22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

கடைசி நாள் வரை கதை சொல்ல வேண்டும்!

கல்பகம் அம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
கல்பகம் அம்மா

கதை சேவை

சந்தன நிற காட்டன் புடவையில் மலர்ந்த பூசணிப்பூப்போல உட்கார்ந்திருந்த கல்பகம், பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளையில் இருக்கிற குழந்தைகளின் கதைசொல்லி. வயது 86.

``38 வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள். அன்னிக்கு என் அக்கா பையனுக்குப் பிறந்தநாள். கேக் கட் பண்ண வேண்டிய நேரத்துல, ‘என்னோட அஞ்சு ஃபிரெண்ட்ஸும் வந்தாதான் கேக் கட் பண்ணுவேன்’னு அடம்பிடிக்க ஆரம்பிச்சுட்டான். பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளையில இருந்த அஞ்சு பிள்ளைங்க, அவன்கூட வித்யா மந்திர் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தாங்க. அப்போதான், நான் முதன்முதலா பாலமந்திர் ஸ்கூல் பத்தியும் இங்கே யிருக்கிற ஆதரவில்லாத குழந்தைகள் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். அன்னிக்கு ராத்திரி என் மனசு அந்தக் குழந்தைங்களையே சுத்தி சுத்தி வந்துச்சு. மறுநாள் காலையில இங்கே வந்துட்டேன்’’ எனும் கல்பகம் அம்மா, இந்த வயதிலும் தன்னுடைய டிரைவர் வராத நாள்களிலும்கூட மயிலாப்பூரில் இருக்கிற தன் வீட்டிலிருந்து பாலமந்திருக்கு செல்ஃப் டிரைவ் செய்தபடி வந்துவிடுகிறார்.

கல்பகம் அம்மா
கல்பகம் அம்மா

‘`நான் இங்கே வர்றப்போவெல்லாம் குழந்தைங் களோட துணிகள்ல பட்டன் உடைஞ்சிருந்தா, தையல்விட்டிருந்தா, கிழிஞ்சிருந்தா அதையெல்லாம் தைச்சுக்கொடுக்க ஆரம்பிச்சேன். நான் செய்றதைப் பார்த்துட்டு ஃபவுண்டர் கம் செகரட்டரி மஞ்சு பாஷிணி அக்கா சின்னதா ஒரு டெய்லரிங் யூனிட் ஆரம்பிச்சார். தைக்கிற நேரம்போக, மத்த நேரங்கள்ல குழந்தைங்களுக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சேன். எல்லாக் குழந்தைகளும் என்கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டாங்க’’ என்கிறவரின் குரலில் அன்பும் கருணையும்.

மனைவியின் விருப்பங்களுக்கு எந்தத் தடையும் போடாத கணவராக இருந்திருக்கிறார் கல்பகத்தின் கணவர் நாராயணன். வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, வீட்டில் கார் இல்லையென்றாலும் சைக்கிளைப் பரபரவென ஓட்டிக்கொண்டு, குழந்தைகளுக்குக் கதை சொல்ல வந்துவிடுவாராம் கல்பகம். `இவர் கதை சொல்ல ஆரம்பித்து 38 வருடங்கள் முடிந்துவிட்டன' என்கிறார்கள் பாலமந்திர் ஆசிரியர்கள்.

“கதைகள்ல காக்கா, நரி கதைகள்ல இருந்து பக்தி கதைகள் வரைக்கும் எல்லாமே சொல்லுவேன். நான் கதைசொல்லிட்டு இருக்கிறப்போ சில பெண் குழந்தைங்க என் கொண்டையைக் கழற்றி ஜடை போட்டுட்டு இருப்பாங்க. சில சேட்டைகள் என் இயரிங் எய்ட் பின்னைக் கழட்டிவிட்டுடும்” என்று சிரிக்கிற இந்த சீனியர் கதைசொல்லி சொன்ன ஒரு விஷயம் நெகிழ்ச்சியின் உச்சம். இவருக்கு நரைமுடி வர ஆரம்பித்த காலத்தில் சில குழந்தைகள், ‘மிஸ் மிஸ்... முடி நரைச்சுட்டா சீக்கிரம் செத்துப்போயிடுவாங்களாம். நீங்க எங்களை விட்டுட்டு எங்கேயும் போகக் கூடாது’ என்று கட்டிக்கொண்டு அழுதிருக்கிறார்கள்.

“என் வாழ்நாள் இன்னும் எத்தனை காலமோ... கடைசி நாள்வரைக்கும் இந்தக் குழந்தைகளுக்குக் கதை சொல்லணும்” என்கிற கல்பகம் அம்மாவின் ஆசை நிறைவேறட்டும்!