Published:Updated:

குழந்தைகளுக்கு இணையான அன்பையும் அக்கறையையும் பெரியவங்களுக்கும் கொடுக்கணும்! - சுகந்தி

நம்பிக்கை மனுஷி

பிரீமியம் ஸ்டோரி

சென்னை வண்டலூரை அடுத்த கண்டிகை யிலுள்ள சுகந்தியின் வீட்டுக்குச்சென்றதும், வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சாய் குமரன் புன்னகைத் தவழ வரவேற்றான். எட்டு மாதக் குழந்தையான குமரன் அந்த வீட்டின் புதிய வரவு. வரவேற்பறையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் ஜானகி பாட்டிக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்துவிட்டு, நம்முன் அமர்கிறார் சுகந்தி.

பிழைப்புத் தேடிச் சென்னை வந்தவர், எதிர்கொண்ட சவால்களும் சிரமங்களும் ஏராளம். ஒருகட்டத்தில் ‘ஹோம் நர்சிங்’ தொழிலை நேசித்துச்செய்தவர், தற்போது தன் வீட்டையே காப்பகமாக மாற்றியிருக்கிறார். வீட்டிலுள்ள வயதானவர்கள் இருவரும், உணர்வால் ரத்த சொந்தம்போல குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாகவே வசிக்கிறார்கள். அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. குமரனைத் தொட்டிலில் இட்டு ஆட்டிக்கொண்டே பேசுகிறார் சுகந்தி.

“பூர்வீகம்... மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பக்கம். வசதியான குடும்பம். வ.உ.சிதம்பரம் பிள்ளை மகள் வழி சொந்தம் நாங்க. என்னுடன் பிறந்தவங்க அஞ்சு பேர். ஒன்பதாவது படிக்கிறப்போ படிப்பை நிறுத்தி, சொந்தத் தாய்மாமன் மகனையே எனக்குக் கல்யாணம் செய்து வெச்சாங்க. அவருக்கு இதயப் பிரச்னை இருந்ததால, எந்த வேலைக்கும் சரியா போகாம அடிக்கடி காணாமல் போயிடுவார். அப்புறம் எங்கயாவது ஒரு ஊர்ல இருந்துகிட்டு லெட்டர் அனுப்புவார். அவரைக் கண்டுபிடிச்சுப் போய் அங்கேயே வாடகைக்கு வீடு பிடிச்சு வசிப்போம். இப்படியே ஆறு வருஷங்கள்... எக்கச்சக்க ஊர் மாறியாச்சு. வருமானம் இல்லாம, பெத்தவங்க தயவுலதான் வாழ்ந்தேன். இப்படியே வாழ்றது சரிவராதுன்னு, 1987-ல் சென்னைக்கு வந்தோம்.

குழந்தைகளுக்கு இணையான அன்பையும் அக்கறையையும் பெரியவங்களுக்கும் கொடுக்கணும்! - சுகந்தி

பல ஊர் மாறினாலும், வீட்டுக்காரர் குணம் மட்டும் மாறவேயில்லை. என்னை நம்பி கைக்குழந்தைங்க ரெண்டு பேர் இருந்தாங்க. அப்போ நாங்க வசிச்ச வளசரவாக்கத்துல இருந்த பீர் கம்பெனிக்கு வேண்டாவெறுப்பா வேலைக்குப் போனேன். செருப்புப் போட்டாதான் கம்பெனிக்குள்ள விடுவாங்க. அப்போ செருப்பு வாங்ககூட காசில்லை. கம்பெனிக்குள்ள இருக்கும் தோழிங்க அவங்க செருப்பை காம்பவுண்டுக்கு வெளியே தூக்கிப் போட, அதைப் போட்டுக்கிட்டு நான் கம்பெனிக்குள்ள போவேன்.

