தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சூப்பர் 10 பெண்கள்! - தமிழகம்

திவ்யபாரதி ராமமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
திவ்யபாரதி ராமமூர்த்தி

76 வயதாகும் கிருஷ்ணம்மாள் விவசாயத்தின் வேர்காக்கும் அரண்!

சூப்பர் 10 பெண்கள்!
சூப்பர் 10 பெண்கள்!

ஶ்ரீ.பார்வதி - தகவல் களஞ்சிய ஆசிரியர்

ஶ்ரீ.பார்வதி
ஶ்ரீ.பார்வதி

மிழரின் வாழ்வியலையும் பண்பாட்டையும் தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழ் விக்கிப்பீடியாவில் உயர்த்திப்பிடிப்பவர் ஶ்ரீ.பார்வதி. சேலம் மாவட்டம், கந்தம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறார். கிடைக்கும் ஓய்வில் தமிழரின் வாழ்வியல், பண்பாடு, தமிழ் மொழியின் சிறப்பு குறித்து இதுவரை 700 கட்டுரைகள், 14,000 தொகுப்புகள், 800 புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 1,000 ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றி பயிற்சியும் அளித்துள்ளார். இவரது பங்களிப்பைப் பாராட்டி 2013-ம் ஆண்டு, ஹாங்காங்கில் நடைபெற்ற ‘விக்கிமேனியா’ மாநாட்டுக்கு அழைத்தது விக்கிப்பீடியா நிர்வாகம். 2016-ல் நண்பர்களின் உதவியுடன் 20 லட்சம் ரூபாய் செலவில் தான் பணியாற்றும் பள்ளியின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, `மாவட்டத்தின் சிறந்த பள்ளி'க்கான விருது கிடைக்கக் காரணமாகவும் இருந்திருக்கிறார்!

கிருஷ்ணம்மாள்
கிருஷ்ணம்மாள்

கிருஷ்ணம்மாள் - விவசாயத்தின் வேர்காக்கும் அரண்!

நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள், கடந்த ஆறு ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது ஆறு ஏக்கர் நிலத்தில் காட்டு யாணம், கருத்தகார், பூங்கார், குள்ளக்கார், செல்லம் சன்னா, கொத்தமல்லி சம்பா, கைவரச் சம்பா, கிச்சடி சம்பா உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஆத்தூர் கிச்சடி சம்பா நெல் பயிரிட்டவருக்கு, ஒரு ஹெக்டேருக்கு 8,455 கிலோ நெல் மகசூல் கிடைத்தது. இயற்கை முறையில் தமிழகத்திலேயே அதிக மகசூல் எடுத்ததைப் பாராட்டி, தமிழக அரசு ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பர்ய நெல் பாதுகாவலர்’ என்ற விருதினை வழங்கியது. இயற்கை விவசாயம் அதிக செலவு பிடிக்கக்கூடியது என்று நம்பிக்கொண்டிருந்த மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தன் பகுதியில் பலநூறு ஏக்கரில் பாரம்பர்ய விவசாயத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். 76 வயதாகும் கிருஷ்ணம்மாள் விவசாயத்தின் வேர்காக்கும் அரண்!

கே.வி.ஜெயஶ்ரீ
கே.வி.ஜெயஶ்ரீ

கே.வி.ஜெயஶ்ரீ - தமிழ் பரப்பும் மொழிபெயர்ப்பாளர்

மிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர் கே.வி.ஜெயஶ்ரீ. கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். அம்மாவிடமிருந்து சிறுவயதிலேயே தொற்றிக்கொண்ட வாசிப்பு, படைப்பாளியாக்கியிருக்கிறது. தமிழ் மொழி மீதான ஆர்வம், ‘ஆய்வியல் நிறைஞர்’ பட்டம் பெறும் அளவுக்கு இவரை உந்தித் தள்ளியிருக்கிறது. மலையாளத்திலும் தமிழ் இலக்கியத்திலும் தேர்ந்த வாசிப்பனுபவம் கொண்ட ஜெயஶ்ரீ, பால் சக்காரியா, சந்தோஷ் ஏச்சிக்கானம், சியாமளா சசிக்குமார், மனோஜ் குரூர், ஏ.அய்யப்பன் உள்ளிட்ட மலையாளத்தின் மகத்தான எழுத்தாளுமைகளின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இப்போது திருவண்ணாமலை கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ஜெயஶ்ரீக்கு `நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நூலுக்காக, ‘சிறந்த மொழிபெயர்ப்பாள’ருக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சகீலா ஃபரூக்
சகீலா ஃபரூக்

சகீலா ஃபரூக் - நம்பிக்கைத் தொழில்முனைவோர்

ன்னிரண்டாம் வகுப்பு முடித்ததுமே திருமணமாகிவிட்டது சகீலாவுக்கு. பொருளாதாரம் அழுத்த, மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். ‘இவர் எப்படி இந்தத் தொழிலில்...’, ‘இதிலெல்லாம் என்ன பெரிய வருமானம் கிடைத்துவிடப்போகிறது...’ என்றெல்லாம் கேள்விகள் முளைத்தன. தொழிலில் பல்வேறு தடைகள், சறுக்கல்கள். ஆனாலும், நம்பிக்கையைக் கைவிடவில்லை சகீலா. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்தி, புதிய தொழில் வாய்ப்புகளை வசப்படுத்தினார். இன்று 120-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளியாக இருக்கும் சகீலா, உணவுப் பாத்திரங்கள், அலங்காரப் பொருள்கள் உட்பட 900-க்கும் அதிகமான மண்பாண்டப் பொருள்களைத் தயாரிக்கிறார். ஆரம்பத்தில் கடை கடையாக ஏறி இறங்கி விற்பனை செய்தவரின் தயாரிப்புகள், இன்று பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. தமிழகத்தில் ஐந்து ஷோரூம்களை நடத்திவருகிறார். ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்யும் சகீலா, சவால்களைத் தாண்டி தடம்பதித்த நம்பிக்கை தொழில்முனைவோர்!

அன்பு ரூபி
அன்பு ரூபி

அன்பு ரூபி - முன்னோடி திருநங்கை

திருநங்கைகள் ஆரம்பகாலத்தில் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சிக்கல்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டிருக்கிறார் அன்பு ரூபி. தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த இவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட பெற்றோர், ரூபியை அரவணைத்துக் கொண்டனர். பி.எஸ்ஸி நர்சிங் படிப்பை முடித்த ரூபி, தனியார் மருத்துவமனையில் மூன்றரை ஆண்டு பணி அனுபவம் பெற்றார். தொலைதூரக் கல்வி முறையில் ‘மருத்துவமனை மேலாண்மை’யில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். தொடர்ந்து, தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வில் தேர்ச்சிபெற்று, கடந்த ஆண்டு விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியைத் தொடங்கினார். அரசு மருத்துவ மனையில் பணியமர்த்தப்படும் முதல் திருநங்கை செவிலியர் என்ற சிறப்பையும் பெற்றார். புறக்கணிப்புகளைப் புறந்தள்ளி சாதித்த திருநங்கைச் சமூக முன்னோடிகளில் முக்கியமானவர் அன்பு ரூபி!

பெ.தமயந்தி
பெ.தமயந்தி

பெ.தமயந்தி - சட்டப் போராளி

சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பெ.தமயந்தி, மார்க்சிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பட்டியலின மற்றும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காகவே கடந்த 20 ஆண்டுகளாகப் போராடிவருகிறார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்புக் கிடைக்கும்வரை தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கிறார். ‘புரட்சிகர விடியல் பெண்கள் மையம்’, முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம், ‘மனிதி’ எனப் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்படுகிறார். பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களுக்கான உரிமைகள், இணையதள விழிப்புணர்வு எனத் தீவிரமாக இயங்கிவரும் தமயந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதுடன், தொடர் சட்டப்போராட்டங்கள் மற்றும் களப்போராட்டங்கள் நடத்தி, குற்றம் செய்தவர்கள் மீது போக்ஸோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யவும் வைக்கிறார்.

