Published:Updated:

சூப்பர் 10 பெண்கள்! - உலகம்

சூப்பர் 10 பெண்கள்! - உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் 10 பெண்கள்! - உலகம்

சாதனையாளர்கள்

- சஹானா

2020... உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட ஆண்டு. ஆனால், பெண்கள் வீட்டிலும் வேலை செய்தார்கள். அலுவலகப் பணிகளையும் கூடுதலாக வீட்டிலேயே செய்து முடித்தார்கள். மூன்று வேளைக்குப் பதிலாக ஆறு வேளைகூட சமைத்தார்கள். குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளிலும் வீட்டுப்பாடங்களிலும் துணை நின்றார்கள். வீடு, வாசல் தாண்டி கொரோனாவுக்கும் அஞ்சாமல் களத்தில் சென்றும் பணியாற்றினார்கள்.

சூப்பர் 10 பெண்கள்! - உலகம்

இவையெல்லாம் தாண்டி நிர்வாகம் முதல் விண்வெளி வரை வெற்றிக்கொடி நாட்டினார்கள். சேவையிலும் மனிதநேயத்திலும் சிகரம் தொட்டார்கள். ஆதரவற்ற பிராணிகளுக்கும் உணவும் சிகிச்சையும் கொடுத்தார்கள். இப்படி யாதுமாகி நின்ற பெண்களை இங்கு மட்டுமல்ல; உலகெங்கும் கண்டோம். அந்த முத்திரை பெண்களில் முக்கியமான சிலரை இங்கு அறிவோம்... தொடர்வோம்!

கமலா ஹாரிஸ்

அது மூன்றாம் உலக நாடு அல்ல... அமெரிக்கா. அங்கேயும்கூட ஒரு பெண் உயர்ந்த பொறுப்புக்கு வருவதற்கு 230 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அப்படித்தான் அமெரிக்க வரலாற்றில் துணைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்கிற மாபெரும் சாதனையைப் படைத்திருக்கிறார் கமலா ஹாரிஸ். 56 வயதான இவர், இந்திய ஆப்பிரிக்க அமெரிக்கர். 2016-ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் சார்பாக, மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘சுதந்திரம் சமத்துவம் சமாதானம்’ ஆகிய கருத்துகளை முன்வைத்து இயங்கி வருகிறார் கமலா. இவரது பூர்வீகம் உலகின் மூன்று பகுதிகளைச் சார்ந்ததாக இருப்பதால், உலகெங்கும் சொந்தம் கொண்டாடப்படுகிறார். இவரின் செயல்பாடுகள் அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கட்டும்.

கமலா ஹாரிஸ் - லுஜெயின் அல் ஹத்லோல்
கமலா ஹாரிஸ் - லுஜெயின் அல் ஹத்லோல்

லுஜெயின் அல் ஹத்லோல்

இந்த நூற்றாண்டிலும் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமைக்காகவெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பது எவ்வளவு துயரம்... 2017-ம் ஆண்டு ‘விமன் கேன் டிரைவ்’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தகவல்களைப் பரிமாறினார். அதோடு, `பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது’ என்கிற சவுதி அரசின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் லுஜெயின். இவருக்கு வயது 31. போராட்டத்துக்குப் பிறகு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும் வாகனம் ஓட்டும் உரிமைகேட்டுப் போராடிய பெண்களைச் சிறையிலிருந்து விடுவிக்கவில்லை அந்த அரசு. லுஜெயி னின் குற்றம் உறுதி செய்யப்பட்டு, ஐந்தாண்டுக் கால கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. மனித உரிமை ஆணையம் உட்பட பல்வேறு அமைப்புகளும் நாடுகளும் கொடுத்த நெருக்கடியின் விளைவால், இப்போது லுஜெயின் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

கீதாஞ்சலி ராவ்

உலகப் புகழ்பெற்ற `டைம்’ இதழ் ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது. இந்த ஆண்டு முதன்முறையாக சிறந்த குழந்தையைத் தேர்வு செய்துள்ளது.இந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறார் 15 வயது கீதாஞ்சலி ராவ். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இளம் விஞ்ஞானியாகவும் கண்டுபிடிப்பாளராகவும் செயல் படுகிறார். உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் காரீயம், குடிநீரில் கலந்திருப்பதை கீதாஞ்சலி கண்டுபிடித்த கருவி யின் மூலம் கண்டறிய முடியும். இப்போது உலக அளவில் இளம் விஞ்ஞானிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் கீதாஞ்சலி.

கீதாஞ்சலி ராவ் - இமானுவேல் சார்பென்டியர்
கீதாஞ்சலி ராவ் - இமானுவேல் சார்பென்டியர்

இமானுவேல் சார்பென்டியர்

ஒரு பெண்ணால் கடினமான துறைகளிலும் கால் பதித்து சாதிக்க முடியும் என்பதற்கான உதாரண மனுஷி சார்பென்டியர். பிரான்ஸ் நாட்டவரான இவர் பேராசிரியராகவும் விஞ்ஞானியாகவும் பணியாற்றுகிறார். மரபணுவியல், நுண்ணுயிரியியல், உயிர்வேதியியல் எனப் பல்துறைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறார். 2020-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியருக்கும் ஜெனிஃபர் டெளடுனாவுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. மரபணுத் தொகுதியைத் துல்லியமாக நறுக்கிப் பிணைக்கும் கிரிசிப்பர் நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காகவே இந்த நோபல் பரிசு. 2015-ம் ஆண்டு முதல் பெர்லினில் உள்ள மார்க்ஸ் ப்ளான்க் இன்ஸ்டிட்யூட்டின் தொற்று உயிரியல்துறையின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் பெருமைக்குரிய பெண் சார்பென்டியர். தொற்று உயிரியல்துறையின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் பெருமைக்குரிய பெண் சார்பென்டியர்.

