Published:Updated:

வாழ்க்கையில் வீசிய புயல்கள்... உழைப்பால் கரை சேர்ந்த செல்வராணி

செல்வராணி
பிரீமியம் ஸ்டோரி
செல்வராணி

- பிசினஸ் பெண்ணின் வெற்றிக்கதை!

வாழ்க்கையில் வீசிய புயல்கள்... உழைப்பால் கரை சேர்ந்த செல்வராணி

- பிசினஸ் பெண்ணின் வெற்றிக்கதை!

Published:Updated:
செல்வராணி
பிரீமியம் ஸ்டோரி
செல்வராணி

படிப்புக்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கான உதாரண வெற்றியாளர்களில் ஒருவர் செல்வராணி. இவரது வாழ்க்கையில் வீசிய புயல்கள் ஏராளம். துவண்டுபோய் உட்காராமல் தடைகளைக் கடக்கப் பழகியவர், ஃபேஷன் தொழிலால் கரை சேர்ந்திருக்கிறார். தளராத நம்பிக்கையாலும் உழைப்பாலும் வெற்றியை வசப்படுத்தியிருக்கும் செல்வராணி, லட்சங்களில் வருமானம் ஈட்டும் நம்பிக்கைத் தொழில்முனைவோர்.

“ராமநாதபுரம் மாவட்டத்துல குக்கிராமத்தைச் சேர்ந்தவ நான். எங்க குடும்பத்துல பெண் பிள்ளை களை ஸ்கூலுக்கு அபூர்வமாதான் அனுப்புவாங்க. எட்டாவது வரைதான் படிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகுதான் வெளியுலகமே தெரிஞ்சது. சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்கூல்ல டீச்சரா சில காலம்

வேலை செஞ்சேன். பிறகு, மகளிர் சுய உதவிக்குழுக் களைத் தொடங்கி, பெண்களுக்குப் பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்தேன். அந்தக் குழுக்களுக்கான வேலையுடன், பெண்களுக்கான ஆடைகளை மதுரையில இருந்து வாங்கிட்டு வந்து, எங்க ஊர்ல வீடு வீடா கொண்டு போய் வித்தேன். வடகம் விற்பனையும் செஞ்சேன்.

வாழ்க்கையில் வீசிய புயல்கள்... உழைப்பால் கரை சேர்ந்த செல்வராணி

சகோதரர்களோடு சேர்ந்து சொந்தப் படகுகள்ல மீன்பிடித் தொழில் செய்தார் கணவர். நல்லபடியா போயிட்டிருந்த வாழ்க்கை, சுனாமியால நிலை குலைஞ்சுபோச்சு. ஆழிப்பேரலை தாக்குதல்ல எங்க மூணு படகுகளும் முழுமையா சேதாரமாகி நிறைய கடன் பாதிப்புகள். அடுத்தகட்ட நகர்வுக்கான பாதையே தெரியாம கலங்கினோம். வேறு வழியில்லாம அந்தமான்ல சில காலம் வேலை செஞ்சார் கணவர். ஒருகட்டத்துல கைவசம் இருந்ததை யெல்லாம் வித்து கடனையெல்லாம் அடைச்சோம். எந்தச் சேமிப்பும் இல்லாம, வெறும் நம்பிக்கையோடு 2008-ல் சென்னை வந்தோம். அடுத்து என்ன பண்றதுனு தெரியாம, மொத்தக் குடும்பமும் தவிச்ச அந்த நினைவுகள் வலி மிகுந்தவை” என்று நெகிழ்ச்சியாகக் கூறும் செல்வராணிக்கு, ஃபேஷன் தொழில் பெரிதாகக் கைகொடுத்திருக்கிறது.

“கணவர் தனியார் நிறுவன வேலைக்குப் போனார். டெய்லரிங் கடையில பட்டன் தைக்கும் வேலையுடன், வீட்டு வேலைக்கும் போனேன். ஒருகட்டத்துல வீட்டுல இருந்தபடியே பழைய துணிகளைத் தைச்சேன். அந்த வருமானத்துல பயிற்சி வகுப்புக்குப் போனேன். பெண்களுக்கான ஆடைகளைத் தைச்சுக் கொடுத்ததுடன், ஹோல் சேலா ஆடைகளை வாங்கிட்டு வந்து ரீடெய்ல் விற்பனையும் செஞ்சேன். பேங்க் லோன்ல மெஷின் வாங்கி, டெய்லரிங் ஷாப் தொடங்கி, படிப்படியா தொழிலை விரிவுபடுத்தினேன்.

வாழ்க்கையில் வீசிய புயல்கள்... உழைப்பால் கரை சேர்ந்த செல்வராணி

சோதனைக்கு மேல சோதனையா, ஒரு விபத்துல அபாயகட்டத்தைக் கடந்து உயிர் பிழைச்சார் என் கணவர். சேமிப்பெல்லாம் மறுபடியும் கரையவே,

ஒரு வருஷம் பெரிய போராட்டம்தான். தளராம மீண்டும் நம்பிக்கையோடு உழைச்சோம். மேல் சிகிச்சைக்காகக் கணவர் மலேசியா போனார். அவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம் அங்கிருக்கிற ஜவுளிக்கடைகள்ல ஆர்டர் கேட்டு ஏறி இறங்கினேன். ஒருகட்டத்துல ஆர்டர்கள் வரவே, சென்னையில தைச்சு விமானத்துல டெலிவரி பண்ணியிருக்கேன்.

ராத்திரி பகலா வேலை செஞ்சதுடன், ஃபேஷன் துறை அனுபவங்களைத் துல்லியமா கத்து கிட்டேன். முழுமையா குணமான கணவரும் என்னோட தொழில்லயே இறங்கினார்.

பிசினஸ் நல்லபடியா போயிட்டி ருந்த நிலையில, சென்னை பெருவெள்ளத்தால பெரிய நஷ்டம். ஆனா, விரைவா மீண்டு வந்தோம். ஆர்டர்களுக்காகவே மாதம்தோறும் மலேசியா போய், அங்க பல இடங்கள்ல ஸ்டால் போடுவேன். அமெரிக்க வாடிக்கையாளர் களுக்கும் டெலிவரி அனுப்புவோம்.

ஸ்கூல் யூனிஃபார்ம், மாநகராட்சி ஊழியர்களுக்கான யூனிஃபார்ம், பல்வேறு நிறுவன ஆர்டர்கள், கல்சுரல் ஈவன்ட் ஆர்டர்கள்னு ஓய்வில்லாம வேலை இருக்கும். சென்னைக்கு வரும் வெளிநாட்டினர் பலரும் எங்க கடையைத் தேடி வருவாங்க. சின்னத்திரை பெண் பிரபலங்கள் பலரும் எங்களோட வாடிக்கையாளர்களா இருக்காங்க”

- உழைப்பால் உயர்ந்த அனுபவம் சொல்லும் செல்வராணி, தற்போது ஐந்து டெய்லரிங் யூனிட்டுகளை நடத்தி வருவதுடன், முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார். மாதம்தோறும் சில லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி அசத்துபவர், கொரோனா காலத்தில் மக்களுக்குப் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

வாழ்க்கையில் வீசிய புயல்கள்... உழைப்பால் கரை சேர்ந்த செல்வராணி

“கொரோனாவுக்குப் பிறகு, ஆர்டர்கள் குறைஞ்ச நிலையில, கடந்த ஜனவரியில இருந்து இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பிச்சோம். கொரோனா ரெண்டாவது அலை யால உள்ளூர் ஆர்டர்கள் மட்டுமே வந்தாலும்கூட இப்பவும் சிறப்பான வருமானம் கிடைக்குது.

இத்தனை கஷ்டங்கள், சவால்களாலதான் எங்களோட பலத்தைத் தெரிஞ்சுகிட்டோம். தடைகளை எதிர்கொண்டு, சிரமம் பார்க்காம உழைக்கத் தயார்னா, சுயதொழில்ல நிச்சயமா சாதிக்கலாம்”

- உதாரண மனுஷியாகப் புன்னகைக்கிறார் செல்வராணி.