22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பிடித்த விஷயத்தையே வேலையாக மாற்ற வேண்டும்!

ரேகா ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ரேகா ராஜா

பயணி

பயணங்களின் பிரியராக இருந்தவர் ரேகா ராஜா. இன்று பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். ``பிடித்த வேலையை மனதாரச் செய்கிறேன். இந்த அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு வாய்க்கும்!'' என்கிறவரின் பிசினஸ் பயணமும் இனிதாக இருக்கிறது.

``சொந்த ஊர் ராஜபாளையம். எங்கள் வட்டாரத்தில் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி நான். படித்து முடித்ததும் சென்னையில் ஒரு நாளிதழின் சர்க்குலேஷன் பிரிவில் மார்க்கெட்டிங் துறையில் வேலை கிடைத்தது. இரண்டு வருடங்கள் வேலை செய்தேன். பிறகு ஹைதராபாத்துக்கு மாற்றலாகி போய்விட்டேன். அங்கிருந்தபோது ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் ஆர்வம் உண்டானது. சென்னை திரும்பியதும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆனால், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக நிறுவனத்தை மூட வேண்டியிருந்தது. அதன்பிறகு இரண்டு மூன்று நிறுவனங்களில் வேலை செய்தேன்.

டிராவல் என்றாலே என் பாட்டிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். பாட்டிக்கு 65 வயது இருக்கும் போது நண்பர்களுடன் வடஇந்தியா ட்ரிப் அடித்துவிட்டு ஒன்றரை மாதம் கழித்துதான் ஊர் திரும்பினார். அப்படியோர் ஆர்வம்!

ரேகா ராஜா
ரேகா ராஜா

சென்னை ட்ரெக்கிங் கிளப்பில் அறிமுகமான என் நண்பர்கள் ராகேஷ், அர்ஜூனுடன் சேர்ந்து 2016-ம் ஆண்டு, மே மாதம் தெரிந்தவர்கள் சிலருக்காக இமாச்சலப்பிரதேசத்துக்கு ஒரு ட்ரிப் ஏற்பாடு செய்தோம். அதுதான் தொடக்கம். ஒரு முன்னோட்டமாக நாங்கள் ஏற்பாடு செய்த பயணம் அனைவருக்குமே பிடித்திருந்தது. அடுத்தடுத்து நிறைய ட்ரிப்களைத் தெரிந்தவர்களுக்காக ஏற்பாடு செய்தோம். எங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. 2017 பிப்ரவரியில் மார்க்கெட்டிங் வேலை யிலிருந்து விலகி, `வாண்டர்மைல்’ நிறுவனத்தை நண்பர்கள் மூவருமாகத் தொடங்கினோம். தென்கிழக்கு இந்தியா, கம்போடியா, பூட்டான் எனப் பல இடங்களுக்கு ட்ரிப் ஒருங்கிணைக்கிறோம். ஒவ்வொரு பயணத்திலும் நாங்களும் இணைந்து பயணிப்போம். இமயமலை அடிவாரம் வரையிலான ட்ரெக்கிங் போய்விட்டு வந்ததுதான் இதுவரையிலும் மறக்கமுடியாத அனுபவம்!

எத்தனையோ டூரிங் நிறுவனங்கள் இருந்தாலும் எங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு உண்டு. சுற்றுலா செல்வதோடு நின்றுவிடாமல் அந்தப் பகுதி மக்களுக்கும் உதவியாக இருக்க எண்ணுகிறோம். உதாரணத்துக்கு... உணவை ஹோட்டல்களில் வாங்கிக் கொடுக்காமல், அந்தந்த ஊர் மக்களிடம் சமைத்துத் தரச் சொல்வோம். இப்போது ‘வாண்டர்ஸ்மைல்’ என்கிற ஐடியாவை தொடங்கியிருக்கிறோம். முதல்கட்டமாக ஆந்திர மாநிலம், கண்டிக்கோட்டா மலையில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஒரு கணினி வாங்கிக் கொடுத்துள்ளோம்.

வேலையை விட்டுவிட்டு பயண நிறுவனம் தொடங்கத் திட்டமிட்டதும் உறவினர் சிலர், “அதான் நல்ல சம்பளம் கிடைக்குதே... ஏன் வேலையை விடணும்?” எனக் கேள்வி எழுப்பினார்கள். நமக்குப் பிடித்த விஷயத்தைச் செய்வதில் இருக்கும் திருப்தியை விவரிக்க முடியாதே!'' என்கிறார் ரேகா ராஜா.