ஜெனிஃபர் டெளடுனா

இணைந்த கைகளில் இரண்டாவது கை இவருடையது. அமெரிக்க உயிர்வேதியியலாளரான ஜெனிஃபர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மற்றும் உயிரணுவியல் துறையின் பேராசிரியராகச் செயலாற்றுகிறார். இமானுவேல் சார்பென்டியருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர் இவரே. அதுமட்டுமல்ல; வேதியியலுக்கான நோபல் பரிசை இரண்டு பெண்கள் பகிர்ந்துகொள்வதும் இதுவே முதன்முறை. உலகின் மிக முக்கியமான அறிவியல் துறை பரிசுகளையும் வென்றிருக்கிறார் ஜெனிஃபர்.

ஜெனிஃபர் டெளடுனா - கெர்டி கல்ஜுலைட்
ஜெனிஃபர் டெளடுனா - கெர்டி கல்ஜுலைட்

கெர்டி கல்ஜுலைட்

எஸ்டோனியா நாட்டின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக இருக்கிறார் இவர். 46 வயதில் இந்த உயர் பதவிக்குப் பொறுப்பேற்றதால், உலகின் இரண்டாவது இளம் பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் (இதற்கு முன் ஸ்லோவிக் குடியரசின் தலைவராக 45 வயது பெண்மணி ஸுஸுனா கேபுடோவா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே உலகின் முதல் இளம் பெண் குடியரசுத் தலைவர்).எஸ்டோனியா அரசியலில் குறிப்பிடத்தக்க முதல் பெண் தலைவரும் கெர்டிதான். இவர் பறவையியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவரும்கூட.

கிறிஸ்டினா கோக்

`விண்ணைத் தாண்டி வந்தவள்’ என கிறிஸ்டினாவை நினைத்து நாம் பெருமிதம் கொள்ளலாம். விண்வெளி யில் நடக்கும் மகளிர் மட்டும் திட்டத்துக்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டு, விண்வெளிக்குச் சென்ற பெண் இவர். சக விண்வெளி வீராங்கனை ஜெஸிகாவோடு விண்வெளி நடை மேற்கொண்டவரும்கூட. நீண்ட காலம் (328 நாள்கள்) விண்வெளியில் தங்கியிருந்த பெண் என்ற மகத்தான சாதனையை, கடந்த ஆண்டு நிகழ்த்தியவர். இப்போது நிலவில் பெண்ணை இறங்க வைக்கும் ‘ஆர்டிமிஸ்’ திட்டக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற கிறிஸ்டினா, அன்டார்டிகாவிலும் ஆராய்ச்சி மேற்கொண்டிருப்பது சிறப்பு.

கிறிஸ்டினா கோக் - காஜா கல்லாஸ்
கிறிஸ்டினா கோக் - காஜா கல்லாஸ்

காஜா கல்லாஸ்

பெருந்தொற்றுக் காலகட்டத்தில் இவர் ஆற்றிய பணிகளின் பலனாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் எஸ்டோனியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 43 வயதேயான காஜா கல்லாஸ். இவர் ‘ரிஃபார்ம்’ கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவரின் அமைச்சரவையில் 46.7 சதவிகிதத்தினர் பெண்களே.

ஸ்வாதி மோகன்

அடுத்தடுத்து இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் சாதனை படைக்கும் காலம் இது. நாசாவின் `மார்ஸ் 2020’ திட்டத்தின் வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டுச் செயல்பாட்டுத்தலைவராகச் செயல்படுகிறார் ஸ்வாதி மோகன். ரோவரைச் சுமக்கும் விண்கலத்தின் செவ்வாய்க் கோள் பயணத்தின்போது, கோளின் மேற்பரப்பில் தரையிறங்கும்போது அது சரியான திசையில் நிலைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான பொறுப்பை மேற்கொண்டவர் இவரே. 2021 பிப்ரவரி 18 அன்று பெர்சிவீரன்ஸ் ரோவர் செவ்வாயில் பத்திரமாகத் தரையிறங்கியிருக்கிறது. `ஸ்டார் ட்ரெக்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் தம்மை விண்வெளித் துறையில் ஆர்வம்கொள்ள வைத்தது என்று சொல்லி வியப்பூட்டுகிறார் ஸ்வாதி.

ஸ்வாதி மோகன் - கிரெட்டா துன்பெர்க்
ஸ்வாதி மோகன் - கிரெட்டா துன்பெர்க்

கிரெட்டா துன்பெர்க்

இந்த இளம் போராளி, பல பெண் களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடிவரும் கிரெட்டா துன்பெர்க் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். வயது 18. உலகம் முழுவதும் ஏராளமான இளைஞர்களை சூழலைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதே இவரின் முதன்மைப் பணி. போர்த்துகீசிய நாட்டின் மனிதநேயத்துக்கான ‘குல்பென்கியன்’ விருதைப் பெற்றிருக்கிறார் கிரெட்டா. இந்த விருதின் மூலம் கிடைத்த ஒரு மில்லியன் யூரோ பணத்தை, பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டார். ஸ்வீடன் நாடு இவருக் காக சிறப்பு தபால்தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது.