தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சூப்பர் 10 பெண்கள்! - உலகம்

சூப்பர் 10 பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் 10 பெண்கள்

கிரீஸ் நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்கேட்டை கண்டிப்புடன் சரிசெய்ய உதவினார்.

கிறிஸ்டின் லகார்ட்

64 வயதான செயற்புயல் கிறிஸ்டின் லகார்ட் கடந்த ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகவும் செயல் பட்டவர் இவர். பிரான்ஸ் நாட்டில் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த கிறிஸ்டின், அமெரிக்காவில் படித்தவர். அரசியலில் தீவிர ஆர்வம்காட்டிய இவர், 2005-ம் ஆண்டு முதல் பிரான்ஸ் அமைச்சரவையில் வணிகம், வேளாண்மை போன்ற முக்கியத் துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.

கிறிஸ்டின் லகார்ட்
கிறிஸ்டின் லகார்ட்

2011-ம் ஆண்டு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் ஆதரவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே.

உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துவந்த நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்ற கிறிஸ்டின் பல சவால்களைச் சந்தித்தாலும், வெற்றிகரமாகவே பணியாற்றினார். கிரீஸ் நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்கேட்டை கண்டிப்புடன் சரிசெய்ய உதவினார். 2019 நவம்பரில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராகப் பதவியேற்ற கிறிஸ்டின், பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு காண உழைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்தப் பதவியில் அமரும் முதல் பெண்ணும் கிறிஸ்டின்தான்!

கேத்தி போமன்

டந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வானியல் அறிவியலில் ஒரு மைல்கல் சாதனை நிகழ்த்தப்பட்டது. மிக அதிக புவியீர்ப்பு விசையைக்கொண்ட கருந்துளைகள் அண்டத்தில் நிறைந்துள்ளன. இவற்றைப் படம் பிடிப்பது கிட்டத்தட்ட இயலாத செயலாகவே கருதப் பட்டது. ஆனால், கேத்தி போமன் கணக்கிட்ட அல்காரிதம் மூலமாக பூமியிலிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள `மெஸ்ஸியர் 87' என்ற கேலக்ஸியின் கருந்துளையை உலகின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகள் ஆராய்ந்து வந்தன. இந்த ஆய்வுத் தகவல்கள் அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டாக் என்ற விண்வெளி ஆய்வகத்தில் ஹார்டு டிஸ்குகளில் சேகரித்து வைக்கப்பட்டு வந்தன.

கேத்தி போமன்
கேத்தி போமன்

கிட்டத்தட்ட அரை டன் எடைகொண்ட ஹார்டு டிஸ்கு களில் சேகரித்து வைக்கப்பட்ட 5 பீட்டாபைட் ‘டேட்டா'வை ஒருங்கிணைக்கும் அல்காரிதக் கணக்கீட்டைத்தான் இளம்பெண்ணான கேத்தி போமன் கண்டுபிடித்தார். இதைப் பயன்படுத்தியே கருந்துளையின் படங்களை ஒன்றிணைத்து அதன் பிரமாண்ட வடிவத்தைப் புகைப்படமாக ஹேஸ்டாக் ஆய்வகம் வெளியிட்டது. 29 வயதான இளம் விஞ்ஞானியான கேத்தி யின் சாதனையை உலகமே கொண்டாடியது. போமனோ, `இது என் தனிப்பட்ட வெற்றி அல்ல... என்னுடன் இந்தப் பணியில் இணைந்து பங்காற்றிய 200 பேருக்கும் இது வெற்றிதான்' என்று பணிவுடன் கூறிவிட்டார்.

கிரேட்டா துன்பர்க்

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்ற வாசலில் கையில் பதாகை ஏந்தித் தன் பயணத்தைத் தொடங்கினார் 15 வயது பள்ளி மாணவி கிரேட்டா. பூமி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவலை மக்களுக்கு இல்லை என்பதை உணர்ந்திருந்த கிரேட்டா, தன் போராட்டத்தைத் தனிநபராகவே முன்னெடுத்தார். தொடர்ந்து விடுமுறை நாள்களில் ‘உலகைக் காப்பாற்றுங்கள்’, ‘உலகம் சிறுவர்களுக்கானது’ என்று பதாகை ஏந்தி நின்ற கிரேட்டாவை உலகம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து. `ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்' என்ற பெயரில் இவருடன் பல குழந்தைகள் இணைந்து போராட ஆரம்பித்தார்கள். ‘மினிமல் லைஃப்’ எனப்படும் அதிக செலவற்ற, பூமிக்கு ஆபத்தை உண்டாக்காத, மறுசுழற்சி செய்யக்கூடிய வாழ்வியல் முறைக்குத் தன் குடும்பத்தைப் பழக்கினார்.

கிரேட்டா துன்பர்க்
கிரேட்டா துன்பர்க்

கடந்த ஆண்டு தனிநபராக ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு சூரிய ஒளி மூலம் இயங்கும் படகில் பயணித்தார். உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்றவர், `ஹவ் டேர் யூ?' என்று உலகத் தலைவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்பர் கர்ஸ் சின்ட்ரோம் என்ற பிரச்னையால் அவதியுறும் நிலையிலும் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசியும் எழுதியும் வருகிறார் கிரேட்டா.

சூப்பர் 10 பெண்கள்! - உலகம்

அஹ்லம் குத்தர்

2013-ம் ஆண்டு சூடானில் நடைபெற்ற அமைதியான அறப்போராட்டம் ஒன்றில் அஹ்லம் குத்தரின் 17 வயது மகன் சுட்டுக் கொல்லப்பட்டார். மகன் இறந்த துக்கத்தில் ஓய்ந்து போகவில்லை நர்சரி ஆசிரியரான அஹ்லம். மகனுக்காக அறப்போராட்ட வழியைக் கையிலெடுத்து சூடானின் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார். சூடானில் கொல்லப்பட்ட மற்றும் ‘காணாமல்போன’ பொதுமக்களுக்காகக் குரல் எழுப்புகிறார் அஹ்லம். ரகசியக் கூட்டங்களில் பேசிவந்த அஹ்லம், நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ராணுவப் படைகள் கையில் சிக்க, அவர்கள் தாக்கியதில் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அஹ்லம் குத்தர்
அஹ்லம் குத்தர்

அதிலிருந்து மீண்டவர், 2018-ம் ஆண்டு, மீண்டும் சூடானின் ராணுவத் தலைவர் ஒமர் அல் பஷீருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார். குடும்பத்தினரை அறப்போராட்டங்களில் இழந்த பெண்களை ஒருங்கிணைத்துப் போராடும் அஹ்லமைக் கண்டு சூடான் ராணுவம் திகைத்துப் போயுள்ளது. பிபிசி வெளியிட்ட உலகின் மிக வலிமையான 100 பெண்கள் பட்டியலில் அஹ்லம் இடம் பெற்றிருக்கிறார்.

ஜெசிந்தா ஆர்டர்ன்

2019 மார்ச் 15 அன்று நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரின் இரு மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 51 பேர் உயிரிழந்தனர். நியூசிலாந்தின் அமைதியைக் குலைக்கும் விதமாக நடைபெற்ற இந்தச் சம்பவங்களுக்குப் பின் இஸ்லாமிய மக்களுடன் தோள் சேர்த்து நின்றார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்.

உலகின் மிக இளம் வயது பெண் பிரதமராக தன் 37-வது வயதில் ஆட்சியில் அமர்ந்தார். தொடர்ந்து குழந்தைப் பேறு, பதவியில் இருந்த போதே பேறுகால விடுப்பில் சென்ற முதல் பிரதமர், சைக்கிளில் வலம் வரும் எளியவர் என்று பெயரெடுத்த ஜெசிந்தாவுக்கு பெரும் சவாலாக அமைந்தன இந்தத் தாக்குதல்கள்.

ஜெசிந்தா ஆர்டர்ன்
ஜெசிந்தா ஆர்டர்ன்

மனம்தளராத ஜெசிந்தா, இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதேநேரம், அந்நாட்டின் துப்பாக்கிச் சட்டத்தைத் தூசுதட்டி, சீர்செய்து உரிமங்கள் பெறுவதை நெறிப்படுத்தினார். கைக்குழந்தையுடன் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெசிந்தா, அங்கு, சீனாவில் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் உய்கர் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரலெழுப்பினார். முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் போன்றவை பெரும் தோல்விகள் என்று கூறுகிற ஜெசிந்தா, மியான்ம ரின் ஒடுக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்காகவும் பேசிவருகிறார்.

ஆஷ்சர்யா பெய்ரிஸ்

லங்கையைச் சேர்ந்த ஆஷ்சர்யா பெய்ரிஸ் ஜெயக்கொடி ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு, ராஜகிரியா நகரில் பணிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென வெடிகுண்டு வெடித்துச் சிதற 21 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டிக்கொண்டிருந்த ஆஷ்சர்யாவின் பார்வை முற்றிலும் பறிபோனது. இந்தக் குறைபாடு காரணமாக வேலையை உதறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குடும்பமும் சமூகமும் ஒதுக்கத் தொடங்கியது.

ஆஷ்சர்யா பெய்ரிஸ்
ஆஷ்சர்யா பெய்ரிஸ்

மனம்தளராத ஆஷ்சர்யா தோழி ஒருவரின் உதவியுடன் உடைகளை வடிவமைக்கத் தொடங்கினார். உடையின் டிசைனை அவர் சொற்களில் விவரிக்க, அதையே படங்களாக வரைந்து தந்தார் தோழி. இப்படித்தான் 2016-ம் ஆண்டு, `கிறிஸ்டினா குளோரி' டிசைனர் பிராண்டு தொடங்கியது. சிலோன் ஃபேஷன் வீக்கில் பிரபலமான பிராண்டு ஆஷ்சர்யாவின் கிறிஸ்டினா குளோரிதான். இன்று இலங்கை முழுவதும் பயணித்து பார்வையற்றோர் மற்றும் பெண்களுக்குத் தன்னம்பிக்கை தருகிறார் ஆஷ்சர்யா.

லூசிட்டா ஹுர்ததோ

1920-ம் ஆண்டு, வெனிசுலா நாட்டில் பிறந்தார் லூசிட்டா. சிறுகுழந்தையான லூசிட்டாவை அழைத்துக் கொண்டு நியூயார்க் நகரில் குடியேறினார் அவர் தாய். வாஷிங்டன் இர்விங் பள்ளியில் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார் சிறுமி லூசிட்டா. 18 வயதில் தன்னைவிட இரு மடங்கு வயதில் பெரியவரான பத்திரிகையாளர் டேனியல் டி சொலாரை லூசிட்டா காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர் மூலம் லத்தீன் அமெரிக்காவின் பல ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் அறிமுகம் லூசிட்டாவுக்குக் கிடைத்தது. ஆனால், இரு மகன்கள் பிறந்தபின் டேனியல், லூசிட்டாவை நிர்கதியாக்கிவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். துக்கத்தில் சுருண்டுபோகாமல் 1945-ம் ஆண்டு, தன் முதல் ஓவியத்தை வரைந்தார் லூசிட்டா.

லூசிட்டா ஹுர்ததோ
லூசிட்டா ஹுர்ததோ

அதன்பின் ஓவியர் உல்ஃப்காங் பால்மரைத் திருமணம் செய்துகொண்டார் லூசிட்டா. அப்போது ஃப்ரீடா காலோ, எட்வர்ட் ஜேம்ஸ், பிராட்டன், ஹீலி என்று பல ஓவியர்கள் மற்றும் கலைஞர்களின் நட்பு கிடைத்தது. அவ்வப்போது பூட்டிய வார்ட்ரோப்புக்குள், சமையலறையில், படுக்கை அறையில் என்று கிடைத்த இடங்களில் தன்னையே மாடலாகக்கொண்டு தலையற்ற ஓவியங்களை வரைந்து வந்தார் லூசிட்டா. மூன்றாவதாக லீ முல்லிகன் என்ற பிரபல ஓவியரைத் திருமணம் செய்துகொண்டார். லீ 1998-ம் ஆண்டு இறந்துபோக, 2016-ம் ஆண்டு அவருடைய ஓவியங்களை விற்க முன்வந்த வழக்கறிஞர் குழுவுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தன வீட்டுக்குள் இருந்த `எல்.ஹெச்' என்று கையெழுத்திட்ட சுமார் 1200 ஓவியங்கள். இவையனைத்தும் 1945 முதல் 1998 வரை லூசிட்டா வரைந்தவை. லூசிட்டாவின் 98-வது வயதில் ஒருவழியாக அவருடைய ஓவியங்கள் வார்ட்ரோப்பை விட்டு வெளியே வந்தன. முதிய பெண் ஒருவர் சர்ரியலிச ஓவியங்களை இவ்வளவு கலைநயத்துடன் வரைந்திருப்பது உலகெங்கும் ஓவியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹியொரி கொன்

சுமோ விளையாட்டுக்குப் பெயர்பெற்ற ஆமோரி பகுதியில் பிறந்தார் ஹியொரி. ஆனால், ஜப்பானின் தேசிய விளையாட்டான சுமோ விளையாட பெண்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் மனம்தளராத சிறுமி ஹியோரி, தன் சகோதரர்களுடன் சுமோ பயிற்சியைத் தொடர்ந்தார்.

ஹியொரி கொன்
ஹியொரி கொன்

பல்கலைக்கழக சுமோ அணியில் மூன்றாவது பெண்மணியாகச் சேர்ந்தார் ஹியொரி. அவர் விளையாடத் தயாராக இருந்தாலும், ஜப்பான் சுமோ அசோசியேஷன் பெண்களுக்கு சுமோ அரங்குக்குள் நுழைய விதித்திருக்கும் தடையின் காரணமாக போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஆண்களுக்கிடையேயான சுமோ போட்டி ஒன்றில் மருத்துவ உதவிக்குச் சென்ற பெண் மருத்துவர்கள் மேல் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது சுமோ அசோசியேஷன். இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி எப்போதாவது நாடு தங்களை விளையாட அனுமதிக்கும் என்று காத்திருக்கிறார்கள் ஜப்பானியப் பெண்கள். ஹியொரியின் வாழ்க்கை `லிட்டில் மிஸ் சுமோ' என்ற திரைப்படமாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. 1500 ஆண்டுகளாகப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் துறைக்குள் நுழைவதற்காக இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார் ஹியொரி.

ஜாஸ்மின் அக்தர்

சாலையோர குழந்தைகளுக்கான உலக கிரிக்கெட் கோப்பைப் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் தலைவியாக ஜாஸ்மின் அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாஸ்மின், மியான்மர் நாட்டின் காக்ஸ் பசார் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்தவர். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு அஞ்சிய ஜாஸ்மினின் தாய், ஐ.நா சபையின் அகதிகள் மீள் குடியேற்றத் திட்டத்தின் மூலம் இங்கிலாந்துக்குக் குடி பெயர்ந்தார். எட்டு வயதில் தாயுடன் இங்கிலாந்து வந்தார் ஜாஸ்மின். சில ஆண்டுகளில் துரதிர்ஷ்டவசமாக ஜாஸ் மினின் தாய் கார் விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ள, அவரைப் பராமரிக்கும் பொறுப்பும் ஜாஸ்மினுக்கு வந்தது.

ஜாஸ்மின் அக்தர்
ஜாஸ்மின் அக்தர்

கல்லூரியில் யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே இருந்த ஜாஸ்மினுக்கு கிரிக்கெட் என்ற மனமாற்றத்தைத் தந்தார் தோழி ஒருவர். விளையாட்டில் கவனம்செலுத்தத் தொடங்கிய சில மாதங்களில் கல்லூரி டீமின் தலைமை, அடுத்து யார்க் ஷயர் அணியில் இடம் என்று படிப்படியாக உயர்ந்தார் ஜாஸ்மின். பிராட்ஃபோர்ட் பகுதியில் ஆசியப் பெண்களை ஒருங்கிணைத்து கிரிக்கெட் அணி ஒன்றையும் நிர்வகித்தார். இந்த நிலையில் என்.ஜி.ஓ ஒன்றின் மூலம் சாலையோரக் குழந்தைகளுக்கான உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வந்தது. இப்போது பிராட்ஃபோர்ட் கல்லூரியில் வணிகவியல் கற்றுவரும் ஜாஸ்மின், தனக்கு உலகெங்கும் உள்ள ரோஹிங்கியா இன மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக மகிழ்வுடன் சொல்கிறார்.

கிறிஸ்டினா கோச்

மெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டார் கிறிஸ்டினா கோச். அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் பிறந்து வளர்ந்த கிறிஸ்டினாவுக்குச் சிறுவயது முதலே விண்வெளி வீரராக வேண்டும் என்னும் கனவு இருந்தது. மின் பொறியியல் மற்றும் இயற்பியல் கற்றவர், 2001-ம் ஆண்டு நாசாவின் ஜி.எஸ்.எஃப்.சி பயிற்சியில் சேர்ந்தார். 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை நாசாவின் அன்டார்ட்டிகா குழுவில் பணியாற்றினார். மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் குளிரில் மாதக்கணக்கில் பணியாற்றி விண்வெளிப் பயணத்துக்குத் தன்னைத் தயாரித்துக்கொண்டார். ஜூன் 2013-ல் அஸ்ட்ரனாட் 21 என்ற குழுவில் மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுத்தபின் 2015-ம் ஆண்டு விண்வெளி செல்லத் தயாரானார்.

கிறிஸ்டினா கோச்
கிறிஸ்டினா கோச்

2019 மார்ச் 14 அன்று `சோயுஸ்-12' விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பறந்தவர், அங்கு ஆய்வுகளைத் தொடங்கினார். 2019 அக்டோபர் 18 அன்று கோச்சும் ஜெசிகா மெய்ர்ஸும் இணைந்து உலகின் முதல் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விண்வெளி நடையை நிறைவுசெய்தனர். அதன்பின் மூன்று நடைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய பின் சமீபத்தில் பூமிக்குத் திரும்பினார் கோச். விண்ணில் அதிக நாள்கள் செலவிட்ட பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மொத்தம் 328 நாள்கள் விண்ணில் இருந்த கிறிஸ்டினா, இப்போது, நீண்ட நாள்கள் விண்வெளியில் இருக்கும் பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் மாறுதல்களை ஆராய தன் முழு ஒத்துழைப்பையும் தரவுள்ளார்.