Published:Updated:

“45 வருஷமா கறிக்கடைதான் சோறு போடுது!” - செல்லம்மாள் பாட்டி

செல்லம்மாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
செல்லம்மாள் பாட்டி

உழைப்பாளி

“45 வருஷமா கறிக்கடைதான் சோறு போடுது!” - செல்லம்மாள் பாட்டி

உழைப்பாளி

Published:Updated:
செல்லம்மாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
செல்லம்மாள் பாட்டி

``உங்களுக்குத்தான் சார் நெஞ்செலும்பு வெட்டுறேன்...’’, ‘‘கொத்துக்கறிக்கு நேரம் ஆகும்... இருந்து வாங்கிட்டுப் போறீங்களா..?”, ‘‘நம்ம கடையில மாதிரி தொடக்கறி எங்க கெடைக்கும் உங்களுக்கு..?’’ - செல்லம்மாள் பாட்டியின் கறிக்கடையில் அவர் வாயும் அவர் பிடித்திருக்கும் முட்டிக் கத்தியும் ஓய்வதே இல்லை.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே கறிக்கடை நடத்திவரும் செல்லம்மாளுக்கு 70 வயதானாலும் கடையில் கறி வெட்டுவதில் தொடங்கி, எடை போட்டு, காசை வாங்கி கல்லாவில் போடுவதுவரை பம்பரமாகச் சுழன்று அனைத்து வேலைகளையும் ஒற்றையாளாகச் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்.

‘‘70 வயசு இளவட்டம் பாட்டி நீங்க...’’ என்றால், ‘‘அப்புடித்தான் எல்லாரும் சொல்லுறாக...’’ என்றபடி, தன் வாழ்வைப் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் கத்தியக் கையில யெடுத்து 45 வருஷங்கள் ஆச்சு. என் சொந்த ஊரு கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி. என் வீட்டுக்காரரு வஞ்சியப்பனோட, பொழப்பு தேடி தஞ்சாவூருக்கு வந்து சின்ன குடிசை வீட்ல வாடகைக்கு நாங்க குடியேறினப்ப, எனக்கு 20 வயசு இருக்கும். என் வீட்டுக்காரரு இந்த ரோட்டோரத்துலதான் ஆட்டுக்கறிக்கடை வெச்சி ருந்தாரு. நானும் அவருக்கு ஒத்தாசையா கடையில நிப்பேன். நல்ல வியாபாரம். எங்களுக்கு ஒரு பொம்பளப் புள்ள பொறந்துச்சு. பொழப்புக்காக சொந்த பந்தங்கள விட்டுட்டு வெளியூர் வந்த கவலையே எனக்கு வரவிடாம, என் வீட்டுக்காரரு என்னை அம்புட்டு நல்லா பார்த்துக்கிட்டாரு.

 “45 வருஷமா கறிக்கடைதான் சோறு போடுது!” - செல்லம்மாள் பாட்டி

யாரு கண்ணு பட்டுச்சோ... என் வீட்டுக் காரருக்குக் குடிப்பழக்கம் வந்திருச்சு. காலையில எந்திரிச்சு கடையைத் திறக்குறவரு, ஆட்டை உரிச்சு தொங்கவிடுவாரு. சல்லிசா வியாபாரம் ஆரம்பிக்கும். உடனே அந்தக் காசை எடுத்துக்கிட்டு சாராயக் கடைக்குக் குடிக்கப் போயிடுவாரு. குடிச்சிட்டு அந்தக் கடையே கதியா கெடப்பாரு. இங்க கடையில கறியெல்லாம் அப்புடியே கெடந்து வீணாகும்.

ஒருகட்டத்துல, கடையில வியாபாரம் படுத்துருச்சு. குடிச்சே காசை அழிச்ச என் வீட்டுக்காரரு, கடனாளியாவும் ஆகிட்டாரு. கடனுக்கு பயந்து, திடீர்னு ஒரு நாளு வீட்டை விட்டு ஓடிப்போயிட்டாரு. எங்க தேடியும் கெடைக்கல.

அப்போ என் மக பழனியம்மா பச்சப்புள்ள. கடன் கொடுத்தவங்க பணம் கேட்டு என்னை நெருக்க, புள்ளயோட ஒத்தையாளா தவிச்சு நின்னேன்.

ஒருகட்டத்துல, கையில தொழிலு இருக்கும் போது எதுக்கு நாம அஞ்சணும்னு நானே ஆட்டுக்கறிக்கடையை நடத்த ஆரம்பிச்சேன். அக்கம்பக்கத்துல உள்ளவுக, ‘பொம்பளைக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா, முழு ஆட்ட உரிச்சுப்போட ஒடம்புல தெம்பிருக்குமா..?’னு கேட்டாக. எதையுமே நான் காதுல வாங்கிக்கல.

ஆரம்பத்துல கறி வெட்டுற கத்தியப் புடிக்கும்போது கையெல்லாம் தடதடனு நடுங்கும். ஆட்டை அறுக்கும் போது ஒடம்பே நடுங்கும். மொகத்தை அந்தப் பக்கமா திருப்பிக்கிட்டு சர்ருனு தோலை உரிச்சுப்போடுவேன். கறி வெட்டுறப்ப கொஞ்சம் அசந்தாலும் கத்தி கைவிரல துண்டாக்கிடும். அதனால பயந்துகிட்டே வெட்டுவேன். ஆனாலும், பதறாம வெட்டி வெட்டி இந்தப் பதம் பழகிக்கிட்டேன். எந்த வேலை செஞ்சா என்ன... பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, உழைச்சு சாப்பிடணும் அம்புட்டுதான்னு நெனைக்கிற கட்ட இது. அதனால, போகப் போக இந்தக் கறிக்கடை எனக்கு முழுசா வசப்பட்டுப் போச்சு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடையில சுத்தம், கறி வாங்குறவங்ககிட்ட நாணயமா நடந்துக்கிட்டதால, எங்கடையில கறி வாங்க நெறைய பேரு வந்தாக. காலையில அஞ்சு மணியிலேருந்து மதியம் ரெண்டு மணிவரை கடையில நிப்பேன். ஒத்த ஆளா நான் கெடந்து அள்ளாடுறதப் பார்த்துட்டு, பக்கத்துல வீட்டு அக்கா ஒருத்தவுக, எம்பொண்ணை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப, அவ வீடு திரும்புனதும் பார்த்துக்கன்னு ஒத்தாசையா இருந்தாக. நான் மதியம் கடைய எடுத்து வெச்சதும், பள்ளிக்கூடத்துக்குப் போன புள்ள சாயந்தரம் வீட்டுக்கு வர்றதுக்குள்ள, பக்கத்துல நாலு ஊரு போயி தேடிப்பார்த்து, அடுத்த நாள் வியாபாரத்துக்கு ஆடு வாங்கிட்டு வருவேன். செத்த நேரம் அசந்து தூங்கக்கூட நேரமில்லாத பொழப்பு.

 “45 வருஷமா கறிக்கடைதான் சோறு போடுது!” - செல்லம்மாள் பாட்டி

சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து, என் வீட்டுக்காரரு வாங்கின 15,000 ரூபாய் கடனை அடைச்சேன். அப்பதான் என் மேல எல்லாருக்கும் நம்பிக்கை வந்துச்சு. ஒரு நாளு, காணாமபோன என் வீட்டுக்காரரு பொசுக்குனு திரும்பிவந்து நின்னாரு. ஆனாலும் அதுக்கு அப்புறமும் நானேதான் கடைய நடத்துனேன். அடைகாக்குற கோழி மாதிரி என் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டேன்.

எம் புள்ள பழனியம்மாளுக்கு, 10 பவுனு நகை, சீர் வரிசையெல்லாம் நெறவா செஞ்சு, என் கூடப் பொறந்த தம்பி அத்தப்பனுக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் கட்டிக்கொடுத்தேன். அவுகள எங்கூடவே தங்கவெச்சுக்கிட்டேன். ரெண்டு பேரனுங்க பொறந்தானுங்க. பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன அனுபவிச்ச மாதிரி, புருஷன், மக, மருமகன், பேரனுங்கனு சந்தோஷமா நான் வாழ்ந்த காலமது’’ - பேச்சை இடைநிறுத்துகிறார் செல்லம்மாள் பாட்டி.

செல்லம்மாள் பாட்டியின் கணவர் பத்து வருடங்களுக்கு முன் இறந்துவிட, சில மாதங்களுக்குள் அவர் மகளும் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். எப்போதும் போல இப்போதும் குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார் பாட்டி.

‘‘25 வயசுல இந்தக் கறிக்கடைய எடுத்து நடத்த ஆரம்பிச்சேன். 45 வருஷமா இந்தத் தொழிலுதான் எங்குடும்பத்துக்கு சோறு போடுது. சொந்த இடம் வாங்கி, மாடி வீடு கட்டினு என் உழைப்பு எனக்குக் கொறை யேதும் வெக்கல.

வயசாகிட்டதால என் தம்பி அத்தப்பனும் பேரனுங்க மணிகண்டன், சத்யபிரகாசும் சில வருஷமா கடையில எனக்கு ஒத்தாசையா வந்து நிக்குறாக. ‘இனி நாங்க பார்த்துக்குறோம்... நீ ரெஸ்ட்டு எடு’னு சொல்லுறாக. ‘எம் முகத்துக்குனு ஒரு வியாபாரம் இருக்கு... நான் இல்லையினு அவுகயெல்லாம் வேற கடைக்குப் போயிடக் கூடாது. அப்புறம்... ஒழச்சே பழகுன இந்த ஒடம்புக்கும் வேலையில்லாம இருந்தா ஒத்துக்காம படுத்துக்கும்...’னு சொல்லிட்டு, அவுகள எனக்கு ஒத்தாசைக்குக் கூட நிக்க சொல்லிட்டேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி மக பழனியம்மாளுக்கு நோவு வந்திருச்சி. அவளக் காப்பாத்த எம்புட்டோ பிரயாசப்பட்டும், டாக்டருங்க கைய விரிச்சுட்டாக. ‘நம்மள பார்த்துக்கிட்டதப்போல நம்ம புள்ளைகளையும் அது பார்த்துக்கும்’ங்கிற நம்பிக்கையில அவ போயிட்டாபோல. எனக்கு ஆறாத கொற இப்போ அது ஒண்ணுதான்.

70 வயசானாலும் உடம்புல எந்த நோவும் இல்ல. காலையில 6 மணியிலயிருந்து 12 மணிவரை கடையில நிப்பேன். அப்புறம் வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் சோறு ஆக்குவேன்.

அசதியும் ஒடம்பு வலியும், அப்பப்போ எனக்கு வயசாகுறதை ஞாபகப் படுத்தும். ஆனாலும், எம் பேரப்பசங்களுக்குக் கல்யாணம் முடிக்குறவரை இந்த ஒடம்பு ஓடிக்கிட்டேதான் இருக்கும்!”

- எலும்புக் கறியை வெட்ட கத்தியை ஓங்கியபடி, பேசி முடிக்கிறார் செல்லம்மாள் பாட்டி!