Published:Updated:

முதல் பெண்கள்: ஆங்கிலோ-இந்தியப் பெண் சட்டமன்ற உறுப்பினர் - முதல் பெண் ஆலிஸ்

ஹம்சத்வனி
கார்த்திகேயன் மேடி

தமிழகத்தின் முதல் ஆங்கிலோ - இந்திய சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கும் ஆலிஸ், தொடர்ந்து மூன்று முறை அந்தப் பதவியை வகித்துள்ளார்.

பிரீமியம் ஸ்டோரி
“என்னிடம் அவரைப் பற்றிய தகவல் பெரிதாக எதுவும் இல்லையே... ஆனால், எட்டு முறை எம்.பி-யாக இருந்த ஃபிராங்க் ஆன்டனி அவருக்குக் கையெழுத்திட்டுத் தந்த நூல் ஒன்று என்னிடம் பத்திரமாக இருக்கிறது” என்று ஆஸ்கர் நிக்லி சொல்லும்போதே, கண்கள் ஆனந்தத்தில் மின்னுகின்றன.

இவர், 1989, 2006 என இரு தடவை தமிழகத்தின் ஆங்கிலோ - இந்திய சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். இவர் குறிப்பிடும் அவர், ஆலிஸ் சுவாரெஸ்.

தமிழகத்தின் முதல் ஆங்கிலோ - இந்திய சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கும் ஆலிஸ், தொடர்ந்து மூன்று முறை அந்தப் பதவியை வகித்துள்ளார். அவருடைய வாழ்க்கை, அவர் சார்ந்த ஆங்கிலோ - இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல, அத்தனை பெண்களுக்குமான வழிகாட்டியே!

ஆலிஸ் சுவாரெஸ்... 1895 அக்டோபர் 20 அன்று எம்மானுவேல் பின்டோ - ஜேன் பின்டோ தம்பதியின் மூன்றாவது மகளாக அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (கேரளா) பிறந்தார். இயல்பிலேயே கல்வியின் மேல் ஆவல்கொண்ட ஆலிஸ், கண்ணனூர் தூய தெரசாள் பள்ளியிலும், கோழிக்கோடு தூய ஜோஸப் கான்வென்ட்டிலும் படித்தார். சென்னை, ராணிமேரிக் கல்லூரியில் இளங்கலை பி.ஏ பட்டம் பெற்ற ஆலிஸ், லேடி வெல்லிங்டன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பயிற்சி பெற்று, ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.

ஆலிஸ்
ஆலிஸ்

1927-ம் ஆண்டு, தாமஸ் வெல்லிங்டன் என்பவரைத் திருமணம் செய்தார் சுவாரெஸ். இறந்துபோன முதல் மனைவி மேரி ஆன் டிமான்டி மூலம் தாமஸுக்கு ஏற்கெனவே எட்டு குழந்தைகள். ஆலிஸுக்கும் தாமஸுக்கும் காலின், ஹேசல் என்ற இரு பெண் குழந்தைகள். அத்தனை குழந்தைகளையும் சமமாக பாவித்து, பேரன்பு காட்டி ஆலிஸ் வளர்த்தார்.

ரயில்வே துறையில் சரக்கு ஏஜென்டாகப் பணியாற்றினார் தாமஸ். கணவன் மனைவி இருவருமே பணி நிமித்தம் மதராஸ் மாகாணம் முழுக்கப் பயணிக்க நேர்ந்தது. பெல்லாரி, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி எனப் பல ஊர்களில் சமூகப் பணிகளையும் ஆலிஸ் செய்து வந்தார். “நேர்மையும், கடின உழைப்புமாக ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகளின் தரமுயர்த்தியவர் ஆலிஸ். மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் என்று குடும்பத்தின் மேல் மட்டற்ற அன்பு கொண்டவர்” என்று ஆலிஸ் குறித்து அவர் குடும்பத்தினர் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள்.

முதலாம் உலகப் போர் நேரத்திலேயே போர் வீரர்களுக்கு வசதிகள் செய்துதரும் கமிட்டியில் ஆலிஸ் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரிலும் இது தொடர்ந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் அரசின் ‘சிறு தங்க ஆபரண நிதி’க்கு மக்களிடம் பணம், நகைகள் சேகரித்து அரசிடம் அளித்ததைப் பாராட்டி ஆங்கிலேய அரசு அவருக்குச் சான்றிதழ் வழங்கியது. மேலும், முதல் உலகப் போரில் போரிட கணவரையும் இரண்டாம் உலகப் போரில் ஆறு மகன்களையும் அனுப்பியதைப் பாராட்டி பதக்கமும் வழங்கி கௌரவித்தது.

1957-ம் ஆண்டு, சென்னை மாகாணத்தில் (தமிழகம்) இரண்டாவது சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சி அமைத்தபோதுதான் முதல்வர் காமராஜரின் பரிந்துரைப்படி ஆங்கிலோ - இந்தியருக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவியில் நியமிக்கப் பட்டார் ஆலிஸ். `பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய ஆலிஸ், ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகளுக்கு நிதியுதவியை அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்தார்’ என்று 1957 ஜூலை 2 தேதியிட்ட `குடியரசு' நாளிதழ் பதிவு செய்துள்ளது. 1959-ம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் பற்றிய விவாதத்தில் பங்கேற்ற ஆலிஸ், தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பை கல்லூரிகளில் கொண்டுவர வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`1960-ம் ஆண்டு கல்லூரிகளில் ஆங்கிலவழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வியாக மாற்றப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் வருத்தத்துடன் பதிவு செய்த ஆலிஸ், மொழி சிறுபான்மையினருக்கு இது பெரும் சிக்கலைத் தரும், பிற மாநிலங்கள், நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வோருக்கு ஆங்கில அறிவில்லாதது பின்னடைவாக இருக்கும் என்றெல்லாம் பேசினார். உயர் கல்வியை ஆங்கில வழியில் தருவதே மாணவர்களுக்கு நலம் பயக்கும் என்றும் பேசினார்' எனவும் பதிவு செய்துள்ளது `குடியரசு' இதழ்.

‘தொடக்கப் பள்ளிகளில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்; விளையாட்டு மைதானங்கள், தோட்டங்கள், காற்றோட்டமான வகுப்பறை களை அரசுப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்; ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும்; ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் சிறு கிராமங்களுக்கும் மருத்துவ வசதிகள் சென்று சேர வழிசெய்ய வேண்டும்; அதில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும்' என்று தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் பேசிவந்தார் ஆலிஸ்.

1962-ம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1967-ம் ஆண்டு தேர்தலில் திமுக வென்றது; அண்ணா முதல்வரானார். காமராஜரால் அடையாளம் காட்டப்பட்டவர் என்றபோதும், ஆலிஸுக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி கௌரவித்தார் அண்ணா. கடின உழைப்புக்கு எப்போதும் மதிப்பு உண்டு என்பதுதான் ஆலிஸின் இந்த நியமனம் சொல்லும் உண்மை.

சென்னை சால்ட் கொட்டார்ஸ் சரக்கு நிலையத்தில் பணியாற்றிவந்த ஆலிஸின் கணவர் தாமஸ் 1970-ம் ஆண்டு காலமானார். தொடர்ந்து மக்கள் பணியாற்றிய ஆலிஸ், 1976 ஜூலை 28 அன்று சென்னை ராயபுரத்தில் காலமானார். ஏறத்தாழ 33 ஆண்டுகள் அயராமல் ஆசிரியர், ஆய்வாளர் எனப் பணியாற்றியபின் ஓய்வுபெற்ற ஆலிஸ், `பெனின்சுலார் இந்தியா’ என்ற புவியியல் நூலையும் எழுதியிருக்கிறார்.

ஆலிஸ் வாழ்ந்த சுவடுகள் எதுவும் இன்று இங்கில்லை. அவர் வாழ்ந்த ராயபுரம் 41, அரத்தூண் சாலையில் யாருக்கும் அவரைப் பற்றித் தெரியவில்லை. பெரும்பான்மை ஆங்கிலோ - இந்தியர்களே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க வில்லை. இந்தியாவின் கல்வியில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு இன்று நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு ஆலிஸ் போன்ற நாம் மறந்துபோன முதல் பெண்களும் முக்கிய காரணம்!

தகவல் உதவி: ஆஸ்கர் நிக்லி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு.

வகித்த பொறுப்புகள்!

பெரியோருக்கான இரவுப் பள்ளி, ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் அமைப்பு ஆகியவற்றின் நிறுவனர். பெல்லாரி மற்றும் விசாகப்பட்டினம் நகரங்களில் இளையோருக்கான ரெட் கிராஸ் அமைப்பின் நிறுவனர். ராஜமுந்திரி மாவட்டத்தின் `கேர்ள் கைட்ஸ்’ அமைப்பின் மாவட்ட ஆணையர். ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகளின் தடகள சங்க தலைவர். மதராஸ் லேடீஸ் கிளப்பின் தலைவர். ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகளின் ‘இன்ஸ்பெக்டிரஸ்’ (ஆய்வாளர்). மதராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர். மாநில மருத்துவ ஆலோசனைக் குழு உறுப்பினர். மாநிலப் பெற்றோர் - ஆசிரியர் சங்க உறுப்பினர். அனைத்திந்திய ஆங்கிலோ - இந்திய சங்க மாநில கவுன்சில் தலைவர்.

ஆங்கிலோ - இந்தியர்களின் வரலாறு

லிஸுக்கு ஃபிராங்க் ஆன்டனி கையெழுத் திட்டுத் தந்த நூலின் பெயர் `பிரிட்டன்ஸ் பிட்ரேயல் இன் இந்தியா.’ தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கும் சமூக ஒதுக்கலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கும் ஆங்கிலோ - இந்தியர்களின் வரலாற்றைச் சொல்லும் நூல் இது.

`இந்தியா முழுக்க ஐந்து முதல் ஆறு லட்சம் ஆங்கிலோ - இந்தியர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆனால், 2011-ம் ஆண்டு சென்செக்ஸ்படி இந்தியா முழுக்கவே வெறும் 289 ஆங்கிலோ - இந்தியர்கள்தான் வாழ் கிறார்கள் என்று கணக்குக் காட்டப்பட்டுள்ளது. ஆங்கிலோ - இந்தியர்கள் தொடர்ந்து அனுபவித்து வந்த சிறப்பு உரிமையான மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் கடந்த ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பெரும்பாலும் எந்த ஆதரவும் இல்லாத சூழலில் இந்தியாவில் வாழும் ஆங்கிலோ - இந்தியர்களை இந்த நடவடிக்கை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தி யுள்ளது' என்கிறார் ஆஸ்கர் நிக்லி.

உண்மையில் நவீன இந்தியாவின் முன்னேற்றத்தில் ஆங்கிலோ - இந்தியர்களின் பங்கு இன்றியமையாதது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கால்பதித்த காலந்தொட்டே இங்குள்ள பெண்களுடன் ஆங்கிலேய ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் வாழத் தொடங்கி விட்டார்கள். இப்படி ஆங்கிலேயர்களுக்கும், இந்தியப் பெண்களுக்கும் பிறந்த குழந்தைகளின் நிலை சிக்கலானதாக ஆனது. இதில் பல குழந்தைகள் கல்வி, சிறந்த வாழ்க்கை என்று காரணம் காட்டி பெற்றவளிடமிருந்து பிரித்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார்கள்; சிலர் இங்கேயே வளர்ந்து, வாழ்ந்து, முடிந்தும் போனார்கள். வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். 1920-ம் ஆண்டு, அவர்களுக்கு மக்களவையில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. பின்னர் நேரு பிரதமரானதும் இரண்டு உறுப்பினர்களாக அது உயர்த்தப்பட்டது. மாநில அரசு விரும்பும்பட்சத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை நியமிக்கவும் வாய்ப்பு உருவானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு