சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“நான் மாறிட்டேன், சமூகமும் மாறணும்!”

சுனிதா
பிரீமியம் ஸ்டோரி
News
சுனிதா

எங்க சமூகப் பெண்கள் இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்திடணும்கிறது கட்டாயம். ரெகுலராவே நான் வேலை முடிஞ்சு ஆறு மணிக்குமேலதான் வீட்டுக்கு வருவேன்.

வடி பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் இருக்கிறது அந்த நரிக்குறவர் குடியிருப்பு. புழுதி படிந்த உடலில் உடையில்லாமல் வறண்ட தலையுடன் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, பெற்றோரும் அழுக்கு அப்பிய உடையில் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக் கிறார்கள். உதிர்ந்து சிதைந்த வீட்டுக்குள் இருந்து பட்டுப்புடவையில் பளிச்சென்று சிரித்தவாறு வரவேற்கிறார், இதே சமூகத்தின் அத்திப்பூ அடையாள மான சுனிதா. இந்தச் சமூகத்தில் அரசுப் பணிக்குச் சென்ற இரண்டாவது நபர். நடை உடை பாவனை என எல்லா வகையிலும் சுனிதாவின் மீது நவீனத்தைப் பூசியிருக்கிறது கல்வி.

“ரொம்ப பழைமையில ஊறின சமூகம் எங்களோடது. எங்க குடும்பத்துல நாங்க மொத்தம் எட்டுப் பிள்ளைங்க. ஒருத்தராவது கவர்மென்ட் வேலைக்குப் போகணும்னு எங்க அப்பா ஆசைப்பட்டார். ஆனா, அதை அடையறது சுலபமில்லைன்னு அவருக்குத் தெரியலை. வீட்டுல என்னைத் தவிர யாரும் ஸ்கூல் படிப்பைக்கூட முடிக்கலை. ஸ்கூல் முடிச்சு, போராடி டிப்ளோமா சேர்ந்தேன். இந்தக் காலனியில காலேஜ் போன முதல் நபர் நான்தான். ஸ்கூல்லயும் காலேஜ்லயும் எதுக்கெடுத்தாலும், ‘குருவிக்காரிச்சி’ன்னு என்னை அவமானப்படுத்துவாங்க. அழுது முடிச்சுட்டு, இவங்க சொல்றதுக்கு வருத்தப்பட்டா முன்னேற முடியாதுன்னு தைரியப் படுத்திப்பேன். ஆனா, வீட்டுல வேற மாதிரி பிரச்னை.

சுனிதா
சுனிதா

எப்பவும் அரட்டை, டிவி, ரேடியோன்னு எல்லா வீட்டுலேயும் ஒரே சத்தமா இருக்கும். ஒருநாள் நைட்டு ஒரு மணிக்கு பரீட்சைக்குப் படிச்சுட்டிருந்தேன். டிவி சத்தம் தொந்தரவா இருக்குன்னு நான் கெஞ்சியும் வீட்டுல யாரும் கேட்கலை. கோபத்துல டிவியை ஆப் பண்ணினேன். ‘பொட்டப் புள்ளைக்கு இவ்ளோ திமிரா?’ன்னு புளியங்குச்சியில என்னை அடி வெளுத்துட்டாரு அப்பா. காயம் ஆற ரெண்டு வாரமாச்சு. இப்படியெல்லாம் சிரமப்பட்டுப் படிச்ச பிறகும் வழிகாட்ட யாருமில்லை. பெத்தவங்க அதுவரைக்கும் காத்திருந்ததே பெரிய விஷயம். உடனே திருமணம் செஞ்சு வெச்சுட்டாங்க” என்கிறார் சுனிதா.

2009-ல் மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணி கிடைத்திருக்கிறது சுனிதாவுக்கு. இதனால் மகிழ்ச்சியடைய முடியாத அளவுக்குச் சொந்த சமூகத்திலேயே நெருக்கடிகள் எழுந்திருக்கின்றன.

“நான் மாறிட்டேன், சமூகமும் மாறணும்!”

“ஆண் காலனிக்குள்ள வண்டி ஓட்டலாம். ஆனா, ஆம்பளைங்க முன்னாடி பெண்கள் வாகனங்கள் ஓட்டவோ, வாகனத்துல உட்கார்ந்துகிட்டுப் போகவோ கூடாது. எங்க சமூகத்துல வீட்டு மொட்டைமாடியில் பெண்கள் ஏறக்கூடாது. அது வீட்டுக்குள் இருக்கிற கடவுளையும் ஆண்களையும் அவமதிக்கிறதா அர்த்தமாம். ஒருவேளை மீறிப் போயிட்டா, அவங்களை வீட்டோட ஒதுக்கி வெச்சுடுவாங்க. அதனாலயே, பெரும்பாலும் யாரும் மெத்தை வீடு கட்டமாட்டாங்க. பெண்கள் தங்களோட துணிகளை வீட்டு வாசல்ல காயப்போடக்கூடாது. வீட்டுக்குப் பின்னாடிதான் துணியைக் காயப்போடுவோம். சில பகுதிகளில் பெண்கள் செருப்பைக் கையிலதான் எடுத்துட்டுப் போகணும். இப்படியான மூட நம்பிக்கைகள்தான் எங்க மக்களோட முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கு.

