22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

படகு வலித்து... மலைப்பாதை கடந்து... ஏன் இந்தப் பயணம்!

உஷாகுமாரி
பிரீமியம் ஸ்டோரி
News
உஷாகுமாரி

பேரன்பும் பெரும் பயணமும்

தீதமான அன்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே பல இடர்களை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க முடியும். குறைந்த வருமானமாக இருந்தாலும்கூட, 17 வருடங்களாக டூவீலர், படகு, மலையேற்றப் பயணமெல்லாம் செய்து பாடம் எடுக்கிறார் 51 வயதாகும் ஆசிரியர் உஷாகுமாரி.

படகு வலித்து... மலைப்பாதை கடந்து... ஏன் இந்தப் பயணம்!

உஷாகுமாரியின் வீடு, கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்ட தெற்கு எல்லையில் இருக்கும் அம்பூரி கிராமத்தில் அமைந்திருக்கிறது. காலை 7.30 மணிக்கு வீட்டு முற்றத்தில் ஸ்கூட்டரில் தயாராக அமர்ந்திருந்தவர் நம்மை வரவேற்றார், ``இப்ப புறப்பட்டால்தான் ஒன்பதரை மணிக்குப் பள்ளிக்குப் போய்ச் சேர முடியும். போகும் வழியில் பேசிக்கொள்ளலாம்'' என்று அம்பாகப் புறப்பட்டார். வழியில் ஓர் இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தியவர், அங்கு நின்றிருந்தவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினார், ``இவர் என் கணவர் மோகன். இங்கு பாரம் ஏற்றி இறக்கும் வேலை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். மகன் டி.டி.சி முடிச்சிருக்கிறார், மகள் போட்டோ ஜர்னலிசம் படிக்கிறாள்'' என்று குடும்ப அறிமுகத்தை `ஆன் தி வே'யில் செய்கிறார்.

அடுத்து கும்பிச்சேல் கடவு பகுதியின் படகுத்துறைக்குள் நுழைந்தோம். ``இது நெய்யாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி. அணைக்கு வெள்ளம் கொண்டு சேர்க்கும் கரிப்பியார் ஆறு, இந்த இடத்துலதான் அணையோட இணையுது. இங்கேயிருந்து வல்லத்துல அக்கரையில இருக்கும் காரிக்குழிக்குப் போகணும். அங்கேயிருந்து குந்நத்து மலையுச்சியில இருக்கும் பள்ளிக்கு நாலு கிலோமீட்டர் நடந்து போகணும்'' என்று எதிர்வரும் பெரும் பயணத்தை விவரித்தார். `டீச்சர் நமஸ்காரம்' என்று படகோட்டியின் வரவேற்போடு ஆரம்பித்தது எங்கள் படகுப் பயணம்.

படகின் ஒருபுறம் இரண்டு துடுப்பு களும் மறுபுறம் ஒரு துடுப்பும் இருந்தது. நாம் படகில் ஏறிக்கொண்டதும், பட கோட்டி ஒருபுறத்தில் இருந்து படகை செலுத்தினார். மற்றொருபுறத்தில் அமர்ந்திருந்த ஆசிரியர் உஷாகுமாரி, தனது தோள் பையை இறக்கிவைத்துவிட்டு, இரண்டு கைகளால் துடுப்பை லாகவமாக செலுத்தினார்.

``தனியா வல்லம் செலுத்தும்போது கட்டுப்பாடு இல்லாம காற்றடிக்கும் திசையில போயிரும். அதனால படகுல பயணம் செய்யறவங்க ஒருபக்கம் துடுப்பு போட்டு, படகோட்டிக்கு உதவுவாங்க.வருஷக்கணக்கா உதவி செய்ததுனால படகை லாகவமா செலுத்த கத்துக்கிட் டேன். படகு ஓட்டுறதுக்கு முதல் தகுதி யான நீச்சல், எனக்கு சுத்தமா தெரியாது'' என்று புன்னகைத்தபடி வல்லத்தைச் செலுத்தினார்.

படகு வலித்து... மலைப்பாதை கடந்து... ஏன் இந்தப் பயணம்!

``நான் வேலைபார்க்கிற அரசுப் பள்ளிக்கு `அகஸ்தியா ஏக அத்யாபக வித்யாலயா'ன்னு பேரு. ஒண்ணாம் வகுப்புல இருந்து நாலாம் வகுப்பு வரைக்கும் இருக்குது. மலைவாழ் மாணவர்களுக்காக கேரளத்தில் இதுபோல 350-க்கும் மேல ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுது. நாலு வகுப்புக்கும் சேர்த்து பாடம் எடுக்கிறது, பள்ளியின் கணக்கு வழக்கைப் பார்க்கிறது, மீட்டிங், பயிற்சின்னு எக்கச்சக்க வேலைகள் இருக்கு. நாங்க யாருமே நேரடி அரசு ஊழியர்கள் இல்லை. மாசம் ஒரு தொகையை சம்பளமா கொடுக்கிறாங்க. பி.எஃப், இ.எஸ்.ஐ, போனஸ் என எந்தச் சலுகையும் கிடையாது. இடுக்கி மாவட்டத்துல பள்ளிக்குப் போகும் வழியில யானை மிதிச்சதுல ஓர் ஆசிரியர் இறந்துட்டாங்க. எங்களமாதிரி ஆசிரியர்களுக்கு இன்ஷூரன்ஸ்கூட கிடையாது தெரியுமா?'' என்கிறவர் அதையும் ஒரு மெல்லிய புன்னகையில் கடக்கிறார்.