சாராயக் கம்பெனியில வேலை செய்ததால பலரும் ஏளனமா பேசுவாங்க. கழுவுறப்போ பீர் பாட்டில் உடைஞ்சு கையைக் கிழிச்சு ரத்தம் வர்றதெல்லாம் வாடிக்கை. கம்பெனிக்குள் பாத்ரூம்ல உட்கார்ந்து தினமும் அழுவேன். தற்கொலை பண்ணிக்கலாம்னுகூட அப்பப்ப தோணும். ஒருகட்டத்துல அந்த வேலையை விட்டுட்டு, கூடையில காய்கறிகளைச் சுமந்து வீதி வீதியா வித்தேன். அப்புறம் வடபழனியில கார்மென்ட்ஸ் கம்பெனியில் சேர்ந்தேன்” என்பவர், அதன் பிறகும் ஏராளமான வேதனை களை எதிர்கொண்ட நிலையில், தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு நம்பிக்கையுடன் வாழ முடிவெடுத்திருக்கிறார்.

“அப்போ என்னோட மாச சம்பளம் 480 ரூபாய். அதுலதான் குடும்பத்தை நடத்தி யாகணும். வீட்டுக்காரருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. ஆனா, நான் அஞ்சு பத்து சேர்த்து வெச்சா, அதை எடுத்துட்டு சினிமா, ஹோட்டல் சாப்பாடுன்னு குடும்ப சூழல் புரியாம செலவு பண்ணுவார். நிறைய கடன் வாங்கிடுவார். அந்த பாரமும் என் மேலதான் விழும். ரேஷன் அரிசி வாங்கவே சிரமப்பட்டேன். கணவருக்கும் பசங்களுக்கும் மட்டும் சாப்பாடு செஞ்சு வெச்சுட்டு, ரெண்டு வருஷங்கள் பெரும்பாலும் பட்டினியாகவேதான் இருந்தேன். கார்மென்ட்ஸ் கம்பெனியில ரெண்டு வேளைக்கு டீ, பிரெட் அல்லது பிஸ்கட் கொடுப்பாங்க. அதைத் தோழிங்க எனக்கே கொடுத்துடுவாங்க. அதுதான் எனக்கு ரெண்டு வேளைக்கான உணவு.

வீட்டுக்காரர் ஒருமுறை வழக்கம்போல காணாமல் போயிட்டார். சென்னையிலிருந்து வீட்டைக் காலி பண்ணி பெத்தவங்க வீட்டுக்குப் போனேன். ‘புருஷன், பெத்தவங்க தயவில்லாம வாழ முடியாது’ன்னு பலரும் ஏளனமா பேசினாங்க. எட்டு வயசுப் பையனை மட்டும் அவங்க தயவுல விட்டுட்டு, அஞ்சு வயசு மகளைக் கூட்டிட்டு மறுபடியும் சென்னை வந்தேன்'' என்பவர், ‘ஜீரோ’ நிலையிலிருந்து சுயமாக மீண்டும் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு இணையான அன்பையும் அக்கறையையும் பெரியவங்களுக்கும் கொடுக்கணும்! - சுகந்தி

''கணவர் இல்லாத நிலையில, என்னை அக்கம்பக்கத்தினர் காயப்படுத்திப் பேசினாங்க. எல்லா வகையிலும் கஷ்டங்கள். இனி வாழ வேண்டாம்னு, மகளுடன் தற்கொலை செய்துக்க கோடம்பாக்கம் ரயில் நிலையம் போனேன். இருட்டுல நம்ம முகம்கூட சரியா தெரியாம, யாருக்கும் சிரமம் வைக்காம செத்துடணும்னு கடைசி ரயிலுக்காக மகளுடன் காத்திருந்தேன். கண்ணீர் அருவியா கொட்டுது. தூரமா ரயில் வரும்போது தண்டவாளத்துக்குப் பொண்ணைக் கூட்டுட்டு வந்தேன். பார்வையற்ற மூணு பேர் தண்டவாளத்தைக் கடக்கும்போது, அதுல ஒரு பெண்ணின் பாவாடை ட்ராக்ல சிக்கிடுச்சு. உடனே அவங்களுக்கு உதவி செஞ்சு, பாதுகாப்பா மேல கூட்டிட்டு வந்தேன்.

