லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சுயத்தை இழக்கச் செய்யும் ‘சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' உங்களுக்கும் இருக்கா... ஓர் உளவியல் பார்வை!

சூப்பர்வுமன் சிண்ட்ரோம்
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர்வுமன் சிண்ட்ரோம்

தன்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம்... உடலும் உள்ளமும் ஒத்துழைக்காத நிலையிலும் ‘நோ’ சொல்லத் தயக்கம்... இந்த ஓட்டத்தில் தங்களை கவனித்துக்கொள்ள தவறுவது..

பெண்கள் காலங்காலமாக அஷ்டாவ தானிகளாக அறியப்பட்டவர்கள். வீடு, உறவுகள், வேலை, பொதுநலம் என எல்லாப் பொறுப்புகளையும் ஒற்றை ஆளாகச் சுமந்து பழகியவர்கள். பல வேலைகளைச் சுமப்பதொன்றும் பெண்களுக்குப் புதிதல்ல. அத்தனை வேலைகளையும் 100 சதவிகித பர்ஃபெக்‌ஷனுடன் செய்ய நினைக்கும்போது தான் பிரச்னை.

சுபா சார்லஸ்
சுபா சார்லஸ்

தன்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம்... உடலும் உள்ளமும் ஒத்துழைக்காத நிலையிலும் ‘நோ’ சொல்லத் தயக்கம்... இந்த ஓட்டத்தில் தங்களை கவனித்துக்கொள்ள தவறுவது... தனக்கென ஓர் உலகம் இருப்பதையும் அதில் ரசித்து வாழ நிறைய விஷயங்கள் இருப்பதையும் மறந்து, எப்போதும் அடுத்தவருக்காக யோசித்து உழைத்துக் களைக்கும் பெண்களில் நீங்களும் ஒருவரா... அப்படியானால் உங்களுக்கும் இருக்கலாம் `சூப்பர்வுமன் சிண்ட்ரோம்'.

சூப்பர்வுமன் சிண்ட்ரோம் என்பதன் விளக்கம், அதன் அறிகுறிகள், மீளும் வழிகள், வாழ்வியல் மாற்றங்கள் போன்றவற்றைப் பகிர்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

‘`சூப்பர்வுமன் சிண்ட்ரோம் என்ற வார்த்தையை 1984-ம் வருடம் மார்ஜோரி ஹேன்சன் ஷேவிட்ஸ் எனும் எழுத்தாளர் தன் புத்தகத்தில் முதன்முறையாகப் பிரயோகித்திருந் தார். `சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' என்ற பெயரே அர்த்தம் விளக்கும். சூப்பர்மேன் போல.... சூப்பர்வுமனாக இருக்க முயற்சி செய்வது. சூப்பர்வுமன் சிண்ட்ரோம் உள்ள பெண்கள் அதிக வேலை செய்பவர்களாக, அதீத அர்ப்பணிப்பு உள்ளவர்களாக, அளவுக் கதிகமாக களைத்துப் போகிறவர்களாக, ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களாக இருக்கலாம். ஆறுதலான ஒரு விஷயம் என்ன தெரியுமா... உங்களைப் போன்ற சூப்பர்வுமன் இங்கே ஏராளம் பேர் இருக்கிறார்கள்.

சுயத்தை இழக்கச் செய்யும் ‘சூப்பர்வுமன் சிண்ட்ரோம்'
உங்களுக்கும் இருக்கா... ஓர் உளவியல் பார்வை!

அம்மாக்கள், வேலைக்குச் செல்கிறவர்கள், செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், இல்லத்தரசிகள் என யாருக்கு வேண்டு மானாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம். இவ்வளவு ஏன்... பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்களுக்குக்கூட வரலாம் என்கின்றன ஆய்வுகள். சூப்பர்வுமனாக நினைத்துக்கொள்கிற பெண்கள், தம்மைப் புறக்கணித்து, தான் சுமக்கும் பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்ய முனைவார்கள்.

பெண்கள் சுமக்கும் ஒவ்வொன்றுமே முழு நேர ஈடுபாடும் உழைப்பும் தேவைப்படுகிற பொறுப்புகள்தாம். அரிதாகச் சிலர் இவற்றில் எல்லாப் பொறுப்புகளையும்கூட சுமப்பவர் களாக இருக்கலாம். இவற்றில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேலான பொறுப்புகளையோ சரிவரச் செய்ய முடியாமல் போகும்போது ‘நான் சரியில்லையோ... இன்னும் அதிகம் ஓடணுமோ, உழைக்கணுமோ’ என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். சுமக்கும் எல்லாப் பொறுப்புகளிலும் ‘ஆகச் சிறந்தவள்’ என்ற கிரீடத்துக்கு ஆசைப் பட்டு ஓடுகிற மனநிலையைத்தான் ‘சூப்பர்வுமன் சிண்ட்ரோம்’ என்கிறது உளவியல். அப்படி ஆகச்சிறந்தவளாக தன்னை நிரூபிக்க முடியாத நிலையில் அந்தப் பெண்ணுக்கு அதீத மன அழுத்தம் ஏற்படுவதையே இது குறிக்கிறது.

உங்களுக்கும் உண்டா இந்த சிண்ட்ரோம்?

* வீட்டிலும் வெளியிலும் நீங்கள் சுமக்கும் பொறுப்புகளை முழுமையாகவோ, திருப்தியாகவோ செய்யவில்லை என்ற குற்ற உணர்வு உங்களுக்கு உண்டா?

* அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் என நீங்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய நினைப்பில் இரவு வெகுநேரம் விழித்திருக்கிறீர்களா?

* செய்ய வேண்டிய, முடிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறதா?

பெற்றோர், கணவர், குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குப் போதிய நேரம் ஒதுக்க முடியாததாக உணர்கிறீர்களா?

* அடுத்த நாளைக்கான சமையல், கிளீனிங், இஸ்திரி உள்ளிட்ட வேலைகள் முடிக்கப்படாமல் போகக் கூடாது என்பதற்காக இரவு வெகுநேரம் மெனக்கெட்டு அவற்றை முடிக்கிறீர்களா?

* பிறரால் ஜட்ஜ் செய்யப்படுவோமோ என்ற பயத்தில் யாருக்கும் எப்போதும் ‘நோ’ சொல்லத் தயங்குகிறீர்களா?

* உங்களுக்கென நேரம் ஒதுக்கி சுய அக்கறை காட்டினால் வீட்டிலுள்ளவர்கள் உங்களைத் தவறாக நினைப்பார்களோ என்று யோசிக்கிறீர்களா?

* குற்ற உணர்வு, மன அழுத்தம், வருத்தம் காரணமாக தலைவலி, வயிற்று உபாதைகள் போன்றவற்றை உணர்கிறீர்களா?

இவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கும் சூப்பர்வுமன் சிண்ட் ரோம் இருப்பதாகக் கொள்ளலாம்.

தப்பிக்க...

ஒருநாளைக்கு 24 மணி நேரம் போதாமல் ஓடுபவராக இருக்கலாம். ஆனாலும் வலுக்கட்டாயமாக உங்களுக்காக சிலமணி நேரத்தை ஒதுக்குங்கள்.

உங்களுக்குப் பிடிக்கும் என்பதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான உணவுகளை தட்டில் வைத்தால் சாப்பிடுவீர்களா? அப்படியே மல்லுக்கட்டி சாப்பிவடுவது எவ்வளவு ஆபத்தானதோ... அதைப் போன்றதுதான் உங்கள் ஆற்றலுக்கு மீறிய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொள்வது. சில பொறுப்புகளைத் தியாகம் செய்யுங்கள். எப்படிச் செய்தாலும் எத்தனை வருடங்கள் செய்தாலும் அந்த வேலையால் உங்களுக்கு எந்தப் பலனும் பாராட்டும் இல்லை என்ற பட்சத்தில் அதைத் தூக்கிப் போடத் தயங்காதீர்கள்.

100 சதவிகிதம் பர்ஃபெக்ட் ஆக இருப்பது யாருக்கும் சாத்தியமற்றது. `Imperfect is perfect too' என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

எல்லாவற்றையும் தலையில் சுமக்கும் தியாகிப்பட்டம் தேவை யற்றது. தேவைப்படும்போது உதவி கேளுங்கள். அடுத்தவர் உதவியோடு ஒரு வேலையைச் செய்யும்போது நீங்கள் எதிர்பார்க்கும் பர்ஃபெக்‌ஷன் இன்னும் அதிகரிக்கலாம்.

யார் என்ன சொன்னாலும், ‘என்னை எனக்கு அவ்வளவு பிடிக் கும்’ என்று தினமும் பலமுறை சொல்லிக்கொள்ளுங்கள்.

சத்தமாகப் பாடுவது, தையாதக்கா வென ஆடுவது என உங்களுக்குப் பிடித்த எந்த விஷயத்தையும் தயங் காமல் செய்யுங்கள்.

ரிலாக்ஸ்டான எண்ணெய்க் குளியல், ஆசுவாசப்படுத்தும் பெடிக்யூர், பாடி மசாஜ், நல்ல சாப்பாடு என உங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நிம்மதியைத் தரும் விஷயங்களைச் செய்யுங்கள்.

இயலாமையை வெளிப்படுத்து வதில் குற்ற உணர்வு தேவையில்லை. உங்களை அழுத்தும் விஷயங்களை, வேதனைகளை யாரிடமாவது மனம் விட்டுப்பேசுங்கள்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழும் உரிமை உங்களுக்கு உண்டு. எப்போதும் எல்லோருக்கும் ‘யெஸ்’ சொன்னால் தான் நீங்கள் நல்லவராக, வல்லவராக அறியப்படுவீர்கள் என்றில்லை. தேவைப்படும் இடங்களில் ‘நோ’ சொல்வதும்கூட உங்கள் ஆளுமையின் அழகான வெளிப்பாடுதான்.

சிகிக்சை தேவையா?

லைஃப்ஸ்டைலை மாற்றிக் கொள்வது முதல் தீர்வு. அடுத்த வருக்காக வாழாமல் உங்களுக்காக வாழ ஆரம்பிப்பதுதான் முதல் சிகிச்சை. ஆனால், அது ஒரேநாளில் கைவராது.

இந்த சூப்பர்வுமன் சிண்ட் ரோமிலிருந்து நீங்கள் வெளியே வர தியானப் பயிற்சி, யோகா, உடற்பயிற்சிகள் போன்றவற்றைப் பின்பற்றுங்கள். மன அழுத்தம் அதிகரிக்கும்போது தேவைப்பட்டால் மனநல சிகிச்சையை நாடலாம்.