காரிக்குழியை அடைந்தோம். கரையிலேயே பள்ளி மாணவர்களின் `டீச்சர் குட்மார்னிங்' வரவேற்றது. படகிலிருந்து இறங்கி இரண்டு தோள்களிலும் பையை மாட்டியவர் மலையேறும் பயிற்சி வீராங்கனை போன்று காரிக்குழித் தாண்டி குந்நத்து மலை உச்சியை ஊன்றுகோலின் உதவி யுடன் புறப்பட்டார். குந்நத்து மலை அடிவாரத்தில் சில குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் நின்று `குக்கூ' எனக் கூக்குரல் எழுப்பினார் உஷா. குடிசைகளில் இருந்து பதிலுக்குக் குரல்கொடுத்தபடியே சில மாணவர்கள் சீருடையில் வெளிப் பட்டனர். இணைந்துகொண்ட மாணவர்களுடன் சேர்ந்து செங்குத்தான மலைப் பாதைகளில் மூச்சுவாங்க நடந்து செல்கிறார் உஷா. ``எனக்கு ஆஸ்துமா இருக்கு. அதுக்கான மாத்திரை எப்பவும் பையில வெச்சிருப்பேன். தினமும் மலை ஏறிப்போறது ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. கால்வலி அதிகமாகிட்டே வருது. வேறு ஸ்கூல் மாறி போகலாம்னு சில நேரம் தோணும். ஆனா, இந்த மக்கள் தன் வீட்ல ஒருத்தியா என்னைப் பார்க்கிறாங்க. அந்த அன்புதான் தடுக்குது'' என்று சிலாகிக்கிறார். இவரிடம் படித்தவர்கள் பலர் அரசு வேலையில் இருக்கிறார்களாம்.

படகு வலித்து... மலைப்பாதை கடந்து... ஏன் இந்தப் பயணம்!

``எனக்கு 19 வயசு இருக்கும்போது போலீஸ் வேலை கிடைச்சது. வீட்டுல எதிர்ப்பு கிளம்பினதனால அந்த எண்ணத்தை கைவிட்டுட்டேன். 1999-ல் தான் மலைவாழ் மாணவர்களுக்கான இந்தப் பள்ளியில ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்துல கோட்டூர்ங்கிற மலைக்கிராமத்து பள்ளியில வேலை செய்தேன். 2002 முதல் இந்த குந்நத்துமலைப் பள்ளிக்கு மாறி வந்தேன்'' என்கிறவர் கொஞ்சம் யோசித்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பிக்கிறார்.

``ஒருநாள் ஸ்கூல்ல மதியம் சாப்பிட்டு விட்டு நாற்காலியில உட்கார்ந்தேன். திடீர்னு உடம்பு முடியாம ஆயிட்டுது. அசைவற்று அப்படியே மயங்கிட்டேன். மாணவர்கள், ஊரில் உள்ளவங்ககிட்ட சொல்லிட்டாங்க. ஊர்மக்கள் திரண்டு வந்து முதலுதவி செஞ்சாங்க. நாற்காலியில ரெண்டு கம்புகளைக் கட்டி, என்னை அதுல உட்கார வெச்சு ஆம்பூரியில உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனாங்க. அப்ப இந்த மலைக்கிராமத்து மக்கள் மொத்தமாகப் பேரணிபோல மருத்துவமனை வரைக்கும் வந்தாங்க. எனக்காக அவங்க வேலை எல்லாத்தையும் விட்டுட்டு திரண்டுவந்த மக்களைப் பார்த்து எங்க ஊரைச் சேர்ந்தவங்க பிரமித்து போனாங்க. இப்பவும் அதை அடிக்கடி ஞாபகப்படுத்திப் பேசுவாங்க'' என்கிறார்.

ஆசிரியர் பணி மட்டுமல்ல... மலைக் கிராமத்து மக்களுக்கு மனு எழுதிக் கொடுப்பதில் இருந்து பலதரப்பட்ட உதவிகளையும் முன்னின்று செய்து கொடுக்கிறார் ஆசிரியர் உஷாகுமாரி. அவரை நன்றியோடு கொண்டாடுகிறது அந்த மலைக்கிராமம்!

இந்தக் கட்டுரையின் வீடியோவை http://bit.ly/wowteacher என்ற link-ல் காணலாம்.