அந்தப் பெண் என் கையைப் பிடிச்சு, ‘நன்றி சிஸ்டர். உங்களாலதான் உயிர் பிழைச்சேன்’னு சொன்னார். ‘பார்வையில்லாம, வாழ்வாதாரம் இல்லாத நிலையில்கூட அவங்கள்லாம் நம்பிக்கையுடன் வாழறாங்க. நாம கோழையா ஆகிட்டோமே’ன்னு எனக்குள் நியாயமான கேள்வி எழுந்துச்சு. ‘நீங்கதான் எங்களைக் காப்பாத்தியிருக்கீங்க’ன்னு பதிலுக்கு நன்றி சொன்னேன்.

தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு, மகளைக் கூட்டுட்டு வீட்டுக்கு வந்தேன். வேறு கார்மென்ட்ஸ் கம்பெனியில ஓயாம வேலை செஞ்சேன். ஒருகட்டத்துல முதுகு வீங்கித் தொடர்ந்து தையல் வேலை செய்ய முடியலை. அப்புறம் பியூட்டி பார்லர்லயும், விளம்பரப் படங்கள்ல நடிக்கும் நடிகைகளுக்கு ஹேர் டிரஸ்ஸராகவும் சில வருஷங்கள் வேலை செஞ்சேன். இந்த நிலையில, காணாமல் போன என் கணவர் 14 வருஷங்கள் கழிச்சு வீட்டுக்கு வந்தார். அப்போகூட அவரை நல்லபடியா பார்த்துக்கிட்டேன். ஆனா, அடுத்த சில மாசத்துலேயே இறந்துட்டார்” என்கிற சுகந்தி, பலமான பெருமூச்சுடன் இடைவெளிவிடுகிறார்.

“இதுக்கிடையே சென்னை, அண்ணாநகர்ல இருக்கிற `அநியூ' (anew) மையத்துல, 36 வயசுல நர்சிங் கோர்ஸ் படிச்சேன். அந்த மையத்தின் மூலம்தான் எனக்குப் புது உலகம் பிறந்துச்சு. பிறகு, வயசானவங்களைப் பார்த்துக்கிற ஹோம் நர்ஸா வேலை செஞ்சேன்.

இயக்குநர் ஶ்ரீதர் சார், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் சார் ஆகியோரின் வீடுகளில் சில காலம் வேலை செஞ்சேன்.

அதிகாலையிலேயே சுப்புலட்சுமி அம்மாவைக் குளிப்பாட்டிவிடுவேன். பூஜை ரூம்ல பக்தியுடன் அவங்க சுப்ரபாதம் பாடுறதைப் பக்கத்துல இருந்து கேட்கும் கொடுப்பினை எனக்குக் கிடைச்சது. 17 வருஷங்கள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டில் நர்ஸா வேலை செஞ்சேன். இந்த நிலையில, கடைசியா ஒரு காப்பகத்துல வேலை செஞ்சப்போ அங்கிருந்த ஏராளமான வயசானவங்களைப் பார்த்துக்க சில நர்ஸ்தான் இருந்தாங்க.

வயசானவங்க தங்கள் கடைசி காலத்துல பக்கத்துல இருந்து யாராச்சும் அவங்க சொல்றதைக் காதுகொடுத்துக் கேட்க ஆசைப்படுவாங்க. அதுவும், சரியான கவனிப்பும் அங்கிருந்த வயசானவங்களுக்குக் கிடைக்கலை. அது எனக்குப் பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துச்சு. எனவே, 2017-ல் வெளி வேலைக்குப் போறதைக் குறைச்சுக்கிட்டேன். என் வீட்டுலயே வயசானவங்களைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். இதுவரை ஏழு பேரைக் கவனிச்ச நிலையில, இப்ப ஜானகி அம்மாவும், அபுபக்கர் அப்பாவும் மட்டுமே என் வீட்டில் இருக்காங்க.

வெவ்வேறு காலகட்டத்தில் வந்த இவங்க இருவரும் என் வீட்டில் இருக்கும் உறவினர்கள்போலத்தான். எல்லோருக்கும் ஒரே சமையல்தான். ஒரே நேரத்துல ஒண்ணா உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். ஜானகி அம்மா சைவம். ஆனா, எந்தப் பாகுபாடும் பார்க்க மாட்டாங்க. நாங்க அசைவம் சாப்பிடும்போது, எங்களோடு உட்கார்ந்து சைவ உணவு சாப்பிடுவாங்க. இருவரையும் குளிப்பாட்டி விடுறது, பாத்ரூம் கூட்டிட்டுப் போறது, மருந்து மாத்திரைகளைச் சரியா கொடுத்துப் பராமரிக்கிறதுன்னு எல்லா வேலையையும் கடமைக்குன்னு செய்யாம, என் பெத்தவங்களுக்குச் செய்றதா நினைச்சுதான் செய்றேன். இவங்க இருவரின் பிள்ளைகளும் வாரந்தோறும் வந்து பார்த்துப்பாங்க. வருமானம் கிடைப்பதைத் தாண்டி, இந்த வேலையை நேசிச்சு செய்றதால ஆத்ம திருப்தி கிடைக்குது” என்று சுகந்தி சொல்லிக்கொண்டே போக, அவருடைய வாழ்க்கைப் பயணம் நமக்கு மிரட்சியையும், நம்பிக்கையையும் சேர்த்துக்கொண்டே இருந்தது.

அருகில் இருந்த ஜானகி பாட்டி பக்கம் நாம் கவனத்தைத் திருப்ப, “பி.ஏ படிச்சுட்டு, தனியார் சிமென்ட் கம்பெனியில நல்ல வேலையில் இருந்தேன். உடல்நிலை சரியில்லாத நிலையில், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சுகந்தி வீட்டுக்கு வந்தேன். கடைசி காலத்துல எந்த வருத்தமும் இல்லாம, இங்க கூட்டுக் குடும்பம் மாதிரி ஒண்ணா வசிக்கிறோம்” என்றார் ஜானகி பாட்டி மகிழ்ச்சிப் பொங்க.

தூங்கி எழுந்த சாய் குமரன், மாறாப் புன்னகையுடன் வீட்டை வலம்வர, அவனைக் கட்டியணைத்துக்கொள்ளும் சுகந்தி, தொடர்ந்தார்... “தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு மக இருந்த நிலையில், மீண்டும் அந்தப் பெண் கர்ப்பமானாங்க. குழந்தையைப் பெத்தெடுக்க மனசில்லாத அந்தப் பெண்ணுக்கு ஏழாவது மாசத்துலயே இவன் பிறந்துட்டான். ஏற்கெனவே உறவினர் மூலம் அந்தப் பெண்ணோட அறிமுகம் இருந்ததால, 'நானே வளர்க்கறதா சொல்லியிருந்தேன். குறை பிரசவத்தில் பிறந்ததால ஆபத்தான நிலையில் இருந்த குமரனை, முறைப்படி தத்தெடுத்தேன். நல்ல முறையில் கவனிச்சு வளர்க்கிறதால, இப்போ ஆரோக்கியமா இருக்கான். இவன் எங்க வீட்டோட பொக்கிஷம். எந்நேரமும் என்கூடவே தான் இருப்பான்” என்பவர், நிறைவாக...

“குழந்தைகளைச் சின்ன வயசுல இருந்தே வீட்டிலுள்ள பெரியவங்களோடு அதிகம் பழக விட்டாதான், அவங்களுக்கு எப்போதுமே வயசானவங்கமீது அன்பு இருக்கும். வயசாகிட்டா பெரியவங்களும் குழந்தைகள் போல மாறிடுவாங்க. குழந்தைகளுக்கு இணையான அன்பையும் அக்கறையையும் பெரியவங்களுக்கும் கொடுக்கணும். இது நம்ம எல்லோருக்குமே பொருந்தும்” என்று சுகந்தி முடிக்க, அவர் மடியில் இருந்த சாய் குமரன், உலகத்தையே தன் வசப்படுத்தியதுபோல சிரிப்பால் கொள்ளைக்கொள்கிறான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு