Published:Updated:

சூப்பர் 10 பெண்கள்! - இந்தியா

சூப்பர் 10 பெண்கள்! - இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் 10 பெண்கள்! - இந்தியா

சாதனையாளர்கள்

- சஹானா

ஜெயதி கோஷ்

கற்பித்தல் மட்டுமே பேராசிரியரின் பணியல்ல என்பது ஜெயதியின் நம்பிக்கை. 65 வயதிலும் மக்கள் நலனுக்காக அரசையும் எதிர்க்கும் துணிச்சல்கொண்ட பெண்மணி இவர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இப்போது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் செயல்படுகிறார். கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு உருவான பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்காலப் பொருளா தாரச் சவால்களையும் சமாளிப்பதற்காக இவர் அளிக்கும் பரிந்துரைகள் மிக முக்கியமானவை. இதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகர்கள் 20 பேரில் ஜெயதியும் இடம் பெற்றிருக்கிறார்.

ஸோயா அகர்வால் - ஜெயதி கோஷ்
ஸோயா அகர்வால் - ஜெயதி கோஷ்

ஸோயா அகர்வால்

சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து வடதுருவத்தின் வழியாகப் பறந்து, பெங்களூரு மாநகரத்தை வெற்றிகரமாக அடைந்தது பெண் பைலட்டுகள் இயக்கிய ஏர் இந்தியா விமானம். இந்த விமானத்தின் கேப்டன் ஸோயா அகர்வால். வடதுருவத்தின் மோசமான வானிலையைச் சமாளிக்க வேண்டிய சவால் நிறைந்த 16,000 கி.மீ பயணம் இது. தொழில்நுட்பமும் அனுபவமும் இருந்தால் மட்டுமே இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும். இளம் வயதிலேயே இந்தச் சாதனைப் பயணத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார் ஸோயா. இதுமட்டுமல்ல; மிக இளம் வயதிலேயே போயிங் 777 விமானத்தை இயக்கிய இந்தியப் பெண் என்ற பெருமையை 2013-ம் ஆண்டில் பெற்றவர் இவர். சென்ற ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி யிருந்த இந்தியர்களை மீட்பதற்காக நம் அரசு `வந்தே பாரத்' சிறப்பு விமானங்களை இயக்கியது. இந்தத் திட்டத்திலும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர் ஸோயா.

ஆர்யா ராஜேந்திரன்

அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை ஆர்யாவின் வெற்றி உணர்த்தியிருக்கிறது. ஆம்... இந்தியாவின் இளம் மேயர் என்ற சாதனையைப் படைத்த 21 வயது பெண் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரி மாணவியான இவர், கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயராகப் பொறுப்பேற்று சிறப்பாக இயங்குகிறார். எளிய குடும்பப் பின்னணிகொண்ட ஆர்யா, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்பு கட்சிப்பணி ஆற்றிய அதே பாணியில், இன்றும் மக்களின் பிரச்னைகளை அவர் களின் இருப்பிடங்களுக்கே சென்றுகேட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வி.எஸ்.பிரியா - ஆர்யா ராஜேந்திரன்
வி.எஸ்.பிரியா - ஆர்யா ராஜேந்திரன்

வி.எஸ்.பிரியா

ஜினி சசிதரனாகப் பிறந்து, பிரியாவாக மாறிய இவர் கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர். பள்ளி நாள்களிலேயே தனக்குள் இருந்த பெண்மையைக் கண்டுகொண்டதாகச் சொல்லும் இவர், குடும்பத்தின் ஆதரவால் இன்று மருத்துவராக உயர்ந்திருக்கிறார். மாற்றுப்பாலினத்தவரைப் புரிந்துகொண்டு, அவர்களை ஆதரித்தால் அவர்களாலும் இயல்பான இனிமையான வாழ்க்கையை வாழமுடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் பிரியா. இவரின் வெற்றியில் அந்தக் குடும்பத்துக்கு இருக்கும் பங்கு மகத்தானது.

பில்கிஸ் பானு

83 வயதில் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தைத் தவிடுபொடியாக்கியவர் இந்த சீனியர். டெல்லி ஷாகின் பாகில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் உலகின் பார்வையை ஈர்த்தார் பில்கிஸ் பானு. தான் உயிருடன் இருக்கும்வரை போராட்டம் தொடரும் என்று இவர் அறிவித்த பிறகே, நாடு முழுவதும் போராட்டத்தீ பற்றிக் கொண்டது. இவரை ‘ஷாகின் பாக் தீதி’ என்றே பலரும் அன்புடன் அழைக்கின்றனர். பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பில்கிஸ் பானு, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, அவர்களின் போராட்டத்திலும் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டார்.

ரேலு வசாவே - பில்கிஸ் பானு
ரேலு வசாவே - பில்கிஸ் பானு

ரேலு வசாவே

ஓர் அங்கன்வாடி பணியாளரால் அந்தப் பகுதி மக்களின் வாழ்வையே மாற்ற முடிந்திருக்கிறது என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்தர்பார் மாவட்டத்திலுள்ள சிமல்காடி என்ற பழங்குடி கிராமத்தின் அங்கன்வாடி ஊழியர் ரேலு. குழந்தைகள் ஆறு வயது வரை உடல்நலத்துடன் இருக்கிறார்களா, கருவுற்ற பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் மருந்து களும் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, வழங்கவேண்டிய பணியிலிருக்கிறார் இவர். பெருந் தொற்றுக் காலத்தில் மக்கள் அங்கன்வாடியை நாடி வரவில்லை. நல்ல வேளை... வேலை செய்ய வேண்டாம் என்று சும்மா இருக்கவில்லை ரேலு. ஊட்டச்சத்து சப்ளிமென்ட்டுகளையும் எடை பார்க்கும் இயந்திரத்தையும் எடுத்துக்கொண்டு, தினமும் 18 கி.மீ பயணம் செய்தார். பயணம் என்றால் வாகனத்தில் ஏறி வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பது அல்ல. ஆற்றில் துடுப்பு வலிக்க வேண்டும்; மலைமீது ஏறிச் செல்ல வேண்டும். அப்படியொரு கடினமான பயணத்தோடுதான் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தேவையான உதவிகளை இடைவிடாமல் செய்கிறார், ரேலு வசாவே.

இளவேனில் வாலறிவன்

பெயரில் இனிய தமிழ் கொஞ்சுகிறது. கைகளிலோ துப்பாக்கி மிரட்டுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும் சிறப்பாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச்சுடும் வீராங்கனை இளவேனில். இதற்காக ‘2020-ம் ஆண்டின் விளையாட்டு வீரர்’ என்ற FICCI விருதை வென்றிருக்கிறார். அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதிபெற்றிருக்கிறார் இளவேனில். அகமதாபாத்தில் வசிக்கும் இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 2019-ல் `டாப் 10 இளைஞர்'களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனந்த விகடன் `நம்பிக்கை விருது' பெற்றிருக்கிறார்.

கே.கே.ஷைலஜா - இளவேனில் வாலறிவன்
கே.கே.ஷைலஜா - இளவேனில் வாலறிவன்

கே.கே.ஷைலஜா

டீச்சர்... இது கேரளாவே மகிழ்ச்சியுடன் உச்சரிக்கும் மந்திர வார்த்தை. வைரஸ்களை எதிர்கொள்ள அம்மக்கள் டாக்டரை நம்பியதைவிட டீச்சரை நம்பியதுதான் மிக அதிகம். கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பல்வேறு அமைப்பு களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜா. 2020-ம் ஆண்டு உலக நாடுகளால் அதிகம் கொண்டாடப்பட்ட இந்தியர் இவரே. உலகப் புகழ்பெற்ற `வோக்’ இதழ், 2020-ம் ஆண்டுக்கான ‘வுமன் ஆஃப் தி இயர்’ பட்டியலை வெளியிட்டது. அதில் சிறப்பிக்கப்பெற்ற நம்ம டீச்சர், அந்த இதழின் அட்டைப்படத்தையும் அலங்கரித்திருக்கிறார்.

ரிதிமா பாண்டே

பாப்கார்ன் சாப்பிடும் பருவத்தில் பருவநிலை பற்றி முழங்குகிறார் இந்தச் சுட்டிப் பெண். பிபிசி 100 சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிற ரிதிமாவுக்கு வயது பன்னிரண்டே. உத்தரகாண்டைச் சேர்ந்த இவர், கடந்த பத்து ஆண்டுகளில் பருவநிலை மிகவும் மாற்றம் அடைந்ததையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கண்டு, ஒரு போராளியாகவே மாறிவிட்டார். சுற்றுச்சூழல் பிரச்னைகளை அரசு சரியாகக் கையாளவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தபோது, இவருக்கு ஒன்பது வயதுதான். கடந்த ஆண்டு முதலாக சர்வதேச அளவில் சுற்றுச்சூழலியலில் கவனம் ஈர்க்கும் நபராகச் செயல்பட்டு வருகிறார். இப்போது `இந்தியாவின் கிரெட்டா துன்பர்க்' என்று மிகுந்த நம்பிக்கையுடன் அழைக்கப்படுகிறார்.

ஐஸ்வர்யா ஸ்ரீதர் - ரிதிமா பாண்டே
ஐஸ்வர்யா ஸ்ரீதர் - ரிதிமா பாண்டே

ஐஸ்வர்யா ஸ்ரீதர்

உயிரியல் பூங்காவிலும் அனிமல் கிங்டம் சேன லிலும் கானுயிர்களைப் பார்த்து வியப்பதோடு, தன் ஆர்வத்தை மட்டுப்படுத்திவிடவில்லை ஐஸ்வர்யா. ரிஸ்க்கி ஜாப் பட்டியலில் இடம்பெறுகிறது ஆர்வமும் சாகமும் நிறைந்த இவரது பணி. இந்தியாவின் முக்கியமான வன உயிர் புகைப்படக்கலைரும் ஆவணப்பட இயக்குநருமான இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார்.

14 வயதிலேயே சாஞ்சுரி `ஏசியா யங் நேச்சுரலிஸ்ட்' விருதை வென்றவர். 2020-ம் ஆண்டுக்கான `வைல்டு லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்' என்ற விருதை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். லண்டனில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் இந்த விருதை வழங்கியிருக்கிறது. 80 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட போட்டியில் ஐஸ்வர்யாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்ததில் தமிழ்நாட்டுக்கே பெருமை.