Election bannerElection banner
Published:Updated:

``எனக்கு குரு எங்க அப்பாதான்!" - சிலம்பத்தில் கலக்கும் ஆயுதப்படை காவலர் குருலெட்சுமி

ஆயுதப்படை காவலர் குருலெட்சுமி
ஆயுதப்படை காவலர் குருலெட்சுமி

``எல்லா ஆணின் வெற்றிக்குப் பின்னாலயும் ஒரு பெண் நிச்சயம் இருப்பார். என்னோட சாதனைக்குப் பின்னால எங்க அப்பாதான் இருக்கார்” என நெகிழ்கிறார் தூத்துக்குடி ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்துவரும் `சிலம்பம்’ குருலெட்சுமி.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று சிலம்பம் சுற்றுதல். சிலம்பம், வர்மம், வாள்சண்டை, குத்துச்சண்டை உள்ளிட்ட 19 கலைகளைத் தற்காப்புக் கலைகளாகக் கூறப்படுகிறது. இதில் தற்போதும் உயிர்ப்புடன் இருப்பது சிலம்பம் மட்டும்தான். தமிழன் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் கையில் எடுத்தது `கம்பு’தான் என்கிறது வரலாறு.

குருலெட்சுமி
குருலெட்சுமி

தூத்துக்குடி ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் பெண்காவலர் குருலெட்சுமி, தான் கற்ற சிலம்பக் கலையைக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பிற பெண் காவலர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். மைதானத்தில் கம்பு சுற்றிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம், ``எனக்கு சொந்த ஊரு தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பக்கத்துல உள்ள வானரமுட்டி கிராமம்தான். பி.ஏ தமிழ் படிச்சிருக்கேன்.

அப்பா சண்முகராஜ் கம்பு சுத்துறதுல கில்லாடி. அப்பாவைப் பார்த்துதான் எனக்கும் கம்பு சுத்தணுமுங்குற ஆர்வம் வந்துச்சு. ``பொட்டப் பிள்ளைக்கு எதுக்கு கம்பு சுத்துற வேலை”ன்னு மற்ற அப்பாக்கள் மாதிரி சொல்லாம எனக்கும் சொல்லிக் கொடுத்தார். அப்பாதான் எனக்கு குரு. எல்லா ஆணின் வெற்றிக்குப் பின்னாலயும் ஒரு பெண் நிச்சயம் இருப்பார். என்னோட சாதனைக்குப் பின்னால எங்க அப்பாதான் இருக்கார். இதுவரைக்கும் மாவட்ட, மாநில அளவில் 150 போட்டிகளில் கலந்துகிட்டிருக்கேன். மாரிக்கண்ணன் என்ற மாஸ்டரும் சாதனைக்கு உறுதுணையாக இருந்தார்.

சண்டையிடும் குருலெட்சுமி
சண்டையிடும் குருலெட்சுமி

30 போட்டிகளில் சிறப்பிடம் பெற்றிருக்கேன். நான் கற்ற கலையை என்கூட பணிபுரியும் சக பெண் காவலர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். சிலம்பத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடலசைவுகள் மூலம் தற்காத்துக் கொள்ளுதல் போன்ற பல கூறுகளை உடையதுதான் சிலம்பம். சிலம்பத்தில் அடிமுறை, தொடுமுறை, சுற்றுமுறை ஆகிய மூன்று வகைகள் உண்டு.

முழுமையாக சிலம்பம் கற்றுக்கொள்ள ஆறு மாசம் ஆகும். கம்பின் உயரம் விளையாடுபவரின் நெற்றியளவு இருக்க வேண்டும். காலை 6 மணி முதல் 8 மணி வரை இப்பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது. தற்போது வழிப்பறி, செயின் பறிப்பு ஆகிய சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தங்களைக் காத்துக்கொள்ள முடியாது என்பதே கொள்ளைர்களின் கணிப்பு.

குருலெட்சுமி
குருலெட்சுமி

பெண்களும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுக் கொண்டால் எதிர்த்து நிற்கும் துணிச்சல் தானாக வந்துவிடும். சிலம்பம் சுற்றுவதால் உடம்பிலுள்ள நாடி, நரம்புகள், தசைகள் சீராக இயக்கப்படுகின்றன. இப்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டால் ரத்த ஓட்டமும் சீராகும்.

சிலம்புக் கம்புகளைக் கைகளால் பிடித்து, தன்னை சுற்றிச் சுழற்றும்போது உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஆயுதங்கள் மூலம் நம்மை யாராவது தாக்க முற்பட்டால் கம்பால் தடுத்து வீசிவிடலாம்.

குருலெட்சுமி
குருலெட்சுமி

உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத் திறன், நெகிழ்வுத்தன்மை ஆகியவை சிலம்பத்தால் மேம்படுகிறது. ஆண்ட்ராய்டு போனில் விளையாடும் விளையாட்டுக்களெல்லாம் நம்மை பலமடங்கு சோம்பேறிகளாக்கிவிடும். ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சிலம்பக் கலையை ஆண், பெண் குழந்தைகள் இருபாலருமே கற்றுக்கொள்ள வேண்டியது தற்போதைய அவசியம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு