சிரிப்பா வந்தது. அதனாலதான் அவர் திட்றது எல்லாத்தையும் மறந்து சகஜமா இருக்க முடிஞ்சது. இன்னிக்கு தேதில இது எனக்கு 50 வருஷ பழக்கம்னா நம்புவீங்களா?

வெங்காயம்: அம்மாடியோவ். பாவம் நீ...

50 வருஷமா திட்டு வாங்கறியா?

வெங்காயத்துக்கே துக்கமா?

முள்ளங்கி: சில நேரம் நான் வேகும்போது வர்ற வாசனை பிடிக்காம `அய்யே முள்ளங்கி’ன்னு எனக்கு விழாத வசவா? நீ என்னமோ ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிற கமலா.

ஆனா, என்னிக்கோ ஒருநாள் சமைக்கற நூல்கோல் மாதிரி திடீர்னு ஒருநாள் `என்னம்மா கண்ணு? நீ இன்னுமா சாப்பிடல?' அப்படின்னும் கேட்பார். இன்னொரு நாள் `என்னம்மா தலை வலியா? நீ போய் தூங்கு' - இப்படியும்கூட அவர் பேசுவார். எல்லாம் என் கனவுல!

வெண்டை: முட்டாள் அக்கா நீ. மொதல்லயே கண்டிக்கல. என்னை இளசான்னு செக் பண்ண ஒடிச்சுப் பாத்து என் உயிரை எடுப்பாங்க. நீயும் ஏன் இப்படி இடங்கொடுத்துட்ட?

ஆமாம். உன்னை மாதிரிதான் நானும். மொதல்லயே கண்டிக்கல...

தேங்காய்: நீ என்னை மாதிரின்னும் பெருமைப் பட்டுக்கோ கமலா. நான் இல்லேன்னா எத்தனையோ பேருக்குச் சமையலே பண்ணத் தெரியாது. அந்த மாதிரி நீ கொஞ்ச நாள் இந்த வீட்டுல இல்லாம போனா அவங்க எல்லாரும் தவிக்கறது இருக்கே... தமாஷா இருக்கும்.

உங்களுக்கெல்லாம் இந்த கெழவி ஏன் இப்படி திட்டு வாங்கறான்னு பாவமா இருக்கில்ல? அவர் அளவுக்கு திட்ட முடியலேன்னாலும், நானும் ஆரம்ப நாளிலிருந்தே அவரை நிக்க வெச்சு எதிர்த்துப் பேசுவேன். ஆனா, அதுக்கும் சேர்த்து அதிகமாகிட்டே போகும் வசவு. வரிசையா விழும் இப்படி...

``ஏண்டி இப்படி எழவா கொட்ற?............ நாயே, ............., ............. முண்டம்.”

கெடைக்கறதை வாங்கிப்பேன்.

``தரித்திரம் பிடிச்சிருக்கு...” - அன்னிக்கு வெள்ளிக் கிழமையும் அதுவுமா யார் அப்படிச் சொல்லுவாங்கன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா? நல்லவேளை... இத்தனை வயசுக்கப்பறமும் ஏதோ ஒரு வேலைக்குப் போறார். அவர் வைராக்கியம் எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனாலும் திரும்பிப் பார்க்கறதுக்குள்ள சாயங்காலம் மணி நாலு... நல்ல மூடுல இருக்கார்னு நெனச்சு எப்பவும் போல ஏதாவது கேப்பேன்.

``டிபன் தரயா மொதல்ல? மத்ததெல்லாம் அப்பறம்

சொல்றேன். சரியான புடுங்கல்டி நீ...” – அவர்.

சொத்தைக் கத்தரிக்காய்: உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பூச்சின்னு சொல்லி என்னை முழுசாவே தூக்கி எறிஞ்சுடுவாங்க. ஆனா, என்னை பாத்து பாத்து வேஸ்ட் பண்ணாம யூஸ் பண்ற நீ. ஒன்னப் போய் இப்படி திட்றானே...

ஷ்... திட்றானே இல்ல... `திட்றாரே'ன்னு சொல்லு. எனக்குக் கெடைக்கற பாராட்டெல்லாம் உங்ககிட்டேருந்துதான்...

“இன்னுமா நீ லஞ்ச் ரெடி பண்ணல? சனியனே... லேட்டாச்சுன்னா எனக்குதான் ஆபீஸ்ல மெமோ கெடைக்கும். ... உனக்கென்ன? மூதேவி... மூதேவி'' – என் அவர்

முருங்கைக்கீரை: யாரு நல்லவர்னு சொல்றது? உம்புருஷந்தான் சரியான முண்டம். பின்ன? எத்தனை பொறுமையா என்னை தினமும் பறிச்சு ஆய்ஞ்சு சமைக்கிற நீ?

போடி போக்கத்தவளே... எங்க குடும்ப வசவுடி `முண்டம்’. அதை நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?

அரிசி: அக்கா நீங்க கிரேட்கா. டயட்னா என்னகூட விட்ருவாங்க. ஆனா, நீங்க எப்போதும் உங்க வீட்ல வேணுங்க்கா..

ம்... என் பசங்க எப்போதும் எங்கிட்ட ‘எப்படிதான் அப்பாவோட இந்த வசவெல்லம் பொறுத்துக்கறியோ’ன்னு திட்டுவாங்க.. அப்பாகிட்டயும் போய் அம்மாவைத் திட்டாம பேசுப்பான்னு சொல்லிப் பாத்தாங்க. ஒண்ணும் நடக்கல. இப்ப பேரன்களும் பேத்திகளும் முயற்சி பண்றாங்க. புது வருஷத் தீர்மானம் மாதிரி, வருஷத்துக்கு ரெண்டு வசவு புதுசா ஏறுமே தவிர, எதுவும் கொறையல.

“... கட்டையில போறவளே”- வேற யாரை? என்னதான் சொல்றாரு. ஆனா ஒண்ணு. இதோட அர்த்தத்தைப் புரிஞ்சுகிட்டு அவர் திட்டலேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா... நாளைக்கு நான் வேணுமே அவருக்குத் திட்ட. மறு நாளைக்கும் வேணும், மறுபடியும் திட்ட... மறு நாளும் வேணும்…

அவருக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச வசவு `முண்டம்’ தான். எனக்கு ஏன் பிடிக்கும்னா, புதுசு புதுசா ஏதாவது திட்டினா, வருத்தப்பட்டு அழுது அது பழக நாளாகுமே! ஆனா, முண்டத்துக்கு நல்லா பழகிட்டேன். இன்ஃபாக்ட் பேர் சொல்லி கூப்டாலே திடீர்னு புதுசா இருக்கும்.

வாழைப்பூ: உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல? எத்தனை அடிச்சாலும் தாங்கற வடிவேலு மாதிரி, உரிக்க உரிக்க புதுப் பூவா வாழைப்பூக்குள்ள வந்துட்டே இருக்குமே, அது மாதிரிதான், அதான் என்னை மாதிரியேதான் நீயும்னு சொன்னேன்...

(வசவு தொடரும்)

குடுத்து வெச்சுருக்கணும்!

வூட்டுக்காரருகூட சில நேரம் சிலருக்கு நல்லா அமைஞ்சுடுவாங்க. ஆனா, நம்ம ஊர்ல ஆட்டோக்காரன் நல்லா அமையறது ஈஸியே இல்ல. அதுக்கு குடுத்து வெச்சுருக்கணும்!

அன்னிக்கு திடீர்னு என்னவோ அப்படிதான் தோணுச்சு.

அதுவும் என் ராசி பாருங்க. எப்போ பார்த்தாலும் எனக்குன்னு வந்து வாய்க்கும் ஓர் ஆட்டோ. சமயத்துல ஆட்டோவே கிடைக்காதது வேற. நான் ஒரு எடத்துக்குப் போணும்னு கேட்டா, அவன் ‘ஆட்டோ வராதும்மா. வேற ரூட் போவுது’ம்பான். ஆட்டோவே கெடைக்காம அப்படியே நின்னுக்கிட்டிருப்பேன். அதுக்குன்னு ஆட்டோ போற எடத்துக்கு நான் போக முடியுமா? நல்லா இருக்கு! நான் போற எடத்துக்கு தான் ஆட்டோ வரணும். பழி சண்டை போடுவோம்.

அப்பா படுத்த படுக்கை. அப்ப ஒருநாள் வீல் சேரு, கம்மோடு, இன்னும் என்னவோல்லாம் உடனே வாங்கியாவணும்னு ஒரு நெலமை. மழை வேற கொட்டுது. லோலோன்னு ஆட்டோல சுத்த வேண்டியிருந்துச்சு. அங்க கொஞ்சம் வெயிட்டிங், இங்க கொஞ்சம் வெயிட்டிங். நான் வாங்கின சாமானை ஆட்டோல தூக்கி வெக்க ஹெல்ப்பு வேற வேணும். திடுப்புனு நெனச்சுகிட்டு, தி.நகருக்கு வேற போகச் சொன்னேன். தவிர, நடுவுல என் பேரனை பிக்கப் பண்ணி டிராப் பண்ணவேண்டி இருந்துச்சு.

பெண் எழுத்து: 80 கி.மீ ஸ்பீடு

கொண்டுவிட்டு, கூட்டிட்டுப் போக என்ன கட்டினவருக்கு எங்கே நேரம்? அப்படியே நேரம் இருந்தாலும், மனசு இருந்தாதான் தேவலையே? அதான், எங்க போணும்னாலும் ஆட்டோவத்தான் கண்கண்ட தெய்வமா நம்பிகிட்டிருந்தேன்.

அன்னிக்கு நல்லவேளை... நல்ல ஆட்டோவா கெடச்சது.

இதுவே எப்போதும் எனக்குனு ஆப்பட்ற ஆட்டோவா இருந்திருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா?

இதோ இப்படிதான் நடந்திருக்கும் சண்டை...

“ஏம்பா மவுன்ட் ரோடு போகணும். ரெண்டு மூணு கடைக்குப் போணும்பா.”

“வெயிட்டிங்லாம் முடியாதுமா. வேண்ணா டிராப் பண்றேன். 180 ரூபா குடு”.

“என்னப்பா இத்தனை கிட்டத்துல இருக்கு. 60 தரேன். டிராப் மட்டும் பண்ண 180 எல்லாம் முடியாது.”

“மழை பெய்யுது. பெட்ரோல் வெலை ரொம்ப ஏறிப் போச்சு.”

“நல்லாருக்குப்பா! பலே! என்ன கால்குலேஷன்! அடுத்த ரெண்டு வருஷத்துல இனிமே ஏறப்போற பெட்ரோல் வெலைக்கும் சேர்த்து இல்ல நீ கேக்கற. அட ‘டிஸ்கவுன்டிங்’லாம் ஒனக்கு நல்லா தெரியுது! நீ என்ன இதுக்கு முன்னால ஏதாவது பேங்க்குல வேலை செஞ்சியா?’

“படிச்சுட்டோம்னு என்ன அனாவசியப் பேச்சு? நீங்கள்லாம் ஹார்லிக்ஸ் குடிக்கறவங்க. நாங்க என்ன டீ குடிக்கறவங்கதானே. அதான் தெம்பா இஷ்டத்துக்கு பேசறீங்க...”

“என்னப்பா யாரு தெம்பா பேசறது? நீயா? இல்ல நானா? எனக்கு சர்க்கரையில்லாத வெறும் தண்ணி காபிதான் (இவன் வேற தண்ணில இருப்பான் போல?). இதெல்லாம் எதுக்கு உங்கிட்ட சொல்லிகிட்டு? நீ கெளம்பு. நா வேற ஆட்டோ பாத்துக்கறேன்.''

“110 குடு. டிராப் ஒண்டி பண்றேன்”

“75 தரேன். ஆனா, வெயிட் பண்ணணும். ரெண்டு கடை போகணும். இல்ல ரெண்டாவது கடையிலாவது டிராப் பண்ணுவியா?”

“ரொம்ப வெயிட்டிங் போட்றுவீங்க. என்ன ஒரு அஞ்சு நிமிஷம் ஆவுமா?”

பெண் எழுத்து: 80 கி.மீ ஸ்பீடு

“15 நிமிஷமாவலாம்”

“இப்படிதான் மொதல்ல 15 நிமிஷம்பீங்க. அன்னிக்கு ஓர் அம்மா ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுக்குள்ள போச்சு... போச்சு... வரவேல்ல. லாங்லேருந்து வேற வந்தோம். எனக்கு நஷ்டம்தான் அன்னிக்கு.”

“ஏம்பா நான் கடைக்குள்ள போய் ஆட்டோ டயத்தையே நெனச்சுகிட்டிருந்தா கையும் ஓடாது, காலும் ஓடாது. வேலையை எங்கேருந்து மடமன்னு முடிக்கறது?”