வனிதாமணி
வனிதாமணி

வனிதாமணி - அறம் வளர்க்கும் கதை நாயகி

ரோடு வனிதாமணி, குழந்தைகளுக்கான கதை சொல்லும் அத்தை. நூலகத்துக்குச் செல்லும் வழக்கமுள்ள வனிதா, அங்கு வரும் குழந்தைகளுக்குக் கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார். அதற்குக் கிடைத்த வரவேற்பு அவரை தன் வீட்டில் ‘பட்டாம்பூச்சி’ எனும் தனி நூலகம் அமைத்து, ‘கதைக்களம்’ என்ற அமைப்பை உருவாக்கும் அளவுக்கு நகர்த்தியிருக்கிறது. குழந்தைகளுக்கென ஒரு பத்திரிகை நடத்துகிற வனிதாமணி, குழந்தைகளையும் கதைசொல்லிகளாக மாற்றிவருகிறார். குழந்தைகளுக்கான கதைசொல்லிகள் அபூர்வமாகிவரும் நிலையில் ஊர் ஊராக, பள்ளிப் பள்ளியாகப் பயணித்து கதைசொல்லி, குழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாக்குகிறார். கருவில் வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கும் கதை சொல்வது இவரது தனித்தன்மை. கதைகளின் வழியாகக் குழந்தைகளிடம் அறமும் வளர்க்கிறார் வனிதாமணி!

சூப்பர் 10 பெண்கள்!  - தமிழகம்
திவ்யபாரதி
திவ்யபாரதி

திவ்யபாரதி ராமமூர்த்தி - கானுயிர் நேசகி

ரோடு மாவட்டம், மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் திவ்யபாரதி ராமமூர்த்தி. தந்தையின் வழியே, கானுயிர்கள் மீதான ஆர்வம் இவருக்கும் மலர்ந்திருக்கிறது. தந்தையுடன் காடுகளுக்குப் பயணிக்கத் தொடங்கினார். அந்த ஆர்வம், முதுகலை ஆங்கிலம் படித்திருத்திருக்கும் திவ்யபாரதியை கானுயிர் ஒளிப்படக் கலைஞராக மாற்றியிருக்கிறது. கேமரா, லென்ஸ், ட்ரைபேடு உள்ளிட்ட புகைப்படத் தளவாடங்களுடன் அலைந்துதிரியும் திவ்யபாரதி, பள்ளி, கல்லூரிகளில் வனப் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டுவரும் கானுயிர் ஆர்வலராகவும் செயல்படுகிறார்.

சந்தன மேரி
சந்தன மேரி

சந்தன மேரி - சமரசமில்லா போராளி

ர்மாவிலிருந்து சிவகங்கைக்கு அகதியாக வந்த சந்தனமேரி, சாதிய ஒடுக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார். திருமணமாகி ராமநாதபுரம் மாவட்டம் ஓரிக்கோட்டை என்ற கிராமத்துக்கு இடம்பெயர்ந்த பிறகும்கூட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தொடர, அதற்கு எதிராகத் தனிநபராகப் போராடினார். பள்ளியில் பட்டியலின மாணவர்களைக்கொண்டு கழிவறை சுத்தம் செய்ய வைத்ததைக் கண்டித்துப் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தித் தீர்வு கண்டது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சிறுவாச்சி முத்துநாயகி அம்மன் கோயிலில் அனைத்துத் தரப்பு மக்களும் செல்ல அனுமதி பெற்றுக்கொடுத்தது, பட்டியலின சமூகத்தினர் கண்டதேவி கோயில் தேர்வடத்தை இழுக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று தீர்வு பெற்றது உட்பட சந்தனமேரியின் போராட்டத்தால் கிடைத்த வெற்றிகள் ஏராளம். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பட்டியலின சமூக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்காகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமரசமின்றி ஒலிக்கிறது சந்தன மேரியின் குரல்!

சுகந்தி
சுகந்தி

சுகந்தி - எளிய பெண்களின் போராளி

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்திலிருந்து அரசுத்துறையில் பணியாற்றியவர் சுகந்தி. அரசுப்பணியில் இருக்கும்போதே, அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கியுள்ளார். படிப்படியாக அந்தப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உயர்ந்துள்ளார். அதன்பின்னர் அனைத்திந்திய மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பெண்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கவும் தொடங்கியுள்ளார்.

அப்போது 13 வயதுப் பள்ளி மாணவியை ஒரு கும்பல் கூட்டு சிறார் வதை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுகந்தி இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்து உயர் நீதிமன்றம் வரை சென்று போராடினார். தொடர்ந்து, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் உள்ளிட்டோருக்கான பல பிரச்னைகளில் கவனம்செலுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் வாய்பேசமுடியாத சிறுமி கூட்டு சிறார் வதைச் சம்பவத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்தபோது, ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்தே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரியலூர் நந்தினி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கிலும் போராடிக்கொண்டிருக்கிறார் சுகந்தி. கடும் உழைப்பு காரணமாக, சுகந்திக்கு ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைத்துள்ளது.