Published:Updated:

சூப்பர் 10 பெண்கள்! - தமிழகம்

பாப்பம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
பாப்பம்மாள்

சாதனையாளர்கள்

- சஹானா

இசைவாணி

சென்னையைச் சேர்ந்த இசைவாணி, கலக்கல் `கானா ராணி’யாகவே அறியப்படுகிறார். ஆண்கள் மட்டுமே கலக்கிக்கொண்டிருந்த கானாவில் தொடர்ந்து ஒரு பெண்ணாக அமர்க்களப்படுத்தி வருகிறார். பிபிசி வெளியிட்ட சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்’ இசைக் குழுவுடன் இணைந்து செயல்படும் இசைவாணி, கானா இசை மூலம் சமூக மாற்றத்துக்கான கருத்துகளையும் பரப்பிவருகிறார். சாதியத்தைச் சாடுவதும் பெண்ணுரிமை கருத்துகளைப் பரப்புவதும் இசைவாணியை வேறோர் இடத்துக்கு அழைத்துச் செல்கிறது.

இசைவாணி - ஆதனக்கோட்டை ஜெயலட்சுமி
இசைவாணி - ஆதனக்கோட்டை ஜெயலட்சுமி

ஆதனக்கோட்டை ஜெயலட்சுமி

`ஊருக்கு உழைத்திடல் யோகம்’ என்பார்கள். அதைத்தான் விதையாக ஊன்றி நல்லுரம் போட்டு வளர்க்கத் தொடங்கியிருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. தனியார் நிறுவனம் நடத்திய விண் அறிவியல் போட்டியில் வெற்றிபெற்று, அமெரிக்காவின் `நாசா’வுக்குச் செல்ல நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட 4,000 மாணவர்களில், ஜெயலட்சுமியும் ஒருவர். ஏழ்மை நிலையிலிருந்த இவருக்கு அமெரிக்கா செல்வ தற்கான நிதி உதவிகளை மாவட்ட நிர்வாகமும் சில தொண்டு நிறுவனங்களும் செய்ய முன்வந்தன. தேவையைத் தாண்டியும் உதவிகள் கிடைக்கவே அவற்றையெல்லாம் தன் ஊர் மக்களுக்கு உதவும் வகையில் மடை மாற்றியிருக்கிறார் ஜெயா.

``எனக்கென்று எந்தத் தேவையும் இல்லை. ஆனால், எங்கள் கிராமத்துக்கு நிறைய தேவைகள் உள்ளன. முக்கியமாக, கழிப்பறைகள் இல்லாமல் பெண் பிள்ளைகள் ரொம்பவே சிரமப்படுகிறோம். உங்களால் அதற்கு உதவ முடியுமா?” - ஜெயலட்சுமியின் இந்த வேண்டுகோளால் அந்தக் கிராமத்திலுள்ள 125 வீடு களுக்கு கழிப்பறை வசதி கிடைத்திருக்கிறது.

ஒரு நல்லெண்ணத்துக்கும் முயல்வதற்கும் எவ்வளவு பெரிய பலன் கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததோடு, நம் எல்லோருக்கும் முன்மாதிரி ஆகியிருக்கிறார். இப்போது, `எங்க மொத்த மாவட்டத் தையும் முன்மாதிரி மாவட்டமா ஆக்கணும்’ எனத் தன் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறார். இவர், 2020-ம் ஆண்டுக்கான `ஆனந்த விகடன் நம்பிக்கை விருது’க்குத் தேர்வாகியிருக்கிறார்.

வெண்ணிலா

‘கோவிட் விமன் வாரியர்ஸ், தி ரியல் ஹீரோஸ்’ விருது நீலகிரியைச் சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியர் வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் வனத்தையொட்டியுள்ள பகுதிகளுக்குச் சென்று ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கினார். ஊரடங்கு காரணமாகப் போக்குவரத்துக்கு வாகனம் இல்லாத நிலையிலும், தினமும் 12 கி.மீ தூரத்தை நடந்து சென்று பொருள்களை அளித்தது அனைவரையும் ஆச்சர்யம் கொள்ளச் செய்தது.

வெண்ணிலா  - கிடாக்குழி மாரியம்மாள்
வெண்ணிலா - கிடாக்குழி மாரியம்மாள்

கிடாக்குழி மாரியம்மாள்

இப்போது வைரலாகிக்கொண்டிருக்கும் கர்ணன் திரைப்படத்தின் ‘கண்டா வரச் சொல்லுக்க கர்ணன கையோடு கூட்டி வாருங்க’ பாடலைப் பாடியவர்தான் இந்த மாரியம்மாள். சிறுவயதிலிருந்தே பாடிக்கொண்டிருந்தாலும் 55 வயதில்தான் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. லேட்டா வந்தாலும் ஒரே பாடலில் உலகம் அறிந்த பாடகி யாகப் புகழ்பெற்றுவிட்டார்.

சுதா கொங்கரா

தமிழிலும் தெலுங்கிலும் வெற்றிப்பட இயக்குநர் பட்டியலில் இணைந்துவிட்டார் சுதா. மாதவன், சூர்யா என நட்சத்திர நாயகர்களைக் கொண்டு கதையம்சத்தோடு கூடிய படங்கள் எடுத்து, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவர் சுதா. பெருந்தொற்றுக் காலத்தில் புத்தம் புது காலை, பாவக்கதைகள் என ஆந்தாலஜியிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார். ‘என்னைப் பெண் இயக்குநர் என்று சொல்லாதீர்கள். இயக்குநர் என்று சொல்லுங்கள்’ என்கிறார். அவர் சொல்வது மிகச்சரி.

சுதா கொங்கரா - பாப்பம்மாள்
சுதா கொங்கரா - பாப்பம்மாள்

பாப்பம்மாள்

உழைப்பும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் பாப்பம்மாள் பாட்டிக்கு பத்ம விருதை அளித்திருக்கிறது. கோவையைச் சேர்ந்த இவருக்கு 106 வயது. 1915-ம் ஆண்டு பிறந்தவர். காதல் திருமணம் செய்தவர். கணவர் மறைவுக்குப் பிறகு, வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விவசாயத்தைக் கற்றுக்கொண்டு, விவசாயம் செய்து வருகிறார். இப்போது இதே பல்கலைக்கழகத்தில் விவாதக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார், வியக்கவைக்கும் இந்தப் பாட்டி.

பாம்பே ஜெயஸ்ரீ

திரையிசையில் குறைவான பாடல்களையே பாடி யிருந்தாலும் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்படியான அற்புதமான பாடல்களைப் பாடி, நம் மனங்களைக் கொள்ளைகொண்டவர் ஜெயஸ்ரீ. கர்னாடக இசை, திரையிசை எனப் பயணிப்பவருக்கு சென்ற ஆண்டின் செயல்பாடுகளின் அடிப்படையில் பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. மக்களை மகிழ்விக்கும் இசைக் கலைஞாரக இருப்பதையே பெரும் பேறாகக் கருதுவதால், விருதுகளை எதிர்பார்ப்பதில்லை என்றாலும் பத்மஸ்ரீ விருது மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது என்கிறார் ஜெயஸ்ரீ.

பாம்பே ஜெயஸ்ரீ - அனிதா பால்துரை
பாம்பே ஜெயஸ்ரீ - அனிதா பால்துரை

அனிதா பால்துரை

இந்திய மகளிர் கூடைப்பந்தாட்டத்தின் அடையாளம். இந்தியக் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர். ஆசிரிய கூடைப்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டிகளில் எட்டு முறை விளையாடிய முதல் இந்தியப் பெண்.கைப்பந்திலும் தடகள விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டிருந்தவரை, இவரின் பயிற்சியாளர்தான் கூடைப்பந்தாட்டத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்.

11 வயதிலிருந்து விளையாடி வரும் அனிதா, இப்போது ரயில்வேயில் பணிபுரிகிறார். இந்த ஆண்டு பத்ம விருது பெற்றிருக்கிறார்.

நேத்ரா

கொரோனா ஊரடங்கின்போது, மதுரையில் ஏழை களுக்கு உதவிய சுட்டிப்பெண் இவர்தான். தன் படிப்புச் செலவுக்காகச் சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்குச் செலவிட்டு உதவியுள்ளார். தன்னலம் கருதாது, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட மதுரைச் சுட்டி நேத்ரா, பிரதமரின் வானொலி உரையின் வாயிலாக நாடெங்கும் பிரபலமானார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவரது உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என அறிவித்திருக்கிறார் முதல்வர். சலூன் கடைக்காரரின் மகளை நல்லெண்ணத் தூதராக நியமித்துள்ளது UNADAP (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம்) என்கிற அரசு சாரா ஓர் அமைப்பு.

நேத்ரா - சக்தி நிவேதா
நேத்ரா - சக்தி நிவேதா

சக்தி நிவேதா

உலகின் உயரமான இரண்டு மலைச் சிகரங்களைத் தொட்ட 25 வயது இளம்பெண் சக்தி நிவேதா. பொள்ளாச்சியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, இப்போது மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் மென் பொறியாளராகப் பணியாற்றுகிறார். தென் அமெரிக்காவில் உள்ள 23,000 அடி உயரம் கொண்ட மலையில் ஏறி சாதனை படைத்ததன் மூலம் கவன ஈர்ப்புக்கு ஆளானார் சக்தி. ஐரோப்பா கண்டத்தில் உள்ள 18,224 அடி உயரம் உள்ள எல்பரஸ் மலையை 24 நாள்களில் ஏறினார். இதன் மூலம் எல்பரஸில் கால்பதித்த முதல் தமிழக பெண் என்ற சாதனையையும் படைத்தார். 2020 இந்தியக் குடியரசு தினத்தன்று தென் அமெரிக்காவில் உள்ள 22,841 அடி உயரமான அக்கன் காகூவா மலையை 14 நாள்களில் எட்டினார். இது உலகில் அதிக உயரம் கொண்ட 7 மலை களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 29,000 அடி உயரம் உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதே சக்தி நிவேதாவின் இலக்கு.