
ஒரு நல்ல நிறுவனத்தின் தலைவருக்கு உவமையாக இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார் கிரண்.
கிரண் மஜும்தார் ஷா
`ஃபோர்ப்ஸ்' இதழ் 2019-ம் ஆண்டு வெளியிட்ட உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 65-வது இடத்தைப் பிடித்துள்ளார் கிரண். எந்த வணிகப் பின்புலமும் இன்றி இந்த உயரத்துக்கு கிரண் வரக் காரணங்கள் அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான். வங்காளப் பெற்றோருக் குப் பிறந்த கிரணின் வாழ்க்கையை யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் தந்தையின் வழிகாட்டலே திசை திருப்பியது. ‘மால்ட்டிங் மற்றும் புரூயிங்’ படிப்பை ஆஸ்திரேலியா வில் முடித்த கிரண், இந்தியா திரும்பி வேலை தேடினால் ‘மாஸ்டர் புரூவர்’ பணி ஆண்களுக்கானது என்று அவரை நிராகரித்தன இங்குள்ள முக்கிய நிறுவனங்கள்.

பயோகான் என்ற அயர்லாந்து நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் திறக்க விரும்பிய லெஸ்லி ஆஷின்கிளாஸின் உதவியுடன், பெங்களூருவில் வாடகை வீட்டு கராஜில் பயோகான் இந்தியாவைத் தொடங்கினார் கிரண். அதன்பின் வெற்றிமேல் வெற்றிதான். இன்று இந்தியாவின் தலைசிறந்த பெருநிறுவனங்களில் ஒன்று பயோகான் இந்தியா. அவரது `பயோகான் ஃபவுண்டேஷன்' கர்நாடக மாநிலத்தில் கல்வி, உடல்நலம் என்று பெரும் பங்காற்றிவருகிறது. `மஜும்தார் ஷா மெடிக்கல் ஃபவுண்டேஷன்' மூலமும் உதவிகள் செய்து வருகிறார். ஒரு நல்ல நிறுவனத்தின் தலைவருக்கு உவமையாக இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார் கிரண்.
பர்வீனா அஹங்கர்
`ஒரு தாயின் வலியை யாரும் உணர்வதில்லை. நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்; என்போலப் பலர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். என் வலியிலிருந்தும், என் போன்ற பல்லாயிரக்கணக்கான அன்னையரின் வலியிலிருந்துமே இந்த ஏ.பி.டி.பி அமைப்பு தோன்றியிருக்கிறது' என்று தன் அமைப்பைக் குறித்து வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேசினார் பர்வீனா. ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஶ்ரீநகரில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்துவரும் பர்வீனா, அங்கு நடைபெறும் உள்நாட்டுக் குழப்பங்களை, அதனால் வரும் சிக்கல்களை அனுபவித்தே வாழ்ந்தவர். பதின்ம வயது மகன் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட, அவனைத் தேடி ஆண்டுக்கணக்கில் காவல் நிலையங்களிலும் ராணுவ கேம்ப்களிலும் அலைந்து திரிந்திருக்கிறார். இனி மகன் வரப்போவதில்லை என்று தெரிந்தும் சோர்ந்து போய்விடாமல், தன்னைப் போன்ற பிள்ளைகளைத் ‘தொலைத்த’ பெற்றோருக்காக அசோசியேஷன் ஆஃப் பேரன்ட்ஸ் ஆஃப் டிஸ்அப்பியர்டு பெர்சன்ஸ் (ஏ.பி.டி.பி) என்ற அமைப்பை 1994-ம் ஆண்டு நிறுவினார்.

அன்று முதல் தன்னைப்போல மகன் மற்றும் மகள்களை விசாரணை என்ற பெயரில் பறி கொடுத்த ஆயிரக்கணக்கான பெற்றோரின் இறுதி அடைக்கலமாக இருக்கிறார் பர்வீனா. பிள்ளைகளைத் தொலைத்தவர்கள் இவரைத் தேடிவந்ததும் களத்தில் இறங்கி அவர்களுக்கு உறுதுணையாக சட்ட உதவி, நேரடித் தேடுதல் வேட்டை என்று ஓடுகிறார். வீட்டைவிட்டே வெளியே வந்தறியாத, பர்தா அணிந்த பர்வீனா, இன்று துப்பட்டாவைத் தலையில் மட்டும் அணிந்து காவல் நிலையங்களில் சர்வசாதாரணமாகத் துப்புதுலக்கி கேள்விகள் கேட்டுப் படையெடுக்கிறார். 2005-ம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று காஷ்மீர் பெண்களில் பர்வீனாவும் ஒருவர். 2017-ம் ஆண்டு ராஃப்டோ பரிசு பெற்றார். `காஷ்மீரின் இரும்புப் பெண்' என்று இவரைக் கொண்டாடுகிறார்கள் காஷ்மீரிகள்.

வந்தனா சிவா
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 1952-ம் ஆண்டு பிறந்தவர் வந்தனா சிவா. தந்தை வனப் பாதுகாவலர், தாய் இயற்கை விவசாயி. மகள் வந்தனாவுக்கு வேளாண்மை மீதும், காடுகள் மீதும் பெரும் காதல் வந்ததில் வியப்பில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் நலம், நீர் மேலாண்மை, பெண்ணுரிமை, எழுத்து என்று பல துறைகளில் கலக்கிவருபவர் வந்தனா. மரபணு மாற்றம் செய்யப்படும் ஜி.எம் விதைகளுக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்திவருகிறார்; வேதிக் கலப்பில்லாமல் இயற்கையாகப் பயிர் வளர்ப்பு முறைக்கு விவசாயிகள் திரும்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறார்.

1991-ம் ஆண்டு, விதைப் பாதுகாப்பு மற்றும் பரிமாற்றத்துக்கென ‘நவதான்யா’ என்ற நாடு தழுவிய இயக்கத்தைத் தோற்றுவித்தார். நாடு முழுவதுமுள்ள 70,000 விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். நீரை வியாபாரப் பொருளாக்குவதற்கு எதிராகவும் குரல் கொடுத்துவருகிறார். 1993-ம் ஆண்டு, ‘ரைட் லைவ்லிஹூட் விருது’ பெற்றிருக்கிறார். நாடு முழுவதும் 60 விதைப்பண்ணைகளைத் தொடங்கி பல பாரம்பர்ய நெல் வகைகளைக் காத்தார். 2003-ம் ஆண்டு, `டைம்' இதழ் சூழல் நாயகன் விருதை வழங்கி கௌரவித்தது. 2010-ம் ஆண்டு மற்றும் 2019-ம் ஆண்டுகளில் `ஃபோர்ப்ஸ்' இதழ் உலகின் 100 செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் வந்தனாவுக்கு இடமளித்திருக்கிறது.
சுஸ்மிதா மொஹந்தி
இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனத்தைத் தொடங்கியவர் சுஸ்மிதா மொஹந்தி. 1971-ம் ஆண்டு, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் விஞ்ஞானியான நீலமணி மொஹந்தியின் மகளாக சுஸ்மிதா பிறந்தார். குஜராத் பல்கலைக்கழகம், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகங்களில் கல்வி பெற்றவர், அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் 2001-ம் ஆண்டு, தன் தோழியுடன் இணைந்து `மூன்ஸ்பேஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விண்வெளி ஆலோசனைகளை வழங்கிய அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டில் எல்.எஸ்.ஜி. என்ற மற்றொரு விண்வெளி ஆய்வு நிறுவனத் தையும் தொடங்கினார்.