சுனிதா
சுனிதா

எங்க சமூகப் பெண்கள் இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்திடணும்கிறது கட்டாயம். ரெகுலராவே நான் வேலை முடிஞ்சு ஆறு மணிக்குமேலதான் வீட்டுக்கு வருவேன். காலனியே தப்பாப் பேசும். பதவி உயர்வுக்கு அப்புறம் அடிக்கடி நைட் ஷிப்ட் டியூட்டி போடுவாங்க. அதனால எங்க சனங்களோட பேச்சு இன்னும் மோசமாச்சு. பல நேரங்களில் என் சிரமத்தைக் குறைக்கணும்னு கணவரே சமையல் செஞ்சுடுவார். அதனால பொண்டாட்டி தாசன்னு இவரையும் எங்க மக்கள் திட்டுவாங்க” என்று ஆதங்கத்துடன் கூறும் சுனிதா, கடந்த மாதம் உதவிப் பொறியாளராகப் பதவியுயர்வு பெற்றிருக்கிறார்.

“பட்டாபிராம் துணை மின்நிலையத்துல வேலை செய்ற எனக்கு, இப்ப 24 மணிநேரப் பொறுப்பு. வீட்டுக்கு வந்த பிறகு, ஸ்டேஷன்ல ஏதாவது பழுதுன்னு நள்ளிரவில் போன் வந்தாலும் உடனே போகணும். அப்போகூட ஸ்கூட்டியைத் தள்ளிகிட்டேபோய் காலனியைத் தாண்டிய பிறகுதான் ஓட்டிட்டுப் போவேன். ஒருநாள் நள்ளிரவில் போன் வரவே, அவசரமா போகணும்னு எங்க வீட்டு வாசல்லயே வண்டியை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிட்டேன். காலனிக்காரங்க ஆரம்பிச்ச சண்டை விடிய விடிய நடந்துச்சு. அப்போதிலிருந்து என்ன ஆனாலும், எல்லா நேரமும் வண்டியைத் தள்ளிட்டுதான் போறேன்.

‘காலனியை விட்டு ஊருக்குள்ள குடியேற வேண்டியதுதானே?’ன்னு நீங்க கேட்கலாம். எங்க குடும்பத்துல நடந்த மாற்றம், எல்லாக் குடும்பத்துலயும் நடக்க வேண்டாமா? மூடநம்பிக்கையால மூழ்கிக்கிடக்கிற இந்த மக்களுக்குத் தங்களோட அடையாளத்தை மாத்தக்கூடிய ஆயுதமான கல்வியின் அவசியம் மட்டும் புரியமாட்டேங்குது. இப்ப ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர்னு சிலர் படிக்கிறாங்க. ஆனா, அவங்களுக்குச் சரியான வேலை கிடைக்காம, மறுபடியும் வேட்டைத் தொழிலுக்குத்தான் போறாங்க.

குடும்பத்துடன்
குடும்பத்துடன்

தமிழ்நாட்டுல எங்க சமூகத்தைச் சேர்ந்த சில லட்சம் பேர்ல, வருஷத்துக்குப் பத்துப் பேர் டிகிரி முடிச்சாலே பெரிய விஷயம். அவங்களுக்காவது படிப்புக்கு ஏத்த வேலை கொடுத்தா, அதைப் பார்த்தாச்சும் நிறைய பெற்றோர் தங்கள் பிள்ளைங்களைப் படிக்க வெப்பாங்க. எம்.பி.சி பிரிவுல இருக்கதால அரசு ஒதுக்கீட்டுல பெரிசா எந்தச் சலுகையும் எங்களுக்குக் கிடைக்கிறதில்லை. எங்க மக்களின் பேச்சு, பாவனைன்னு புறத்தோற்றத்தைப் பார்த்து எந்தத் தனியார் நிறுவனத்துலயும் வேலை தர்றதில்லை. எங்க சமூகத்தில் படிச்ச இளைஞர்களுக்கு வேலை கிடைக்க யாராச்சும் உதவி செய்ங்க. இங்குள்ள எல்லாப் பிள்ளைகளும் படிச்சு முற்போக்குச் சிந்தனைக்கு மாறினாதான், எங்க சமூகம் மேன்மையடையும்” - அழுத்தமாகக் கூறும் சுனிதா, ஆன்லைன் வகுப்பைக் கவனித்துக்கொண்டிருக்கும் தனது பிள்ளைகளைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.

மனைவியின் கரங்களைப் பற்றிக்கொண்டு பேசும் சுரேஷ், “பத்து வயசுல வேட்டைத் தொழிலை ஆரம்பிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு நானும் கெளரவமான தொழில் செய்யணும்னு ஆசைப்பட்ட சுனிதா, டெம்போ வாங்கிக் கொடுத்து என்னை டிரைவராக்கினா. பிறகு, மாவிலைத் தோரணம் செய்ற தொழில் வெச்சுக் கொடுத்தா. எங்க அடையாளத்தை விட்டு வேறு தொழிலுக்கு வந்தாலும், மத்த சமூகத்தினர் எங்களைச் சக மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை. அதனால, ஆரம்பிச்ச தொழில் எல்லாமே நஷ்டம்தான். வேற வழியில்லாம வேட்டைத் தொழிலுக்கே வந்துட்டேன். படிக்காததால் இப்பவரை அவமானங்களைச் சந்திக்கறேன். ஆனா, என் மனைவியாவது கெளரவமா மதிக்கப்படணும்னுதான் நிறைய ஏளனப் பேச்சுகளைக் கேட்டும் இவ படிக்கவும் வேலைக்குப் போகவும் சப்போர்ட் பண்ணுறேன்” என்கிறார் புன்னகையுடன்.