“ஏம்மா நீங்க பொடவக் கடைக்கு போவீங்க. நேரந்தெரியாம செலக்ட் பண்ணுவீங்க. ஆனா, நாங்க கேட்கக் கூடாது!”

“ஆமா நீ எப்படி கேட்கலாம்? எம்புருஷன் கேட்டாலும் எனக்குப் புடிக்காது. ஆனா, நான் பொடவக் கடைக்கு போகலப்பா. அது தெரியாம ஏதோ பேசிகிட்டு...”

மச்சினரு, ஓரகத்தி சண்டை மாதிரி போயிகிட்டே இருக்கும்.

“எவ்ளோ தருவேன்ற?”

“நான் வேற ஆட்டோ பாத்துக்கறேன். கெளம்பு.”

“இதப்பாரும்மா வெயிட் பண்ணி கூட்டிட்டு வறேன். 300 ரூபா தா?”

“உன் இன்ஃப்ளேஷன் ரேட்டு எனக்கு சரிவரல. நீ போப்பா... கெளம்புன்னேன்”

“எதுக்கெல்லாமோ செலவழிப்பாங்க. ஆட்டோக்கு குடுக்க மனசு வராது” - இதை முணுமுணுத்துகிட்டே ஸ்பீடா போயிட்டான்.

நல்ல வேளை! அன்னிக்கு கெடச்சது நான் நெனச்ச மாதிரியான ஆட்டோ இல்ல. நான் இருந்த டென்ஷனுக்கும் அவசரத்துக்கும் அலைச்சலுக் கும் அந்த மழைக்கும் ஆட்டோ நெஜம்மாவே அமைஞ்சதுன்னுதான் சொல்லணும்.

அட அட... அடா... கல்யாண வீட்ல அழைக்கற மாதிரி வாங்க வாங்கன்னு சொல்லி ஆட்டோல ஏத்தினான். வேணுங்கற கடைக்கு போங்கன்னான். அரை மணிக்கும் மேல பொறுமையா காத்துக்கிட்டிருந்தான். மழை கொட்டு கொட்டுனு கொட்டிச்சு. சாமானை தூக்கி வண்டில ஏத்தினான். அப்பறம் வேற வேற வேலை. மொதல்ல சொன்னேனே... இங்க அங்கன்னு சுத்தல். வீடு வந்து சேர்ந்தோம். காசு அவன் எத்தனை கேட்டான்னு நெனைக்கிறீங்க?

“நீங்க கொடுக்கறதைக் குடுங்கம்மா”ன்னான்.

“ஏம்பா இப்படி இருந்தா எப்படி பொழைப்பே?”

எனக்கு எவ்ளோ இளகின மனசு பாத்தீங்களா? பல சமயம் ஆட்டோ ரேட் ஜாஸ்தின்னு வெந்நீரா மனசு கொதிக்குது. ஒண்ணு ரெண்டு பேரு கம்மியா கேட்டுட்டாங்கன்னா போச்சு. அப்படியே ஐஸ் கட்டியா உருகிடுது மனசு!

“ஒடம்பு சரியில்லாத பெரியவருக்கு மழையில வந்து வீல் சேரெல்லாம் வாங்கறீங்க. பாத்து குடுங்கம்மா.”

“என்ன 180 தரட்டுமா?”ன்னேன்.

“220 குடுங்க”ன்னான். குடுத்தேன். இவன் 300 கேட்டாலும் தாராளமா குடுத்திருப்பேன். என்ன பணிவு? என்ன நல்ல சுபாவம்? வீட்டு வராண்டாவுல சாமானை எறக்கி வெச்சான். உள்ள எட்டிப் பாக்கறேன். அம்மா எனக்காக காத்துக்கிட்டு நிக்கறாங்க.

“வரேம்மா”ன்னு சொல்லிட்டு ஆட்டோக்காரன் போயிட்டான். இருட்டிடுச்சு. என் வீட்டு வாசல்லேயே அவனுக்கு அடுத்த சவாரி கெடச்சது. அந்தப் பொண்ணும் அதிர்ஷ்டக்காரிதான். வூட்டுக்காரருகூட சிலருக்குச் சில சமயம் நல்லா அமைஞ்சுடுவாங்க. ஆனா, நம்ம சென்னைல ஆட்டோக்காரன் நல்லா அமைய குடுத்துதான் வெச்சுருக்கணும். என்ன சரிதானே நான் சொல்றது!