`விண்வெளி டிசைன்' என்ற புதிய துறையை இந்தியாவில் அறிமுகம் செய்தார். 2009-ம் ஆண்டு, இவர் தொடங்கிய `எர்த்-ஆர்பிட்' என்ற நிறுவனத்தின் மூலம், `மூன்று நிறு வனங்களை உலகின் மூன்று கண்டங்களில் தொடங்கிய தொழிலதிபர்' என்ற பெருமையும் பெற்றார். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என மூன்று கண்டங்களில் கால் பதித்தவர், ஆர்க்டிக் பகுதிக்கும், அன்டார்டிக்கா கண்டத்துக்கும் பயணித்திருக்கிறார். பிபிசி நாளிதழ் வெளியிட்டுள்ள உலகின் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்; 2012-ம் ஆண்டு, `ஃபைனான்ஷியல் டைம்ஸ்' வெளியிட்ட `25 இண்டியன்ஸ் டு வாட்ச்’ பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
பிரபா தேவி
`மரங்களின் தோழி' - இப்படித்தான் பிரபாவை உத்தரகாண்ட் மக்கள் அழைக்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத் தின் ருத்ரபிரயாக் மாவட்டத்திலுள்ள பலஷட் என்ற சிற்றூரில் வசிக்கும் பிரபாவுக்கு 16 வயதில் திருமணம் ஆகிவிட்டது. முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால், மரங்கள் பற்றிய அவரது அனுபவ அறிவுக்கு ஈடு இணையில்லை. கணவர் வீட்டைச் சுற்றி மரங்கள் நட ஆரம்பித்தார் பிரபா. அந்தப் பகுதியில் மக்கள் வீடுகள் கட்ட, சுற்றுலா விடுதிகள் பெருகத் தன்னைச் சுற்றியுள்ள காடுகள் அழிந்ததைக் கண்டு வருந்திய பிரபா, தன் கிராமத்து விளைநிலத்திலும் மரங்கள் நட்டார்.

எண்ணிக்கை பெருகி 500 மரங்கள் ஆகின. நிலத்தடி நீர் குறையத் தொடங்க, தான் வசித்த பகுதியிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் ‘பாஞ்ச்’ என்ற நீர்ப்பிடிப்பு மரங்களை நடுமாறு அறுவுறுத்தினார். இவருடைய அறிவுரைக்கேற்ப பாஞ்ச் மரங்கள் நட்டவர்கள் நிலத்தடி நீர்நிலை மேம்படுவதைக் கண்டனர். ‘காடுகளின் தோழி’ என்றே இவரைக் கொண்டாடினர். கார்வால் இமாலயப் பகுதி மக்களுக்கு இன்று பிரபா தேவி பசுமையை மீட்டெடுத்த தோழி. 76 வயதிலும் அந்தப் பகுதி மக்களுக்கு மரங்கள் பற்றிய குறிப்புகள் தந்து உதவிக்கொண்டிருக்கும் பிரபா, கடந்த ஆண்டின் `மாறுதல் கொணர்ந்தவர்கள்' பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.
தேவசேனா
16,000 பொதுக் கழிவுத் தொட்டிகள், 263 கிராமங்களிள் ஒவ்வொரு வீட்டுக்கும் தனிக் கழிவறை, 400 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு லட்சம் மரங்கள் என்று தெலங்கானா மாநிலத்தின் பெத்தப்பள்ளி மாவட்டத்தை ‘ஓ.டி.எஃப்’ (திறந்தவெளி கழிவறையற்ற) மாவட்டமாக மாற்றியுள்ளார் மாவட்ட ஆட்சியர் தேவசேனா. கடந்த 2018-ம் ஆண்டு, பெத்தப்பள்ளி மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்ற தேவசேனா, 2019-ம் ஆண்டின் தேசிய ஸ்வச்ச சர்வே கணக்கெடுப்பில், `நாட்டின் மிகச் சுத்தமான மாவட்டம்' என்ற பெயரை பெத்தப்பள்ளி மாவட்டம் வாங்க உறுதுணையாக இருந்துள்ளார்.

தேவசேனா 2018-ம் ஆண்டு, இங்கு வந்த புதிதில் ஊரெங்கும் வழிந்து ஓடும் கழிவுநீர்க் கால்வாய்களும், நிறைந்திருக்கும் குப்பைக் கூளங்களுமாக பரிதாபமாக மாவட்டம் காட்சியளித்ததைக் கண்டார். 263 கிராமங்களில் ஒவ்வொன்றிலும் பொதுக் கழிவறை கட்டித்தர ஏற்பாடுகள் செய்தார். ‘ஸ்வச்சகிரகி’ திட்டம் மூலம் 1,000 பெண்களுக்கு கிராமப்புறச் சுகாதாரத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை அளித்தார். ஒவ்வொரு வீட்டுக்குப் பின்புறமும் ஒரு கழிவுத் தொட்டியை அமைப்பதைக் கட்டாயமாக்கினார். தெருக்களில் ஓடிய கழிவுநீர் காணாமல் போனது. குப்பைகளைத் தரவாரியாகப் பிரித்து கொட்டச் செய்தார். வீட்டுக் கழிவுகளைக் கொட்டி வளர்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் ஆறு மரக்கன்றுகளை `ஹரிதஹரன்' திட்டம் மூலம் ஏற்பாடு செய்தார். கழிவுநீர் வீடுகளுக்குள்ளேயே மறு சுழற்சியானது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ‘சபலா’ என்ற பெயரில் 2.50 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் தயாரித்து விற்க ஆவன செய்தார். இன்று நாட்டின் சுத்தமான மாவட்டமாக நிமிர்ந்து நிற்கிறது பெத்தப்பள்ளி. 2019-ம் ஆண்டின் ‘சேஞ்ச் மேக்கர்’ என்று இவரைக் கொண்டாடிவருகிறது தெலங்கானா மாநிலம்.
சந்திரிமா ஷாஹா
இந்திய அறிவியலின் முகமாக இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்சா - இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சந்திரிமா ஷாஹா. 85 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிவியல் அமைப்பின் தலைமைப் பொறுப்பு பெண் ஒருவர் கைக்கு வந்துசேர்ந்திருக்கிறது. 1952-ம் ஆண்டு, ஷம்பு ஷாஹா என்ற புகைப்படக்கலைஞரின் மகளாகப் பிறந்தவர் ஷாஹா. சிறுவயது முதல் அவர் விரும்பியதைச் செய்ய அவர் குடும்பம் உதவியது. பொம்மை மைக்ரோஸ்கோப் பையும், பொம்மை டெலஸ்கோப்பையும் அறிவியல் படிக்க ஆசைப்பட்ட ஷாஹாவுக்கு வாங்கித் தந்தார் தந்தை.

தாய் கருணா பெண்ணியவாதி, பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியைப் பிடுங்கி வீசியதற்காக கைதாகி சிறை சென்றவர். கிரிக்கெட் மீது ஆர்வம்கொண்ட ஷாஹா, மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண்கள் கிரிக்கெட் டீமின் துணைத் தலைவராகவும், அனைத்திந்திய வானொலியின் முதல் பெண் கிரிக்கெட் கமென்டேட்டராகவும் பணியாற்றியவர். இப்போது இன்சாவின் தலைமைப் பொறுப்பில் அமர்ந் திருப்பவர் ‘சூடோ-சயின்ஸ்’ என்ற பொய் அறிவியலைக் கட்டுடைக்கும் சவாலான பணி தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
லெஃப்டினன்ட் ஷிவாங்கி
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் நகரைச் சேர்ந்த ஷிவாங்கி ஸ்வரூப் கடந்த டிசம்பர் மாதம் `நாட்டின் முதல் பெண் கப்பற்படை விமானி'யாகப் பொறுப்பேற்றிருக்கிறார். முசாஃபர்பூர் டி.ஏ.வி பள்ளியிலும், சிக்கிம் மணிபால் பொறியியல் கல்லூரியிலும் கல்வி கற்றவர், இந்திய கப்பற்படையின் 27-வது கப்பல்படை அதிகாரிகள் பயிற்சியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வைஸ் அட்மைரல் ஏ.கே.சாவ்லா தலைமையில் கப்பற்படையில் பணியாற்றத் தொடங்கினார். கண்காணிப்பு விமானங்கள் செலுத்துவதில் ஷிவாங்கிக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

கப்பற்படையில் பெண் அதிகாரிகள் பெரும்பாலும் தரையில் பணியாற்றக்கூடிய ஏ.டி.சி மற்றும் கண்காணிப்பாளர் களாக மட்டுமே நியமிக்கப்படுவார்கள். ஆனால், முதன்முறையாக ஷிவாங்கி `டோர்னியர்' என்ற விமானத்தைத் தனியே ஓட்டும் பயிற்சியை கொச்சியிலுள்ள தென்னக கமாண்டில் எடுத்தார். கடந்த டிசம்பர் 2 முதல் ‘ஆபரேஷன் டியூட்டி’யில் தனியே விமானங்களை இயக்கிவருகிறார் ஷிவாங்கி.
ஷெஃபாலி வர்மா
சச்சின் டெண்டுல்கர் ஹரியானாவின் லாஹ்லி மைதானத்தில் விளையாடிய இறுதி ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்தார் சிறுமி ஷெஃபாலி. டெண்டுல்கரின் சிக்ஸர்களால் கவரப்பட்டு கிரிக்கெட் விளையாட வந்தவர் ரோஹ்டக் நகரைச் சேர்ந்த 15 வயது சுட்டிப்பெண் ஷெஃபாலி. ஒன்பது வயதான சிறுமி ஷெஃபாலியின் கிரிக்கெட் ஆர்வத்தைக் கண்டு அவருக்கு பயிற்சியளிக்க முயன்றார் தந்தை சஞ்சீவ். ஆனால், பெண் குழந்தைக்கு கிரிக்கெட் பயிற்சி தர முன்னணிப் பயிற்சி மையங்கள் மறுக்கவே, மகளின் முடியைக் குட்டையாக நறுக்கி, சிறுவர் அணியும் உடையை அணியச் செய்து கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டார்.

ஒருகட்டத்தில் உண்மை தெரிந்துபோகவே, பயிற்சியி லிருந்து வெளியேற்றப்பட்டார் ஷெஃபாலி. எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு பயிற்சி மையத்தில் சேர்த்துக்கொள்ள, தினமும் சைக்கிளில் பயிற்சிக்குச் சென்றுவந்தார். அவரது விடாமுயற்சியின் பலனாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 50 ரன்கள் எடுத்து, `மிகக் குறைந்த வயதில் சர்வதேசப் போட்டிகளில் ஐம்பது ரன்கள் எடுத்தவர்' என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம் சச்சின் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 16 வயதில் 50 ரன்கள் எடுத்த சாதனையை, அவர் ரசிகையான ஷெஃபாலி தன் 15-வது வயதில் முறியடித்தார்!
துத்தி சந்த்
`இந்தியாவின் அதிவேகப் பெண்' என்று அறியப்படுகிறார் துத்தி சந்த். ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்புர் மாவட்டத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் துத்தி. சிறு வயதில் சகோதரி சரஸ்வதி தடகளப் போட்டிகளில் பங்கேற்றதைக் கண்டு தானும் ஓட்டப்பந்தயங்களில் ஓட வேண்டும் என்று ஆசைகொண்டார் துத்தி. சிறார் போட்டிகளில் பங்கேற்று வென்றும் வந்தார்.
2018-ம் ஆண்டு, ஆசியத் தடகளப் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்றார்.

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் நடைபெற்ற உலகளாவிய ‘யுனிவர்சியேட்’ போட்டிகளின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான இப்போட்டிகளில் இந்தியப் பெண்மணி ஒருவர் பதக்கம் வென்றது அதுவே முதன்முறை. `வாழ்க்கையில் பிரச்னைகள் வரத்தான் செய்யும், ஆனால் நம் கவனம் முழுக்க நாம் அடுத்து என்ன சாதிக்க வேண்டும் என்பதில் இருக்க வேண்டும்' என்று சொல்லும் துத்தி, தன் முழு கவனத் தையும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் பக்கம் ஒருமுகப்படுத்தியுள்ளார்.